பைபிளின் கருத்து
கடவுளைப் பற்றிய உண்மைகள்
கடவுளுக்கு எப்படிப்பட்ட உடல் இருக்கிறது?
“தேவன் ஆவியாயிருக்கிறார்.” —யோவான் 4:24. (BSI)
பைபிள் என்ன சொல்கிறது
கடவுளுக்கு ஆவி உடல் இருப்பதாக, அதாவது காண முடியாத உடல் இருப்பதாக, பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 3:17) அவர் மனிதர்களைவிட மிகமிக உயர்ந்தவர், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் ‘நித்திய ராஜாவாக, அழிவில்லாதவராக, காணமுடியாதவராக’ இருக்கிறார் என்றும், ‘ஒருவனும் ஒருபோதும் கடவுளைக் கண்டதில்லை’ என்றும் பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 1:17; 1 யோவான் 4:12.
நம் படைப்பாளர் பார்க்க எப்படி இருப்பார் என்பதை அற்ப மனிதர்களான நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது, அந்தளவுக்கு அவர் உயர்ந்தவர். ஏசாயா 40:18-ல் இப்படி வாசிக்கிறோம்: “தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?” ஆக, சர்வவல்ல கடவுளோடு ஒப்பிட இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சமே வெறும் தூசுதான்.—ஏசாயா 40:22, 26.
என்றாலும், புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் சிலவற்றால் கடவுளைப் பார்க்க முடிகிறது, அவரோடு நேருக்கு நேர் பேசவும் முடிகிறது. ஏனென்றால், அவர்களும் பரலோகத்தில் ஆவி நபர்களாக இருக்கிறார்கள். (1 இராஜாக்கள் 22:21; எபிரெயர் 1:7) அபார சக்திபடைத்த இந்த நபர்கள் தேவதூதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றி இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்கிறார்: “தேவதூதர்கள் பரலோகத்தில் என் தகப்பனுடைய முகத்திற்கு முன்பாக எப்போதும் இருக்கிறார்கள்.”—மத்தேயு 18:10.
கடவுள் எங்கும் இருப்பவரா?
“நீங்கள் இவ்விதமாக ஜெபம் செய்யுங்கள்: ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே.’”—மத்தேயு 6:9.
பைபிள் என்ன சொல்கிறது
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என பைபிள் கற்பிப்பதில்லை. அவர் எங்கும் வியாபித்திருக்கும் வெறும் ஒரு சக்தி அல்ல. மத்தேயு 6:9 மற்றும் 18:10-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகிறபடி, கடவுள் ஒரு நபர், ஒரு ‘தகப்பன்.’ அவர் தம்முடைய “வாசஸ்தலமாகிய பரலோகத்தில்” குடியிருக்கிறார்.—1 இராஜாக்கள் 8:43.
இயேசு தமது பூமிக்குரிய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், “இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடமே போகப் போகிறேன்” என்று சொன்னார். (யோவான் 16:28) அவர் மரணமடைந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, சொன்னபடியே ‘கடவுளுக்குமுன் தோன்றும்படி பரலோகத்திற்குள் சென்றார்.’—எபிரெயர் 9:24.
கடவுளைப் பற்றிய இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்வது முக்கியம். ஏன்? அப்போதுதான், அவரைப் பற்றிக் கற்றுக்கொண்டு அவரிடம் நெருங்கிவர நம்மால் முடியும். (யாக்கோபு 4:8) அதோடு, பொய் வணக்கத்திலிருந்து நம்மைத் தூர விலக்கிக்கொள்ள முடியும். “சிறுபிள்ளைகளே, உருவச் சிலைகளுக்கு விலகி உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று 1 யோவான் 5:21 சொல்கிறது.
மனிதர்கள் எப்படிக் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டார்கள்?
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” —ஆதியாகமம் 1:27.
பைபிள் என்ன சொல்கிறது
கடவுளுடைய குணங்களான அன்பு, நீதி, ஞானம் போன்றவற்றை வெளிக்காட்டுகிற திறன் மனிதர்களுக்கு இருக்கிறது. அதனால்தான், “அன்புக்குரிய பிள்ளைகளாகக் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் . . . தொடர்ந்து அன்பு காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—எபேசியர் 5:1, 2.
சுயமாகத் தீர்மானமெடுக்கும் சுதந்திரத்தைக் கடவுள் மனிதர்களுக்குத் தந்திருக்கிறார். அதனால், நல்லது கெட்டதை நம்மால் தீர்மானிக்க முடிகிறது, பற்பல வழிகளில் அன்பு காட்ட முடிகிறது. (1 கொரிந்தியர் 13:4-7) அதுமட்டுமல்ல, புதுப்புது விஷயங்களை யோசிக்கவும், இயற்கையின் அழகை ரசிக்கவும் முடிகிறது. அதிசயமும் அற்புதமும் நிறைந்த இந்த உலகைக் கண்டு பிரமிப்படைய முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்மீகத் தாகம் இருக்கிறது, படைப்பாளரையும் அவருடைய சித்தத்தையும் பற்றிக் கற்றுக்கொள்வதற்கான ஆசை இருக்கிறது.—மத்தேயு 5:3.
பைபிள் சத்தியம் உங்களுக்கு எப்படி உதவும்? கடவுளைப் பற்றி அதிகமதிகமாகக் கற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றும்போது, அவருடைய விருப்பப்படியே வாழ நாம் தூண்டப்படுவோம். இதன் விளைவாக, வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தை, மனநிறைவை, சமாதானத்தை, திருப்தியை ருசிப்போம். (ஏசாயா 48:17, 18) கடவுளுடைய அருமையான குணங்கள் நல்மனமுள்ளவர்களுடைய இருதயத்தைத் தொடும்; இதன் பலனாக, கடவுளிடம் அவர்கள் ஈர்க்கப்படுவார்கள், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற பாதையில் பயணிக்கத் துவங்குவார்கள்.—யோவான் 6:44; 17:3. ◼ (g13-E 05)