உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w88 1/1 பக். 30-32
  • சந்தோஷமுள்ள ஒரு ஜனம்—ஏன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சந்தோஷமுள்ள ஒரு ஜனம்—ஏன்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சுவிசேஷ வேலையில் சந்தோஷத்தைக் கண்டடைதல்
  • ராஜ்ய அதிகரிப்பில் சந்தோஷத்தைக் கண்டடைதல்
  • சந்தோஷத்துக்கு இடையூறுகளை மேற்கொள்ளுதல்
  • சந்தோஷமுள்ள ஒரு ஜனமாக நிலைத்திருத்தல்
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தோஷத்துடன்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • சந்தோஷம்​—கடவுள் தரும் ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • சந்தோஷ இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவுக்குள் சந்தோஷமே நம் கோட்டை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
w88 1/1 பக். 30-32

சந்தோஷமுள்ள ஒரு ஜனம்—ஏன்?

மெய் கிறிஸ்தவர்கள் இன்று சந்தோஷமுள்ள ஒரு ஜனமாக இருக்கிறார்கள். ஏனென்றால் நாம் “நித்தியானந்த” தேவனை சேவிக்கிறோம். (1 தீமோத்தேயு 1:11) அவர் தம்முடைய ஆவியை நமக்குக் கொடுக்கிறார். அந்த ஆவியின் ஒரு கனி சந்தோஷம்.—கலாத்தியர் 5:22.

ஆழத்தில் வேறூன்றப்பட்ட இத்தகைய சந்தோஷம் விரிவடையக்கூடியதாக, அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, இயேசுகிறிஸ்து கழு மரத்தில் அறையப்படும் வேதனைக்கும், தூஷிக்கிறவன் என்று தீர்ப்பளிக்கப்பட்ட அவமானத்துக்கும் உட்படுத்தப்பட்டார். என்றபோதிலும், “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு கழுமரத்தை சகித்துக்” கொண்டார். (எபிரெயர் 12:2) யெகோவாவுக்குச் செய்யும் தம்முடைய ஊழியத்தின் சம்பந்தமாக தமக்கு முன்பாக மகத்தான வாய்ப்புகளும் சிலாக்கியங்களும் இருப்பதை இயேசு அறிந்திருந்தார். இந்த எதிர்கால சிலாக்கியங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியதே, வேதனையின் மத்தியிலும் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள அவருக்கு உதவி செய்தது.

இயேசு தம்முடைய சீஷர்களும்கூட சந்தோஷமுள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் சொன்னார்: “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.” (யோவான் 15:11) இது இன்று யெகோவாவின் சாட்சிகளின் விஷயத்தில் உண்மையாக நிரூபித்திருக்கிறது. நாம் சந்தோஷமுள்ள ஒரு ஜனமாக இருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. மூட நம்பிக்கைகள் மற்றும் பொய் மத நம்பிக்கைகளின் பிடியிலிருந்து நம்மை விடுதலை செய்திருக்கும் சத்தியத்தை நாம் அறிந்திருக்கிறோம். வெகு சீக்கிரத்தில் வைகூடிவர இருக்கும் இரட்சிப்பின் நம்பிக்கையில் நாம் களிகூருகிறோம். (லூக்கா 21:28) பைபிளை ஆதாரமாகக் கொண்ட ஒழுக்கத்தைக் கடைபிடிக்காதவர்கள் எதிர்படும் பாலின உறவுகளால் கடத்தப்படும் அநேக நோய்களிலிருந்தும் கூட நாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் அக்கறையுள்ள ஒரு ஜனத்தோடு மிகச் சிறந்த கூட்டுறவை நாம் அனுபவித்துக் களிக்கிறோம். மேலுமாக, ஆம், ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்து செம்மறியாடுகளைப் போன்றவர்களைச் சீஷராக்குவதில் பங்கு கொள்ளும் மகத்தான சிலாக்கியம் நமக்கிருக்கிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.

ஆனால் மொத்தமாக யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் இது உண்மையாக இருக்கையில், தனிப்பட்டவராக உங்களைப் பற்றி என்ன? யெகோவாவின் மற்ற ஜனங்களோடு கூட களிகூருவதற்கு உங்களுக்குக் காரணமிருக்கிறது என்று ஏன் சொல்லப்படலாம்?

சுவிசேஷ வேலையில் சந்தோஷத்தைக் கண்டடைதல்

வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் ஈடுபடுவதை சிலர் கடினமானதாக காண்கிறார்கள். ஒருவேளை முன்பின் அறிந்திராதவர்களை அணுகி சம்பாஷணையைத் துவக்குவதைக் குறித்து சங்கடமாக உணருகிறார்கள் அல்லது மற்றவர்களுக்குப் போதிப்பது என்பது வருகையில் அவர்கள் திறமையற்றவர்களாக உணரக்கூடும். சில சமயங்களில் நீங்கள் அவ்விதமாக உணருகிறீர்களா? அப்படியானால் சுவிசேஷ வேலையில் நீங்கள் எவ்விதமாக சந்தோஷத்தைக் கண்டடையலாம்?

