வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ ஆளும் குழுவின் பாகமாக இருந்தாரா?
பவுல் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ ஆளும் குழுவின் பாகமாக இருந்தார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
ஆளும் குழுவில் யார் யார் இருந்தனர் என்பதன் பேரில் பைபிள் ஓரளவு விவரத்தைதான் கொடுக்கிறது. இவற்றில் பல அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. பொ.ச. 49-ல் ஆளும் குழுவின் தொகுதியில் “அப்போஸ்தலரும் மூப்பரும்” இருந்தனர் என்று அந்தப் பதிவு காண்பிக்கிறது. இவர்கள் யார்?—அப்போஸ்தலர் 15:2, 4, 6.
கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய புறஜாதியார் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியைக் கலந்தாலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கூட்டத்தை இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு நடத்தினான். அந்தக் கலந்தாலோசிப்பில் அப்போஸ்தலனாகிய பேதுருவும் கலந்துகொண்டான். (பர்சபா என்றழைக்கப்பட்ட) யூதாவும் சீலாவும் “சகோதரரில் விசேஷித்தவர்கள்” என்று பதிவு காண்பிக்கிறது, ஆனால் அவர்கள் ஆளும் குழுவின் பாகமாக இருந்தார்கள் என்பதை திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. (அப்போஸ்தலர் 15:7, 13, 22) குறிப்பு என்னவெனில், ஆளும் குழுவின் ஓரு முழு அங்கத்தினர் பட்டியலை பைபிள் கொடுப்பதில்லை. பவுல் ஒரு பயண மிஷினரியாக இருந்ததாலும் சிரியாவிலுள்ள அந்தியோகியா சபையிலிருந்து அந்தக் கேள்வியைக் கொண்டு வந்ததாலும் ஆளும் குழுவின் அங்கத்தினராக இருந்திருக்க முடியாது என்று சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இயேசுவோடு பூமியில் நடந்த அந்தப் “பன்னிருவரில்” ஒருவனாக பவுல் இல்லை என்பது உண்மைதான், ஏனென்றால் யூதாஸ் காரியோத்தின் இடத்தில் மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டான்.a ஆனால் சீஷனாகிய யாக்கோபு, ஆளும் குழுவின் பாகமாக இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறது. என்றாலும் “பன்னிருவரில்” ஒருவன் அல்லவே. (அப்போஸ்தலர் 6:2; 1:15-26) மேலுமாக, இயேசு பவுலுக்குத் தோன்றி ‘புறஜாதிகளுக்குத் தம்முடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக தாம் தெரிந்துகொண்ட பாத்திரமாக’ அவனை நியமித்தார். இப்படியாக, பவுல், “மனுஷராலுமல்ல, மனுஷர் மூலமாயுமல்ல, இயேசு கிறிஸ்துவினாலும் . . . தேவனாலும் அப்போஸ்தலன்” ஆனான். “புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலன்” என்று அவன் தன்னைக் குறிப்பிட்டான்.—அப்போஸ்தலர் 9:3-6, 15; கலாத்தியர் 1:1; ரோமர் 11:13; 1 கொரிந்தியர் 9:1; 15:7, 8.
சபைகளை வழிநடத்திய “அப்போஸ்தலரும் மூப்பரும்” அடங்கிய தொகுதியின் பாகமாக பவுல் இருந்தான் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சிக்கு கடவுளுடைய வல்லமையால் அவன் என்ன செய்தான் என்பதைக் கவனியுங்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 14 புத்தகங்களை அவன் எழுதினான். “நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலின்” எழுத்துக்களை பேதுரு, “மற்ற வேத வாக்கியங்களோடு” இணைத்துப் பேசுகிறான். (2 பேதுரு 3:15, 16) கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் பவுல் குறிப்பிடத்தக்க அளவுக்கு முதன்மை நிலை வகித்தான், மற்றும் சபைகளுக்கு ஏராளமான வழிநடத்துதலைக் கொடுத்தான். சில சமயங்களில் பிரச்னைகளை தானே நேரடியாகத் தீர்த்து வைத்தான் என்று பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அவனுடைய வேத எழுத்துக்கள் காண்பிக்கின்றன. அதாவது, மத்திய குழு இருக்கும் இடத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கும் ஆளும் குழுவின் ஒரு அங்கத்தினனாக, துரிதமான தொடர்பு முறைகள் இல்லா அந்த நாட்களில் அவனிடமிருந்து அதைத்தான் எதிர்பார்க்கக்கூடும். (1 கொரிந்தியர் 5:11-13; 7:10, 17) ஆனால் மற்ற சமயங்களிலோ காரியங்களை முழு தொகுதியின் கவனத்திற்கும் கொண்டு வந்தான். இதை அப்போஸ்தலர் 15-லுள்ள பதிவு எடுத்துக் காட்டுகிறது.
“தேவனுடைய ஊழியக்காரனும் இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல்” தீத்துவுக்கு எழுதினதாவது: “நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள் தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும் உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டு வந்தேன்.” (தீத்து 1:1, 5) எனவே பயணம் செய்யும்போது மத்திய ஆளும் குழுவுக்காகவே பவுல் பேசினான் என்பது நிச்சயம்.—அப்போஸ்தலர் 16:4, 5)
ஆக, கர்த்தரிடமிருந்து தான் பெற்ற ஊழிய நியமிப்பு அதிகமான பயணத்தை உட்படுத்தியபோதிலும், மத்திய ஆளும் குழுவின் சில கூட்டங்களைத் தவறவிடுவதை உட்படுத்திய போதிலும், அவன் கடவுளாலும் கிறிஸ்துவாலும் எப்படி பயன்படுத்தப்பட்டு வந்தான் என்ற அத்தாட்சி, பவுல் ஆளும் குழுவின் ஒரு பாகமாயிருந்தான் என்பதைத் தெளிவாக காண்பிக்கிறது. (w85 12/1)
[அடிக்குறிப்புகள்]
a இந்த சமயத்திற்குள்ளாக அப்போஸ்தலனாகிய யாக்கோபு கொல்லப்பட்டான்.—அப்போஸ்தலர் 12:2.