திருவெளிப்பாட்டின் மிருகங்கள்—அவற்றைக்குறித்து நாம் ஏன் வாசிக்க வேண்டும்?
திருவெளிப்பாடு! பைபிளின் கடைசிப் புத்தகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்தைக் கவரும் பெயர்களில் இதுவும் ஒன்று. அது வெளிப்படுத்தின விசேஷம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அந்தப் புத்தகம் தெளிவான வார்த்தைகளடங்கிய வர்ணனைகளை கொண்டிருக்கிறது. அவற்றில் மேலெழும்பி நிற்கும் ஒரு வர்ணனை வலுசர்ப்பத்தைப் பற்றியதும் மற்றும் மூன்று மிருகங்களைப் பற்றியதாகும். சிலர் இந்த மிருகங்களை அச்சமூட்டுவதாக காண்கின்றனர். வேறு சிலர் அதை ஒரு கிழவனின் கற்பனையாக ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர். அப்படியானால் அந்தத் திருவெளிப்பாட்டின் மிருகங்களைப்பற்றி நீங்கள் ஏன் வாசிக்க வேண்டும்? ஏனெனில் உங்கள் சந்தோஷம் இதில் உட்பட்டிருக்கிறது.
சுமார் 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதும்போது அப்போஸ்தலனாகிய யோவான் கிழவன்தான். அப்படியானால் “அது விவரிக்கக்கூடிய அந்த மிருகம், முதுமையினால் தளர்வுற்ற ஒரு மனிதனின் கற்பனைக் கனவாக இருக்குமா? இல்லை, இப்படிப்பட்ட காட்சிகளைக் கொண்டிருந்த வயதுசென்ற ஆட்களில் யோவான் தானே முதலானவன் அல்ல. தானியேல் என்ற பெயருள்ள மனிதனுங்கூட தனது முதிர்வயதிலே மிருகங்களைப்பற்றிய காட்சியை கண்டான். இந்தக் காட்சிகள் மனித அரசாங்கங்களின் மாற்றங்களைப்பற்றிய திருத்தமான தீர்க்கதரிசனங்களாக நிரூபித்தன. (தானியேல் அதிகாரங்கள் 7, 8) கூடுதலாக இயேசு கிறிஸ்து தாமே தானியேலை தெய்வீக ஏவுதல் பெற்றவனாக நேசிக்கிறார். அவனை தீர்க்கதரிசியாக அழைத்து அவனுடைய எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டினார்.—மத்தேயு 24:15.
தன்னுடைய மரணத்துக்குப் பிற்பாடு கூடுதலான தெய்வீக போதனைகளை தம்முடைய அப்போஸ்தலர்கள் பெறுவார்கள் என்று இயேசு சுட்டிக் காட்டினார். (யோவான் 16:12, 13) மேலும் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் அநேக அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றமடைந்திருப்பதன் காரணமாக, அந்தத் திருவெளிப்பாடு புத்தகத்திலுள்ள அப்போஸ்தலனாகிய யோவானின் மிருகங்களைப்பற்றிய காட்சிகளுங்கூட கடவுளுடைய பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவை என்பதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்.—2 தீமோத்தேயு 3:16.
வெளிப்படுத்துதல் புத்தகத்தின் ஆரம்ப வார்த்தைகள் சொல்வதாவது: “ . . . தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும் இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு [அடையாளங்களால், NW] வெளிப்படுத்தினதுமான விசேஷம்.” (வெளிப்படுத்தின விசேஷம் 1:1) எனவே, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டுகள், அது சொல்லக்கூடிய மிருகங்களுங்கூட சொல்லர்த்தமானவை அல்ல, அவை அடையாள அர்த்தங்களையுடையது. அவற்றைக் குறித்து வாசிக்கும்போது பயப்படவேண்டிய அவசியமில்லை. இந்த அடையாள அர்த்தமுடைய மிருகங்கள் கிறிஸ்தவர்களுக்கு அத்தியாவசியமான அறிவை அருளுகின்றன. அவர்கள் கடவுளுடன் தங்களுடைய உறவை தற்காத்துக் கொள்வதற்கு உதவுகின்றன. இதன் காரணமாகவே அப்போஸ்தலனாகிய யோவான் பின்வருமாறு எழுத முடிந்தது: “இந்த தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், [சந்தோஷமுள்ளவர்கள், NW] காலம் சமீபமாயிருக்கிறது.” ஆம், அடையாள அர்த்தமுடைய எடுத்துக்காட்டுகளை நீங்கள் புரிந்துகொள்வதானது இப்பொழுதும் எதிர்காலத்திலும் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொண்டுவரக்கூடும்.—வெளிப்படுத்துதல் 1:3. (w86 2/1)