முதலாவதாக நம்பிக்கையான ஒரு மனநிலையைக் கொண்டிருங்கள். பிரசித்திப் பெற்ற ஒருவருக்கு அல்லது பிரபலமான ஒரு அரசியல்வாதிக்கு வேலை செய்வது, அநேக ஆட்களுக்குக் கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் “நித்திய ராஜனாகிய” யெகோவா தேவனாலேயே பயன்படுத்தப்படுகையில் நாம் எவ்வளவு அதிகமான சந்தோஷத்தை அதில் காண வேண்டும்!—1 தீமோத்தேயு 1:17.

மேலுமாக, இது இனி ஒருபோதும் செய்யப்படாத வேலையாக இருக்கும் என்பதையும் கூட நினைவில் கொள்ளுங்கள்! இங்கு பூமியில் செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களைத் தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் கிறிஸ்தவர்களைத் தேவதூதர்கள் தாமே வழிநடத்தி வருகிறார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 14:6) இது உங்களுடைய இருதயத்துக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லையா?

ராஜ்ய அதிகரிப்பில் சந்தோஷத்தைக் கண்டடைதல்

பிரசங்க வேலையின் மிகச் சிறந்த விளைவுகள், நம்பிக்கையான நோக்குநிலையைக் கொண்டிருப்பதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. பைபிள் பின்வருமாறு முன்னறிவித்திருக்கிறது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; யெகோவாவாகிய நான் ஏற்ற காலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” (ஏசாயா 60:22) யெகோவாவின் இந்த வாக்கு சமீப காலங்களில் நிறைவேறியிருக்கிறது. உதாரணமாக, 1986 ஊழிய ஆண்டின்போது, யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு செய்த தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக 2,25,868 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்குப் பரப்புவதில் பங்கு கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கையில் 6.9 சதவிகித அதிகரிப்பு இருந்திருக்கிறது.

இந்த அதிகரிப்பை உங்களுடைய சொந்த சபையில் அல்லது வட்டாரத்தில் காண்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. புதியவர்கள் கூட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். கடவுளைச் சேவிக்கும் படியாக அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறார்கள். பிரசங்க வேலை யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை இது சுட்டிக் காண்பிக்கவில்லையா? ஆகவே இந்த அதிகரிப்பில் ஒரு பங்கை கொண்டிருப்பது நீங்கள் அதிகமாக சந்தோஷமடைவதற்கு ஒரு காரணமாயிருக்கக்கூடும். உண்மைதான், ஒரு நபர் முழுக்காட்டுதல் பெறும் கட்டத்தை அடையும் வரையாக நீங்கள் தனிப்பட்ட வகையில் அவரோடு படித்துக் கொண்டில்லாமல் இருக்கலாம். ஆனால் எந்த வகையிலும் எவரையும் சத்தியத்துக்குள் கொண்டு வந்ததற்கான மதிப்பை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ‘தேவனே விளையச் செய்கிறார்’ என்று பவுல் சொன்னான். (1 கொரிந்தியர் 3:6-9) புதியவர்களுக்கு உதவி செய்வதில் சபையிலுள்ள அங்கத்தினர்கள் அனைவருக்கும் ஒரு பங்குண்டு. எவ்விதமாக? கூட்டங்களில் ஆஜராயிருந்து, குறிப்புகளைச் சொல்லி, புதியவர்களுக்கு நட்புணர்வோடு வாழ்த்துதல் சொல்லி, சத்தியத்தைக் கவர்ச்சியுள்ளதாகச் செய்யும் வகையில் தங்களை நடத்திக் கொள்வதன் மூலம் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்.

என்றபோதிலும் வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையிலும் வீட்டு வேதப் படிப்புகளை நடத்துவதிலும் அதிக நேரடியான ஒரு பங்கை நீங்கள் கொண்டிருப்பீர்களேயானால் அதிகமான சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடும். கடந்த ஆண்டில் சராசரியாக 27,26,252 வாராந்தர வீட்டு வேதப் படிப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சந்தோஷமான இந்த வேலையில் பங்குகொள்ள ஏன் கூடுதலாக முயற்சி செய்யக்கூடாது? உங்களுக்கு அறிமுகமான ஒருவரோடு ஒருவேளை நீங்கள் பிரசுரங்களை அளித்திருக்கும் ஒருவரோடு பைபிளைப் படிக்க முன்வாருங்கள். செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களைக் கண்டு பிடிப்பதற்கு யெகோவாவிடம் உதவியைக் கேளுங்கள்.

