அதிகாரம் 9
ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் வெற்றி பெற முடியும்!
1-3. ஒற்றைப்பெற்றோர் குடும்பங்கள் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதற்கு எது காரணமாயிருக்கிறது, அதில் உட்பட்டிருப்பவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்?
“அதிவிரைவாய் வளர்ந்துவரும் குடும்ப பாணி” என்று ஐக்கிய மாகாணங்களில் ஒற்றைப்பெற்றோர் குடும்பங்கள் அழைக்கப்படுகின்றன. மற்ற அநேக தேசங்களில் சூழ்நிலைமை இதைப் போன்றே இருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் பதிவாகியிருக்கும் மணவிலக்குகள், கைவிடப்படுதல், பிரிவுகள், முறைகேடானப் பிறப்புகள் ஆகியவற்றால் லட்சக்கணக்கான பெற்றோரும் பிள்ளைகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
2 “நான் இரண்டு பிள்ளைகளையுடைய 28 வயது விதவை,” என்று ஒற்றைத்தாய் ஒருவர் எழுதினார். “நான் அதிக மனச்சோர்வுற்று இருக்கிறேன், ஏனென்றால் தகப்பன் இல்லாமல் என் பிள்ளைகளை வளர்ப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. யாருக்குமே என்னைப் பற்றி அக்கறை இல்லாதது போல் எனக்கு தோன்றுகிறது. என் பிள்ளைகள், நான் அடிக்கடி அழுகிறதை பார்க்கின்றனர், அது அவர்களை பாதிக்கிறது.” கோபம், குற்ற உணர்வு, தனிமை போன்ற உணர்வுகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலான ஒற்றைப்பெற்றோர் வெளியே சென்று வேலைசெய்துவிட்டு பின்னர் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய சவாலை எதிர்ப்படுகின்றனர். ஒருவர் சொன்னார்: “ஒற்றைப்பெற்றோராயிருப்பது, பல பந்துகளை ஒன்றுகூட கீழே விழாமல் தட்டும் வித்தையைப் போல் உள்ளது. ஆறுமாத பயிற்சிக்குப் பின், கடைசியாக நான்கு பந்துகளை ஒன்றுகூட கீழே விழாமல் தட்டும் திறமையைப் பெற உங்களால் முடிந்துள்ளது. ஆனால் நீங்கள் அதைச் செய்து முடித்தவுடனேயே, யாரோ ஒருவர் ஒரு புதிய பந்தை அதோடு கூட்டுகிறார்!”
3 ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு பெரும்பாலும் அவர்களுக்கே உரிய போராட்டங்கள் உண்டு. பெற்றோரில் ஒருவர் திடீரென விட்டுப்பிரிவதன் காரணமாகவோ அல்லது இறப்பதன் காரணமாகவோ அவர்கள் கடுமையான உணர்ச்சிகளோடு போராட வேண்டியிருக்கலாம். பெற்றோர் ஒருவர் இல்லாமல் இருப்பது, அநேக இளைஞருக்கு மிகவும் ஆழமான எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்துவதாய் தோன்றுகிறது.
4. ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களின் பேரில் யெகோவா அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
4 ஒற்றைப்பெற்றோர் குடும்பங்கள் பைபிள் காலங்களில் இருந்தன. “திக்கற்ற பிள்ளையை” பற்றியும் “விதவையை” பற்றியும் பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. (யாத்திராகமம் 22:22; உபாகமம் 24:19-21; யோபு 31:16-22) யெகோவா தேவன் அவர்களுடைய மோசமான நிலைமையைப் பார்த்து அக்கறையில்லாமல் இருந்துவிடவில்லை. சங்கீதக்காரன் கடவுளை “திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்” என்று அழைத்தார். (சங்கீதம் 68:5) நிச்சயமாகவே, இன்றும் ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களிடமாக யெகோவா அதே அக்கறையை உடையவராய் இருக்கிறார்! உண்மையில், அவர்கள் வெற்றியடைவதற்கு உதவும் நியமங்களை அவருடைய வார்த்தை அளிக்கிறது.
வீட்டில் வழக்கமாய் செய்யப்படும் வேலைகளை திறம்பட செய்யக் கற்றுக்கொள்ளுதல்
5. ஒற்றைப்பெற்றோர் ஆரம்பத்தில் என்ன பிரச்சினையை எதிர்ப்பட வேண்டும்?
