போதிக்கும் திறமையை வளருங்கள்
போதிப்பவராக உங்கள் இலக்கு என்ன? நீங்கள் சமீபத்தில் ராஜ்ய பிரஸ்தாபியாக ஆகியிருந்தால், பைபிள் படிப்பை எப்படி நடத்துவது என கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை; ஏனெனில் சீஷராக்கும் நியமிப்பை இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். (மத். 28:19, 20) பைபிள் படிப்பு நடத்துவதில் உங்களுக்கு ஏற்கெனவே அனுபவம் இருந்தால், நீங்கள் உதவ விரும்புகிறவர்களின் இருதயங்களை எட்டும்படி இன்னும் திறம்பட கற்பிப்பது ஒருவேளை உங்கள் இலக்காக இருக்கலாம். நீங்கள் பெற்றோர் என்றால், பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அவர்களை தூண்டுவிக்கும் விதமாக கற்பிக்கவே விரும்புகிறீர்கள் என்பது நிச்சயம். (3 யோ. 4) நீங்கள் ஒரு மூப்பர் என்றால் அல்லது அத்தகுதியைப் பெற உழைப்பவர் என்றால், கேட்போரின் மனங்களில் யெகோவாவிற்கும் அவரது வழிகளுக்கும் ஆழ்ந்த போற்றுதலை வளர்க்கும் விதத்தில் பேச்சு கொடுக்க விரும்பலாம். இந்த இலக்குகளை நீங்கள் எவ்வாறு அடையலாம்?
தலைசிறந்த போதகரான இயேசு கிறிஸ்துவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். (லூக். 6:40) மலைப்பகுதியிலிருந்த கூட்டத்தினரிடம் பேசியபோதும்சரி ஒருசிலரோடு தெருவில் நடந்தவாறே பேசியபோதும்சரி இயேசு சொன்னவையும் சொன்ன விதமும் அவர்களின் மனங்களில் நிரந்தர இடம்பிடித்தன. கேட்போரின் மனங்களையும் இருதயங்களையும் இயேசு செயல்பட தூண்டினார், அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் நடைமுறை பயனை சுட்டிக்காண்பித்தார். இந்த விஷயங்களில் உங்களால் அவரைப் பின்பற்ற முடியுமா?
யெகோவாவின்மீது சார்ந்திருங்கள்
இயேசுவின் போதிக்கும் திறமை, பரலோக தகப்பனோடு அவருக்கிருந்த நெருக்கமான உறவாலும் அந்தத் தகப்பனுடைய ஆவியின் ஆசீர்வாதத்தாலும் மெருகூட்டப்பட்டன. ஒரு பைபிள் படிப்பை சிறப்பாக நடத்துவதற்கு உதவும்படி நீங்கள் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபிக்கிறீர்களா? நீங்கள் பெற்றோர் என்றால், உங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் விஷயத்தில் தெய்வீக வழிநடத்துதலைக் கேட்டு தவறாமல் ஜெபிக்கிறீர்களா? பேச்சுக்கள் கொடுப்பதற்காக அல்லது கூட்டங்களை நடத்துவதற்காக தயாரிக்கும்போது இருதயப்பூர்வமாக ஜெபிக்கிறீர்களா? இவ்வாறு ஜெபத்தின் மூலம் யெகோவாவின்மீது சார்ந்திருப்பது அதிக திறம்பட்ட போதகராக ஆவதற்கு உங்களுக்கு உதவும்.
யெகோவாவுடைய வார்த்தையாகிய பைபிளின்மீது சார்ந்திருப்பதும் அவரை நம்பியிருப்பதற்கு அடையாளம். இயேசு பரிபூரண மனிதராக பூமியில் கழித்த கடைசி நாளின் மாலைப்பொழுதில் தம் பிதாவிடம் இப்படி ஜெபித்தார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்.” (யோவா. 17:14) இயேசுவுக்கு மிகுந்த அனுபவம் இருந்தபோதிலும் அவர் சுயமாக எதையும் பேசவே இல்லை. தகப்பன் தமக்குக் கற்பித்தவற்றையே எப்போதும் பேசினார்; இவ்வாறு நாம் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக இருக்கிறார். (யோவா. 12:49, 50) மக்கள்மீது—அவர்களது நடவடிக்கைகள், ஆழமான சிந்தனைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றின்மீது—செல்வாக்கு செலுத்தும் வல்லமை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு உண்டு. (எபி. 4:12) கடவுளுடைய வார்த்தையிலிருந்து அதிகமதிகமான அறிவைப் பெற்று உங்கள் ஊழியத்தில் அதை நன்கு பயன்படுத்த கற்றுக்கொள்கையில், மக்களை கடவுளிடம் கவர்ந்திழுக்கும் விதத்தில் கற்பிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள்.—2 தீ. 3:16, 17.
