உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 5 பக். 97-பக். 100 பாரா. 4
  • பொருத்தமான இடங்களில் நிறுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருத்தமான இடங்களில் நிறுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • சப்தமும் நிறுத்தமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • திருத்தமாக வாசித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ‘பொது வாசிப்பில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்’
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஆலோசனை கட்டியெழுப்புகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 5 பக். 97-பக். 100 பாரா. 4

படிப்பு 5

பொருத்தமான இடங்களில் நிறுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பேச்சில் பொருத்தமான இடங்களில் முழுமையாக நிறுத்துங்கள். சிலசமயங்களில் நீங்கள் லேசாக நிறுத்தலாம் அல்லது வெறுமனே குரலை தற்காலிகமாக தாழ்த்தலாம். நல்லதொரு பயனை தரும் பட்சத்தில் நிறுத்தம் பொருத்தமானது.

ஏன் முக்கியம்?

உடனடியாக புரிந்துகொள்ளப்படும் விதத்தில் பேசுவதற்கு முக்கியமாக தேவைப்படும் அம்சம், பொருத்தமான நிறுத்தங்களாகும். நிறுத்துவது, முக்கிய குறிப்புகளை வலியுறுத்தியும் காட்டுகிறது.

பேசும்போது பொருத்தமான இடங்களில் நிறுத்துவது முக்கியம். தனிநபரோடு பேசும்போதும் சரி சபையார் முன் பேசும்போதும் சரி அது முக்கியம். நிறுத்தங்கள் இல்லையென்றால், கருத்துக்கள் தெளிவாக தெரிவிக்கப்படாமல் பிதற்றுவதுபோல் இருக்கும். பொருத்தமான இடங்களில் நிறுத்துவது உங்கள் பேச்சிற்கு தெளிவூட்டும். பேச்சின் முக்கிய குறிப்புகளை மனங்களில் நிரந்தரமாக பதிய வைக்கும் விதத்திலும் நிறுத்தத்தைப் பயன்படுத்தலாம்.

எப்போது நிறுத்துவது என்பதை எப்படி தீர்மானிக்கலாம்? நிறுத்தங்கள் எவ்வளவு நீண்டவையாக இருக்க வேண்டும்?

நிறுத்தக் குறிகளுக்காக நிறுத்துவது. நிறுத்தக் குறிகள், எழுத்துவடிவ மொழியின் முக்கிய பாகமாக இருக்கின்றன. அவை வாக்கியத்தின் முடிவை அல்லது ஒரு கேள்வியை குறிக்கலாம். சில மொழிகளில் அவை மேற்கோள்களை வலியுறுத்த பயன்படுத்தப்படுகின்றன. சில நிறுத்தக் குறிகள், வாக்கியத்தின் ஒரு பாகத்திற்கும் மற்ற பாகங்களுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன. தனக்குத் தானே வாசித்துக்கொள்பவர் நிறுத்தக் குறிகளை பார்க்க முடிகிறது. ஆனால் மற்றவர்களுக்காக வாசிக்கும்போது, கொடுக்கப்பட்டிருக்கும் நிறுத்தக் குறிகளின் அர்த்தத்தை குரலில் தெரிவிக்க வேண்டும். (கூடுதலான விவரங்களுக்கு, “திருத்தமாக வாசித்தல்” என்ற படிப்பு 1-ஐக் காண்க.) நிறுத்தக் குறிகளுக்கேற்ப நிறுத்தாமல் இருந்தால், நீங்கள் வாசிப்பது மற்றவர்களுக்கு புரியாமல் போகலாம், அல்லது வாசிப்பதன் அர்த்தம்கூட மாறிவிடலாம்.

நிறுத்தக் குறிகள் மட்டுமின்றி, ஒரு வாக்கியத்தில் எண்ணங்கள் தெரிவிக்கப்படும் விதமும், எங்கே நிறுத்துவது என்பதை தீர்மானிக்கும். புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “பியானோ கலைஞர்கள் எல்லாரையும் போலத்தான் நானும் இசைக் குறியீடுகளுக்கு ஏற்ப இசைக்கிறேன். ஆனால் அவற்றிற்கு இடையிடையே நிறுத்த வேண்டுமே, அதில்தான் கலைத்திறமையே அடங்கியிருக்கிறது.” பேசுவதைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. பொருத்தமான நிறுத்தங்கள், நன்கு தயாரிக்கப்பட்ட பேச்சிற்கு அழகையும் அர்த்தத்தையும் சேர்க்கும்.

