உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • bm பகுதி 16 பக். 19
  • மேசியா தோன்றுகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மேசியா தோன்றுகிறார்
  • பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • இதே தகவல்
  • மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • இயேசு கிறிஸ்து யார்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • மேசியா! மீட்புக்கான கடவுளின் வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
பைபிள் ஒரு கண்ணோட்டம்
bm பகுதி 16 பக். 19
இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுக்கிறார்

பகுதி 16

மேசியா தோன்றுகிறார்

நாசரேத் ஊரைச் சேர்ந்த இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என யெகோவா அடையாளம் காட்டுகிறார்

வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவை மக்கள் அடையாளம் காண யெகோவா வழிசெய்தாரா? ஆம், வழிசெய்தார். என்ன செய்தாரெனக் கவனியுங்கள். எபிரெய வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டு ஏறக்குறைய 400 வருடங்கள் உருண்டோடியிருந்த சமயம் அது. கலிலேயா மாகாணத்துக்கு வடக்கே இருந்த நாசரேத் ஊரில் மரியாள் என்ற கன்னிப்பெண் வசித்து வந்தாள். திடீரென ஒருநாள் காபிரியேல் என்ற தேவதூதர் அவளைச் சந்தித்து, கடவுளுடைய சக்தியினால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்று கூறினார். அவர் வாக்குப்பண்ணப்பட்ட அரசராக இருப்பார், நித்தியத்திற்கும் அரசாளுவார் என்றும் அந்தத் தூதர் கூறினார். இயேசுவின் உயிர் விண்ணுலகிலிருந்து மரியாளின் கருப்பைக்கு மாற்றப்பட்டாலும் அவர் கடவுளுடைய மகனாகவே இருப்பார்.

இந்த அரும்பெரும் பாக்கியத்தை மரியாள் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டாள். மரியாள் கர்ப்பமான விதத்தை தேவதூதர் மூலம் தெரிந்துகொண்ட பிறகே அவளுடைய வருங்கால கணவர் யோசேப்பு (தச்சன்) அவளை மணம் செய்துகொண்டார். ஆனால், பெத்லகேமில் மேசியா பிறப்பார் என்ற தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்? (மீகா 5:2) அந்தச் சிறிய ஊர் நாசரேத்திலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது!

அந்தச் சமயத்தில் மக்கள்தொகையைக் கணக்கெடுக்க ரோம ஆட்சியாளர் ஆணை பிறப்பித்தார். அதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த ஊருக்குச் சென்று பெயர்ப்பதிவு செய்ய வேண்டியிருந்தது. யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் பிறந்தவர்கள். அதனால், கர்ப்பமாயிருந்த தன் மனைவியை அழைத்துக்கொண்டு யோசேப்பு அங்கு சென்றார். (லூக்கா 2:3) ஒரு மாட்டுத் தொழுவத்தில் மரியாள் தன் குழந்தையைப் பெற்றெடுத்து அதைத் தீவனத் தொட்டியில் கிடத்தினாள். இந்தக் குழந்தைதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை மலையருகே ஆடுகளைக் காவல் காத்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களிடம் தெரிவிக்க ஏராளமான தூதர்களைக் கடவுள் அனுப்பினார்.

பிற்பாடு, இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதற்கு மற்றவர்களும்கூட சான்றளித்தார்கள். மேசியா செய்யப்போகும் மிக முக்கியமான வேலைக்கு வழியைத் தயார்ப்படுத்த ஒருவர் தோன்றுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னரே சொல்லியிருந்தார். (ஏசாயா 40:3) அவர்தான் யோவான் ஸ்நானகர். அவர் இயேசுவைக் கண்டபோது, “இதோ, உலகத்தின் பாவத்தைப் போக்குவதற்குக் கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!” என்று உணர்ச்சிபொங்க கூறினார். யோவானுடைய சீடர்களில் சிலர் உடனடியாக இயேசுவைப் பின்பற்றினார்கள். அவர்களில் ஒருவர், “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்” என்று பரவசத்துடன் சொன்னார்.—யோவான் 1:29, 36, 41.

இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்க வேறு சான்றுகளும் இருந்தன. இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது விண்ணுலகிலிருந்து யெகோவாவே குரல் கொடுத்தார். தமது சக்தியினால் இயேசுவை மேசியாவாக நியமித்து, “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என்று சொன்னார். (மத்தேயு 3:16, 17) ஆம், வெகு காலத்திற்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தோன்றிவிட்டார்!

இது எப்போது சம்பவித்தது? கி.பி. 29-ல், ஆம், தானியேல் முன்னுரைத்தபடியே சரியாக 483 வருடங்களுக்குப்பின் சம்பவித்தது! இயேசுதான் மேசியா, அதாவது கிறிஸ்து, என்பதற்கான எண்ணற்ற ஆதாரங்களில் இதுவும் ஒன்று. ஆனால், அவர் பூமியில் இருந்தபோது என்ன செய்தியை அறிவித்தார்?

—ஆதாரம்: மத்தேயு 1–3 அதிகாரங்கள்; மாற்கு அதிகாரம் 1; லூக்கா அதிகாரம் 2; யோவான் அதிகாரம் 1.

  • இயேசுதான் மேசியா என்பதை அடையாளம் காட்ட தூதர்களை யெகோவா எவ்வாறு உபயோகித்தார்?

  • இயேசுதான் மேசியா என்பதைச் சுட்டிக்காட்ட யோவான் ஸ்நானகரை யெகோவா எவ்வாறு உபயோகித்தார்?

  • மேசியாதான் தம்முடைய மகன் என்பதை யெகோவாவே எவ்வாறு அடையாளம் காட்டினார்?

கடவுளுடைய மகன்—என்ன அர்த்தத்தில்?

யெகோவாதான் இயேசுவின் தந்தை; ஆனால், சாதாரண மனிதர்களைப் போல் தாம்பத்திய உறவு முறையில் இயேசு பிறக்கவில்லை, மாறாக கடவுளே அவரை நேரடியாகப் படைத்தார். பார்க்கப்போனால், யெகோவாவின் முதல் படைப்பே அவர்தான். (கொலோசெயர் 1:15-17) யெகோவாவே இயேசுவைப் படைத்து அவருக்கு உயிர் கொடுத்ததால், அவரை இயேசுவின் தந்தை என்று சொல்லலாம். விண்ணுலகில் யெகோவா தமது மகனைப் படைத்தபின் அவரை ‘சிற்பியாக’ உபயோகித்து இந்த அண்டசராசரத்தையும் படைத்தார்.—நீதிமொழிகள் 8:30, பொ.மொ.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்