சத்தியத்தின் தேவனை சேவிப்பதில் உத்தமமாயிருத்தல்
“யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்.”—சங்கீதம் 86:11.
1, 2. (எ) மனிதவர்க்கத்துக்கு கடவுளுடைய ஏற்பாடுகள் எவ்விதமாக விளக்கப்படலாம்? (பி) வேதாகமம் எவ்விதமாக கடவுளின் கைவேலைப்பாட்டையும் மனிதனின் ஏறுமாறான போக்கையும் விவரிக்கிறது?
எந்தவித ஜீவனுமே இல்லாத ஒரு வறண்ட பாலைவனத்தில் நீங்கள் நடந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். திடீரென்று வழியில் ஒரு அழகிய வீட்டை நீங்கள் பார்க்கிறீர்கள். வீடு காற்றுக்கட்டுப்பாடு (Air conditioned) செய்யப்பட்டிருக்கிறது. அங்கு சூடாக்குவதற்கு வசதியும், குழாய் மற்றும் மின் வசதியும் இருக்கின்றன. அதனுடைய குளிர்காப்புப் பெட்டியிலும் நிலையடுக்கிலும் நிறைய உணவு இருக்கிறது. விட்டினுடைய கீழ் அறையில் எரிபொருளும் தேவையான மற்ற பொருட்களும் ஏராளமாக இருக்கின்றன. இவை அனைத்தும் அங்கு தற்செயலாக வந்திருக்கும் என்பதாக நீங்கள் சொல்வீர்களா? வீட்டின் சொந்தக் காரர், உங்களை அங்கு தங்கி அதை அனுபவிக்கும்படியாகச் சொன்னால் நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்களா?
2 ஆம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அழகிய பூமி, அந்த வீட்டைப் போலவே இருக்கிறது. மனிதனை சிருஷ்டிப்பதற்கு நீண்ட காலத்துக்கு முன்பாகவே, நம்முடைய அன்புள்ள கடவுள் இந்த பூமியை நமக்கு வீடாக ஆவதற்காக அதை தயார் செய்தார். நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக்குவதற்கு நமக்கு தேவையாக இருக்கும் அனைத்தையும் அவர் நமக்கு கொடுத்தார். (ஏசாயா 45:12, 18) தாராள குணமுள்ள இந்த பாராமரிப்பாளருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டாமா? எபிரெயர் 3:4-லுள்ள பைபிளின் வார்த்தைகளை எழுதும்படியாக ஏவியவரும் அவரே: “எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” சுயநல மனிதர்கள் பூமியின் மீது கடவுளுடைய கைவேலைப்பாட்டை நாசம் செய்து அதை கெடுத்துவிட்டிருப்பது வெட்கக் கேடான செயலாக இருக்கிறது.—உபாகமம் 32:3-5.
3. இப்பொழுதும் எதிர்காலத்துக்கும் யெகோவாவின் தாராள குணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
3 சத்தியத்தை எதிர்ப்பவர்களிடமும்கூட கடவுளைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுலால் பின்வருமாறு சொல்ல முடிந்தது: “அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை.” (அப்போஸ்தலர் 14:17) உத்தமமாகத் தம்மை சேவிக்கிறவர்களை யெகோவா இன்னும் எவ்வளவு அதிகமாக ஆசீர்வதிக்க முடியும்! இந்த கடைசி நாட்களின் துன்பங்களும் தொல்லைகளும் நம்மை நெருக்கினாலும் அருகாமையிலுள்ள எதிர்காலத்தில் கர்த்தராகிய ஆண்டவர் யெகோவா, தம்மை நேசிக்கிறவர்களுக்கு மகிழ்வூட்டும் ஒரு அசல் விருந்தை நிச்சயமாகவே அளித்து, எல்லாருடைய முகங்களிலுமிருந்தும் கண்ணீரைத் துடைப்பார் என்ற மகத்தான நம்பிக்கை நமக்கிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1; ஏசாயா 25:6-8.
மனித அறிவாற்றலின் அற்புதம்
4. (எ) என்ன இரண்டக நிலையை கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் எதிர்படுகிறார்கள்? (பி) மனித மூளையை உண்டாக்கினவரைக் குறித்து எரேமியா 33:2, 3 என்ன சொல்லுகிறது?