பொது வாசிப்பிற்கு தயாரிக்கும்போது, நீங்கள் வாசிக்கப்போகும் பகுதியில் ஆங்காங்கே அடையாளங்களை போட்டுக்கொள்வது உதவியாக இருக்கலாம். குறுகிய நிறுத்தத்தைக் குறிக்க சிறிய கோடு போட்டுக்கொள்ளுங்கள். நீண்ட நிறுத்தத்திற்கு இரு கோடுகளை போடுங்கள். ஒரு குறிப்பிட்ட சொற்றொடர் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்; அதை வாசிக்கும்போது நீங்கள் திரும்பத் திரும்ப தவறான இடத்தில் நிறுத்தலாம்; அப்படியென்றால், அந்தக் கஷ்டமான சொற்றொடரில் உள்ள எல்லா வார்த்தைகளையும் ஒன்றிணைத்தவாறு பென்சிலில் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு அந்தச் சொற்றொடரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை வாசியுங்கள். அனுபவம் வாய்ந்த அநேக பேச்சாளர்கள் இதைச் செய்கிறார்கள்.

அன்றாட பேச்சில் நிறுத்தங்களை பயன்படுத்துவதில் பொதுவாக அதிக பிரச்சினை இருக்காது, ஏனென்றால் என்ன கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறீர்கள் என உங்களுக்குத் தெரியும். என்றாலும், தேவையா இல்லையா என சிந்திக்காமல் அவ்வப்போது நிறுத்துவது உங்கள் பழக்கம் என்றால் பேச்சில் வலிமையும் இருக்காது, தெளிவும் இருக்காது. முன்னேறுவதற்கான ஆலோசனைகள் “சரளம்” என்ற 4-ஆம் படிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

கருத்து மாறுகையில் நிறுத்துவது. ஒரு முக்கிய குறிப்பிலிருந்து மற்றொரு முக்கிய குறிப்பிற்கு செல்லும்போது நிறுத்த வேண்டும்; அது சிந்திக்கவும், மனதை தகுந்தவாறு மாற்றிக்கொள்ளவும், கருத்து மாற்றத்தை உணர்ந்துகொள்ளவும், அடுத்த கருத்தை இன்னும் தெளிவாக கிரகிக்கவும் கேட்பவர்களுக்கு உதவுகிறது. வாகனம் ஓட்டுகையில் ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்கு திரும்பும்போது வேகத்தை குறைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒரு கருத்திலிருந்து இன்னொரு கருத்திற்கு மாறும்போது நிறுத்துவதும் முக்கியம்.

சிலர் நிறுத்தாமல் அடுத்தடுத்த கருத்துக்களை வேகமாக சொல்லிவிடுவதற்கு ஒரு காரணம், அளவுக்கு அதிகமான தகவலை சொல்ல முயலுவதே. வேறு சிலர் பழக்கத்தின் காரணமாக வேகமாக பேசுகின்றனர். ஒருவேளை அவர்களைச் சுற்றியிருக்கும் அனைவரும் அப்படியே பேசுபவர்களாக இருக்கலாம். ஆனால் அது திறம்பட போதிக்க உதவாது. கேட்பதற்கும் ஞாபகம் வைப்பதற்கும் தகுந்த கருத்து எதையாவது நீங்கள் சொல்ல விரும்பினால், அதைத் தெளிவாக வலியுறுத்திக் காட்டுவதற்கு போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பேச்சில் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூற நிறுத்தங்கள் அவசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

குறிப்புத்தாளிலிருந்து நீங்கள் பேச்சு கொடுக்கப் போகிறீர்கள் என்றால், முக்கிய குறிப்புகளுக்கு இடையே எங்கே நிறுத்த வேண்டும் என்பது தெளிவாக இருக்கும் விதத்தில் தகவலை ஒழுங்கமைப்பது அவசியம். நீங்கள் வாசிப்புமுறை பேச்சு கொடுக்கப் போகிறீர்கள் என்றால், முக்கிய குறிப்புகள் மாறும் இடங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கருத்துக்களின் மாற்றத்திற்காக பயன்படுத்தும் நிறுத்தங்கள், நிறுத்தக் குறிகளுக்காக பயன்படுத்தும் நிறுத்தங்களைக் காட்டிலும் பொதுவாக நீண்டவை. ஆனால் அளவுக்கு அதிகமான நேரம் நிறுத்தினால் பேச்சு இழுவையாக இருக்கும். அதுமட்டுமல்ல, நீங்கள் சரியாக தயாரிக்காதது போலும் அடுத்து என்ன சொல்லலாம் என தீர்மானிக்க முயல்வது போலும் தெரியும்.