5 ஒரு வீட்டை நிர்வகிக்கும் வேலையை சிந்தித்துப் பாருங்கள். உங்கள் காரிலிருந்து அசாதாரணமான ஓசைகள் வருகின்றன, ஆனால் அந்த ஓசைகள் எங்கிருந்து வருகின்றன என்பது உங்களுக்கு தெரியாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அது போன்று, “கணவன் இங்கிருந்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் நினைக்கும் சமயங்கள் அநேகம் உண்டு,” என்று மணவிலக்கு செய்துகொண்ட ஒருவர் ஒப்புக்கொள்கிறார். சமீபத்தில் மணவிலக்கு செய்திருக்கும் ஆண்கள் அல்லது துணையை இழந்த ஆண்கள், தாங்கள் இப்போது செய்யவேண்டிய நிறைய வீட்டு வேலைகளைக் குறித்து மனங்குழம்பி போகலாம். பிள்ளைகளுக்கோ, வீட்டில் நிலவும் ஒழுங்கின்மை ஸ்திரமற்ற பாதுகாப்பற்ற உணர்ச்சிகளை அதிகப்படுத்துகிறது.
பிள்ளைகளே, உங்கள் ஒற்றைப்பெற்றோருடன் ஒத்துழையுங்கள்
6, 7. (அ) நீதிமொழிகள் புத்தகத்தில் உள்ள ‘திறமைசாலியான மனைவி’ என்ன சிறந்த முன்மாதிரியை வைத்தாள்? (ஆ) ஒற்றைப்பெற்றோர் வீடுகளில் வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடுமையாய் உழைப்பது எவ்வாறு உதவும்?
6 எது உதவக்கூடும்? நீதிமொழிகள் 31:10-31-ல் (NW) விவரிக்கப்பட்டிருக்கும் ‘திறமைசாலியான மனைவி’ வைத்த முன்மாதிரியை கவனியுங்கள். அவளுடைய சாதனைகளின் விரிவு குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது—வாங்குவதும் விற்பதும், தையல் வேலை, சமையல் செய்தல், நிலம் மற்றும் வீடு போன்றவற்றில் முதலீடு செய்தல், விவசாயம் செய்தல், தொழிலை நிர்வகித்தல். அவளுடைய இரகசியம்? அவள் சுறுசுறுப்பாய் உழைத்தாள், இரவு நீண்ட நேரம்வரை வேலை செய்துவிட்டு அதிகாலையிலேயே எழுந்து தன் வேலைகளை ஆரம்பித்து விடுவாள். அவள் வேலைகளை நன்கு ஒழுங்கமைத்திருந்தாள், சில வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மற்ற வேலைகளை தன் சொந்த கைகளால் தானே செய்தாள். அவள் புகழை சம்பாதித்துக்கொண்டதில் எவ்வித ஆச்சரியமுமில்லை!
7 நீங்கள் ஒரு ஒற்றைப்பெற்றோராய் இருந்தால், உங்கள் வீட்டு பொறுப்புகளை கடமையுணர்ச்சியோடு செய்துமுடியுங்கள். அத்தகைய வேலைகளைச் செய்வதில் திருப்தியைக் காணுங்கள், ஏனெனில் இது உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியை அதிகரிப்பதற்கு அதிகத்தைச் செய்கிறது. என்றபோதிலும், சரியான திட்டமிடுதலும் ஒழுங்கமைப்பும் இன்றியமையாதவை. பைபிள் சொல்கிறது: “சுறுசுறுப்புள்ளவனின் சிந்தனைகள் எப்போதும் சுகத்தைத் தரும்.” (நீதிமொழிகள் 21:5, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) ஒற்றைத்தந்தை ஒருவர் ஒப்புக்கொண்டார்: “பசி எடுக்கும்வரை நான் சாப்பாட்டைக் குறித்து நினைக்காமல் இருக்கும் மனநிலையோடிருக்கிறேன்.” ஆனால் அவசரமாக திடீரென்று தயாரிக்கப்பட்ட உணவைக்காட்டிலும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உணவு அதிக சத்துள்ளதாயும் விரும்பத்தக்தாயும் இருக்கும். தனித்திறமையைத் தேவைப்படுத்தும் புதிய வீட்டுவேலைகளையும்கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கலாம். விவரமறிந்த நண்பர்கள், சுய-உதவி புத்தகங்கள், உதவிசெய்ய முன்வரும் வாழ்க்கைத்தொழிலர்கள் ஆகியோரின் அறிவுரையை நாடுவதன்மூலம், சில ஒற்றைத்தாய்மார் பெயின்ட் அடித்தல், குழாய் முதலியவற்றை செப்பனிடுதல், சிக்கலற்ற எளிய ஆட்டோ ரிப்பேர் வேலைகள் செய்தல் போன்றவற்றை ஊக்கத்துடன் முயற்சியெடுத்து செய்திருக்கின்றனர்.
8. ஒற்றைப்பெற்றோரின் பிள்ளைகள் எவ்வாறு வீட்டில் உதவி செய்யலாம்?
