அதிகாரம் 1
இயேசு, பெரிய போதகர்
உனக்குக் கதைகள் கேட்கப் பிரியமா? — சரி, அப்படியானால், பூமியில் வாழ்ந்த எவரையும் பார்க்கிலும் அதிக நல்ல கதைகளைச் சொன்ன ஒரு மனிதரைப் பற்றிய கதை ஒன்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். அவருடைய பெயர் இயேசு கிறிஸ்து.
இவர் ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்தார். இது வெகு காலத்திற்கு முன்பாகும். உன்னுடைய பாட்டியாரோ பாட்டனாரோ பிறப்பதற்கும் வெகு வெகு காலத்திற்கு முன்பாகும். மனிதர், மோட்டார் கார்களோ புகைவண்டிகளோ ரேடியோக்களோ இன்று இருக்கும் மற்ற பொருட்களோ உடையவர்களாக இருப்பதற்கும் வெகு காலத்திற்கு முன்பாகும்.
இயேசு கதை சொல்லுகையில் அது ஓர் ஆளை யோசிக்கும்படி செய்தது. ஒருவன் அதைப்பற்றி போதிய நேரம் நீடித்து யோசிப்பானேயாகில், இயேசு சொன்னது, அந்த ஆள் காரியங்களைப் பற்றி எவ்விதம் உணர்ந்தானோ அதை மாற்றிவிடவுங்கூடும். அது அந்த ஆளின் வாழ்க்கைக்குரிய முழு நோக்கையும் மாற்றிவிடக்கூடும். இயேசு சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தது.
இயேசு மற்ற எந்த மனிதனையும் பார்க்கிலும் அதிகம் அறிந்திருந்தார். அவர், உயிர் வாழ்ந்த எவரையும் பார்க்கிலும் மிகச் சிறந்த போதகராயிருந்தார். மற்ற ஆட்களிடமிருந்து நாம் பல காரியங்களைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால் இயேசுவினிடமிருந்து மிக முக்கிய காரியங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
இயேசு இப்பேர்ப்பட்ட ஒரு பெரிய போதகராக இருந்ததற்கு ஒரு காரணம் என்னவென்றால் அவர் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டார். செவிகொடுத்துக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் இயேசு யாருக்குச் செவிகொடுத்துக் கேட்டார்? யார் அவருக்குக் கற்பித்தார்? — இயேசுவின் தகப்பன் அவருக்குக் கற்பித்தார். கடவுளே இயேசுவின் தகப்பன்.
ஒரு மனிதராக பூமிக்கு வருவதற்கு முன்பாக இயேசு பரலோகத்தில் கடவுளுடன் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆகவே இயேசு மற்ற மனிதரிலிருந்து வித்தியாசமானவராக இருந்தார், ஏனெனில் வேறு எந்த மனிதனும், பூமியில் பிறப்பதற்கு முன்பாகப் பரலோகத்தில் வாழ்ந்திருக்கவில்லை. பரலோகத்தில் இயேசு தம்முடைய தகப்பன் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நடந்த ஒரு நல்ல குமாரனாக இருந்துவந்திருந்தார். இவ்விதமாய் இயேசு, கடவுளிடத்திலிருந்து தான் கற்றுக்கொண்டதை ஜனங்களுக்குக் கற்பிக்கக்கூடியவராக இருந்தார். உன் தகப்பனும் தாயும் சொல்வதைக் கவனமாய்க் கேட்டு நடப்பதன்மூலம் நீ இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி நடக்கக்கூடும்.
இயேசு பெரிய போதகராக இருந்ததற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் அவர் ஆட்களை நேசித்தார். கடவுளைப்பற்றிக் கற்றுக்கொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்ய அவர் விரும்பினார். பெரியவர்களாக வளர்ந்தவர்களை இயேசு நேசித்தார். சிறு பிள்ளைகளையுங்கூட அவர் நேசித்தாரா? — ஆம், அவர் நேசித்தார். சிறு பிள்ளைகள் இயேசுவுடன் இருக்க பிரியப்பட்டனர், ஏனென்றால் அவர் அவர்களிடம் பேசுவார், அவர்கள் பேசுவதையும் கவனித்துக் கேட்பார்.
ஒருநாள் பெற்றோர் தங்களுடைய சிறு பிள்ளைகளை இயேசுவினிடம் கொண்டுவந்தார்கள். ஆனால், பிள்ளைகளிடம் பேசுவதற்குப் பெரிய போதகர் மிகவும் வேலையாயிருந்தார் என்று இயேசுவின் நண்பர்கள் நினைத்தனர். ஆகவே போய்விடும்படி அவர்களுக்குச் சொன்னார்கள். ஆனால் இயேசு அதைச் சம்மதித்தாரா? — இல்லை. ‘சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்,’ என்று அவர் கூறினார். அவர் மிக விவேகமுள்ள வெகு முக்கியமான ஒரு மனிதராக இருந்தபோதிலும் சிறு பிள்ளைகளுக்குக் கற்பிக்க இயேசு நேரத்தைச் செலவிட்டார்.—மத்தேயு 19:13, 14.