யெகோவாவை கனப்படுத்துங்கள்
போதிப்பதில் கிறிஸ்துவைப் பின்பற்றுவது, சுவாரஸ்யமான பேச்சு கொடுப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை. மனதை ‘கொள்ளைகொள்ளும் வார்த்தைகளால்’ அவர் பேசுவதைக் கேட்டு மக்கள் வியந்தனர் என்பது உண்மைதான். (லூக். 4:22, NW) ஆனால் என்ன குறிக்கோளோடு இயேசு அவ்வளவு சிறப்பாக பேசினார்? தம்மிடமாக கவனத்தை ஈர்ப்பது அல்ல, ஆனால் யெகோவாவிற்கு மகிமை சேர்ப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. (யோவா. 7:16-18) அவர் தம் சீஷர்களிடம் பின்வருமாறு அறிவுறுத்தினார்: ‘மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.’ (மத். 5:16) இந்த அறிவுரை, நாம் கற்பிக்கும் விதத்தை பாதிக்க வேண்டும். அந்த குறிக்கோளை அடையவிடாமல் தடுக்கும் எதையும் தவிர்ப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ஆகவே என்ன சொல்வது, எப்படி சொல்வது என திட்டமிடும்போது, ‘இது யெகோவாவின்மீது போற்றுதலை அதிகப்படுத்துமா அல்லது என்மீது கவனத்தைத் திருப்புமா?’ என கேட்டுக்கொள்வது நல்லது.
உதாரணமாக, கற்பிக்கும்போது உவமைகளையும் நிஜவாழ்க்கை உதாரணங்களையும் திறம்பட உபயோகிக்கலாம். இருந்தாலும், வளவளவென்று ஒரு உவமையை சொல்லும்போது அல்லது மிக விலாவாரியாக ஒரு அனுபவத்தை விவரிக்கும்போது, சொல்ல வரும் அறிவுரை என்னவென்று புரியாமல் போய்விடும். அதேபோல் கேட்போர் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே கதைகள் சொல்வதும் நம் ஊழியத்தின் நோக்கத்தை சேவிப்பதில்லை. அப்படி செய்கையில், தேவராஜ்ய கல்வியின் உண்மையான குறிக்கோளை அடைவதற்குப் பதிலாக போதிப்பவர் தன்னிடமே கவனத்தை ஈர்க்கிறார்.
‘வேறுபடுத்திக் காட்டுங்கள்’
ஒரு நபர் உண்மையிலேயே சீஷராக வேண்டுமென்றால், கற்பிக்கப்படுவதை அவர் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டு, மற்ற நம்பிக்கைகளிலிருந்து அது எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்பதை அவர் காண வேண்டும். வேறுபடுத்திக் காட்டுவது இதைச் செய்ய அவருக்கு உதவும்.
சுத்தமானதையும் அசுத்தமானதையும் ‘வேறுபடுத்திப் பார்க்கும்படி’ யெகோவா தம் மக்களை மீண்டும் மீண்டும் ஊக்கப்படுத்தினார். (லேவி. 10:9-11, NW) தமது மகத்தான ஆவிக்குரிய ஆலயத்தில் சேவை செய்யப்போகிறவர்கள் “பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும் . . . இருக்கும் வித்தியாசத்தை” ஜனங்களுக்கு போதிப்பார்கள் என அவர் சொன்னார். (எசே. 44:23) நீதிமொழிகள் புத்தகம், நீதிக்கும் பொல்லாத்தனத்துக்கும், ஞானத்திற்கும் மூடத்தனத்திற்கும் உள்ள வேறுபாடுகளால் நிறைந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று முரண்படாத காரியங்களைக்கூட வேறுபடுத்த முடியும். ரோமர் 5:7-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி அப்போஸ்தலனாகிய பவுல் நீதிமானையும் நல்லவனையும் வேறுபடுத்திக் காட்டினார். எபிரெயர் புத்தகத்தில், பிரதான ஆசாரியராக கிறிஸ்து எவ்வாறு ஆரோனைக் காட்டிலும் மேம்பட்டவர் என்பதை பவுல் காட்டினார். சொல்லப்போனால் 17-ஆம் நூற்றாண்டு ஆசிரியர் யோஹன் ஆமோஸ் கோமென்ஸ்கி இவ்வாறு எழுதினார்: “காரியங்கள் எவ்வாறு நோக்கத்திலும் வடிவத்திலும் தொடக்கத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைக் காட்டுவதே போதிப்பதாகும். . . . ஆகவே வித்தியாசங்களை நன்கு எடுத்துக் காட்டுபவரே சிறந்த போதகர்.”