8 பிள்ளைகளை உதவிசெய்யும்படி கேட்பது நியாயமானதா? ஒற்றைத்தாய் ஒருவர் விவாதித்தார்: “பிள்ளைகளுக்கு தொல்லைகள் கொடுக்காமல் அனைத்தையும் சுலபமாக ஆக்குவதன்மூலம், பெற்றோரில் ஒருவர் இல்லாததை சரியீடு செய்ய நீங்கள் விரும்புவீர்கள்.” அது புரிந்துகொள்ளத்தக்கதே, ஆனால் அது எப்போதுமே பிள்ளையின் நலனுக்கு ஏற்றதாய் இல்லாமல் இருக்கலாம். பைபிள் காலங்களில் வசித்துவந்த கடவுள்-பயமுள்ள இளைஞருக்கு பொருத்தமான வேலைகள் கொடுக்கப்பட்டன. (ஆதியாகமம் 37:2; உன்னதப்பாட்டு 1:6) ஆகையால், உங்கள் பிள்ளைகள்மீது அளவுக்குமீறி பாரம்சுமத்தாமல் இருக்க கவனமாயிருக்கிறபோதிலும், பாத்திரங்களைக் கழுவுதல், தங்கள் சொந்த அறையை சுத்தமாக வைத்தல் போன்ற வேலைகளைக் கொடுப்பது நல்லது. வீட்டுவேலைகள் சிலவற்றை ஏன் ஒன்றாக சேர்ந்து செய்யக்கூடாது? இது அதிக மகிழ்ச்சியூட்டுவதாய் இருக்கக்கூடும்.
வாழ்க்கைப்பிழைப்பு என்ற சவால்
உங்கள் பிள்ளைகளோடு உங்கள் நேரத்தை முடிந்தளவு செலவிடுங்கள்
9. ஒற்றைத்தாய்மார் ஏன் பெரும்பாலும் பண நெருக்கடிகளை எதிர்ப்படுகின்றனர்?
9 பெரும்பாலான ஒற்றைப்பெற்றோர் பணசம்பந்தமான தேவைகளை நிறைவுசெய்வதைக் கடினமாய்க் காண்கின்றனர், குறிப்பாக திருமணமாகாத இளம் தாய்மார் பொதுவாக இதை மிகவும் கடினமாகக் காண்கின்றனர்.a அரசு நல உதவிகள் கிடைக்கும் தேசங்களில் வாழ்பவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்கும்வரையாவது அதை ஞானமாய் பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்படும்போது அப்படிப்பட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பைபிள் கிறிஸ்தவர்களை அனுமதிக்கிறது. (ரோமர் 13:1, 6) விதவைகளும் மணவிலக்கு செய்துகொண்டவர்களும் அதற்கு ஒத்த சவால்களை எதிர்ப்படுகின்றனர். அநேகர் பல வருடங்களாக வீட்டிற்குள்ளேயே வாழ்க்கை நடத்திவிட்டு, மறுபடியும் வேலைக்கு செல்லவேண்டிய நிலைக்குள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர், அப்படிப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் குறைவான ஊதியம் தரும் வேலைகளே கிடைக்கின்றன. வேலை-பயிற்சி திட்டங்கள் அல்லது குறுகிய-கால பள்ளி தொடர்பயிற்சிகள் போன்றவற்றில் சேர்ந்துகொள்வதன்மூலம் சிலர் சமாளித்து தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர்.
10. உலகப்பிரகாரமான வேலையை தான் ஏன் தேட வேண்டும் என்பதை ஒற்றைத்தாய் ஒருவர் தன் பிள்ளைகளிடம் எவ்வாறு விளக்கலாம்?
10 நீங்கள் வேலை தேடுவது உங்கள் பிள்ளைகளுக்கு வருத்தமூட்டுகிறது என்றால் ஆச்சரியப்படாதீர்கள், குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். மாறாக, நீங்கள் ஏன் வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்குங்கள்; அவர்களுக்கு தேவையானதை அளிக்க வேண்டும் என்று யெகோவா உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவிசெய்யுங்கள். (1 தீமோத்தேயு 5:8) காலப்போக்கில், பெரும்பாலான பிள்ளைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை அமைத்துக் கொள்கின்றனர். என்றபோதிலும், வேலைகள் நிறைந்த உங்கள் அட்டவணை எவ்வளவு நேரத்தை அனுமதிக்கிறதோ அவ்வளவு நேரத்தை அவர்களோடு செலவழிக்க முயற்சி செய்யுங்கள். அப்படிப்பட்ட அன்பான கவனிப்பு, பணம் குறைவுபடுவதால் குடும்பம் அனுபவிக்கும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும்கூட உதவலாம்.—நீதிமொழிகள் 15:16, 17.
யார் யாரைக் கவனித்துக்கொள்வது?
“விதவைகளையும்,” “திக்கற்ற பிள்ளைகளையும்” சபை அசட்டை செய்வதில்லை
11, 12. என்ன வரம்புகளை ஒற்றைப்பெற்றோர் பாதுகாக்க வேண்டும், அதை அவர்கள் எவ்வாறு செய்யலாம்?
