இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
வாக்களிக்கப்பட்ட பிள்ளை
நாசரேத்துக்கு திரும்பிப் போவதற்கு பதிலாக யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே தங்கிவிடுகின்றனர். இயேசு எட்டு நாள் குழந்தையாக இருந்தபோது, மோசேக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டத்திற்கு இணங்க அவருக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. ஒரு பாலகனுக்கு அந்த எட்டாம் நாளிலே பெயர் வைப்பதும் ஒரு பழக்கமாக இருந்துவந்தது. எனவே காபிரியேல் தூதன் ஏற்கனவே சொல்லியிருந்தபடி அந்தக் குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுகிறார்கள்.
ஒரு மாதம் கடந்து விடுகிறது, இயேசு 40 நாள் குழந்தை. இந்த சமயத்தில் அவருடைய பெற்றோர் அவரை எங்கே கொண்டு செல்கிறார்கள்? அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு சில மைல்கள் தூரத்தில் மட்டுமே இருந்த எருசலேம் ஆலயத்திற்குப் போகிறார்கள். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு மகனைப் பெற்றெடுத்து 40 நாட்களுக்குப் பின்பு அந்தத் தாய் ஆலயத்திற்குச் சென்று ஒரு சுத்திகரிப்பு பலியை செலுத்த வேண்டும்.
அதைத்தான் மரியாள் செய்கிறாள். ஆனால் அவள் இரண்டு சிறிய பறவைகளை பலிக்காகக் கொண்டுவருகிறாள். இது யோசேப்பு மரியாளின் பொருளாதார நிலையை ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறது. மோசேயின் நியாயப்பிரமாணம், பறவைகளைவிட அதிக மதிப்புவாய்ந்த ஒரு ஆட்டுக்குட்டியை பலிசெலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இதற்கு சக்தியற்றவளாக இருந்தால், இரண்டு காட்டுப் புறாக்கள் அல்லது புறாக்குஞ்சுகள் போதுமானது.
ஆலயத்தில் வயதான ஒருவர் இயேசுவைத் தன் கரங்களில் தூக்குகிறார். அவருடைய பெயர்தான் சிமியோன். யெகோவா வாக்களித்த கிறிஸ்து, அல்லது மேசியாவைக் காண்பதற்கு முன்பு தான் மரிப்பதில்லை என்று கடவுள் சிமியோனுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் குறிப்பிட்ட நாளில் சிமியோன் தேவாலயத்திற்கு வந்தபோது, யோசேப்பும் மரியாளும் ஏந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையினிடமாக அவர் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்.
சிமியோன் இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவராய்க் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்: ‘நீர் உம்முடைய வாக்குறுதியைக் காத்துக் கொண்டீர், ஏனென்றால் நீர் ஆயத்தப்படுத்தின இரட்சிப்பிற்குரிய வழியை என்னுடைய சொந்த கண்கள் கண்டன.’ இதைக் கேட்ட யோசேப்பும் மரியளும் ஆச்சரியப்பட்டார்கள். பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து மரியாளிடம், “இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும் . . . இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்,” என்றும் துயரம் ஒரு கூர்மையான பட்டயம் போல அவளுடைய ஆத்துமாவை உருவிப்போகும் என்றார்.
இந்த சம்பவத்தின்போது 84 வயது தீர்க்கதரிசினியாகிய அன்னாளும் அங்கே இருந்தாள். ஆம், அவள் தேவாலயத்தைவிட்டு வேறு எங்கும் போகாதவள். அந்த நேரத்திலே அவள் அருகாமையில் வந்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, செவிகொடுக்கும் யாவரிடமும் இயேசுவைக் குறித்து பேசுகிறாள்.
தேவாலயத்திலே நடந்த இந்த சம்பவங்கள் யோசேப்பையும் மரியாளையும் எந்தளவுக்கு மகிழ்வித்திருக்கும்! நிச்சயமாகவே அந்தக் குழந்தை கடவுளால் வாக்களிக்கப்பட்டவர் என்பதைத்தான் இது உறுதிபடுத்துகிறது. லூக்கா 2:21-38; லேவியராகமம் 12:1-8.
◆ ஓர் இஸ்ரவேல் பாலகனுக்கு எப்பொழுது பெயரிடுவது வழக்கமாக இருந்தது?
◆ தான் பெற்றெடுத்த மகன் 40 நாள் குழந்தையாக இருக்கும்போது ஒரு இஸ்ரவேல் தாயிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது என்ன? இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்ட காரியம் எப்படி மரியாளின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தினது?
◆ இந்தச் சம்பவத்தின்போது யார் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டது? எப்படி? (w85 6/15)