படிப்பு 47
காணக்கூடிய உபகரணங்களைத் திறம்பட பயன்படுத்துதல்
போதிக்கையில் ஏன் காணக்கூடிய உபகரணங்களை (visual aids) பயன்படுத்த வேண்டும்? அப்படி செய்வது உங்களுடைய போதனையை திறம்பட்ட ஒன்றாக்குகிறது. காணக்கூடிய உபகரணங்களை யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் பயன்படுத்தினர், அவர்களிடமிருந்து நாமும் கற்றுக்கொள்ளலாம். பேசப்படும் வார்த்தையோடு காணக்கூடிய உபகரணங்களும் இணையும்போது, தகவல் இரு புலன்களின் வாயிலாக பெறப்படுகிறது. இது, உங்களுடைய சபையாரின் கவனத்தை ஈர்த்துப் பிடிப்பதற்கும் விஷயத்தை பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைப்பதற்கும் உதவலாம். நற்செய்தியை பிரசங்கிக்கையில் காணக்கூடிய உபகரணங்களை எவ்வாறு சேர்த்துக்கொள்ளலாம்? அவற்றை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம்?
காணக்கூடிய உபகரணங்களை மிகப் பெரிய போதகர்கள் எவ்வாறு பயன்படுத்தினர். இன்றியமையா பாடங்களை கற்பிப்பதற்கு நினைவில் நிற்கத்தக்க காணக்கூடிய உபகரணங்களை யெகோவா பயன்படுத்தினார். ஒரு நாள் இரவு ஆபிரகாமை கூடாரத்தைவிட்டு வெளியே அழைத்து அவரிடம் இவ்வாறு கூறினார்: “நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு. . . . உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்.” (ஆதி. 15:5) மனித கண்ணோட்டத்தில் இந்த வாக்குறுதி சாத்தியமற்றதாக தோன்றினாலும், ஆபிரகாமின் மனதில் இது ஆழமாக பதிந்தது, யெகோவாவில் விசுவாசம் வைக்கவும் தூண்டியது. மற்றொரு சந்தர்ப்பத்தில், எரேமியாவை குயவனுடைய வீட்டிற்கு அனுப்பி, களிமண்ணை குயவன் வடிவமைப்பதைப் பார்க்கும்படி செய்தார். மனிதர் மீது படைப்பாளருக்கு இருக்கும் அதிகாரத்தை உணர்த்த நெஞ்சைவிட்டு நீங்காத எப்பேர்ப்பட்ட பாடம்! (எரே. 18:1-6) இரக்கத்தின் சம்பந்தமாக சுரைக்காய் செடியைப் பயன்படுத்தி யெகோவா புகட்டிய பாடத்தை யோனா எப்படி மறக்க முடியும்? (யோனா 4:6-11, NW) பொருத்தமான சில பொருட்களைப் பயன்படுத்தி தீர்க்கதரிசன செய்திகளை நடித்துக் காட்டும்படியும் யெகோவா தமது தீர்க்கதரிசிகளிடம் கூறினார். (1 இரா. 11:29-32; எரே. 27:1-8; எசே. 4:1-17) ஆசரிப்புக் கூடாரமும் ஆலயத்தின் அம்சங்களும் பரலோக மெய்மையை புரிந்துகொள்ள நமக்கு உதவும் காட்சிகளாகும். (எபி. 9:9, 23, 24) முக்கிய தகவல்களைக் கொடுப்பதற்கு ஏராளமான தரிசனங்களையும் யெகோவா பயன்படுத்தினார்.—எசே. 1:4-28; 8:2-18; அப். 10:9-16; 16:9, 10; வெளி. 1:1.
காணக்கூடிய உபகரணங்களை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார்? பரிசேயர்களும் ஏரோதுவின் கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சிலேயே அவரை மடக்க முயற்சி செய்தபோது, இயேசு ஒரு தினாரியை வாங்கி அதில் பொறிக்கப்பட்டிருந்த இராயனுடைய உருவத்திற்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்பினார். பிறகு, இராயனுடையதை இராயனுக்குச் செலுத்த வேண்டும் ஆனால் கடவுளுடையதை கடவுளுக்குச் செலுத்த வேண்டும் என விளக்கினார். (மத். 22:19-21) நம்மிடம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி கடவுளை கனப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை கற்பிப்பதற்கு, ஓர் ஏழை விதவை ஆலயத்திலிருந்த நன்கொடை பெட்டியில் தன்னிடமிருந்த அனைத்தையும்—சிறிய இரண்டு காசுகளை—போட்டதை இயேசு சுட்டிக்காட்டினார். (லூக். 21:1-4) மற்றொரு சந்தர்ப்பத்தில், புகழார்வமின்றி மனத்தாழ்மையாக இருப்பதற்கு ஒரு சிறுபிள்ளையை உதாரணமாக பயன்படுத்தினார். (மத். 18:2-6) தம்முடைய சீஷர்களின் கால்களை கழுவுவதன் மூலம் மனத்தாழ்மையின் அர்த்தத்தை தாமே செயலில் காட்டினார்.—யோவா. 13:14.