உதாரணமாக நீங்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியிருக்கலாம். ராஜ்யம் ஒருவரது இருதய நிலையைக் குறிக்கிறது என்ற கருத்தும் பைபிளின் கருத்தும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை, அதைப் பற்றி சரியாக அறியாத ஒருவரிடம் பேசுகையில் நீங்கள் காண்பிக்கலாம். அல்லது அந்த ராஜ்யம் எவ்வாறு மனித அரசாங்கங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை காட்டலாம். இருந்தாலும் இந்த அடிப்படை சத்தியங்களை அறிந்தவர்களிடம் பேசும்போது நீங்கள் இன்னும் விவரமாக விளக்கலாம். சங்கீதம் 103:19-ல் விவரிக்கப்பட்டிருக்கும் யெகோவாவின் சர்வலோக அரசதிகாரத்திலிருந்து மேசியானிய ராஜ்யம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை காட்டலாம். அல்லது கொலோசெயர் 1:13-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘[கடவுளுடைய] அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திலிருந்து’ அல்லது எபேசியர் 1:10 (NW) குறிப்பிடும் ‘நிர்வாகத்திலிருந்து’ எவ்வாறு வேறுபடுகிறது என்பதை காட்டலாம். வேறுபாடுகளை காட்டும்போது, கேட்டுக்கொண்டிருப்போர் இந்த முக்கியமான பைபிள் போதனையை தெளிவாக புரிந்துகொள்வர்.
இயேசு பெரும்பாலும் இந்த உபாயத்தை பயன்படுத்தியே போதித்தார். மோசேயின் நியாயப்பிரமாணம் பொதுவாக எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பதையும் அதன் உண்மையான நோக்கத்தையும் வேறுபடுத்திக் காட்டினார். (மத். 5:21-48) மெய்யான தேவ பக்தியையும் பரிசேயர்களின் பாசாங்குத்தனமான செயல்களையும் பிரித்துக் காட்டினார். (மத். 6:1-18) மற்றவர்களை ‘இறுமாப்பாக ஆண்டவர்களின்’ மனப்பான்மையையும் தம் சீஷர்கள் காட்ட வேண்டிய சுயதியாக மனப்பான்மையையும் வேறுபடுத்தினார். (மத். 20:25-28) மற்றொரு சந்தர்ப்பத்தில், மத்தேயு 21:28-32-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, சுயநீதிக்கும் உண்மையான மனந்திரும்புதலுக்கும் உள்ள வித்தியாசத்தை தாங்களாகவே கண்டறியும்படி செவிசாய்ப்பவர்களை இயேசு உற்சாகப்படுத்தினார். இது, சிறப்பான போதனையின் மற்றொரு மதிப்புமிக்க அம்சத்திற்கு நம் கவனத்தைத் திருப்புகிறது.