4 பல ஆண்டுகளாக, உண்மையாகவே சிந்திக்கும் கம்ப்யூட்டர்களை உண்டுபண்ண விஞ்ஞானிகள் முயற்சித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதோ முதல் படியிலேயே அவர்களுக்கு தடைகள் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஏன் அப்படி? ஆம், மனித கண்களின் அமைப்பையே அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களால் கண்ணைப் பார்த்து, அது போன்ற ஒன்றை செய்ய முடியாதபோது, மூளையை அவர்கள் எவ்விதமாக செய்ய ஆரம்பிக்கலாம்? எக்காலத்திலாவது மனதின் தனித்திறமைகளை அவர்கள் எவ்விதமாக உற்பத்தி செய்யப் போகிறார்கள்? மனித மூளை எத்தனை அற்புதமாக இருக்கிறது! ஒவ்வொரு நொடியும் பிரித்தெடுக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, புத்திக்கூர்மையுடன் வாழ்வதற்காக பொருத்தப்படுவதற்கு லட்சக்கணக்கில் துண்டு துண்டாக தகவல்கள் இந்த உறுப்புக்குள் வந்து கொண்டிருக்கிறது. மிக உயர்தரமான ஒரு கம்ப்யூட்டரும்கூட, இதற்கு ஒப்பாக பக்கத்தில் வந்து நிற்கவும் முடியாது. நம்மை உண்டாக்கின தேவனுடைய தலைச்சிறந்த ஞானத்துக்கு என்ன சிறப்பான அத்தாட்சி! நம்மை உண்டு பண்ணினவரும், உருவாக்கினவருமான யெகோவா தேவன், அவருடைய சொந்த நேரத்திலும் வழியிலும் அவர் நமக்கு வெளிப்படுத்தும் “அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்களை” கற்றுக் கொள்வதற்கு நம்முடைய மூளையை உபயோகிப்பதற்கு புத்திக்கூர்மையை நமக்கு அளித்திருப்பதாக நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.—எரேமியா 33:2, 3.
5. (எ) மனிதர்களில் மாத்திரமே என்ன அற்புதமான வளர்ச்சி காணப்படுகிறது? (பி) எலிகூவின் வார்த்தைகள் எவ்விதமாக பொருத்தமாக இருக்கின்றன?
5 மனித மூளையின் அற்புதம் கருப்பையில் ஆரம்பமாகிவிடுகிறது. மூளை அணுக்கள், கருதரித்தப் பின் மூன்று வாரங்களில் உருவாக ஆரம்பிக்கின்றன. இவை வேகமாக, சில சமயங்களில் ஒரு நிமிடத்தில் 2,50,000 வரையாகவும்கூட பெருகுகின்றன. பிறப்புக்குப் பின்பு, குழந்தையின் மூளை, முதல் வருடத்தில் மூன்று மடங்கு பெரிதாகிறது. குரங்கு உட்பட எந்த மிருகத்தின் மூளையையும்விட மிகவும் அதிகமாக வேறுபட்டிருப்பதை இது காண்பிக்கிறது. சீக்கிரத்தில் மனித குழந்தையால், மொழிகளை பேசவும், காரியங்களின் பேரில் சிந்திக்கவும் தார்மீக பிரச்னைகளையும் ஆவிக்குரிய மதிப்பீடுகளையும் மதித்துணரவும் முடிகிறது. இந்த திறமைகள் எவ்விதமாக பகுத்தறிவில்லாத மிருகங்களிலிருந்து வந்திருக்க முடியும்? பொருத்தமாகவே, நம்முடைய கடவுளையும் நம்மை உண்டாக்கினவரையும் பற்றி எலிகூ இவ்விதமாகச் சொன்னான்: “பூமியின் மிருகங்களைப் பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாயத்துப் பறவைகளைப் பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கினவர் அவரே.”—யோபு 35:10, 11.
6. (எ) மனிதனின் அற்புதமான உடலமைப்புக்கு வேத வசனங்கள் எவ்விதமாக காரணம் காண்பிக்கின்றன? (பி) கடவுளால் கொடுக்கப்பட்ட சக்திகளை நாம் எவ்விதமாக அன்பார்ந்த விதத்தில் பயன்படுத்தக்கூடும்?
