படிப்பு 49
நியாயமான காரணங்களை அளித்தல்
ஏதாவதொரு விஷயத்தை நீங்கள் சொல்கையில், “இதுதான் உண்மை என்று எப்படி சொல்ல முடியும்? அதை ஏற்றுக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என செவிசாய்ப்போர் கேள்வி கேட்பது முற்றிலும் நியாயமானதே. ஒரு போதகராக இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பது அல்லது பதில்களை கண்டுபிடிக்க உதவி செய்வது உங்கள் கடமை. நீங்கள் சொல்லும் குறிப்பு உங்களுடைய விவாதத்திற்கு உயிர்நாடியாக இருக்குமானால், கேட்போர் அதை ஏற்றுக்கொள்வதற்கு வலுவான காரணங்களை சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுடைய பேச்சு நம்ப வைக்கும் ஒன்றாக அமையும்.
நம்பவைக்கும் விதத்தில் பேசும் முறையை அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்தினார். நியாயமான விவாதம், தர்க்க ரீதியிலான விளக்கம், ஊக்கமான மன்றாட்டு ஆகியவற்றின் மூலம் கேட்போருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அவர் நமக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார். (அப். 18:4; 19:8; NW) பேச்சாற்றல்மிக்க சிலர் நம்பவைக்கும் விதத்தில் பேசி ஜனங்களை தவறாக வழிநடத்துவது உண்மைதான். (மத். 27:20; அப். 14:19; கொலோ. 2:4; NW) அவர்கள் தவறான ஊகத்தின் அடிப்படையில் பேச்சை ஆரம்பிக்கலாம், ஒருதலைப்பட்சமான செய்தி மூலங்களை சார்ந்திருக்கலாம், உப்புசப்பில்லாத விவாதங்களை பயன்படுத்தலாம், தங்களுடைய கருத்துக்கு ஒத்துப்போகாத உண்மைகளை ஓரங்கட்டிவிடலாம், அல்லது நியாயங்களைவிட உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். இப்படிப்பட்ட முறைகளையெல்லாம் தவிர்ப்பதற்கு நாம் கவனமாய் இருக்க வேண்டும்.
கடவுளுடைய வார்த்தையை உறுதியான ஆதாரமாக கொள்ளுதல். நாம் போதிப்பது நம்முடைய சொந்த கருத்துக்களாக இருக்கக் கூடாது. நாம் பைபிளிலிருந்து கற்றதையே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முயல்கிறோம். இதற்கு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பு வழங்கும் பிரசுரங்கள் பெரிதும் துணை புரிகின்றன. இவை வேதவசனங்களை கவனமாக ஆராயும்படி நம்மை உற்சாகப்படுத்துகின்றன. அது போலவே நாமும் மற்றவர்களுடைய கவனத்தை பைபிளிடம் திருப்புகிறோம். நாம் சொல்வதே சரி என நிரூபிப்பதற்காக அல்ல, ஆனால் அது என்ன சொல்கிறது என்பதை அவர்களே அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பத்தால் அப்படி செய்கிறோம். “உம்முடைய வசனமே சத்தியம்” என்று தம் பிதாவிடம் ஜெபத்தில் இயேசு கிறிஸ்து சொன்னதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். (யோவா. 17:17) வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவா தேவனை தவிர உயர்ந்தவர் யாருமில்லை. ஆகவே, நாம் தரும் நியாயமான விவாதங்கள் அவருடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
சில சமயங்களில், பைபிளைப் பற்றி நன்கு தெரியாதவர்களிடத்தில் அல்லது அது கடவுளுடைய வார்த்தை என ஏற்றுக்கொள்ளாதவர்களிடத்தில் நீங்கள் பேசலாம். பைபிள் வசனங்களை எப்போது, எப்படி அறிமுகப்படுத்துவது என்பதில் பகுத்துணர்வு காட்ட வேண்டும். ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் மூலமாகிய பைபிளிடம் விரைவிலேயே அவர்களுடைய கவனத்தைத் திருப்ப முயல வேண்டும்.