11 விசேஷமாக தங்கள் பிள்ளைகளோடு நெருக்கமாய் இருப்பதற்கு ஒற்றைப்பெற்றோர் விரும்புவது இயற்கையானதே, இருப்பினும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கடவுள்-நியமித்திருக்கும் வரம்புகள் முறிந்துபோகாமல் இருக்க கவனமாயிருக்க வேண்டும். உதாரணமாக, தன் மகன் குடும்பத்தலைவனுக்குரிய பொறுப்புகளை எடுத்துக்கொள்ளும்படி ஒற்றைத்தாய் எதிர்பார்த்தால் அல்லது தன் மகளை நம்பிக்கைக்குப் பாத்திரமான சிநேகிதியாக நடத்தி, உள்ளார்ந்த பிரச்சினைகளையெல்லாம் தெரிவித்து பாரமடையச் செய்தால் வினைமையான பிரச்சினைகள் எழும்பக்கூடும். அவ்வாறு செய்வது பொருத்தமற்றதாயும், மனதுக்கு பாரமானதாயும், ஒருவேளை பிள்ளைக்கு அது குழப்பமூட்டுவதாயும் இருக்கும்.
12 பெற்றோராக, நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்—பிள்ளைகள் உங்களை கவனித்துக்கொள்வார்கள் என்று அல்ல. (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 12:14.) சில சமயங்களில் உங்களுக்கு ஆலோசனையோ அல்லது ஆதரவோ தேவைப்படலாம். கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தோ அல்லது ஒருவேளை முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவப் பெண்களிடமிருந்தோ நீங்கள் அதை நாடுங்கள், உங்கள் வயதுவராதப் பிள்ளைகளிடமிருந்து அல்ல.—தீத்து 2:3.
சிட்சையைக் காத்துவருதல்
13. சிட்சையைக் குறித்து என்ன பிரச்சினையை ஒற்றைத்தாய் எதிர்ப்படலாம்?
13 சிட்சை அளிப்பவராக இருப்பதில் ஒரு ஆணுக்கு பிரச்சினை அவ்வளவாக இருக்காது, ஆனால் பெண்ணுக்கோ இந்த விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். ஒற்றைத்தாய் ஒருவர் சொல்கிறார்: “என் மகன்களுக்கு வயதுவந்த ஆண்களின் உடல்களும் குரல்களும் இருக்கின்றன. அவர்களோடு ஒப்பிடுகையில், சில சமயங்களில் உறுதியற்றவளாகவோ அல்லது பெலவீனமானவளாகவோ இல்லாமல் இருப்பதாக காண்பிப்பது கடினமாய் இருக்கிறது.” கூடுதலாக, நீங்கள் பெரிதும் நேசித்த துணைவரை மரணத்தில் இழந்ததன் காரணமாக இன்னும் வருந்திக்கொண்டிருக்கலாம் அல்லது திருமண முறிவின் காரணமாக ஏற்பட்ட குற்ற உணர்வு அல்லது கோபம் போன்ற உள்ளுணர்ச்சிகளை ஒருவேளை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை நீங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டால், உங்கள் பிள்ளை உங்களுடைய முன்னாள் துணைவரோடு இருக்க விரும்புமோ என்பதைக் குறித்து நீங்கள் பயப்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் சமநிலையான சிட்சை அளிப்பதைக் கடினமானதாக்கிவிடக்கூடும்.
14. சிட்சையைக் குறித்து ஒற்றைப்பெற்றோர் எவ்வாறு சமநிலையான நோக்குநிலையைக் காத்துக்கொள்ளலாம்?
14 ‘தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணும்,’ என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 29:15) குடும்ப விதிமுறைகளை ஏற்படுத்துவதற்கும் அதை அமல்படுத்துவதற்கும் யெகோவா தேவனின் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது, ஆகையால் குற்ற உணர்வு, மன வியாகுலம் அல்லது பயம் ஆகியவற்றுக்கு இடங்கொடுத்துவிடாதீர்கள். (நீதிமொழிகள் 1:8) பைபிள் நியமங்களை ஒருபோதும் விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். (நீதிமொழிகள் 13:24) நியாயமாகவும், நிலையாகவும், கண்டிப்பாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். காலப்போக்கில் பெரும்பாலான பிள்ளைகள் அதற்கு பிரதிபலிப்பர். இருப்பினும், நீங்கள் உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள விரும்புவீர்கள். ஒற்றைத்தந்தை ஒருவர் சொல்கிறார்: “தங்கள் தாயை இழந்துவிட்ட அதிர்ச்சியின் காரணமாக என் சிட்சையை புரிந்துகொள்ளுதலோடு சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது, நான் அவர்களோடு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேசுவேன். நாங்கள் இரவு சாப்பாடு தயாரிக்கையில் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவதற்கு ‘நல்ல வாய்ப்புகளைப்’ பெற்றிருக்கிறோம். அந்தச் சமயத்தில்தான் அவர்கள் உண்மையில் என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்கள்.”