6 மனித அறிவாற்றலாகிய இந்த அற்புதம் ஆதியாகமம் 1:27-க்கு இசைவாக இருக்கிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்.” கடவுள் நம்மை உண்டாக்கியிருக்கும் விதத்துக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டாமா? தாவீது நன்றியுள்ளவனாக இருந்தான். அவன் இவ்விதமாக யெகோவாவை துதித்தான்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.” (சங்கீதம் 139:14) அதே காரணத்துக்காக நாம் நம்முடைய தேவனை துதிப்பதில்லையா? மேலுமாக நம்முடைய தேவனிடம், சாத்தான் விட்டிருக்கும் சவாலை எதிர்படுவதில் கடவுளால் கொடுக்கப்பட்ட நம்முடைய மூளைகளையும் சரீரங்களையும் நாம் பயன்படுத்தலாம். உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களாக நாம் யெகோவாவை சேவிக்கலாம்.—நீதிமொழிகள் 27:11.
சத்தியத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்
7, 8. (எ) உண்மைக்கும் ஊக கருத்துக்குமிடையே என்ன வேறுபாடுகள் கவனிக்கப்படுகின்றன? (பி) பரிணாமத்தைக் குறித்து விவரமறிந்த ஆட்கள் இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள்? (சி) பரிணாமத்தை ஏன் விசுவாசத்தோடில்லாமல் ஏமாளித்தனத்தோடே இணைக்க வேண்டும்?
7 சத்தியம் வெற்றி சிறக்க வேண்டும்! உத்தமமான போக்கை தெரிந்து கொள்வதில், நம்முடைய சிறிய திறமைகளை நாம் உபயோகிக்கையில், யெகோவாவை நேசிக்கிறவர்களாகிய நாம் சத்தியத்தை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும். சிருஷ்டிப்பைப் பற்றிய சத்தியம் உறுதிபடுத்தப்பட்டு விட்டது. அது மாற்றமுடியாததாகும். ஆயிரக்கணக்கான வருடங்களின் சோதனைகளிலும் அது நிலைத்து நிற்கிறது. சீக்கிரத்தில் பெரிய பொய்யாகிய பரிணாமக் கோட்பாடு தூக்கி எறியப்பட தயாராக இருக்கிறது. இது நமது கருத்து மட்டுமல்ல. திறந்த மனம் படைத்த விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் இன்னும் மற்ற விவரமறிந்த ஆட்களின் ஒருமனப்பட்ட கருத்தாக இது இருக்கிறது. “டார்வினாலும் மற்றவர்களாலும் அழுத்தமாக அறிவிக்கப்படும் பரிணாம விதிகளுக்கு” மறுப்பு தெரிவிப்பதைக் குறித்து பேசுகையில், தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை, நிலைமையை பின்வருமாறு சுருக்கமாக எடுத்துரைத்தது: “செயற்களம் குழம்பிய நிலையில் இருக்கிறது.” தகவல் தெரிந்த ஒரு விஞ்ஞானி இவ்விதமாக எழுதுகிறார்: “பரிணாமத்துக்கான அத்தாட்சியில் குறைபாடுகள் இருப்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். . . . ஆம் பரிணாமம் வெறுமென ஊகிப்பாகவே இருக்கிறது. ஆகவே பரிணாமத்தை நம்புவது விசுவாசச் செயலாக இருக்கிறது.”
8 ஆனால் பரிணாமத்தை நம்புவது உண்மையில் ஒரு விசுவசாச் செயலாக இருக்கிறதா? அது ஆதாரமற்ற செயல் என்றே நாங்கள் சொல்லுவோம். விசுவாசத்துக்கு உறுதியான அஸ்திபாரம் இருக்கிறது. எபிரெயர் 11:1, அது “காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது” என்பதாகச் சொல்லுகிறது. பைபிள் பதிவு, உண்மைகளை ஆதாரமாக கொண்டிருக்கிறது என்பதற்கும் அதுவே சத்தியம் என்பதற்கும் அத்தாட்சி ஏராளமாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16, 17; ரோமர் 15:4) மறுபட்சத்தில் பரிணாமக் கோட்பாட்டாளர், அதிகதிகமாக காரியங்களை ஆராய்கையில், அவர்கள் அதிகதிகமான முரண்பாடுகளையே கண்டுபிடிக்கிறார்கள், இதை சரியென நிரூபிக்கவே அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.