அப்படியென்றால், நம்பவைக்கும் விவாதத்திற்குப் பொருத்தமான ஒரு வசனத்தை எடுத்துக் காட்டினால் போதுமா? போதாது. நீங்கள் சொல்வதை அந்த வசனம் நிச்சயம் ஆதரிக்கிறது என்பதை காட்ட அதன் சூழமைவிடம் கவனத்தை திருப்ப வேண்டியிருக்கலாம். ஒரு வசனத்திலிருந்து வெறுமனே நியமத்தை மட்டும் எடுத்துக் காட்டும்போது, அதன் சூழமைவு அந்தப் பொருளில் பேசவில்லையென்றால் கூடுதலான அத்தாட்சிகள் தேவைப்படலாம். நீங்கள் சொல்வது உண்மையில் பைபிளின் அடிப்படையிலானது என்பதை சபையார் அறிந்துகொள்ள அந்த விஷயத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.
ஒரு வசனத்தை மிகைப்படுத்திக் கூறுவதை தவிருங்கள். அதை கவனமாக வாசியுங்கள். அந்த வசனம் நீங்கள் விவாதிக்கும் பொதுவான பொருளைப் பற்றி பேசலாம். என்றாலும், உங்களுடைய விவாதம் நம்பவைப்பதாக இருக்க வேண்டுமென்றால், கேட்போருக்கு அதற்குரிய ஆதாரம் தெளிவாக தெரிய வேண்டும்.
ஆதாரமளிக்கும் மற்ற சான்றுகள். சில சந்தர்ப்பங்களில், வசனங்களின் நம்பகத்தன்மையை ஜனங்கள் புரிந்துகொள்வதற்கு பைபிள் சாராத வேறு சில நம்பகமான மூலங்களில் உள்ள அத்தாட்சிகளைப் பயன்படுத்துவது நல்லது.
உதாரணமாக, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கு காணக்கூடிய இப்பிரபஞ்சத்தை நீங்கள் சுட்டிக்காட்டலாம். புவி ஈர்ப்பு விசை போன்ற இயற்கை சட்டங்களிடம் கவனத்தைத் திருப்பி, அப்படிப்பட்ட சட்டங்கள் இருக்கிறதென்றால் சட்டங்களை வகுத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என நியாயங்காட்டிப் பேசலாம். உங்களுடைய தர்க்கம் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக இருந்தால் அது சரியாக இருக்கும். (யோபு 38:31-33; சங். 19:1; 104:24; ரோ. 1:20) காணக்கூடிய உண்மைகள் பைபிளோடு ஒத்திருப்பதை இப்படிப்பட்ட அத்தாட்சிகள் மெய்ப்பித்துக் காட்டுவதால் அவை பயனுள்ளவையாக இருக்கின்றன.
பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதை ஒருவருக்கு புரியவைக்க முயலுகிறீர்களா? அது கடவுளுடைய வார்த்தையே என சொல்கிற அறிஞர்களுடைய மேற்கோள்களை நீங்கள் காட்டலாம், ஆனால் அது அதை நிரூபிக்கிறதா? அந்த அறிஞர்கள் மீது நன்மதிப்பு வைத்திருப்போருக்கு மட்டுமே அந்த மேற்கோள்கள் உதவலாம். பைபிள் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு விஞ்ஞானத்தை நீங்கள் பயன்படுத்தலாமா? அபூரண விஞ்ஞானிகளின் கருத்துக்களை அதிகாரப்பூர்வமானதாக பயன்படுத்தினால், உறுதியற்ற அஸ்திவாரத்தின் மீது கட்டுகிறவர்களாக இருப்பீர்கள். மறுபட்சத்தில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆரம்பித்து அதற்குப்பின் பைபிளின் துல்லியத்தை சிறப்பித்துக் காட்டும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடும்போது, உங்களுடைய விவாதங்கள் உறுதியான அஸ்திவாரத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டவையாக இருக்கும்.