கேட்போரை சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துதல்
ஒப்புமையை சொல்வதற்கு முன், “உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?” என இயேசு கேட்டதாக மத்தேயு 21:28-ல் வாசிக்கிறோம். திறம்பட்ட போதகர், வெறுமனே விஷயங்களை அல்லது பதில்களை சொல்ல மாட்டார். மாறாக, சிந்திக்கும் திறனை வளர்க்கும்படி கேட்போரை ஊக்குவிப்பார். (நீதி. 3:21; ரோ. 12:1; NW) இதற்கு ஒரு வழி, கேள்விகள் கேட்பதாகும். மத்தேயு 17:25-ல் காணப்படுகிறபடி இயேசு இப்படி கேட்டார்: ‘சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்?’ சிந்தையைத் தூண்டிய இயேசுவின் கேள்விகள், ஆலய வரி செலுத்துவதைக் குறித்து சரியான முடிவுக்கு வர பேதுருவுக்கு உதவின. அதேவிதமாக, “எனக்குப் பிறன் யார்” என கேட்ட மனிதனுக்கு இயேசு பதிலளித்தபோது, ஆசாரியன் மற்றும் லேவியன் செய்ததையும் சமாரியன் செய்ததையும் வேறுபடுத்திக் காட்டினார். அதன்பின், “இப்படியிருக்க, கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது” என்ற கேள்வியைக் கேட்டார். (லூக். 10:29-36) இந்தச் சந்தர்ப்பத்திலும், கேள்விக்குத் தாமே பதிலளித்துவிடாமல், கேட்டுக்கொண்டிருந்தவரையே யோசிக்க வைத்து அவர் கேட்ட கேள்விக்கு அவரையே பதிலளிக்க வைத்தார்.—லூக். 7:41-43.
இருதயத்தை எட்ட முயலுங்கள்
கடவுளுடைய வார்த்தையின் அர்த்தத்தை கிரகித்துக்கொள்ளும் போதகர்கள், குறிப்பிட்ட விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதும் குறிப்பிட்ட சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே உண்மை வணக்கம் அல்ல என்பதை உணர்கின்றனர். அது, யெகோவாவுடன் நல்ல உறவு வைத்திருப்பதையும் அவரது வழிகளைப் போற்றுவதையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வணக்கம் இருதயத்தை உட்படுத்துகிறது. (உபா. 10:12, 13; லூக். 10:25-27) பைபிளில் ‘இருதயம்’ என்ற பதம் ஒருவரது விருப்பங்கள், பாசங்கள், உணர்ச்சிகள், தூண்டுதல்கள் ஆகிய அனைத்தும் உட்பட்ட உள்ளான மனிதனை பெரும்பாலும் குறிக்கிறது.
மனிதர்கள் வெளித்தோற்றத்தை பார்க்கையில், கடவுளோ இருதயத்தைப் பார்க்கிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். (1 சா. 16:7) கடவுள் மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு நாம் அவரை சேவிக்க வேண்டும், மற்ற மனிதர்களை கவருவதற்காக அல்ல. (மத். 6:5-8) மறுபட்சத்தில், பரிசேயர்கள் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக பகட்டாய் அநேக காரியங்களைச் செய்தனர். நியாயப்பிரமாணத்தை மிக நுணுக்கமாக பின்பற்றுவதற்கும் தாங்களே உருவாக்கிய சட்டதிட்டங்களை கடைப்பிடிப்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வணங்குவதாக சொல்லிக்கொண்ட கடவுளோடு அவர்களை அடையாளம் காட்டும் குணங்களை வாழ்க்கையில் வெளிக்காட்ட தவறினர். (மத். 9:13; லூக். 11:42) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது முக்கியம் என்றாலும் அந்தக் கீழ்ப்படிதலின் மதிப்பு இருதய நிலையையே சார்ந்திருக்கிறது என இயேசு கற்பித்தார். (மத். 15:7-9; மாற். 7:20-23; யோவா. 3:36) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றினால் நம் போதனை மிகச் சிறந்த பயனளிக்கும். கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுவது முக்கியம். அதேசமயத்தில், அவர்கள் யெகோவாவை அறிந்து அவரை ஒரு நபராக நேசிப்பதும் முக்கியம்; அப்போது, உண்மையான கடவுளோடு சுமுகமான உறவு வைத்திருப்பதற்கு அவர்கள் காட்டும் மதிப்பு அவர்கள் நடத்தையில் தெரியும்.
அப்படிப்பட்ட போதனையிலிருந்து நன்மை பெற மக்கள் தங்கள் சொந்த இருதய நிலையை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். தங்கள் உள்நோக்கங்களை பகுத்தறிந்து உணர்ச்சிகளை ஆராயும்படி இயேசு மக்களை உற்சாகப்படுத்தினார். ஏதேனும் தவறான கருத்தை திருத்தியபோது, அவர்கள் ஏன் அப்படி யோசித்தார்கள் அல்லது சொன்னார்கள் அல்லது செய்தார்கள் என அவர் கேட்டார். இருந்தாலும், அதோடு விட்டுவிடாமல், காரியங்களை சரியாக நோக்குவதற்கு உதவும் ஒரு குறிப்பையோ உவமையையோ சொன்னார் அல்லது ஒரு செயலை நடப்பித்தார். (மாற். 2:8; 4:40; 8:17; லூக். 6:41, 46) இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளும்படி நாமும் கேட்போரை உற்சாகப்படுத்தலாம்: ‘நான் ஏன் இப்படி செய்ய விரும்புகிறேன்? நான் ஏன் இந்தச் சூழ்நிலையில் இப்படி நடந்துகொள்கிறேன்?’ அதன்பின், யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காரியங்களை பார்க்கும்படி அவர்களைத் தூண்டலாம்.