குரங்கு-மனிதன் வாழ்ந்தானா?
9. குரங்கு மனிதனின் புதைப்படிவங்கள் எத்தனை ஏராளமாக இருக்கின்றன? அவற்றிற்குரிய இடம் எது?
9 மனிதனுக்கும் மனித குரங்குக்கும் இடையிணைப்பாயிருந்ததாக கருதப்படும் இடையினங்களின் புதைப்படிவத்தை தேடி 130 ஆண்டுகளை செலவழித்ததில், பரிணாமக் கோட்பாட்டாளர்கள் பரிதாபமாக ஒரு சில எலும்புகளைத் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள். சயன்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையின் பிரகாரம், “மனித பரிணாமத்தின் சார்பாக நமக்கிருக்கும் அத்தனை அத்தாட்சிகளும் ஒரு சவ பெட்டிக்குள் வைக்கப்பட்டாலும், இன்னும் அதற்குள் மிதமாக இடம் இருக்கும். சந்தேகமில்லாமல் இறுக்கமாக ஆணியடிக்கப்பட்டு மூடப்பட்ட சவப்பெட்டியே அத்தாட்சி என்றழைக்கப்படுகிறவற்றிற்குரிய இடமாக இருக்கிறது!
10. ஓவியனுடைய குரங்கு-மனிதனின் மறுபடைப்பு எத்தனை உண்மையானதாக இருக்கிறது?
10 பரிணாமக் கோட்பாட்டை ஆதரிக்க பயன்படுத்தப்படும் அந்த பத்திரிக்கைப் படங்கள், வெறும் கற்பனையாக, ஒரு சில மண்டையோடு அல்லது கீழ்த்தாடை எலும்பு துண்டுகளை அடிப்படையாக வைத்து வரையப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, 1985, ஆகஸ்ட் 16, தி நியு யார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில், மனிதர்கள் தோன்றுவதற்கு காரணமாக இருந்த முற்காலத்திய உயர்ந்த பால்குடி உயிரின தொகுதியினுடைய ஓவியனின் மறுபடைப்பு” காணப்பட்டது. அதனுடைய தலையும் கைகளும் முடியால் மூடப்பட்டிருந்தது. இது எதிலிருந்து படைக்கப்பட்டது? அதோடு இணைந்து வந்த கட்டுரை இவ்விதமாக குறிப்பிடுகிறது: “50 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டெடுக்கப்பட்ட கீழ்த்தாடையின் பின்பகுதியும் முகப்பு பகுதியின் முறிந்த துண்டுகளிலுமிருந்து” இது வரையப்பட்டது. ஆனால் இது போன்ற இரண்டு முறிந்த துண்டுகளை ஆதாரமாகக் கொண்டு, முழுமையாக தலையும், முடியும் அனைத்துமே உண்மையில் மறுபடியுமாக படைக்கப்பட முடியுமா? ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மனித இன நூலர், இந்த புதைப் படிவங்களை “இருண்ட பல ஏக்கர் நிலத்தில் ஒளியின் சிறுகுளம்” என்பதாக அழைத்தார். ஆனால் உண்மையில் அதை ஒளிக்கு சமமாக கருத முடியுமா?
11. குரங்கு மனிதர் என்றழைக்கப்பட்டவர்களின் சம்பந்தமாக ஏசாயா 59:15 எவ்விதமாக பொருத்தப்படலாம்?
