உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lr அதி. 11 பக். 62-66
  • கடவுளுடைய தூதர்களின் உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய தூதர்களின் உதவி
  • பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய தூதர்களிடத்திலிருந்து உதவி
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • தேவதூதர்கள் யார்?
    பைபிள் தரும் பதில்கள்
  • தேவதூதர்கள்—அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
மேலும் பார்க்க
பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
lr அதி. 11 பக். 62-66

அதிகாரம் 11

கடவுளுடைய தூதர்களின் உதவி

கண்ணுக்குத் தெரிந்தால்தான் எதையும் நம்புவோம் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது முட்டாள்தனம். எவ்வளவோ காரியங்களை நாம் கண்களால் பார்த்ததே இல்லை, ஆனாலும் அவை இருப்பதை நம்புகிறோம். உன்னால் ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?—

நாம் சுவாசிக்கும் காற்று ஒரு உதாரணம். அதை நம்மால் உணர முடியுமா?— உன் கையைத் திறந்து வைத்து அதில் ஊது. உன்னால் எதையாவது உணர முடிந்ததா?— முடிந்ததுதானே? ஆனால் உன்னால் காற்றை பார்க்க முடியாது, இல்லையா?—

நாம் ஆவி ஆட்களைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம். இவர்களை நம்மால் பார்க்க முடியாது. இவர்களில் சிலர் நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்றும் பார்த்தோம். நம்மால் பார்க்க முடியாத சில நல்ல ஆவி ஆட்கள் யார் என்று சொல் பார்க்கலாம்.— ஆமாம், யெகோவா தேவன், இயேசு, மற்றும் நல்ல தூதர்கள். அதேசமயத்தில் கெட்ட தூதர்களும் இருக்கிறார்களா?— இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. அந்தத் தூதர்களைப் பற்றி என்ன கற்றுக்கொண்டாய், சொல் பார்க்கலாம்.—

நல்ல தூதர்களும் சரி கெட்ட தூதர்களும் சரி நம்மைவிட பலமானவர்கள் என்று நாம் கற்றிருக்கிறோம். பெரிய போதகருக்கு தூதர்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. ஏன் தெரியுமா? அவர் பூமியில் குழந்தையாக பிறப்பதற்கு முன்பு ஒரு தேவதூதராக இருந்தார். பரலோகத்தில் மற்ற தேவதூதர்களோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு லட்சக்கணக்கான தூதர்களைத் தெரியும். இந்த எல்லா தூதர்களுக்கும் பெயர் உண்டா?—

கடவுள் நட்சத்திரங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார் என்று நாம் படித்திருக்கிறோம். அப்படியென்றால் தேவதூதர்கள் எல்லாருக்கும்கூட கண்டிப்பாக பெயர் இருக்கும். அவர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியும் என்று நமக்கு தெரியும். ஏனென்றால் ‘தூதர்களின் பாஷையைப்’ பற்றி பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:1) தேவதூதர்கள் எதைப் பற்றி பேசிக்கொள்வார்கள் என்று நீ நினைக்கிறாய்? பூமியில் இருக்கும் நம்மைப் பற்றி பேசுவார்களா?—

சாத்தானுடைய தூதர்களான பிசாசுகள், நாம் யெகோவாவின் பேச்சை மீறும்படி தூண்டுகின்றன என்று நமக்குத் தெரியும். ஆகவே அதை எப்படி செய்யலாம் என்று அவை பேசிக்கொள்ளலாம். நாமும் அவற்றைப் போலவே ஆக வேண்டும் என்று நினைக்கின்றன. அப்போதுதான் யெகோவா நம்மையும் வெறுப்பார் என்று அவற்றிற்கு தெரியும். ஆனால் கடவுளுடைய நல்ல தூதர்கள் என்ன பேசுவார்கள்? அவர்களும் நம்மை பற்றி பேசுவார்களா?— ஆமாம், பேசுவார்கள். நமக்கு உதவி செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். யெகோவாவை அன்போடு சேவித்த மக்களுக்கு நல்ல தூதர்கள் உதவினார்கள். எப்படி என்று சொல்கிறேன் கேட்கிறாயா?