சந்தோஷத்துக்கு இடையூறுகளை மேற்கொள்ளுதல்

மற்றவர்களுக்குப் போதிப்பதைக் குறித்து ஒரு நபர் திறமையற்றவராக உணருவாரேயானால், வெளி ஊழியத்தில் அவர் சந்தோஷத்தை அடைவதற்கு இது உண்மையான ஒரு இடையூறாக இருக்கக்கூடும். ஆனால் “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” என்பதை மறந்துவிட வேண்டாம். (2 கொரிந்தியர் 3:5) திறம்பட்ட ஊழியர்களாக நாம் தகுதிபெற நமக்கு உதவி செய்வதற்காக யெகோவா அவருடைய அமைப்பின் மூலமாக அநேக சிறந்த உதவிகளை அளித்திருக்கிறார்.

முதலாதவாக, வெளி ஊழியத்தில் அதிக அனுபவமுள்ளவர்களும் கடவுளை நீண்ட காலமாக சேவித்து வருகிறவர்களுமாகிய அநேகர் நம் மத்தியில் இருக்கிறார்கள். அனுபவமுள்ள இந்த ஊழியர்களை நாம் சேர்ந்து கொண்டு அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம், மேலுமாக நம் ராஜ்ய ஊழியத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆலோசனைகள் வருகின்றன. மேலுமாக பிரசங்கிக்கும் நம்முடைய திறமைகளை வளர்ப்பதற்கு வேத வாக்கியங்களின் நியாயங்களை எடுத்துக் காண்பித்தல் என்ற பிரசுரத்தில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டு வெளி ஊழியத்துக்கு அதிக முழுமையாக தயார் செய்யுங்கள். உங்களைக் கதவண்டையில் அறிமுகஞ் செய்து கொள்ள புதிய மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் முறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் அல்லது வீட்டுக்காரரை சம்பாஷணையில் உட்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகளைச் சிந்தித்துப் பாருங்கள். வெளி ஊழியத்தில் நீங்கள் அதிக திறம்பட்டவராகும்போது, பிரசங்கிப்பதில் உங்கள் உற்சாகமும் சந்தோஷமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனங்களிடம் நீங்கள் பேசக்கூடியவர்களாக இருக்கும்போது, ஊழியத்தை அதிகமாக அனுபவித்துக் களிக்க முடிகிறது. சில பிராந்தியங்களில் இது பிரச்னையாக இருப்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. அதிகமான ஆட்கள் வீட்டிலிருக்கும் ஒரு சமயத்தில், ஒருவேளை, மாலைவேளைகளில் வெளிஊழியத்தில் பங்கு கொள்ள நீங்கள் திட்டமிடமுடியுமா? அநேகர் இது பயனுள்ளதாக இருப்பதைக் காண்கிறார்கள். ஆட்களை எங்கெல்லாம் காண முடிகிறதோ—தெருக்களில், பூங்கா பெஞ்சுகளில் அமர்ந்திருக்கையில், தங்கள் வாகனங்களைக் கழுவிக் கொண்டிருக்கையில்—அங்கெல்லாம் அவர்களிடம் பேச நீங்கள் முன்வரலாம். ஜனங்களுக்குச் சத்தியம் தேவை என்பதையும் ஜீவன் இதில் உட்பட்டிருப்பதையும் மறந்துவிடாதீர்கள். கூச்சமான சுபாவத்தை மேற்கொள்வதில் உதவி செய்ய இது தூண்டுதலளிப்பதாக இருக்கும். பெரும்பாலான ஆட்கள் சாதகமாக பிரதிபலிக்கமாட்டார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அவ்விதமாகச் செய்கிறவர்கள் நமக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொண்டுவருகிறார்கள்.

என்றபோதிலும் சந்தோஷத்தை நாம் காத்துக் கொள்வதற்கு மிகப் பெரிய உதவிகளில் ஒன்று ஜெபமாக இருக்கிறது. உங்களைப் பலப்படுத்தி, உற்சாகப்படுத்த யெகோவாவிடம் அவருடைய ஆவிக்காக கேளுங்கள். பவுல் சொன்னான்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) யெகோவாவின் மீது அதிக முழுமையாக சார்ந்திருக்க நாம் கற்றுக் கொள்கையில் நாமும் கூட அவ்விதமாக உணரலாம்.

சந்தோஷமுள்ள ஒரு ஜனமாக நிலைத்திருத்தல்

அநேக ஆட்கள் நம்முடைய வேலையை மதித்துணருவது கிடையாது. இது இவ்விதமாக இருக்கும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே தம்மை பின்பற்றியவர்களைப் பிரசங்கிப்பதற்கு அவர் அனுப்புகையில் அவர்களுக்குப் பின்வரும் அறிவுரையைக் கொடுத்தார்: “எவனாகிலும் உங்களை ஏற்றுக் கொள்ளாமலும் உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும் போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். . . . ஆடுகளை ஓநாய்களுக்குள் அனுப்புகிறது போல, இதோ நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால் சர்ப்பங்களைப் போல் வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” மேலுமாக இயேசு சொன்னார்; “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால் பயப்படாதிருங்கள்.”—மத்தேயு 10:11-16, 30, 31.

