பாடம் 5
கடவுளுடைய நண்பர்கள் பரதீஸில் வாழ்வர்
பரதீஸ் என்பது நாம் இப்பொழுது வாழும் இந்த உலகம் மாதிரி இருக்காது. இந்தப் பூமியில் கஷ்டங்களும் கவலைகளும், வேதனையும் வருத்தமும் இருக்க வேண்டும் என கடவுள் ஒருபோதும் விரும்பவில்லை. வருங்காலத்தில் இந்தப் பூமியை பரதீஸாக மாற்றுவார். பரதீஸ் என்றால் எப்படி இருக்கும்? பைபிள் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்:
நல்ல மக்கள். கடவுளுடைய நண்பர்களே பரதீஸில் குடியிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நல்லதையே செய்வார்கள். கடவுளுடைய நீதியான வழிகளுக்கு இசைவாக வாழ்வார்கள்.—நீதிமொழிகள் 2:21.
ஏராளமான உணவு. பரதீஸில் பசியின் கொடுமை இராது. பைபிள் சொல்கிறது: “பூமியில் ஏராளமான தானியம் [அல்லது உணவு] இருக்கும்.”—சங்கீதம் 72:16, NW.
அழகிய வீடுகள், இன்பந்தரும் வேலை. பரதீஸிய பூமியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு இருக்கும். அனைவரும் அவரவர் வேலையில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள்.—ஏசாயா 65:21-23.
உலகம் முழுவதும் சமாதானம். இனிமேல் போரினால் ஒருவரும் மரிக்க மாட்டார்கள். கடவுளுடைய வார்த்தை கூறுகிறது: “[கடவுள்] யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:8, 9.
நல்ல ஆரோக்கியம். இது பைபிளின் வாக்குறுதி: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று [பரதீஸில் வாழும்] நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) யாரும் முடமாகவோ குருடாகவோ செவிடாகவோ ஊமையாகவோ இருக்க மாட்டார்கள்.—ஏசாயா 35:5, 6.
வேதனை, வருத்தம், மரணம் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி. கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
கெட்ட ஜனங்கள் இருக்க மாட்டார்கள். யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்: “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.
ஜனங்கள் ஒருவரையொருவர் நேசித்து மதித்து நடப்பார்கள். அநீதி, ஒடுக்குதல், பேராசை, பகைமை ஆகியவை இராது. மக்கள் ஒற்றுமையாகவும், கடவுளுடைய நீதியான வழிகளுக்கு இசைவாகவும் வாழ்வார்கள்.—ஏசாயா 26:9.