15. மணவிலக்கு செய்துகொண்ட பெற்றோர் முன்னாள் துணைவரைக் குறித்து பேசுகையில் எதைத் தவிர்க்க வேண்டும்?
15 நீங்கள் மணவிலக்கு செய்திருந்தால், உங்கள் முன்னாள் துணைவரின் மீதுள்ள மரியாதையை அழித்துப் போடுவதன்மூலம் நன்மையான எதையும் சாதிக்கமுடியாது. பெற்றோரின் சண்டை பிள்ளைகளுக்கு வேதனையுண்டாக்குகிறது, இறுதியில் அது உங்கள் இருவர் பேரிலுள்ள அவர்களுடைய மரியாதையைக் குறைத்துவிடும். எனவே, இதுபோன்ற புண்படுத்தும் குறிப்புகளைச் சொல்வதை தவிருங்கள்: “நீ உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய்!” உங்கள் முன்னாள் துணைவர் உங்களுக்கு என்னதான் வேதனையை உண்டாக்கியிருந்தாலும், அவரோ அல்லது அவளோ இன்னும் உங்கள் பிள்ளையின் பெற்றோராக இருக்கிறார், உங்கள் பிள்ளைக்கு பெற்றோர் இருவரின் அன்பும், கவனிப்பும், சிட்சையும் தேவை.b
16. ஒற்றைப்பெற்றோர் வீட்டில் என்ன ஆவிக்குரிய ஏற்பாடுகள் சிட்சையின் ஒரு ஒழுங்கான பாகமாய் இருக்க வேண்டும்?
16 முந்தின அதிகாரங்களில் கலந்தாலோசித்தபடி, சிட்சை என்பது வெறும் தண்டனையை மட்டுமல்ல, பயிற்றுவிப்பையும் போதனையையும் உட்படுத்துகிறது. ஒரு நல்ல ஆவிக்குரிய பயிற்றுவிப்பு திட்டத்தின்மூலம் அநேக பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். (பிலிப்பியர் 3:16) கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராவது இன்றியமையாதது. (எபிரெயர் 10:24, 25) அதுபோலவே வாராந்தர குடும்ப பைபிள் படிப்பை வைத்திருப்பதும் முக்கியம். அப்படி குடும்ப படிப்பை ஒழுங்காக நடத்துவது சுலபமானதல்ல என்பது உண்மைதான். “ஒரு நாள் முழுவதும் வேலைசெய்த பிறகு, நீங்கள் நிச்சயமாகவே ஓய்வெடுக்க விரும்புவீர்கள்,” என்று கடமையுணர்ச்சியுள்ள ஒரு தாய் சொல்கிறாள். “ஆனால் அது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய காரியம் என்பதை அறிந்து என் மகளோடு படிப்பதற்கு நான் என்னை மனசம்பந்தமாக தயார்படுத்தி வைத்துக்கொள்வேன். அவள் உண்மையிலேயே எங்கள் குடும்ப படிப்பை அனுபவித்து மகிழ்கிறாள்!”
17. பவுலின் தோழனாகிய தீமோத்தேயுவின் சிறப்பான வளர்ப்புமுறையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 அப்போஸ்தலனாகிய பவுலின் தோழனாகிய தீமோத்தேயுக்கு, அவருடைய தாயும் பாட்டியம்மாவும் பைபிள் நியமங்கள் பேரில் பயிற்சி கொடுத்தனர் என்பதும், அவருடைய தந்தையோ கொடுக்கவில்லை என்பதும் வெளிப்படையாய் இருக்கிறது. இருப்பினும், எப்பேர்ப்பட்ட சிறப்புவாய்ந்த கிறிஸ்தவராக தீமோத்தேயு ஆனார்! (அப்போஸ்தலர் 16:1, 2; 2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) அதேபோல் நீங்களும் உங்கள் பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்ப்பதற்காக உழைக்கையில் சாதகமான விளைவுகளைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையோடு இருக்கலாம்.—எபேசியர் 6:4, NW.
தனிமையை போராடி வெல்லுதல்
18, 19. (அ) ஒற்றைப்பெற்றோருக்கு எவ்வாறு தனிமை உணர்வுகள் வெளிப்படலாம்? (ஆ) மாம்சப்பிரகாரமான ஆசைகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது?
