உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 32 பக். 194-பக். 196 பாரா. 4
  • உறுதியான நம்பிக்கையோடு பேசுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதியான நம்பிக்கையோடு பேசுதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • உறுதியான நம்பிக்கையுடன் நற்செய்தியைப் பிரசங்கித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—உறுதியான நம்பிக்கையுடன்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • உறுதியாகப் பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • முழுநிச்சயத்துடன் தேறினவர்களாக நிலைநிற்பீர்களாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 32 பக். 194-பக். 196 பாரா. 4

படிப்பு 32

உறுதியான நம்பிக்கையோடு பேசுதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சொல்வது உண்மை, முக்கியம் என்பதில் உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதை காட்டும் வண்ணம் பேசுங்கள்.

ஏன் முக்கியம்?

நீங்கள் உறுதியான நம்பிக்கையோடு பேசும்போது, மற்றவர்கள் அதை கருத்தாய் எடுத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்பட உந்துவிக்கப்படுவார்கள்.

ஒருவர் உறுதியான நம்பிக்கையோடு ஒரு விஷயத்தை சொல்லும்போது, அதை அவர் உண்மையிலேயே நம்புகிறார் என்பது மற்றவர்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஊழியத்தில் அப்போஸ்தலன் பவுல் அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையோடு பேசினார். தெசலோனிக்கேயாவில் விசுவாசிகளாக மாறியவர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் பிரசங்கிக்கும் நற்செய்தி வெறும் பேச்சளவில் மாத்திரமல்ல . . . உறுதியான நம்பிக்கையோடும் உங்களிடத்தில் வந்தது.” (1 தெ. 1:5, NW) அவர் பேசிய விதத்திலும் வாழ்ந்த விதத்திலும் உறுதியான நம்பிக்கை பளிச்சிட்டது. பிறருக்கு நாம் பைபிள் சத்தியத்தை அறிமுகப்படுத்தும் விதத்திலும் உறுதியான நம்பிக்கை தெளிவாக தெரிய வேண்டும்.

உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்டுவது என்பது சொந்த கருத்துக்களில் விடாப்பிடியாக இருப்பதை, பிடிவாதமாக இருப்பதை, அல்லது ஆணவமாக இருப்பதை குறிப்பதில்லை. மாறாக, உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறவர் கடவுளுடைய வார்த்தையிலுள்ள விஷயங்களைப் பற்றி பேசும்போது, பலமான விசுவாசத்தைக் காட்டும் விதத்தில் பேசுகிறார்.​—எபி. 11:1.

உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள். வெளி ஊழியத்தில் உறுதியான நம்பிக்கையோடு பேசுவது முக்கியம். நீங்கள் சொல்லும் செய்தியை மட்டுமல்ல, அதை சொல்லும் விதத்தையும் ஜனங்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் சொல்ல வரும் விஷயத்தைக் குறித்து உண்மையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். உங்களிடம் மிகவும் மதிப்புமிக்க செய்தி இருக்கிறது என்பதை உங்களுடைய வார்த்தைகளைவிட உறுதியான நம்பிக்கை வலிமையோடு தெரிவிக்கலாம்.

சபைக் கூட்டத்தில் சக விசுவாசிகள் முன்பு பேசும்போதும் உறுதியான நம்பிக்கையோடு பேசுவது அவசியம். “உற்சாகப்படுத்தவும் கடவுள் நமக்குக் காட்டும் மெய்யான தகுதியற்ற தயவு இதுவே என்பதற்கு உள்ளப்பூர்வமாக சாட்சி கொடுக்கவும்” அப்போஸ்தலன் பேதுரு தன் முதல் கடிதத்தை ஏவுதலால் எழுதினார். அக்கடிதத்தில், “உறுதியாக நிலைத்திருங்கள்” என்று சொல்லி அந்த சகோதரர்களை அவர் உந்துவித்தார். (1 பே. 5:12, NW) அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்த சபைக்கு எழுதியபோது, அவர்களுடைய நன்மைக்காக தன்னுடைய உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் [“உறுதியான நம்பிக்கையோடிருக்கிறேன்,” NW]” என எழுதினார். (ரோ. 8:38, 39) பிரசங்கிப்பதன் அவசியத்தைப் பற்றியும் பவுல் உந்துவிக்கும் விதத்தில் எழுதினார்; அதன் முக்கியத்துவத்தைக் குறித்து அவர்தாமே உறுதியாக நம்பினார் என்பதற்கு அந்த வேலையில் அவர் காண்பித்த வைராக்கியம் தெளிவான அத்தாட்சி அளித்தது. (அப். 20:18-21; ரோ. 10:9, 13-15) இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் கடவுளுடைய வார்த்தையை போதிக்கையில், இதே போன்ற உறுதியான நம்பிக்கையை காண்பிக்க வேண்டும்.