11 தொல் பழங்காலத்திய மனிதனின் மண்டையோட்டை சிலர் “ஒளியின் சிறுகுளம்” என்பதாக அழைத்தார்கள். பரிணாம மேடையின் மையத்தில் அது 40 வருடங்களாக கவனத்தை பிடித்து வைத்துக் கொண்டிருந்தது. ஆனால் 1953-ல், இது சில மனித மற்றும் சில மிருகத்தினுடைய எலும்பு தொகுதிகளை இணைத்து செய்யப்பட்ட மோசடியாக இருப்பதாக உண்மை வெளிப்பட்டது. இந்த கற்பனை குரங்கு மனிதர்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் இவ்விதமாகச் சொல்லப்படலாம்.: “சத்தியம் தள்ளுபடியாயிற்று.”—ஏசாயா 59:15.
தீர்க்கதரிசன இணை
12. எசேக்கியேல் என்ன அருவருப்பான காரியங்களை பார்த்தான்?
12 இன்றுள்ள தேவபக்தியில்லாத கிறிஸ்தவ மண்டலத்துக்கு, பூர்வ காலங்களின் உண்மையற்ற எருசலேம் முன்நிழலாக இருந்தது. பொ.ச.மு. 612-ம் ஆண்டில்தானே கர்த்தராகிய ஆண்டவர் யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை எருசலேமுக்கு ஒரு காட்சியில் கொண்டு போனார். அங்கே, ஆலயத்தின் உள்வாசலின் நடையிலே, எசேக்கியேல், எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானத்தைக் கண்டான். அடுத்து, யெகோவா அவனை சுவரிலே ஒரு துவாரமிட்டு, அதை பெரிதாக்கும்படியாகச் சொல்லுகிறார். பின்பு அவர் எசேக்கியேலிடம்: “நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார். என்றார். அவன் என்னத்தைப் பார்த்தான்? ஏன், யெகோவாவின் வணக்கத்துக்குரிய வீட்டின் உள்ளே, “சகல வித ஊரும் பிராணிகளும், அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந் தீட்டப்பட்டிருந்தன.”—எசேக்கியேல் 8:1, 7-10.
13. (எ) என்ன இணையான நிலைமை இன்று கிறிஸ்தவ மண்டலத்தில் இருக்கிறது? (பி) பைபிளின் சிருஷ்டிப்பு பதிவை இயேசு எவ்விதமாக கருதினார்?
13 இந்தக் காட்சிக்கு இணையாக, இன்று கிறிஸ்தவ மண்டலத்தின் மதகுருமார்களின் மத்தியில் அதிர்ச்சியூட்டும் ஒரு நிலைமையை நாம் காண்கிறோம். முக்கியமாக இந்த “கேட்டின் மகன்” பைபிளின்சிருஷ்டிப்பு பதிவை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:3) அல்லது எசேக்கியேலின் நாளிலிருந்த அந்த விசுவாச துரோகிகளைப் போல, ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களில் இருப்பவை கட்டுக்கதை அல்லது உருவகக்கதை என்பதாகச் சொல்லி, பரிணாமத்தை பைபிளோடு ஒருங்கிணைக்க மதகுருமார்கள் போராடுகிறார்கள். அநேகமாக, சிக்கலற்ற ஒரு விளக்கமே, உண்மையாக இருக்கிறது என்ற விஞ்ஞான மூதுரையை அசட்டைய செய்து, பைபிள் பதிவு அவர்களுக்கு மிகவும் எளிமையாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இறுமாப்புள்ள அவர்களுடைய அறிவு திறமைக்கு போலிவாதமான மற்றும் சிக்கலான விளக்கம் தேவையாக இருக்கிறது. சொல்லர்த்தமான ஆதியாகமப் பதிவை “சத்தியம்” என்பதாக குறிப்பிட்ட இயேசு கிறிஸ்துவுக்கு மேலாக அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.—யோவான் 17:17; மத்தேயு 19:4-6.
14. “மூப்பர்கள்” இப்பொழுது எவ்விதமாக தங்களுடைய மந்தையை வழிநடத்திச் செல்ல தவறுகிறார்கள்? இதன் விளைவு என்னவாக இருக்கும்?