அழுத்தத்திற்காக நிறுத்துவது. அழுத்தத்திற்கான நிறுத்தம், கவனத்தை சட்டென ஈர்க்கிறது; அது, வலிமையோடு சொல்லப்படும் ஒரு வாக்கியத்திற்கு அல்லது கேள்விக்கு முன்னரோ பின்னரோ பெரும்பாலும் வருகிறது. சொல்லி முடிக்கப்பட்டதை கேட்பவர்கள் சிந்தித்துப் பார்க்க இந்நிறுத்தம் வாய்ப்பளிக்கிறது அல்லது அடுத்து சொல்லப் போவதற்கு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. இந்த இரண்டும் வேறு வேறு. இவற்றில் எது பொருத்தமானது என்பதை தேர்ந்தெடுங்கள். ஆனால் அழுத்தத்திற்கான நிறுத்தங்களை உண்மையிலேயே முக்கியமான வாக்கியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். இல்லையேல் அவ்வாக்கியங்களின் மதிப்பு இழக்கப்படும்.

நாசரேத்திலிருந்த ஜெப ஆலயத்தில் இயேசு வேதவாக்கியங்களிலிருந்து சத்தமாக வாசித்தபோது நிறுத்தத்தை திறம்பட பயன்படுத்தினார். முதலில் ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளிலிருந்து தம் நியமிப்பை வாசித்தார். என்றாலும் அதைப் பொருத்திக் காட்டுவதற்கு முன்பு, சுருளை மூடி, பணிவிடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அமர்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த அனைவரது கண்களும் அவர் மீதே பதிந்திருக்கையில் இவ்வாறு சொன்னார்: “இப்போது நீங்கள் கேட்ட வசனம் இன்று நிறைவேறிற்று.”​—⁠லூக். 4:16-21, NW.

சூழ்நிலைகள் தேவைப்படுத்துகையில் நிறுத்துவது. சிலசமயங்களில் தடங்கல்கள் ஏற்படும்போதும் நிறுத்த வேண்டி வரலாம். போக்குவரத்து இரைச்சலோ குழந்தையின் அழுகையோ, வெளி ஊழியத்தில் ஒருவரோடு நீங்கள் உரையாடும்போது தடங்கலை ஏற்படுத்தலாம். கூட்டத்தில் பேசும்போது, இடைஞ்சல் ஏற்படுத்தும் சத்தம் அந்தளவுக்கு இல்லாவிட்டால் நீங்கள் குரலை உயர்த்தி தொடர்ந்து பேசலாம். ஆனால் சத்தம் மிக அதிகமாக, வெகு நேரம் நீடித்தால், நீங்கள் நிறுத்த வேண்டும். சபையார் எப்படியும் நீங்கள் சொல்வதை கேட்கப் போவதில்லை. ஆகவே நிறுத்தத்தை திறம்பட பயன்படுத்துங்கள்; நீங்கள் சொல்ல விரும்பும் சிறந்த குறிப்புகளிலிருந்து அவர்கள் முழுமையான பயனைப் பெற உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அதைப் பயன்படுத்துங்கள்.

பதிலுக்காக நிறுத்துவது. உங்கள் பேச்சில் சபையார் பங்குகொள்வதற்கு ஒருவேளை வாய்ப்பிருக்காது என்றாலும் அவர்களை பதிலளிக்க​—⁠சத்தமாக அல்ல, ஆனால் மனதிற்குள்ளேயே பதிலளிக்க​—⁠அனுமதிப்பது முக்கியம். சபையாரை யோசிக்க வைக்க நீங்கள் கேள்விகளை கேட்டுவிட்டு, பிறகு போதியளவு நிறுத்த தவறினால், அக்கேள்விகளுக்கு பயனே இல்லாமல் போய்விடும்.

மேடையிலிருந்து பேசும்போது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கும்போதும் நிறுத்த வேண்டியது அவசியம். சிலர் எப்போதுமே நிறுத்துவது கிடையாது. நீங்களும் அப்படித்தான் என்றால், இந்தப் பேச்சுப் பண்பை வளர்த்துக்கொள்ள ஊக்கமான முயற்சி எடுங்கள். அப்போது, மற்றவர்களோடு பேசும் விஷயத்தில் முன்னேற்றம் செய்வீர்கள், வெளி ஊழியத்திலும் உங்கள் திறன் கூடும். நிறுத்தம் என்பது கணநேர நிசப்தமாகும்; நிசப்தம் பேச்சிற்கு இடைவெளி அளிக்கிறது, வலியுறுத்துகிறது, கவனத்தை ஈர்க்கிறது, காதுகளுக்கு புத்துயிரூட்டுகிறது என்றெல்லாம் சொல்லப்படுவது முற்றிலும் உண்மை.