பிள்ளைகளோடு பைபிள் படிப்பு நடத்துகிற சமயங்களிலும் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுகிற மற்ற சமயங்களிலும் பெற்றோர் உறுதியான நம்பிக்கையோடு பேச வேண்டும். இதற்காக பெற்றோர்தாமே கடவுள் மீது தங்களுடைய அன்பை வளர்ப்பதும் அவருடைய வழிகளை தங்களுடைய இருதயங்களில் பதிய வைப்பதும் அவசியம். அப்போதுதான் பிள்ளைகளிடத்தில் உள்ளப்பூர்வமான நம்பிக்கையோடு பேச முடியும், ஏனெனில் ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது.’ (லூக். 6:45; உபா. 6:5-7) அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கை, ‘மாயமற்ற விசுவாசத்திற்கு’ முன்மாதிரியாக திகழவும் பெற்றோரை தூண்டும்.​—2 தீ. 1:4, 5.

முக்கியமாக, விசுவாசம் பரிட்சிக்கப்படுகிற சமயங்களில் உறுதியான விசுவாசத்தோடு பேச வேண்டும். நீங்கள் ஏதாவதொரு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாதபோது உங்களுடைய பள்ளித் தோழரோ ஆசிரியரோ அல்லது சக ஊழியரோ ஆச்சரியமடையலாம். நீங்கள் தரும் உறுதியான, நியாயமான பதில், பைபிள் அடிப்படையில் நீங்கள் எடுத்திருக்கும் நிலைநிற்கையை அவர் மதிப்பதற்கு உதவலாம். ஏமாற்றுதல், போதைப் பொருள் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ஒழுக்கக்கேடு போன்ற தவறான நடத்தையில் யாரேனும் உங்களை சிக்க வைக்க முயன்றால் என்ன செய்வீர்கள்? அப்படிப்பட்ட நடத்தைகளில் கண்டிப்பாக ஈடுபட மாட்டீர்கள் என்பதையும் இந்த விஷயத்தில் எதுவும் உங்கள் மனதை மாற்ற முடியாது என்பதையும் திட்டவட்டமாக சொல்வது முக்கியம். இப்படிப்பட்ட பழக்கங்களில் ஈடுபட மறுக்கும்போது நீங்கள் உறுதியான நம்பிக்கையோடு பேச வேண்டும். போத்திபாருடைய மனைவியின் பாலியல் ஆசைகளுக்கு இணங்க மறுத்து யோசேப்பு இவ்வாறு உறுதியுடன் கூறினார்: “இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி”? அவள் விடாப்பிடியாக இருந்தபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.​—ஆதி. 39:9, 12.

நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்துவது. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்த பெரிதும் உதவலாம். பல சந்தர்ப்பங்களில், இயேசு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடுகையில், “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று ஆரம்பித்தார். (யோவா. 3:3, 5, 11; 5:19, 24, 25; NW) “நான் உறுதியாக நம்புகிறேன்,” “கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்,” “நான் பொய் சொல்லாமல் . . . உண்மையைச் சொல்லுகிறேன்” போன்ற வார்த்தைகளில் பவுலின் உறுதியான நம்பிக்கை வெளிப்பட்டது. (ரோ. 8:38, NW; 14:14; 1 தீ. 2:7) யெகோவா தமது வார்த்தையை நிறைவேற்றுவதைக் குறித்ததில், “அது நிச்சயமாய் வரும்” போன்ற அழுத்தம் திருத்தமான கூற்றுகளை குறிப்பிடும்படி சிலசமயங்களில் தமது தீர்க்கதரிசிகளை ஏவினார். (ஆப. 2:3) இந்தத் தீர்க்கதரிசனங்களைக் குறிப்பிடுகையில் நீங்களும் இதே போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உங்கள் மீது அல்ல ஆனால் யெகோவா மீது நம்பிக்கை வைத்து, மற்றவர்களிடம் கண்ணியமான முறையில் நீங்கள் பேசினால், இதேபோன்ற உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வார்த்தைகள் உங்களுடைய பலமான விசுவாசத்திற்கு அத்தாட்சி அளிக்கும்.