18 ஒற்றைப்பெற்றோர் ஒருவர் பெருமூச்சுவிட்டு சொன்னார்: “நான் வீட்டுக்கு வந்து அந்த நான்கு சுவர்களையும் பார்க்கும்போது, விசேஷமாக பிள்ளைகள் படுக்கைக்குச் சென்ற பிறகு, தனிமை என்னை சூழ்ந்துகொள்கிறது.” ஆம், ஒற்றைப்பெற்றோர் அடிக்கடி எதிர்ப்படும் மிகப் பெரிய பிரச்சினை தனிமை ஆகும். திருமணம் தரும் அன்புமிக்க தோழமைக்காகவும் மிக நெருங்கிய உறவுக்காகவும் ஏங்குவது இயல்பானதே. ஆனால் இந்தப் பிரச்சினையை ஒரு நபர் எந்த விதத்திலாவது தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டுமா? அப்போஸ்தலனாகிய பவுலின் நாட்களில், சில இளம் விதவைகள் ‘கிறிஸ்துவுக்கு விரோதமாய் காமவிகாரங்கொள்ளுவதற்கு’ தங்களை அனுமதித்தனர். (1 தீமோத்தேயு 5:11, 12) சரீரப்பிரகாரமான விருப்பங்கள் ஆவிக்குரிய அக்கறைகளை மறைத்துப்போடுவதற்கு அனுமதிப்பது தீங்கிழைப்பதாய் இருக்கும்.—1 தீமோத்தேயு 5:6.
19 ஒரு கிறிஸ்தவ மனிதர் சொன்னார்: “பாலின தூண்டுதல்கள் அதிக பலமானவையாய் இருக்கின்றன, ஆனால் நீங்கள் அவற்றை கட்டுப்படுத்தலாம். அதைப் பற்றிய எண்ணம் மனதில் வரும்போது, நீங்கள் அதைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருக்கக்கூடாது. நீங்கள் அதை உடனடியாக எடுத்துப்போட வேண்டும். உங்கள் பிள்ளையைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும்கூட உங்களுக்கு உதவிசெய்யும்.” கடவுளுடைய வார்த்தை புத்திமதி அளிக்கிறது: “பாலின பசி குறித்த விஷயத்தில் உங்கள் சரீர அவயவங்களை உணர்வற்றிருக்கச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:5, NW) உணவின் பேரில் உங்களுக்கிருக்கும் ஆர்வத்தை இழந்துபோவதற்கு நீங்கள் முயற்சி செய்துகொண்டிருந்தால், சுவைமிக்க உணவுகளைச் சிறப்பித்துக் காண்பிக்கும் படங்களையுடைய பத்திரிகைகளை நீங்கள் வாசிப்பீர்களா அல்லது உணவைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கும் ஆட்களோடு கூட்டுறவுகொள்வீர்களா? நிச்சயமாகவே செய்யமாட்டீர்கள்! மாம்சப்பிரகாரமான ஆசைகளைக் குறித்த விஷயத்திலும் இதுவே உண்மையாயிருக்கிறது.
20. (அ) விவாகநோக்குடன் அவிசுவாசிகளோடு பழகுவதில் என்ன ஆபத்து இருக்கிறது? (ஆ) முதல் நூற்றாண்டிலும் இன்றும் ஒற்றையாய் இருப்பவர்கள் தனிமையோடு எவ்வாறு போராடியிருக்கின்றனர்?
20 சில கிறிஸ்தவர்கள் அவிசுவாசிகளோடு விவாகநோக்குடன் பழக ஆரம்பித்தனர். (1 கொரிந்தியர் 7:39) அது அவர்களுடைய பிரச்சினையைத் தீர்த்து வைத்ததா? இல்லை. மணவிலக்கு செய்துகொண்ட ஒரு கிறிஸ்தவ பெண் எச்சரித்தாள்: “விவாகமின்றி தனித்து இருப்பதைக் காட்டிலும் அதிமோசமான காரியம் ஒன்று இருக்கிறது, அது தவறான நபரை திருமணம் செய்துகொள்வது ஆகும்!” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ விதவைகள் அவ்வப்போது தனிமை உணர்வுக்கு ஆளானார்கள், ஆனால் ஞானமாய் நடந்துகொண்டவர்களோ “அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவி” செய்வதன்மூலம் தங்களை சுறுசுறுப்பாய் வைத்துக்கொண்டனர். (1 தீமோத்தேயு 5:10) இன்று கடவுள்-பயமுள்ள துணைவரைக் கண்டுபிடிப்பதற்கு பல வருடங்களாக காத்திருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் அதேபோல் தங்களை சுறுசுறுப்பாய் வைத்திருந்திருக்கின்றனர். ஒரு 68 வயது கிறிஸ்தவ விதவை எப்போதெல்லாம் தனிமையாய் உணர்ந்தார்களோ அப்போதெல்லாம் மற்ற விதவைகளைச் சந்திக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: “இவ்விதமான சந்திப்புகளைச் செய்வதிலும், வீட்டுவேலைகளை ஒழுங்காக செய்வதிலும், என் ஆவிக்குரியத்தன்மையை கவனித்துக்கொள்வதிலும் நான் நேரத்தை செலவிடுவதால் தனிமையாய் இருப்பதற்கு எனக்கு நேரமில்லை.” மிகவும் விசேஷமான நல்ல பலன்தரும் வேலை, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு கற்பிப்பதாகும்.—மத்தேயு 28:19, 20.