அன்றாட உரையாடல் சிந்தனைப் பரிமாற்றத்தை உட்படுத்துகிறது. மற்றவர்கள் சொல்வதை கேட்டு அதில் நீங்கள் ஆர்வம் காட்டும்போதுதான் நீங்கள் சொல்வதை அவர்களும் கேட்பார்கள். அப்படியென்றால், அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிப்பதற்கு நீங்கள் போதியளவு நிறுத்த வேண்டுமென அர்த்தம்.

வெளி ஊழியத்தில், உரையாடல் முறையில் சாட்சி கொடுப்பது பெரும்பாலும் அதிக பயனளிக்கிறது. வணக்கம் தெரிவித்த பிறகு, விஷயத்தைக் குறிப்பிட்டு அதன்பின் ஒரு கேள்வியைக் கேட்பது பயனளிப்பதாக அநேக சாட்சிகள் கண்டிருக்கின்றனர். அந்த நபர் பதிலளிப்பதற்கு இவர்கள் நிறுத்துகின்றனர். பின்பு, அவர் சொல்வதை ஒப்புக்கொள்கின்றனர். உரையாடலின்போது, அந்நபர் பேசுவதற்கு அநேக வாய்ப்புகளை தருகின்றனர். பேசப்படும் விஷயத்தின்பேரில் அவரது கருத்துக்களை தெரிந்துகொண்டால் இன்னுமதிகமாக உதவி செய்ய முடியுமென அவர்கள் அறிந்திருக்கின்றனர்.​—⁠நீதி. 20:⁠5.

அனைவருமே கேள்விகளுக்கு சாதகமாக பதிலளிக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது இயேசுவுக்கு ஒரு தடையாக இருக்கவில்லை; எதிரிகள்கூட பேச வாய்ப்பைப் பெறும் அளவுக்கு போதிய நேரம் நிறுத்தினார். (மாற். 3:1-5) மற்றவரை பேசவிடுவது அவரை சிந்திக்க தூண்டுகிறது; இதன் காரணமாக அவர் தனது இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்தலாம். சொல்லப்போனால், மக்கள் எவற்றின் பேரில் தீர்மானங்களை எடுக்க வேண்டுமோ அந்த முக்கியமான விஷயங்களை கடவுளுடைய வார்த்தையிலிருந்து எடுத்துச் சொல்லி அவர்கள் இருதயத்தைத் தட்டியெழுப்புவதே நம் ஊழியத்தின் ஒரு நோக்கம்.​—⁠எபி. 4:⁠12.

நம் ஊழியத்தில் பொருத்தமான இடங்களில் நிறுத்துவது உண்மையிலேயே ஒரு கலையாகும். நிறுத்தங்கள் திறம்பட பயன்படுத்தப்படும் போது, கருத்துக்கள் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படுகின்றன, அவை என்றென்றும் நினைவில் நிற்கின்றன.

எப்படி செய்வது

  • நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது நிறுத்தக் குறிகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள்.

  • சிறந்த பேச்சாளர்களின் பேச்சுக்களை கவனமாக கேளுங்கள், எந்தெந்த இடங்களில் எவ்வளவு நேரம் நிறுத்துகிறார்கள் என்பதை கவனியுங்கள்.

  • மற்றவர்கள் ஞாபகம் வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பும் விஷயத்தை சொல்லி முடித்தவுடன், அது அவர்கள் மனதில் பதிவதற்காக நிறுத்துங்கள்.

  • மற்றவர்கள் ஞாபகம் வைக்க வேண்டும் என நீங்கள் விரும்பும் விஷயத்தை சொல்லி முடித்தவுடன், அது அவர்கள் மனதில் பதிவதற்காக நிறுத்துங்கள்.

பயிற்சி: மாற்கு 9:1-13-ஐ சத்தமாக வாசியுங்கள்; வெவ்வேறு நிறுத்தக் குறிகளுக்கு ஏற்ப பொருத்தமாக நிறுத்துங்கள். வாசிப்பது இழுவையாக இருக்கக்கூடாது. பயிற்சி செய்த பிறகு, நீங்கள் வாசிப்பதைக் கவனிக்கும்படி எவரையாவது கேளுங்கள், நிறுத்துவது சம்பந்தமாக நீங்கள் முன்னேறுவதற்கு ஆலோசனைகள் தரும்படி கேளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்