மிகுந்த ஆர்வத்தோடு பேசுவதன் மூலமும் வலிமைமிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் உங்களுடைய நம்பிக்கையை காட்டலாம். முகபாவங்களும் சைகைகளும் சரீர மொழியும்​—ஒருவருக்கொருவர் ஓரளவு வேறுபட்டாலும்​—இதற்கு பங்களிக்கின்றன. இயல்பாகவே நீங்கள் கூச்ச சுபாவமானவராகவோ சாந்தமாக பேசுபவராகவோ இருந்தாலும்கூட, நீங்கள் சத்தியத்தையே பேசுகிறீர்கள் என்றும் மற்றவர்கள் அதை கேட்க வேண்டும் என்றும் உறுதியாக நம்பும்போது அந்த நம்பிக்கை தெளிவாக தெரியும்.

நம்முடைய நம்பிக்கையை தெரிவிக்கும் வார்த்தைகள் எதுவாயினும் அது உள்ளப்பூர்வமானதாக இருக்க வேண்டும். நாம் இருதயத்திலிருந்து அல்ல உதட்டளவில் பேசுகிறோம் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டால், நம்முடைய செய்தியில் சாரமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆகவே, இயல்பாக பேச வேண்டியது மிக முக்கியம். பெரும் கூட்டத்திற்கு முன்பு பேசும்போது, எப்போதையும்விட அதிக சத்தமாகவும் வலிமையாகவும் பேச வேண்டியிருக்கலாம். ஆனால் உள்ளப்பூர்வமாகவும் இயல்பாகவும் பேசுவதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்.

நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கு உதவிகள். உங்களுடைய உறுதியான நம்பிக்கை, நீங்கள் பேசப்போகும் தகவலைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்பதோடு சம்பந்தப்பட்டிருப்பதால் நன்கு தயாரிப்பது முக்கியம். பிரசுரத்தில் இருப்பதை அப்படியே காப்பியடித்து பின் அதை மனப்பாடமாக சொல்வது போதுமானதல்ல. தகவலை தெளிவாக புரிந்துகொண்டு உங்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்வது உண்மை, கேட்போருக்கு மதிப்புமிக்கது என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படியானால், உங்களுடைய பேச்சை தயாரிக்கையில், அவர்களுடைய சூழ்நிலைகளையும் அந்தப் பொருளைப் பற்றி அவர்கள் ஏற்கெனவே என்ன தெரிந்திருக்கலாம் அல்லது எப்படி உணரலாம் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் சரளமாக பேசும்போது நம்முடைய உறுதியான நம்பிக்கையை மற்றவர்கள் எளிதில் உணர்ந்து கொள்கிறார்கள். ஆகவே, சிறந்த தகவலை சேகரிப்பதோடு, அதை சிறந்த விதத்தில் வழங்குவதற்கும் கடினமாக முயலுங்கள். மிகவும் ஊக்கத்தோடு பேச வேண்டிய பகுதிகளுக்கு விசேஷ கவனம் செலுத்துங்கள்; அப்பொழுதுதான் குறிப்புத்தாளையே அதிகம் சார்ந்திராமல் பேச்சு கொடுக்க முடியும். உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்க மறந்துவிடாதீர்கள். இவ்வாறு, உங்களுடைய செய்தியின் உண்மைத்தன்மை மற்றும் முக்கியத்துவத்தைக் குறித்து உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசுவதற்கு ‘நம்முடைய தேவனுக்குள் தைரியத்தை ஒன்று திரட்டுவீர்கள்.’​—1 தெ. 2:2, NW.

எப்படி செய்வது

  • உங்களுடைய பொருளுக்கேற்ப உணர்ச்சியோடு பேசுங்கள்.

  • உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

  • தகவலை தெளிவாக புரிந்துகொண்டு அதை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்லும் வரை நன்கு படியுங்கள். சபையாரிடம் நீங்கள் பேசும் செய்தி உண்மையானது, மதிப்புமிக்கது என்பதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.

பயிற்சி: பின்வரும் பைபிள் பதிவுகளை ஆராயுங்கள்: யாத்திராகமம் 14:10-14; 2 இராஜாக்கள் 5:1-3; தானியேல் 3:13-18; அப்போஸ்தலர் 2:22-36. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளில், கடவுளுடைய ஊழியர்கள் எப்படி தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்? அவர்களுடைய உறுதியான நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? அதேவிதமான நம்பிக்கையை இன்று நீங்கள் எப்படி வெளிப்படுத்தலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்