அதிகாரம் 18
ஆட்கள் ஏன் கெட்டகாரியங்களைச் செய்கின்றனர்
எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் அல்லவா? — அப்பொழுது ஒருவரும் மற்ற எவருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள்.
ஆனால் எப்பொழுதும் உண்மையில் நல்லவராக இருப்பவர் எவராவது உண்டா? நீ என்ன நினைக்கிறாய்? — யெகோவா தேவன் எப்பொழுதும் நல்லவராக இருக்கிறார் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. மேலும் பெரிய போதகராகிய இயேசு எப்பொழுதும் சரியானதைச் செய்கிறார். ஆனால் நம்மில் எவரும் எப்பொழுதும் நல்லவராக இருப்பதில்லை.
நாம் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்யலாம். ஆனால் நாம் கெட்ட காரியங்களை நினைக்கும் சமயங்கள் இருக்கின்றன அல்லவா? — சில சமயங்களில் நாம் கெட்ட செயல்களைச் செய்கிறோம். முதல் மனிதனாகிய ஆதாம், தெரிந்து வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போனான். அவன் செய்தது மிகவும் கெட்ட காரியம். அதன் விளைவாக நாம் எல்லோரும் அபூரணராய்ப் பிறந்தோம். நாம் எல்லோரும் ஆதாமின் பிள்ளைகள். தாங்கள் கெட்டவர்களாக இருக்க விரும்பாவிட்டாலுங்கூட ஆட்கள் கெட்ட காரியங்களைச் செய்வதற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது.
ஆனால் சிலர் வேண்டுமென்றே கெட்ட காரியங்களைச் செய்கின்றனர். அவர்கள் மற்றவர்களைப் பகைத்து அவர்களுக்குத் தீங்கு உண்டாகும்படி காரியங்களைச் செய்கின்றனர். இப்படிப்பட்ட ஓர் ஆள் என்றாவது மாறி நல்லவனாயிருக்கக் கற்றுக்கொள்ளக்கூடுமென்று நீ நினைக்கிறாயா? —
கெட்ட ஆட்கள் இவ்விதம் மாறினதைப் பற்றி உதாரணங்களை பைபிள் கொடுக்கிறது. அவர்களில் ஒருவனைப் பற்றி நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அவன் ஏன் கெட்டவனாயிருந்தான் என்பதை நாம் இருவரும் சேர்ந்து கண்டுபிடிக்க முடியுமாவென்று பார்க்கலாம்.
அந்த மனிதனின் பெயர் சவுல். சவுல் வெகு மதப்பற்றுள்ள மனிதன். பரிசேயர் எனப்பட்ட ஒரு மதத் தொகுதியைச் சேர்ந்தவனாக அவன் இருந்தான். அவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தை இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்தத் தலைவர்கள் சிலரின் போதகங்களுக்கு அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினார்கள். இது ஞானமான காரியமென்று நீ நினைக்கிறாயா? — இது மிகுந்த தொந்தரவுக்கு வழி நடத்தக்கூடும்.
ஒரு நாள் சவுல் எருசலேமில் இருக்கையில் ஸ்தேவான் என்ற பெயருள்ள, இயேசுவினுடைய ஒரு சீஷன் கைது செய்யப்பட்டான். அவர்கள் அவனை நியாய ஸ்தலத்திற்குக் கொண்டுசென்றனர். அந்த நீதிமன்றத்தின் நியாயாதிபதிகளில் சிலர் பரிசேயராக இருந்தனர். தன்னைப் பற்றிக் கெட்ட காரியங்கள் சொல்லப்பட்ட போதிலும், ஸ்தேவான் பயப்படவில்லை. அவன் நேராகப் பேசி, கடவுளைப் பற்றியும் இயேசுவைப் பற்றியும் அந்த நியாயாதிபதிகளுக்கு ஒரு நல்ல சாட்சியைக் கொடுத்தான்.
ஆனால் அந்த நியாயாதிபதிகள் தாங்கள் கேட்டவற்றை விரும்பவில்லை. அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தனர். அவர்கள் ஸ்தேவானைப் பிடித்து அவனை நகரத்திற்கு வெளியே கொண்டுசென்றனர். அவர்கள் அவனைக் கீழே தள்ளி, அவனைக் கொல்லும் வரையிலும் அவன்மீது கற்களை எறிந்தார்கள்.
ஸ்தேவான் கொல்லப்படுகையில் சவுல் கவனித்துப் பார்த்துக்கொண்டு அங்கேதான் இருந்தான். அவனைக் கொல்வது நல்லதென்று அவன் எண்ணினான். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கெட்ட காரியத்தை அவன் எப்படி நினைக்கக்கூடும்? —
சவுல் ஒரு பரிசேயனாய் வளர்ந்து வந்திருந்தான். பரிசேயரே சரியானவர்கள் என்பதாக அவன் தன் வாழ்நாளெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்திருந்தான். இந்த மனிதரையே தன்னுடைய முன்மாதிரியாக அவன் நோக்கியிருந்தான். ஆகவே அவர்களுடைய மாதிரியை அவன் பின்பற்றினான்.
இப்பொழுது ஸ்தேவான் மரித்துவிட்டிருக்க இயேசுவின் மற்ற சீஷர்கள் யாவரையும் தொலைத்துவிட வேண்டுமென்று சவுல் விரும்பினான். அவன் நேரே அவர்கள் வீடுகளுக்குள் தானே சென்று ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்துக் கொண்டுவர ஆரம்பித்தான். பின்பு அவன் அவர்களைச் சிறைச்சாலைக்குள் தள்ளப்படும்படிச் செய்வான். சவுலுக்கு விலகியிருக்கும்படியாக சீஷரில் பலர் எருசலேமை விட்டு வெளியே சென்றனர். ஆனால் அவர்கள் இயேசுவைப் பற்றிப் பிரசங்கிப்பதை நிறுத்திவிடவில்லை.—அப்போஸ்தலர் 8:1-4.