நீங்கள் எதை நிரூபித்துக் காட்டுவதற்கு முயன்றாலும், போதுமான அத்தாட்சிகளை அளியுங்கள். எந்தளவுக்கு அத்தாட்சிகள் தேவை என்பது உங்களுடைய சபையாரை பொறுத்தது. உதாரணமாக, 2 தீமோத்தேயு 3:1-5-ல் விவரிக்கப்பட்டுள்ள கடைசி நாட்களைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால், மனிதரிடம் ‘சுபாவ அன்பில்லாததை’ சுட்டிக்காட்டும் பிரபலமான ஒரு செய்தி அறிக்கைக்கு சபையாரின் கவனத்தைத் திருப்பலாம். கடைசி நாட்களுக்கு அடையாளமான இந்த அம்சம் இப்போது நிறைவேறி வருகிறது என்பதற்கு இந்த ஓர் உதாரணமே போதுமானதாக இருக்கலாம்.
ஓர் ஒப்புமையை பயன்படுத்துவது—இரு பொருட்களுக்கு இடையே பொதுவாக இருக்கும் முக்கிய அம்சங்களை ஒப்பிட்டுக் காட்டுவது—பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும். ஒப்பிடுவதுதானே ஒரு விஷயத்தை நிரூபித்து விடுவதில்லை; பைபிள் சொல்வதோடு அதன் மதிப்பை சோதித்துப் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு கருத்தின் நியாயத்தன்மையை காண்பதற்கு இந்த ஒப்புமை ஒருவருக்கு உதவலாம். உதாரணமாக, கடவுளுடைய ராஜ்யம் என்பது ஓர் அரசாங்கம் என்பதை விளக்குவதற்கு ஓர் ஒப்புமையை பயன்படுத்தலாம். மனித அரசாங்கங்களைப் போலவே, கடவுளுடைய ராஜ்யத்திற்கும் ஆட்சியாளர்கள், பிரஜைகள் இருக்கிறார்கள்; சட்ட திட்டங்கள், நீதித்துறை, மற்றும் கல்வித்துறை இருக்கின்றன என்பதை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டலாம்.
பைபிள் ஆலோசனையை பொருத்துவது எவ்வளவு ஞானமானது என்பதை காட்டுவதற்கு நிஜ வாழ்க்கை அனுபவங்களைப் பயன்படுத்தலாம். சொல்லப்படும் கூற்றுக்கு ஆதாரமாக சொந்த அனுபவங்களையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, பைபிளை வாசிப்பது மற்றும் படிப்பதன் முக்கியத்துவத்தை குறிப்பிடுகையில், அது உங்களுடைய வாழ்க்கையை எப்படி மேம்படுத்தியுள்ளது என்பதை விளக்கலாம். தன் சகோதரர்களை ஊக்குவிப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு தான் கண்ணார கண்ட மறுரூப காட்சியை குறிப்பிட்டார். (2 பே. 1:16-18) பவுலும்கூட தன் சொந்த அனுபவங்களைக் குறிப்பிட்டார். (2 கொ. 1:8-10; 12:7-9) உங்கள்மீது அளவுக்கு மிஞ்சி கவனத்தை ஈர்க்காமல் இருப்பதற்கு சொந்த அனுபவங்களை மிதமாக பயன்படுத்துங்கள்.
ஜனங்களுடைய பின்னணியும் எண்ணங்களும் மாறுபடுவதால், ஒருவரை நம்ப வைப்பதற்குப் போதுமானதாக இருக்கும் அத்தாட்சி மற்றொருவருக்கு திருப்திகரமாக இருக்காது. ஆகவே, எந்த விவாதங்களைப் பயன்படுத்துவது, எப்படி பயன்படுத்துவது என்பதை தீர்மானிக்கையில் கேட்போரின் கருத்துக்களையும் சிந்தித்துப் பாருங்கள். “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” என நீதிமொழிகள் 16:23 குறிப்பிடுகிறது.