பொருத்திக் காட்டுங்கள்
“ஞானமே முக்கியம்” என்பதை திறம்பட்ட போதகர் அறிந்திருக்கிறார். (நீதி. 4:7) ஞானம் என்பது, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கும் இலக்குகளை அடைவதற்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் அறிவை வெற்றிகரமாக பயன்படுத்தும் திறனாகும். இதைக் கற்றுக்கொள்ள மாணாக்கர்களுக்கு உதவும் பொறுப்பு போதிப்பவருடையது, ஆனால் அவர்களுக்காக அவர் தீர்மானங்களை எடுக்கக்கூடாது. வெவ்வேறு பைபிள் நியமங்களை கலந்தாலோசிக்கும்போது, நியாயத்தைக் கண்டறிய மாணாக்கருக்கு உதவுங்கள். தினசரி வாழ்க்கைக்கு பொருந்தும் ஒரு சூழ்நிலையைக் குறிப்பிட்டு, அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் இப்போது படித்த பைபிள் நியமம் எப்படி அவருக்கு உதவும் என மாணாக்கரைக் கேளுங்கள்.—எபி. 5:14.
பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று அளித்த சொற்பொழிவில் அப்போஸ்தலனாகிய பேதுரு, மக்களின் வாழ்க்கையை பாதித்த ஒரு விஷயத்தை நடைமுறையாக பொருத்திக் காட்டினார். (அப். 2:14-36) கூடியிருந்தவர்கள் நம்புவதாக சொல்லிக்கொண்ட மூன்று வேதவசனங்களை கலந்தாலோசித்த பிறகு, அவர்கள் ஏற்கெனவே கண்ட சம்பவங்களின் கண்ணோட்டத்தில் அவ்வசனங்களை பேதுரு பொருத்திக் காட்டினார். அதன் காரணமாக, கேட்டவற்றிற்கு இசைய நடக்க வேண்டிய அவசியத்தை கூட்டத்தார் புரிந்துகொண்டனர். உங்கள் போதனையும் அதேவிதமாக மக்களின் இருதயங்களை எட்டுகிறதா? விஷயங்களை வெறுமனே ஒப்பிப்பதைவிட ஏன் அவ்வாறு இருக்கின்றன என்று புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுகிறீர்களா? கற்றுக்கொள்ளும் விஷயங்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்க வேண்டும் என சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துகிறீர்களா? பெந்தெகொஸ்தே தினத்தன்று கூடியிருந்தவர்களைப் போல் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று இவர்கள் கேட்காமல் இருக்கலாம்; ஆனால் வேதவசனங்களை நீங்கள் சரியாக பொருத்திக் காட்டினால், ஏற்ற விதமாக செயல்படுவதைக் குறித்து சிந்திக்கும்படி அவர்கள் தூண்டப்படுவார்கள்.—அப். 2:37.
உங்கள் பிள்ளைகளோடு பைபிளை வாசிக்கும்போது, பைபிள் நியமங்களை எப்படி நடைமுறையில் கடைப்பிடிக்கலாம் என்ற கோணத்திலேயே சிந்திக்கும்படி அவர்களை பயிற்றுவிப்பதற்கு பெற்றோராகிய உங்களுக்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. (எபே. 6:4) உதாரணத்திற்கு, அவ்வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து சில வசனங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் அர்த்தத்தைக் குறித்து கலந்தாலோசித்து, அதன்பின் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கலாம்: ‘இது நமக்கு எப்படி வழிகாட்டுகிறது? இந்த வசனங்களை ஊழியத்தில் எப்படி பயன்படுத்தலாம்? யெகோவாவையும் அவர் செயல்படும் விதத்தையும் பற்றி இவை என்ன காட்டுகின்றன, இது நாம் அவரை இன்னுமதிகமாக போற்றுவதற்கு எப்படி உதவுகிறது?’ தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பைபிள் சிறப்புக் குறிப்புகள் பகுதி கலந்தாலோசிக்கப்படும்போது இந்தக் குறிப்புகளை சொல்லும்படி உங்கள் குடும்பத்தாரை உற்சாகப்படுத்துங்கள். குறிப்பு சொல்லும் வசனங்களை அவர்கள் பெரும்பாலும் ஞாபகம் வைத்துக்கொள்வார்கள்.