14 எசேக்கியேல் தனக்கு கிடைத்த தரிசனத்தில் “இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபது பேர்” “ஊரும் பிராணிகளும் அருவருப்பான மிருகங்களும்” பிரதிநிதித்துவம் செய்கிறவற்றிற்கு முன்னால் வணங்கிக் கொண்டிருப்பதை கண்டான். (எசேக்கியேல் 8:10, 11) மிருகங்களிலிருந்து மனிதன் வந்தான் என்பதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நவீன நாளைய மதகுருக்கள், இது போன்ற ஒன்றைத்தானே செய்கிறார்கள். இந்த “மூப்பர்கள்” தங்களுடைய மந்தைகளை சத்தியத்தின் வழியில் நடத்திச் செல்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆனால் மத்தேயு 15:14-ல் இயேசுவின் வருணனை, அவர்களுக்கே பொருந்துகிறதல்லவா? இயேசு சொன்னார்: “அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே’ விழுவார்களே.” பரிணாமக் கோட்பாட்டாளர்கள் கண்மூடிக் கொண்டு துழவிக் கொண்டிருக்கும் “இருண்ட பல ஏக்கர்” நிலத்தில் அவர்கள் இதுபோன்ற ஒரு குழியை கண்டடைய முடியும்.
15. பரிணமத்தை ஆதரிக்கும் மதகுருமார்கள் தாங்கள் “கேட்டின் மகனின்” பாகமாக இருப்பதை நிரூபிக்கும் என்ன கூடுதலான அத்தாட்சியை கொடுக்கிறார்கள்?
15 யெகோவா அடுத்தாக, எசேக்கியேலிடம் இவ்விதமாக கேட்டார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள், அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? ‘யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா தேசத்தைக் கைவிட்டார்’ என்று சொல்லுகிறார்களே.” (எசேக்கியேல் 8:12) மனித தத்துவங்களை ஆதரிக்கும் மதகுருமார்கள், அவர்கள் “கேட்டின் மகனின்” பாகமாக இருக்கிறார்கள் என்பதற்கு அதே போல சான்றளிக்கிறார்கள். அவர்கள், ஆதியாகமம் புத்தகம் உட்பட, கடவுளுடைய சட்டத்தை தள்ளிவிடுகிறார்கள். (அப்போஸ்தலர் 7:53) நிரூபிக்கப்படாத, நிரூபிக்கப்பட முடியாத பரிணாமக் கோட்பாட்டால் விளக்கப்படுகிற விதமாகவே அவர்கள் தங்களுடைய மந்தைகளை, உலகப் பிரகாரமான சிந்தனையின் காரிருளுக்குள் வழிநடத்திச் செல்லுகிறார்கள். அவர்கள் “ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்பு”கிறார்கள்.—யோவான் 3:19.
16. எசேக்கியேலின் நாளிலிருந்த “மூப்பர்களுக்கும்” இன்றைய நாளின் அநேக மதகுருமார்களுக்குமிடையே என்ன ஒப்புவமையை கவனிக்க முடிகிறது?
16 யூத மூப்பர்கள் பொய் வணக்கத்தை எருசலேமிலிருந்த ஆலயத்துக்குள் கொண்டு வந்தது போலவே இன்று பொய் மத தலைவர்கள் “கிறிஸ்தவம்” என்ற அடை மொழிப் பெயரை பற்றிக் கொண்டிருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் பரிணாமத்தை நம்புவது கிறிஸ்தவம் அல்ல. இந்த கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருப்பது, அநேகரை கடவுளிடமிருந்து தூர விலகிப் போகச் செய்திருக்கிறது. நம்முடைய 20-ம் நூற்றாண்டின் சுதந்திரமான போக்குக்கும், வன்முறைக்கும் பயங்கரவாதத்துக்கும் இது பெரும் அளவில் காரணமாக இருந்திருக்கிறது. தேசங்களும் தனி நபர்களும் “வல்லனவற்றின் வாழ்வு வளம்” என்ற பரிணாம விதியை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். மனிதன் சிருஷ்டிகருக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என்பதாக பரிணாமம் கற்பிக்கிறது. (ரோமர் 9:28) ஆகவே ஜனங்கள் கடவுளைப் பற்றிய எந்த நினைப்புமின்றி “தங்களுடைய சொந்த காரியத்தை” செய்வதற்கு சுயாதீனமுள்ளவர்களாக உணர்ந்திருக்கிறார்கள்.