21. ஜெபமும் நல்ல கூட்டுறவும் தனிமையை மேற்கொள்வதற்கு எந்த விதத்தில் உதவக்கூடும்?
21 தனிமையை அற்புதவிதமாக குணப்படுத்திவிட முடியாது என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. ஆனால் யெகோவா தரும் பலத்தைக்கொண்டு அதை சகித்துக்கொள்ளலாம். ஒரு கிறிஸ்தவன் ‘இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருக்கும்போது’ அப்படிப்பட்ட பலம் கிடைக்கிறது. (1 தீமோத்தேயு 5:5) வேண்டுதல்கள் என்பது ஊக்கமான முறையீடுகளை, ஆம், உதவிக்காக கெஞ்சிக்கேட்பதை, ஒருவேளை பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் கேட்பதை அர்த்தப்படுத்துகின்றன. (எபிரெயர் 5:7-ஐ ஒப்பிடுக.) யெகோவாவிடம் “இரவும் பகலும்” உங்கள் இதயத்தை முழுவதுமாக ஊற்றிவிடுவது உண்மையிலேயே உதவக்கூடும். மேலும், ஆரோக்கியமான கூட்டுறவு தனிமை என்ற வெறுமையை நிறைவுசெய்ய அதிகத்தைச் செய்யலாம். நல்ல கூட்டுறவின்மூலம், ஒருவர் நீதிமொழிகள் 12:25-ல் விவரிக்கப்பட்டிருக்கும் உற்சாகமூட்டும் “நல்வார்த்தை”யைப் பெற்றுக்கொள்ளலாம்.
22. அவ்வப்போது தனிமை உணர்வுகள் மேலெழும்பும்போது எத்தகைய சிந்தனைகள் உதவும்?
22 தனிமை உணர்வுகள் அவ்வப்போது மேலெழும்பினால்—அவ்விதம் அவை எழும்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது—பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை என்பதை நினைவில் வையுங்கள். உண்மையாகவே, ‘உலகமெங்குமுள்ள உங்கள் சகோதரர்களும்’ ஏதாவது ஒருவிதத்தில் துன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். (1 பேதுரு 5:9, கத்.பை.) கடந்த காலத்தைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பதைத் தவிருங்கள். (பிரசங்கி 7:10) இப்போது நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் நன்மைகளை சிந்தித்துப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கும் யெகோவாவின் இதயத்தை மகிழ்விப்பதற்கும் தீர்மானமாயிருங்கள்.—நீதிமொழிகள் 27:11.
மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்
23. சபையில் உள்ள ஒற்றைப்பெற்றோரிடமாக என்ன பொறுப்பு உடன் கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது?
23 உடன் கிறிஸ்தவர்களின் ஆதரவும் உதவியும் மதிப்புமிக்கதாய் இருக்கின்றன. யாக்கோபு 1:27 சொல்கிறது: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” ஆம், கிறிஸ்தவர்கள் ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களுக்கு உதவிசெய்ய கடமைப்பட்டிருக்கின்றனர். இதைச் செய்வதற்கு சில நடைமுறையான வழிகள் யாவை?
24. தேவையில் இருக்கும் ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களுக்கு என்ன வழிகளில் உதவி அளிக்கப்படலாம்?
24 பொருளாதார உதவி அளிக்கப்படலாம். பைபிள் சொல்கிறது: “ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்கு குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?” (1 யோவான் 3:17) “கண்டு” என்பதற்கான மூல கிரேக்க வார்த்தை, வெறுமனே தற்செயலாக கண்ணோட்டம் விடுவதை அல்ல, ஆனால் குறிக்கொண்டு கருத்தூன்றிப் பார்ப்பது என்ற அர்த்தத்தை உடையதாய் இருக்கிறது. ஒரு தயவான கிறிஸ்தவர் முதலில் குடும்ப சூழ்நிலைகளைக் குறித்தும் தேவைகளைக் குறித்தும் நன்றாக அறிந்துகொள்வதை இது குறிக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு பணம் தேவையாய் இருக்கலாம். சிலருக்கு வீட்டில் பழுதுபார்க்கும் வேலைகள் சம்பந்தமாக உதவி தேவைப்படலாம். அல்லது வெறுமனே அவர்களை சாப்பாட்டுக்கோ அல்லது தோழமைக் கூட்டங்களுக்கோ அழைத்தால் அவர்கள் அதை மதித்துணர்வர்.
25. ஒற்றைப்பெற்றோரிடமாக உடன் கிறிஸ்தவர்கள் எவ்வாறு இரக்கம் காண்பிக்கலாம்?