தானியேல் என்ற ஒருவர் பாபிலோனில் வாழ்ந்தார். அங்கு நிறைய பேர் யெகோவாவை நேசிக்கவில்லை. யெகோவா தேவனிடம் ஜெபம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற சட்டத்தையும் கொண்டு வந்தார்கள். ஆனால் யெகோவாவிடம் ஜெபம் செய்வதை தானியேல் நிறுத்தவில்லை. அதனால் அவரை என்ன செய்தார்கள் தெரியுமா?—

அந்தக் கெட்ட ஜனங்கள், சிங்கங்கள் இருந்த குகையில் தானியேலை தூக்கியெறிந்தார்கள். அங்கே சிங்கங்கள் பசியோடு உறுமிக்கொண்டு இருந்தன. தானியேல் அவற்றிடம் தனியாக மாட்டிக்கொண்டார். அப்போது என்ன நடந்தது தெரியுமா?— ‘கடவுள் தன் தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார்’ என்று தானியேல் சொன்னார். அவரை சிங்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை. ஆமாம், யெகோவாவை சேவிப்பவர்களுக்கு தேவதூதர்கள் அற்புதமான விதத்தில் உதவிகளை செய்ய முடியும்.—தானியேல் 6:18-22.

An angel keeps the lions away from Daniel

கடவுள் தானியேலை எப்படிக் காப்பாற்றினார்?

இன்னொரு சந்தர்ப்பத்தில், பேதுரு ஜெயிலில் இருந்தார். பெரிய போதகரான இயேசு கிறிஸ்துவின் நண்பர்தான் பேதுரு என்பது உனக்கு ஞாபகம் இருக்கும். இயேசு கடவுளுடைய மகன் என்று பேதுரு சொன்னது சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆகவே அவரை ஜெயிலில் போட்டார்கள். பேதுரு தப்பித்துப் போகாதபடி காவலாளிகள் காவல் காத்து வந்தார்கள். அவருக்கு உதவி செய்ய யாராவது இருந்தார்களா?—

இரண்டு காவலாளிகளின் நடுவில் பேதுரு தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? பைபிள் இப்படி சொல்கிறது: ‘இதோ! யெகோவாவின் தூதர் வந்தார். அப்போது ஜெயிலில் ஒரு வெளிச்சம் உண்டானது. அவர் பேதுருவை தொட்டு, எழுப்பினார். “சீக்கிரமாக எழுந்திரு!” என்று கூறினார்.’

Peter is between two soldiers, an angel wakes him, and the chains fall off his hands

ஜெயிலிலிருந்து வெளியே வர பேதுருவுக்கு ஒரு தேவதூதர் எப்படி உதவினார்?

உடனே அவரது கைகளிலிருந்து சங்கிலிகள் தானாக கழன்று விழுந்தன! ‘உன் சட்டையையும் செருப்பையும் போட்டுக்கொண்டு, என் பின்னால் வா’ என்று தூதர் அவரிடம் சொன்னார். தேவதூதர் பேதுருவுக்கு உதவி செய்ததால் காவலாளிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதன் பிறகு ஒரு இரும்புக் கதவருகே வந்தார்கள். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் கதவு தானாகவே திறந்தது! இவ்வாறு அந்தத் தூதர் பேதுருவை ஜெயிலிலிருந்து விடுவித்தார். அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்வதற்காக அவ்வாறு விடுவித்தார்.—அப்போஸ்தலர் 12:3-11.

கடவுளுடைய தூதர்கள் நமக்கும் உதவி செய்ய முடியுமா?— ஆம், முடியும். அப்படியென்றால் நமக்கு எந்த தீங்குமே வராதபடி அவர்கள் பார்த்துக்கொள்வார்களா?— இல்லை, நாம் முட்டாள்தனமாக நடந்துகொள்கையில் தீங்கு வராதபடி தேவதூதர்கள் நம்மை காப்பதில்லை. சிலசமயம் நாம் முட்டாள்தனமாக நடக்காவிட்டாலும் தீங்கு வரலாம். இதைத் தடுக்கும்படி தேவதூதர்களுக்கு கட்டளை கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறொரு விசேஷ வேலையை கடவுள் கொடுத்திருக்கிறார்.