17. என்ன விதங்களில் பரிணாமத்தை ஆதரிக்கும் மதகுருமார்கள் பெரும் தவற்றிற்குள் வீழ்ந்துவிட்டிருக்கிறார்கள்?
17 பரிணாமத்தை ஏற்றுக் கொள்ளும் மதத்தலைவர்கள் உண்மையில் இவ்விதமாகச் சொல்லுகிறார்கள்: “யெகோவா எங்களை பார்க்கிறதில்லை. யெகோவா தேசத்தைக் கைவிட்டார்.” இந்த தத்துவத்தை அவர்கள் ஆர்வமாக ஏற்றுக் கொள்வதன் காரணமாக, அவர்கள் அவருக்கு பதில் சொல்லும் பொறுப்புடையவர்களாக உணருவதில்லை. ஆம், விளங்காத, விளக்கப்படமுடியாத திருத்துவ கடவுட்களை அவர்கள் நம்புவதன் காரணமாக கடவுளைப் பற்றிய அவர்களுடைய கருத்து தெளிவற்றதாக இருக்கிறது. இந்த கருத்துக்கு இசைவாக, ஒரே மெய்தேவனாகிய யெகோவாவின் நாமத்தையே அவர்கள் ஒழித்துவிட விரும்புகிறார்கள். அந்த பெயரை ஒருபோதும் உச்சரியாமல், அவர்களுடைய பைபிள் மொழி பெயர்ப்புகளிலிருந்து அவற்றை அக்கறையுடன் நீக்கிவிட்டிருக்கிறார்கள். உலகப் பிரகாரமான பிரபலமான பரிணாம போதகத்தை எதிர்த்து நிற்க அவர்கள் பயப்படுகிறார்கள்.
18. பரிணாமக் கோட்பாடும் அதன் ஆதரவாளர்களும் எப்பொழுது கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்?
18 பொருத்தமாகவே, மற்றொரு தீர்க்கதரிசியின் மூலமாக யெகோவா இவ்விதமாகச் சொல்லுகிறார்: “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்து போகும்.” (ஏசாயா 29:13, 14) கடவுளை கனவீனப்படுத்தும் பரிணாமக் கோட்பாடும், கிறிஸ்தவர்களென்று சொல்லிக் கொண்டு அதை ஆர்வமாக ஏற்றுக் கொள்ளுகிறவர்களும் யெகோவாவின் உக்கிர கோபத்தின் நாளிலே அதற்கு கணக்கு கொடுத்தே ஆக வேண்டும்.—செப்பனியா 3:8.
சத்தியத்தின் சார்பாக சேவை செய்தல்
19. (எ) அநேகர் பரிணாமத்தை ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்வதற்கு காரணம் என்ன? (பி) சாந்த குணமுள்ளவர்கள் இப்பொழுது எந்த சந்தோஷத்தில் பங்கு கொள்ளலாம்?
19 இது உண்மையிலேயே தேவபக்தியற்ற ஒரு உலகமாகும்! பொய் மதமும் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கும் விஞ்ஞானத்தின் செருக்கும் அதை அவ்விதமாக ஆக்கிவிட்டிருக்கிறது. “கேட்டின் மகனாகிய” கிறிஸ்தவ மண்டலத்தின் குருமார்கள் பொருத்தமற்ற காரியங்களை போதிப்பதன் காரணமாக அநேகர் மதத்தையே விட்டு விலகி விட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர், ஆபத்திலிருக்கும் ஒரு மனிதன் எதையாவது ஒன்றை நம்பி அதை பற்றிக்கொள்ள முயற்சிப்பதுபோல, பரிணாமத்தை பற்றிப் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பரிணாமத்தில் கடவுள் இல்லாததன் காரணமாக, ஒரு சிருஷ்டி கடவுளுக்கு பதில் சொல்லும் பொறுப்பிலிருந்து தங்களை விடுவிப்பது போல தோன்றுவதால், இதை ஆர்வத்தோடு ஏற்றுக் கொள்கிறார்கள். (ரோமர் 1:21-23 ஒப்பிடவும்) ஆனால் மனிதவர்க்கத்திலுள்ள மனத்தாழ்மையும் சாந்த குணமுமுள்ள ஆட்கள் இப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் யெகோவாவையும் ஆளுகை செய்து கொண்டிருக்கும் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவையும் சீக்கிரத்தில் மகிமைப் பொருந்திய நிஜங்களாக ஆக இருக்கும் கடவுளின் ராஜ்ய நோக்கங்களைப் பற்றியும், கற்றறிவதில் சந்தோஷப்படுகிறார்கள்.—ரோமர் 16:20; 1 கொரிந்தியர் 15:25, 26.