25 கூடுதலாக 1 பேதுரு 3:8 சொல்கிறது: ‘நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாய் இருங்கள்.’ ஆறு பிள்ளைகளையுடைய ஒற்றைப்பெற்றோர் சொன்னார்: “அது மிகவும் கடினமாய் இருந்திருக்கிறது, நான் சில சமயங்களில் கவலையால் அழுத்தப்படுகிறேன். இருப்பினும், அவ்வப்போது சகோதரர்கள் அல்லது சகோதரிகளில் எவராவது ஒருவர் என்னிடம் சொல்வார்கள்: ‘ஜோன், நீங்கள் நன்றாக சமாளித்து வருகிறீர்கள். அதற்கேற்ற பலன் கிடைக்கும்.’ மற்றவர்கள் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அக்கறை காண்பிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அதிக உதவியளிப்பதாய் இருக்கிறது.” ஒற்றைப்பெற்றோராய் இருக்கும் இளவயது பெண்களுக்கு உதவிசெய்வதில் குறிப்பாக, வயதான கிறிஸ்தவ பெண்கள் திறமைவாய்ந்தவர்களாக இருக்கலாம். ஒரு ஆணோடு கலந்து பேசுவதற்கு சங்கடமாய் இருக்கும் பிரச்சினைகளை அவர்கள் செவிகொடுத்துக் கேட்கலாம்.
26. முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவ ஆண்கள் தகப்பனில்லாத பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்?
26 கிறிஸ்தவ ஆண்கள் மற்ற விதங்களில் உதவிசெய்யலாம். நீதிமானாயிருந்த யோபு சொன்னார்: “திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.” (யோபு 29:12) அதேபோல் சில கிறிஸ்தவ ஆண்கள் இன்று தகப்பனில்லாத பிள்ளைகளிடத்தில் பயன் விளைவிக்கும் அக்கறையை எடுத்துக்கொண்டு, ‘சுத்தமான இதயத்திலிருந்து பிறக்கும்’ மெய்யான ‘அன்பின்’ காரணமாக மறைவான உள்நோக்கங்கள் எதுவுமின்றி உதவிசெய்கின்றனர். (1 தீமோத்தேயு 1:5) தங்கள் சொந்த குடும்பங்களைக் கவனிப்பதை விட்டுவிடாமல், அவர்கள் அவ்வப்போது அப்படிப்பட்ட இளைஞர்களோடு சேர்ந்து கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொள்ள ஏற்பாடு செய்யலாம், குடும்ப படிப்பில் அல்லது பொழுதுபோக்கில் பங்குகொள்ளும்படி அவர்களை அழைக்கலாம். தகப்பனில்லாத பிள்ளைமீது காண்பிக்கப்படும் அப்படிப்பட்ட தயவு, அப்பிள்ளை மாறுபாடான வழியில் செல்வதைத் தடுத்து நல்லமுறையில் பாதுகாக்கக்கூடும்.
27. என்ன ஆதரவைக் குறித்து ஒற்றைப்பெற்றோர் உறுதியளிக்கப்படலாம்?
27 ஆனால், இறுதியில், பொறுப்புகளைப் பொறுத்தவரை ஒற்றைப்பெற்றோர், ‘தங்கள் சொந்த பாரத்தைச் சுமக்க வேண்டும்.’ (கலாத்தியர் 6:5) இருப்பினும், அவர்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் அன்பையும் யெகோவா தேவனின் அன்பையும்கூட பெற்றுக்கொள்ளலாம். யெகோவா தேவனைக் குறித்து பைபிள் சொல்கிறது: “அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்.” (சங்கீதம் 146:9) அவருடைய அன்பான ஆதரவோடு ஒற்றைப்பெற்றோர் குடும்பங்கள் வெற்றிபெறமுடியும்!
a ஒழுக்கங்கெட்ட நடத்தையின் காரணமாக ஒரு இளம் கிறிஸ்தவப் பெண் கருத்தரித்தால், நிச்சயமாகவே அவள் செய்ததை கிறிஸ்தவ சபை அற்பமாய் கருதுவதில்லை. ஆனால் அவள் மனந்திரும்பினால், சபை மூப்பர்களும் சபையிலுள்ள மற்றவர்களும் அவளுக்கு ஒருவேளை உதவி அளிக்க விரும்பலாம்.
b துர்ப்பிரயோகம் செய்யும் பெற்றோரிடமிருந்து ஒரு பிள்ளையைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைகளைப் பற்றி நாங்கள் குறிப்பிட்டுக் கொண்டில்லை. மேலும், பெற்றோரில் ஒருவர் உங்கள் அதிகாரத்தைப் பலவீனப்படுத்த முயற்சிசெய்தால், ஒருவேளை உங்களை விட்டு பிள்ளைகளை பிரிக்கும் நோக்கத்துடன் அதைச் செய்தால், அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாளுவது என்பதைக் குறித்து கிறிஸ்தவ சபையில் உள்ள மூப்பர்கள் போன்ற அனுபவமுள்ள நண்பர்களோடு கலந்து பேசுவது நல்லது.