காணக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தும் வழிகள். யெகோவாவை போல, தரிசனங்கள் மூலம் நாம் மற்றவர்களோடு தொடர்புகொள்ள முடியாது. என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில் சிந்தையைத் தூண்டும் படங்கள் பல வருகின்றன. கடவுளுடைய வார்த்தையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள பரதீஸிய பூமியைப் பற்றி ஆர்வமிக்கவர்கள் கற்பனை செய்து பார்ப்பதற்கு அவற்றை பயன்படுத்துங்கள். பைபிள் படிப்பு நடத்துகையில், நீங்கள் படிக்கும் விஷயத்தோடு தொடர்புடைய ஒரு படத்திற்கு மாணாக்கருடைய கவனத்தைத் திருப்பி என்ன பார்க்கிறாரென சொல்லும்படி கேட்கலாம். ஆமோஸ் தீர்க்கதரிசிக்கு சில தரிசனங்களைக் கொடுத்தபோது, “ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய்”? என்று யெகோவா கேட்டது குறிப்பிடத்தக்கதாகும். (ஆமோ. 7:7, 8; 8:1, 2) காணக்கூடிய உபகரணங்களாக பயன்படுத்தப்பட்டுள்ள படங்களுக்கு கவனத்தைத் திருப்பும்போது இதுபோன்ற கேள்விகளைக் கேட்கலாம்.
கணக்குகள் போட்டு காண்பிக்கையில் அல்லது முக்கிய சம்பவங்களின் காலக்கிரம அட்டவணையை பயன்படுத்துகையில், தானியேல் 4:16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ‘ஏழு காலங்கள்’ மற்றும் தானியேல் 9:24-ல் சொல்லப்பட்டுள்ள ‘எழுபது வாரங்கள்’ போன்ற தீர்க்கதரிசனங்களை மற்றவர்களால் உடனடியாக புரிந்துகொள்ள முடியும். படிப்பிற்காக நாம் பயன்படுத்தும் பல பிரசுரங்களில் இத்தகைய காணக்கூடிய உபகரணங்கள் உள்ளன.
உங்களுடைய குடும்ப பைபிள் படிப்பில், ஆசரிப்புக் கூடாரம், எருசலேமிலுள்ள ஆலயம், எசேக்கியேலின் தரிசனத்தில் வரும் ஆலயம் போன்ற விஷயங்களைப் பற்றி படிக்கும்போது ஒரு படத்தையோ வரைபடத்தையோ பயன்படுத்தினால் புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும். வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற தொகுதியிலும், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் (ஆங்கிலம்) பிற்சேர்க்கையிலும், பல்வேறு காவற்கோபுர பிரதிகளிலும் இவற்றை காணலாம்.
குடும்பமாக பைபிள் வாசிக்கும்போது, வரைபடங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஊர் பட்டணத்திலிருந்து ஆரான் வரைக்கும், பின்பு பெத்தேல் வரைக்கும் ஆபிரகாம் பயணம் செய்த பாதையை கண்டுபிடியுங்கள். எகிப்தைவிட்டு வாக்குப் பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் சென்ற வழியை ஆராயுங்கள். இஸ்ரவேல் கோத்திரத்தார் ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாக கொடுக்கப்பட்ட பகுதியை கண்டுபிடியுங்கள். சாலொமோன் ஆட்சியின் எல்லை எதுவரை என்பதை பாருங்கள். யேசபேல் அச்சுறுத்தியபோது யெஸ்ரயேலிலிருந்து பெயர்செபாவுக்கு அப்பாலுள்ள வனாந்தரம் வரைக்கும் எலியா தப்பிச்சென்ற பாதையைத் தேடுங்கள். (1 இரா. 18:46–19:4) இயேசு பிரசங்கித்த நகரங்களையும் பட்டணங்களையும் கண்டுபிடியுங்கள். அப்போஸ்தலர் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பவுல் பயணம் செய்த இடங்களுக்கு செல்லுங்கள்.