ஒரு தேவதூதர் கடவுளை வணங்கும்படி எல்லா மக்களிடமும் சொல்வதாக பைபிள் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 14:6, 7) அந்தத் தூதர் அதை எப்படி சொல்கிறார்? எல்லாரும் கேட்கும்படி வானத்திலிருந்து கத்திச் சொல்கிறாரா?— இல்லை. பூமியில் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் கடவுளைப் பற்றி ஜனங்களிடம் பேசும்போது தேவதூதர்கள் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள உண்மையிலேயே ஆசைப்படும் ஆட்களை சந்திக்கும்படி தேவதூதர்கள் அவர்களை வழிநடத்துகிறார்கள். நாமும் அந்த பிரசங்க வேலையில் கலந்துகொள்ளலாம். அப்போது தேவதூதர்கள் நமக்கும் உதவுவார்கள்.

ஆனால் கடவுளை விரும்பாத மக்கள் நமக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன செய்வது? அவர்கள் நம்மை ஜெயிலில் போட்டுவிட்டால்? அப்போது தேவதூதர்கள் நம்மை காப்பாற்றுவார்களா?— அவர்களால் காப்பாற்ற முடியும். ஆனால் எப்போதுமே அவர்கள் அப்படி காப்பாற்றுவதில்லை.

An angel appears to Paul on a boat during a storm

பவுலிடம் ஒரு தேவதூதர் என்ன சொல்கிறார்?

இயேசுவின் நண்பரான பவுல் ஒரு முறை கைதியாக இருந்தார். அவர் கப்பலில் சென்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர புயல் காற்று வீசியது. ஆனால் தேவதூதர்கள் அவரை உடனே விடுவிக்கவில்லை. ஏனென்றால் கடவுளைப் பற்றி இன்னும் நிறைய பேர் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆகவே, “பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்க வேண்டும்” என்று ஒரு தூதர் சொன்னார். ஆமாம், உலகத்தை ஆட்சி செய்த இராயனிடம் பவுல் கொண்டு போகப்பட்டார். ஏனெனில் இராயனிடம் அவர் பிரசங்கம் செய்ய வேண்டியிருந்தது. பவுல் எங்கே இருந்தார் என்று தேவதூதர்களுக்கு எப்போதும் தெரிந்திருந்தது. அவருக்கு உதவியும் செய்தார்கள். நாமும் கடவுளை உண்மையிலேயே சேவித்தால் நமக்கும் அவர்கள் உதவி செய்வார்கள்.—அப்போஸ்தலர் 27:23-25.

தேவதூதர்கள் இன்னொரு முக்கியமான வேலையை செய்வார்கள். அதுவும் சீக்கிரத்தில் செய்யப் போகிறார்கள். கடவுள் ரொம்ப சீக்கிரத்தில் கெட்டவர்களை அழிக்கப் போகிறார். உண்மையான கடவுளை வணங்காத எல்லாரும் அழிக்கப்படுவார்கள். தேவதூதர்களைப் பார்க்க முடியாது என்பதால் அவர்களை நம்ப மாட்டேன் என்று சொல்கிறவர்கள் அப்போது தங்கள் தவறை உணருவார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8.

அப்போது நமக்கு என்ன நடக்கும்?— கடவுளுடைய தூதர்களின் பக்கமாகவே நாமும் இருந்தால் அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள். ஆனால் நாம் அவர்கள் பக்கமாக இருக்கிறோமா?— யெகோவாவை சேவித்தால் அவர்களது பக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம். அவ்வாறு நாம் யெகோவாவை சேவித்தால், அவரை சேவிக்கும்படி மற்றவர்களிடமும் சொல்வோம்.

தேவதூதர்கள் எப்படி மக்களுக்கு உதவுகிறார்கள் என்று இன்னும் அதிகமாக தெரிந்துகொள்வதற்காக சில வசனங்களை வாசிக்கலாமா? சங்கீதம் 34:7; மத்தேயு 4:11; 18:10; லூக்கா 22:43; அப்போஸ்தலர் 8:26-31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்