நல்ல முன்மாதிரியாக இருங்கள்
நீங்கள் சொல்லில் மாத்திரமல்ல செயலிலும் போதிக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் விஷயங்களை கடைப்பிடிப்பது எப்படி என்பதை உங்கள் செயல்களே நடைமுறையாக எடுத்துக்காட்டும். இவற்றைப் பார்த்தே பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். பெற்றோரைப் பின்பற்றும்போது, அவர்களைப் போன்றே இருக்க விரும்புவதை பிள்ளைகள் காட்டுகிறார்கள். பெற்றோர் செய்வதையே செய்தால் எப்படி இருக்கும் என்பதை அனுபவித்துப் பார்க்க விரும்புகிறார்கள். அதேவிதமாக, ‘நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல [உங்கள் மாணாக்கர்கள்] உங்களைப் பின்பற்றும்போது’ யெகோவாவின் வழிகளில் நடப்பதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்க ஆரம்பிப்பார்கள். (1 கொ. 11:1) கடவுள் அவர்களோடு செயல்படும் விதத்தை தாங்களே ருசித்துப் பார்ப்பார்கள்.
சரியான முன்மாதிரியாக இருப்பதன் அவசியத்தை நினைப்பூட்டும் ஆழ்ந்த கருத்து இது. நாம் ‘எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக’ இருக்கிறோம் என்பது, பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பதன் பேரில் மாணாக்கருக்கு உயிருள்ள உதாரணத்தை அளிக்கும். (2 பே. 3:11) கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிக்கும்படி பைபிள் மாணாக்கரை நீங்கள் உற்சாகப்படுத்தினால், நீங்களே அதை ஊக்கமாக வாசிக்க தவறாதீர்கள். பிள்ளைகள் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென நீங்கள் விரும்பினால், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நீங்கள் நடப்பதை முதலாவது அவர்கள் பார்க்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடும்படி சபையாருக்கு நீங்கள் அறிவுரை வழங்கினால், நீங்களே அதில் முழுமையாக பங்குகொள்ள தவறாதீர்கள். நீங்கள் கற்பிக்கும் விஷயங்களை நீங்களே கடைப்பிடிக்கும்போது, மற்றவர்களை செயல்பட தூண்டுவது எளிது.—ரோ. 2:21-23.
போதிக்கும் திறமையை முன்னேற்றுவிக்கும் நோக்கத்தோடு உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கேட்பவர்களின் மனப்பான்மையிலும் பேச்சிலும் நடத்தையிலும் மாற்றத்தை உண்டுபண்ணும் விதத்தில் நான் அறிவுரை வழங்குகிறேனா? விஷயங்களை தெளிவுபடுத்த, ஒரு கருத்தை அல்லது செயலை மற்றொன்றிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறேனா? நான் சொல்வதை ஞாபகம் வைத்துக்கொள்ள என் மாணாக்கர்களுக்கு, பிள்ளைகளுக்கு, அல்லது சபையில் இருப்பவர்களுக்கு எப்படி உதவுகிறேன்? கற்றுக்கொள்வதை எப்படி கடைப்பிடிப்பதென கேட்பவர்களுக்கு தெளிவாக விளக்குகிறேனா? நானே அவற்றைக் கடைப்பிடிப்பதை அவர்களால் பார்க்க முடிகிறதா? கேட்ட விஷயத்திற்கு அவர்கள் பிரதிபலிக்கும் விதம் யெகோவாவுடன் உள்ள உறவை பாதிக்கும் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?’ (நீதி. 9:10) போதிப்பவராக உங்கள் திறமையை வளர்க்க நீங்கள் உழைக்கையில் இந்தக் குறிப்புகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு [“தொடர்ந்து கவனம் செலுத்து,” NW], இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”—1 தீ. 4:16.