அதிகாரம் 54
இயேசு—“வாழ்வு தரும் உணவு”
இயேசுதான் ‘பரலோகத்திலிருந்து வந்த உணவு’
கலிலேயா கடலின் கிழக்குக் கரையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இயேசு அற்புதமாக உணவளித்தார். அந்த மக்கள் அவரை ராஜாவாக்க நினைத்தபோது அவர்களிடமிருந்து தப்பித்துப் போனார். அன்று ராத்திரி, புயல் வீசிக்கொண்டிருந்த கடல்மேல் இயேசு நடந்தார். பேதுருவும்கூட கடல்மேல் நடந்தார். அவருடைய விசுவாசம் ஆட்டம்கண்டபோது அவர் மூழ்க ஆரம்பித்தார்; உடனே இயேசு அவரைக் காப்பாற்றினார். புயல்காற்றை அடக்கி, சீஷர்களின் உயிரையும் காப்பாற்றினார்.
இதெல்லாம் முடிந்த பிறகு, கலிலேயா கடலின் மேற்கே இருக்கிற கப்பர்நகூமுக்கு இயேசு வருகிறார். அவர் அற்புதமாகக் கொடுத்த உணவைச் சாப்பிட்டவர்கள் அவரைத் தேடி வருகிறார்கள். இயேசுவைப் பார்த்ததும், “எப்போது இங்கே வந்தீர்கள்?” என்று கேட்கிறார்கள். மறுபடியும் உணவு சாப்பிடுகிற ஆசையில்தான் அவர்கள் தன்னைத் தேடி வந்திருப்பதாகச் சொல்லி இயேசு அவர்களைக் கண்டிக்கிறார். அதோடு, “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்” என்றும் சொல்கிறார். அப்போது அவர்கள், “கடவுள் எங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்கிறார்கள்.—யோவான் 6:25-28.
திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற எந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்காக அவர்கள் அப்படிக் கேட்டிருக்கலாம். ஆனால், அவற்றைவிட மிக முக்கியமான ஒன்றைப் பற்றி இயேசு சொல்கிறார். “கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு, அவரால் அனுப்பப்பட்டவர்மேல் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும்” என்று சொல்கிறார். இயேசு இவ்வளவு காரியங்களைச் செய்திருந்தாலும், மக்கள் அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை. அவரை நம்புவதற்கு ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் காட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். “என்ன செயலைச் செய்யப்போகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கிறார்கள். “வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே, ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொல்கிறார்கள்.—யோவான் 6:29-31; சங்கீதம் 78:24.
அவர்கள் அடையாளம் கேட்டதால், மக்களுக்குத் தேவையானதை அற்புதமாகக் கொடுக்கிற சக்தி யாருக்கு இருக்கிறது என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். “மோசே உங்களுக்குப் பரலோகத்திலிருந்து உணவைத் தரவில்லை, என்னுடைய தகப்பன்தான் பரலோகத்திலிருந்து உண்மையான உணவை உங்களுக்குத் தருகிறார். கடவுள் தருகிற உணவு பரலோகத்திலிருந்து வந்து, உலகத்துக்கு வாழ்வு தருகிறது” என்று அவர் சொல்கிறார். அவர்களோ இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ளாமல், “எஜமானே, அந்த உணவையே எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்” என்று சொல்கிறார்கள். (யோவான் 6:32-34) இயேசு எந்த “உணவை” பற்றி இங்கே பேசுகிறார்?
“வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது, என்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்குத் தாகமே எடுக்காது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள். . . . என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். அவர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவர்கள் எல்லாரையும் நான் உயிரோடு எழுப்ப வேண்டும் என்பது என்னை அனுப்பியவருடைய விருப்பம். அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும் . . . என் தகப்பனின் விருப்பம்” என்று விளக்குகிறார்.—யோவான் 6:35-40.
இதைக் கேட்டதும் அங்கே சலசலப்பு ஏற்படுகிறது. “‘பரலோகத்திலிருந்து வந்த உணவு நான்தான்’ என்று இவன் எப்படி சொல்லலாம்?” என்று யூதர்கள் முணுமுணுக்கிறார்கள். (யோவான் 6:41) அவர்களைப் பொறுத்தவரை, அவர் கலிலேயாவில் இருக்கிற நாசரேத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன், அவ்வளவுதான்! அதனால், “இவன் யோசேப்பின் மகன் இயேசுதானே? இவனுடைய அப்பாவும் அம்மாவும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே?” என்று பேசிக்கொள்கிறார்கள்.—யோவான் 6:42.
அப்போது இயேசு, “ஒருவருக்கொருவர் முணுமுணுப்பதை நிறுத்துங்கள். என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் அவன் என்னிடம் வர முடியாது; கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்புவேன். ‘அவர்கள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்’ என்று தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. தகப்பனிடமிருந்து கேட்டுக் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். அதற்காக, தகப்பனை எந்த மனுஷனாவது பார்த்திருக்கிறான் என்று அர்த்தமாகாது, தகப்பனாகிய கடவுளிடமிருந்து வந்தவர் மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறார். உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று சொல்கிறார்.—யோவான் 6:43-47; ஏசாயா 54:13.
இதற்கு முன்பு நிக்கொதேமுவிடம் பேசியபோது, முடிவில்லாத வாழ்வைப் பற்றி இயேசு குறிப்பிட்டிருந்தார். அதைப் பெறுவதற்கு மனிதகுமாரன்மேல் விசுவாசம் வைக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். ‘கடவுளின் ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்’ என்று அவரிடம் சொல்லியிருந்தார். (யோவான் 3:15, 16) இப்போது ஒரு பெரிய கூட்டத்திடம் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதில், தனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று அவர்களிடம் சொல்கிறார். அந்த வாழ்வை மன்னாவோ, கலிலேயாவில் சாதாரணமாகக் கிடைக்கிற ரொட்டியோ தர முடியாது. அப்படியென்றால், முடிவில்லாத வாழ்வைப் பெற என்ன செய்ய வேண்டும்? “வாழ்வு தரும் உணவு நான்தான்” என்று இயேசு மறுபடியும் சொல்கிறார்.—யோவான் 6:48.
பரலோகத்திலிருந்து வந்த உணவைப் பற்றிய பேச்சு இதற்குப் பிறகும் தொடர்கிறது. கப்பர்நகூமில் இருக்கிற ஒரு ஜெபக்கூடத்தில் இயேசு கற்பிக்கும்போது, இது உச்சக்கட்டத்தை எட்டுகிறது.