சபையின் செயல்பாடுகளை பைபிள் மாணாக்கருக்கு தெரிவிக்கும்போது காணக்கூடிய உபகரணங்கள் உதவியாக இருக்கின்றன. உங்களுடைய மாணாக்கரிடம் வட்டார, மாவட்ட மாநாடுகளின் நிகழ்ச்சிநிரல்களைக் காட்டி, அங்கே நாம் கலந்தாலோசிக்கும் விஷயங்களை அவர்களுக்கு விளக்கலாம். அநேகர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தை அல்லது கிளை அலுவலகத்தை நேரில் சென்று பார்த்து மனம் கவரப்பட்டிருக்கிறார்கள். நம்முடைய வேலையையும் அதன் நோக்கத்தையும் பற்றிய தவறான எண்ணங்களைப் போக்குவதற்கு இது சிறந்த வழியாக இருக்கலாம். ராஜ்ய மன்றத்தை சுற்றிக் காட்டுகையில், வழிபாட்டுக்குரிய மற்ற இடங்களிலிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள். கற்றுக்கொள்வதற்கு ஏற்ற சூழலை வழங்கும் பகட்டில்லாத இடம் என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள். நம்முடைய வெளி ஊழியத்திற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்சங்களை—பிரசுர இலாகா, பிராந்திய வரைபடம், (காணிக்கை தட்டுகளுக்கு நேர்மாறாக) நன்கொடை பெட்டிகள் ஆகியவற்றை—சுட்டிக் காட்டுங்கள்.
ஆளும் குழுவின் வழிநடத்துதலில் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் இருந்தால், பைபிள் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கும், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளைப் பற்றி தெளிவாக காட்டுவதற்கும், பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ உற்சாகப்படுத்துவதற்கும் இவற்றை பயன்படுத்துங்கள்.
காணக்கூடிய உபகரணங்களை பெரும் கூட்டத்தாருக்கு பயன்படுத்துதல். காணக்கூடிய உபகரணங்களை நன்கு தயாரித்து திறமையாக பயன்படுத்தும்போது, அவை பெரும் கூட்டத்தாருக்கு திறம்பட்ட போதனா கருவிகளாக விளங்கும். இத்தகைய காணக்கூடிய உபகரணங்கள் பல்வேறு வகைகளில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலம் வழங்கப்படுகின்றன.
பொதுவாக, காவற்கோபுர படிப்பு கட்டுரைகளில் காணக்கூடிய உபகரணங்கள் படங்கள் வடிவில் வருகின்றன; முக்கிய குறிப்புகளை வலியுறுத்திக் காட்டுவதற்கு நடத்துனர் அவற்றை பயன்படுத்தலாம். சபை புத்தகப் படிப்பில் பயன்படுத்தப்படும் பிரசுரங்களிலும் இவை காணப்படுகின்றன.
பொதுப் பேச்சிற்குரிய சில குறிப்புத்தாள்கள், காணக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தி குறிப்புகளை விளக்குவதற்கு ஏற்றவாறு இருக்கலாம். ஆனால் பொதுவாக சபையார் பெரும்பாலோர் பைபிள் வைத்திருப்பதால், அதில் சொல்லப்பட்டுள்ள விஷயத்திற்கு கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலமே அதிக பயனை அடையலாம். சில சந்தர்ப்பங்களில், ஒரு பேச்சில் வரும் ஓரிரண்டு முக்கிய குறிப்புகளைத் தெரிவிப்பதற்கு ஒரு படத்தையோ முக்கிய குறிப்புகள் அடங்கிய தாளையோ காட்டுவது அவசியமாக இருந்தால், கூட்டத்தில் பின்புறத்தில் அமர்ந்திருப்பவர்கள் அதைத் தெளிவாக பார்க்க (அல்லது வாசிக்க) முடியுமா என்பதை முன்னரே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட உபகரணங்களை மட்டாக பயன்படுத்த வேண்டும்.
பேசும்போது அல்லது போதிக்கும்போது காணக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்துவது மகிழ்விப்பதற்கு அல்ல. தரமான காணக்கூடிய உபகரணம், விசேஷமாக வலியுறுத்த வேண்டிய கருத்துக்களுக்கு காணக்கூடிய விதத்தில் வலிமை சேர்ப்பதாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட காணக்கூடிய உபகரணங்கள், பேசப்படும் வார்த்தையை தெளிவாக்குவதற்கும் புரிந்துகொள்வதை எளிதாக்குவதற்கும் உதவியாக இருக்கும்போது, அல்லது சொல்லப்படும் விஷயத்தின் உண்மையை வலியுறுத்தி பலமான சான்றளிக்கும்போது பயனுள்ளவையாக இருக்கின்றன. பொருத்தமான காணக்கூடிய உபகரணத்தை தகுந்த முறையில் பயன்படுத்தினால் அது மனதில் ஆழப் பதியும்; இதனால் காணக்கூடிய உபகரணமும்சரி போதனையும்சரி, பல்லாண்டுகளுக்கு நெஞ்சைவிட்டு நீங்காமல் இருக்கும்.
கற்றுக்கொள்வதில் செவித் திறனும் பார்வைத் திறனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மிகப் பெரிய போதகர்கள் இந்தப் புலன்களை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை நினைவுகூர்ந்து, மற்றவர்களுடைய மனதை தொடுவதற்கு அவர்களைப் பின்பற்ற முயலுங்கள்.