இயேசு ஒரு பெரிய போதகராக இருந்தார். எப்படியென்றால், உற்சாகம் ஊட்டக்கூடிய முறையில் காரியங்களை எப்படிக் கற்பிப்பது என்பதை அவர் அறிந்திருந்தார். கடவுளைப் பற்றி விளங்கிக் கொள்ளும்படி ஜனங்களுக்கு உதவிசெய்ய அவர் பறவைகளையும் பூக்களையும் மற்ற பொருட்களையும் பற்றிப் பேசினார். ஒருநாள் அவர் ஒரு மலைச் சரிவாரத்தில் இருக்கையில் தம்மிடம் வந்த ஒரு பெரிய ஜனக்கூட்டத்திற்கு ஒரு பிரசங்கத்தை அல்லது பேச்சைக் கொடுத்தார். அது மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது.
இயேசு ஜனங்களிடம்: ‘ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப் பாருங்கள். அவை விதைக்கிறதில்லை. அவை வீடுகளில் உணவைச் சேமித்து வைக்கிறதில்லை, ஆனால் பரலோகத்திலுள்ள கடவுள் அவற்றிற்கு உணவளிக்கிறார். அவற்றைப் பார்க்கிலும் நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?’ என்று சொன்னார்.
மேலும், ‘காட்டுப் பூக்களிலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்,’ என்றுங்கூட இயேசு சொன்னார். நாம் அவற்றிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளக்கூடுமென்று நீ நினைக்கிறாய்? இயேசு பின்வருமாறு சொன்னார்: ‘அவை உடைகளை நூற்கிறதில்லை. அவை எவ்வளவு அழகாக இருக்கின்றனவென்று கவனித்துப் பாருங்கள்! ஐசுவரியம் நிறைந்த அரசனாகிய சாலொமோனுங்கூட, இந்தக் காட்டுப் பூக்களைப் பார்க்கிலும் அதிக அழகாக உடுத்தியிருக்கவில்லை. ஆகவே வளரும் இந்தப் பூக்களைக் கடவுள் காத்து வருகிறார் என்றால் உங்களையுங்கூட அவர் காத்துவருவார் அல்லவா?’
இயேசு அங்கே கற்பித்துக் கொண்டிருந்த பாடம் உங்களுக்கு விளங்குகிறதா? — உண்பதற்கு உணவோ உடுத்திக்கொள்வதற்கு உடைகளோ தங்களுக்கு எங்கே கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. ஆட்களுக்கு இந்தக் காரியங்கள் தேவை என்று கடவுள் அறிந்திருக்கிறார். நாம் உணவுக்காகவும் உடைக்காகவும் வேலை செய்யக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை. ஆனால் நாம் கடவுளை முதலாவதாக வைக்கவேண்டுமென்று அவர் சொன்னார். நாம் அப்படிச் செய்வோமாகில், நமக்கு உண்பதற்கு உணவும் உடுத்துவதற்கு உடையும் இருக்கும்படியாகக் கடவுள் பார்த்துக்கொள்வார். நீ இதை நம்புகிறாயா? — —மத்தேயு 6:25-33.
இயேசு கற்பித்த முறையை மக்கள் விரும்பினார்கள். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவருக்குச் செவிகொடுப்பது உற்சாகத்தைக் கொடுத்தது. அவர் சொன்ன காரியங்கள் மக்கள் சரியானதைச் செய்யும்படி அவர்களுக்கு உதவிசெய்தன.
நாமுங்கூட அவருக்குச் செவிகொடுப்பது முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் நாம் இதை எப்படிச் செய்யக்கூடும்? இயேசு சொன்னவை நமக்கு ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் எது என்று உனக்குத் தெரியுமா? — அதுவே பரிசுத்த பைபிள். ஆகவே பைபிளுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் இயேசுவுக்குச் செவி கொடுத்துக்கேட்கலாம்.
நாம் இயேசுவுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று கடவுள் தாமே சொல்லுகிறார். ஒருநாள் இயேசு தம்முடைய நண்பர்களில் மூவரோடுகூட ஓர் உயர்ந்த மலையின் மேல் இருக்கையில், பரலோகத்திலிருந்து ஒரு குரல்: ‘இவர் என்னுடைய குமாரன், மிகவும் நேசிக்கப்படுகிறவர், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்; இவருக்குச் செவிகொடுங்கள்,’ என்று சொன்னது. அது யாருடைய குரல் என்பது உனக்குத் தெரியுமா? — அது கடவுளுடைய குரல்! நாம் அவருடைய குமாரனுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று கடவுள் சொன்னார்.—மத்தேயு 17:1-5.
நீ இந்தப் பெரிய போதகருக்குச் செவிகொடுப்பாயா? — இதையே நாம் எல்லோரும் செய்யவேண்டும். நாம் இதைச் செய்வோமானால் சந்தோஷமாக இருப்போம். மேலும், நாம் கற்றுக்கொள்ளுகிற இந்த நல்ல காரியங்களை நம்முடைய நண்பர்களுக்குச் சொல்வோமானால் அதுவுங்கூட நமக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரும்.
(இயேசுவுக்குச் செவிகொடுப்பதிலிருந்து வரும் நன்மைகளைப் பற்றிய மேலும் அதிகப்படியான சிறந்த எண்ணங்களை அடைய, உங்கள் பைபிளைத் திறந்து, யோவான் 8:28-30; 3:16; அப்போஸ்தலர் 4:12 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்.)