சந்தோஷமாக நிலைத்திருப்பதற்கு இந்த வார்த்தைகள் நமக்கு உதவி செய்கின்றன. அவர்களுடைய நன்மைக்காக நாம் எடுக்கும் முயற்சிகளுக்குப் போற்றுதலைக் காண்பிக்காத ஆட்களை நாம் சந்திக்கையிலும் நாம் இன்னமும் யெகோவாவின் நாமத்தைத் தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறோம், இன்னமும் அவரைத் துதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர இவை உதவி செய்கின்றன. (சங்கீதம் 100:4, 5) சில சமயங்களில், கதவைத் திறக்க மறுக்கும் வீட்டுக்காரர்கள் மற்றவர்களிடம், “அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்” என்று சொல்வதைக் கேட்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. ஆம் ஒரு வார்த்தையும்கூட சொல்லாமலே, யெகோவாவின் நாமம் மகிமைப்படுத்தப்பட்டுவிட்டது. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவோ அதைத் தள்ளிவிடவோ அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. (மத்தேயு 25:31, 32) ஆகவே செவி கொடுத்து கேட்கும் ஆட்களில்லாத பிராந்தியங்களிலும்கூட நாம் சந்தோஷமாக நிலைத்திருக்க முடியும்.

தவிர, இப்படிப்பட்ட ஆட்கள் எப்பொழுது மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது நமக்கு ஒருபோதும் தெரியாது. ஒரு கிறிஸ்தவ சகோதரியை பல முறை விரட்டி விட்டிருக்கும் ஒரு பெண், ஒரு நாள் அந்தச் சகோதரியிடம் ஏதாவது புதிய பிரசுரங்கள் இருக்கின்றனவா என்று கேட்டாள். சகோதரிக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏனென்றால் அந்தப் பெண் இதற்கு முன் பைபிள் பிரசுரத்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. தன்னுடைய கணவன் யெகோவாவின் சாட்சிகளோடு படித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனோடு வேலை பார்ப்பதாக அந்தப் பெண் விளக்கினாள். அவர் இந்தப் பெண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கும் காவற்கோபுர பிரசுரங்களில் ஒன்றை கொடுத்திருக்கிறார். என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அந்தப் பெண் அதைப் படித்து அந்தச் செய்தி சத்தியம் என்பதை உணர்ந்து கொண்டாள். அடுத்த முறை ஒரு சாட்சி சந்திக்க வரும்போது அவரை உள்ளே வரவேற்க வேண்டும் என்று அன்றே தீர்மானித்து விட்டாள். வீட்டு வேதப் படிப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பெண் பின்னால் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு சாட்சியாக ஆனாள்!

ஆகவே உலகில் ஒரே நம்பிக்கையின் செய்தியை அறிவிக்கும் மகத்தான சிலாக்கியத்தை—சந்தோஷமுள்ள சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். பிரசங்க வேலையானது இந்தக் கடைசி நாட்களில் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் ஒருவேலையாக இருக்கிறது. முடிவு வருவதற்கு முன்பாக அது செய்யப்பட வேண்டும். (மத்தேயு 24:14) சாத்தானுடைய பொல்லாத ஒழுங்கு முடிவுக்கு வருவதற்கு இன்னும் எவ்வளவு காலமாகும்? முடிவு தாமதிக்காது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (ஆபகூக் 2:3 ஒப்பிடவும்) இதற்கிடையில் மற்றவர்கள், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள இன்னும் சமயமிருக்கிறது. மீதமுள்ள இந்தக் காலத்தை அனுகூலப்படுத்திக் கொண்டு நம்முடைய பிரசங்க வேலையை உற்சாகமாக செய்து கொண்டிருப்போமாக. நம்பிக்கையான மனநிலையைக் கொண்டவர்களாய், ‘நம்மையும் நம் உபதேசத்தைக் கேட்பவர்களையும்’ இரட்சித்துக் கொள்ள கடினமாக உழைப்போமாக. (1 தீமோத்தேயு 4:16) அவ்விதமாகச் செய்வதில், ராஜ்ய அதிகரிப்பில் பங்குகொள்ளும் சந்தோஷமுள்ள ஒரு ஜனமாக நாம் நிலைத்திருப்போம். (w87 3/15)

[பக்கம் 31-ன் படம்]

ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் சாதகமாக பிரதிபலிக்காவிட்டாலும் கூட—நம்முடைய சுவிசேஷ வேலை மெய்யான சந்தோஷத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்