இது, சவுல் இயேசுவின் சீஷர்களை இன்னும் அதிகமாகப் பகைக்கும்படி செய்தது. அவன் பிரதான ஆசாரியனிடம் சென்று தமஸ்கு பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்களைக் கைது செய்யும்படி அனுமதி பெற்றுக்கொண்டான். ஆனால் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அதிசயிக்கச் செய்யும் ஒரு காரியம் நடந்தது.
வானத்திலிருந்து திடீரென்று ஓர் ஒளி வீசியது. அது அவ்வளவு பிரகாசமாயிருந்ததால் சவுலின் கண்களைக் குருடாக்கியது. மேலும், “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று ஒரு குரல் சொல்லிற்று. அது பரலோகத்திலிருந்து கர்த்தராகிய இயேசு பேசினதாகும்! ஆகவே சவுல் குருடனாய்த் தமஸ்குவுக்கு வழிநடத்தப்பட்டான்.
மூன்று நாட்களுக்கு அப்பால் இயேசு அனனியா என்ற பெயருள்ள தம்முடைய சீஷரில் ஒருவனுக்குத் தரிசனத்தில் தோன்றினார். சவுலைப் போய்ச் சந்தித்து, அவன் திரும்பப் பார்வையடையும்படிச் செய்து, அவனிடம் பேசும்படி இயேசு அவனுக்குக் கூறினார். சவுல் இப்பொழுது செவிகொடுத்துக் கேட்க ஆயத்தமாயிருந்தான். அனனியா தன்னிடத்தில் பேசினபோது, சவுல் இயேசுவைப் பற்றிய சத்தியத்தை ஏற்றுக்கொண்டான். அவனுடைய கண்கள் திரும்பப் பார்வையடைந்தன. அவனுடைய வாழ்க்கைப் போக்கு முழுவதும் மாறிற்று. அவன் கடவுளுடைய உண்மையுள்ள ஓர் ஊழியன் ஆனான்.—அப்போஸ்தலர் 9:1-22.
சவுல் ஏன் அவ்வளவு கெட்டவனாக இருந்துவந்தான் என்பது இப்பொழுது உனக்குத் தெரிகிறதா? — அவன் தவறான காரியங்கள் கற்பிக்கப்பட்டு வந்திருந்தான். கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இராத மனிதரை அவன் பின்பற்றிக் கொண்டிருந்தான். மேலும் கடவுளுடைய வார்த்தைக்கு மேலாக மனிதருடைய அபிப்பிராயங்களை வைக்கும் ஒரு வகுப்பாரைச் சேர்ந்தவனாக அவன் இருந்தான். ஆனால் சவுல் மாறினான். ஏனென்றால் அவன் உண்மையில் சத்தியத்தை வெறுக்கவில்லை.
இன்று சவுலைப் போல் பல ஆட்கள் இருக்கின்றனர். அவர்கள் மாறக்கூடும், ஆனால் அது சுலபமாக இல்லை. ஒரு காரணமானது, எல்லோரையும் கெட்ட காரியங்களைச் செய்ய வைக்கும்படி ஒருவன் கடினமாய் உழைத்துக் கொண்டிருப்பதாகும். அவன் யார் என்று உனக்குத் தெரியுமா? — இயேசு பரலோகத்திலிருந்து சவுலினிடம் பேசினபோது இவனைப் பற்றிப் பேசினார். அவர் சவுலினிடம்: ‘ஜனங்களை இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு உன்னை அனுப்புகிறேன்,’ என்று சொன்னார். — அப்போஸ்தலர் 26:17, 18.
ஆம், கெட்ட காரியங்களைப் பற்றிய எல்லா போதனையையும் உண்டுபண்ணியிருக்கிறவன் பிசாசாகிய சாத்தானே. ஆட்கள் கெட்டவர்களாக இருக்கும்படி அவன் விரும்புகிறான். ஆகவே நாம் கெட்ட காரியங்களைச் செய்வோமாகில், அப்பொழுது பிசாசு சந்தோஷப்படுகிறான். ஆனால் நாம் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம் அல்லவா? — யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறோமென்று நாம் எப்படி நிச்சயமாயிருக்கக்கூடும்? —
நாம் எப்பொழுதும் பைபிளுக்குக் கவனஞ்செலுத்தி அது சொல்வதைச் செய்துவருவோமாகில் நாம் கடவுளைச் சந்தோஷப்படுத்துவோம். நாம் கெட்ட ஏதோ ஒன்றைச் செய்துவந்திருக்கிறோமென்று பைபிள் காட்டுகையில், நாம் அதைச் செய்வதை நிறுத்திவிடவேண்டும். நாம் செய்யும்படி கடவுள் விரும்புகிற காரியங்களைப் பற்றி பைபிளிலிருந்து நாம் கற்றுக்கொள்கையில் அவற்றைச் செய்ய நாம் மிகுந்த ஆவலுள்ளவர்களாக இருக்கவேண்டும். கடவுளுக்குப் பிரியமானதை நாம் செய்கையில் நாம் நல்ல காரியங்களைச் செய்கிறோம், ஏனென்றால் கடவுள் நல்லவராக இருக்கிறார்.
(கெட்டதைத் தவிர்ப்பதில் உதவிபெற, நீதிமொழிகள் 3:5-7; 12:15; 2:10-14; சங்கீதம் 119:9-11 [118:9-11, டூ.வெ.] ஆகியவற்றைச் சேர்ந்து வாசியுங்கள்.)