20. (எ) இப்பொழுதேயும்கூட என்ன மகத்தான வாக்கு நிறைவேறி வருகிறது? (பி) 1985-ல் இது எவ்விதமாக வெளிப்படுத்தப்பட்டது? (சி) சத்தியத்தின் தேவனை சேவிக்கையில் நீங்கள் எவ்விதமாக உத்தமத்தை காண்பிக்கலாம்?
20 சத்தியத்தை வைராக்கியமாக அறிவிப்பதில் பூமி முழுவதிலும் ஐக்கியப்பட்டவர்களாக இருப்பதில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம்! கடவுளுடைய ஆவி, அவருடைய அமைப்பில் வல்லமையாய் கிரியை நடப்பிக்கிறது. ஆகவே இந்த வாக்கின் நிறைவேற்றத்தை நாம் இப்பொழுதே பார்த்து வருகிறோம்: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) 1985-ன் போது, யெகோவாவின் ஜனங்கள் உலகம் முழுவதிலும் கொடுத்த சாட்சியின் விளைவாக, 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் 33,93,51,170 பைபிள்களையும் பைபிளை விளக்கும் புத்தகங்களையும் வெளி ஊழியத்தில் அளித்திருக்கிறார்கள். “வெளியரங்கமாகவும் வீடுகள் தோறும்” இந்த மகத்தான பிரசங்க வேலையில் பங்கு கொள்வதற்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் சிலாக்கியம் பெற்றிருந்தார்கள். (அப்போஸ்தலர் 20:20) சத்தியத்தின் தேவனை சேவிப்பதில் உத்தமமாய் இருக்க நாம் முயற்சி செய்கையில் யெகோவாவால் தொடர்ந்து நாம் நிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருப்போமாக. (w86 4/1)
உங்களுடைய பதில் என்ன?
◻ மனித மூளையைப் பற்றிய என்ன அற்புதமான காரியங்கள் சகல ஞானமுள்ள ஒரு சிருஷ்டிகரிடமாக கவனத்தை திருப்புகிறது?
◻ பரிணாமத்தை நம்புவது ஒரு விசுவாசச் செலயாக இருக்கிறது என்று சொல்வது ஏன் தவறாக இருக்கிறது?
◻ குரங்கு-மனிதர்கள் உண்மையில் இருந்தார்கள் என்பதற்கு எவ்வளவு அத்தாட்சி இருக்கிறது?
◻ எசேக்கியேல் 8:7-12, எவ்விதமாக இன்றுள்ள சில மதத் தலைவர்களுக்கு பொருத்தப்படலாம்?
◻ சத்தியத்தின் தேவனை சேவிப்பதில் உத்தமமாய் இருத்தல் என்ன விளைவுகளை கொண்டு வருகிறது?
[பக்கம் 21-ன் படம்]
Life—How Did It Get Here? By Evolution or by Creation?
மேற்கூறப்பட்ட ஆங்கில புத்தகம் 1985-லும் 1986-லும் உலகமெங்கும் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் “உத்தமத்தை காத்துக்கொள்வோர்” மாநாடுகளில் வெளியிடப்பட்டது. இப்போது அது பின்வரும் மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது: சைனீஸ், டேனிஷ், டச், ஆங்கிலம், ஃபினிஷ், பிரென்ஞ், ஜெர்மன், இத்தாலியன், ஜாப்பனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ்.
[பக்கம் 19-ன் படம்]
ஒரு சில எலும்புத் துண்டுகளிலிருந்து குரங்கு-மனிதனை அமைத்துக் காட்டுவது ஓவியனின் பங்கில் நியாயமானதா?
[பக்கம் 20-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவை அறிகிற அறிவினால் ‘பூமியை நிரப்பு’கிறார்கள்