கோபம்—அது என்ன?
“கோபிப்பதற்கு கடவுள் கொடுத்திருக்கும் திறனை அடக்குவதன் மூலம் உங்களையே நீங்கள் அழித்துக்கொள்கிறீர்கள்.” நியூஸ்வீக் பத்திரிக்கையில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை இவ்விதமாக எச்சரித்திருந்தது. பல வருடங்களாக, அநேக மனோ தத்துவ நிபுணர்கள், வெளிப்படையாக காண்பிக்கப்படாத கோபம், உயர் இரத்த அழுத்தத்தையும், இருதய நோயையும், சோர்வையும், கவலையையும் குடிப்பழக்கம் போன்ற கோளாறுகளையும் உண்டுபண்ணக்கூடும் என்ற கருத்தை பரப்பிவிட்டிருக்கிறார்கள்.
மறுபட்சத்தில் பைபிளோ, பல ஆயிர வருடங்களாக “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டு விடு” என்று புத்தி சொல்லி வந்திருக்கிறது. (சங்கீதம் 37:8) பைபிள் குறிப்பாகச் சொல்வதாவது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.”—பிரசங்கி 7:9.
உலகப் பிரகாரமான வல்லுநர்களா அல்லது பைபிளா, யார் சொல்வது சரியாக இருக்கிறது? உண்மையில் கோபம் என்பது என்ன? கோபத்தை வெளியிடுவது நமக்கு நன்மையாக இருக்குமா?
கோபத்தை வெளியிடுவது
“கோபம்” என்பது வெறுப்பினாலும் பகைமையினாலும் ஏற்படும் தீவிர உணர்ச்சியை அல்லது பிரதிபலிப்பை விவரிக்கும் ஒரு பொதுவான சொல்லாக இருக்கிறது. கோபத்தின் அளவை அல்லது அது எவ்விதமாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை காண்பிக்கும் மற்ற சொற்களும்கூட உண்டு. ஆத்திரம் என்பது கடுமையான கோபமாக இருக்கிறது. சீற்றம், அழிவு செய்வதாக இருக்கக்கூடும். உள்ளக் கொதிப்பு நீதியான ஒரு காரணத்துக்காக கோபிப்பதாக இருக்கக்கூடும். கடுங்கோபம் அநேகமாக பழிவாங்குவதை அல்லது தண்டிப்பதை குறிப்பாக தெரிவிக்கக்கூடும்.
கோபம், பொதுவாக, குறிப்பாக ஏதோ ஒன்றைப்பற்றியதாக இருக்கிறது. ஆனால் நாம் கோபத்தை எவ்விதமாக வெளியிடுகிறோம் அல்லது அதை சமாளிக்கிறோம் என்பது பெரிய வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்.
கோபத்தை வெளியிடுவது பயனுள்ளது என்பதாக சில நிபுணர்கள் ஆணித்தரமாகச் சொன்னாலும் கோபத்தை வெளியிடுவதற்கு தங்களை அனுமதிக்கும் ஆட்கள், குறைவான தன்மானத்தினாலும், குற்ற உணர்வினாலும் வளர்ந்து வரும் பகையினாலும் அல்லது கவலையினாலும் அவதியுறுவதாக அண்மைக் காலத்திய மனோ தத்துவ ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. மேலுமாக கோபாவேசமாக வெடித்தல், கூச்சல், அழுகை அல்லது சரீர சம்பந்தமான தாக்குதலோடுகூட அதை வெளியே கொட்டிவிடுவது பொதுவாக அது தீர்த்து வைப்பதைக் காட்டிலும் அதிகமான பிரச்னைகளையே உருவாக்குகிறது. கோபமாயுள்ள நபர் அதிகமாக சீற்றங்கொள்கிறார், அது மற்றவர்களில் புண்பட்ட உணர்ச்சிகளை அதிகமாக்குகிறது.—நீதிமொழிகள் 30:33; ஆதியாகமம் 49:6, 7.
நாம் கோபத்தில் கத்தி கூச்சல் போடும்போது அநேகமாக நாம் எதிர்பார்க்கும் பலன்களை பெற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், பொதுவாக அடுத்தவர் திரும்ப தாக்குவதற்கே தூண்டப்படுகிறார். உதாரணமாக, நீங்கள் உங்கள் காரை ஓட்டிச்செல்லுகையில், மற்றொரு ஓட்டுநர் உங்களை எரிச்சலடையச் செய்யும் ஏதோ ஒன்றைச் செய்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு பதிலாக நீங்கள் சத்தம் போட்டு ஒலி கொடுக்கிறீர்கள். நீங்கள் இவ்விதமாக திடீரென செயலாற்றுவது உங்களுடைய கோபத்துக்கு பாத்திரமானவரை பழிக்குப் பழி வாங்கும்படியாக எளிதில் தூண்டக்கூடும். சில சமயங்களில், இப்படிப்பட்ட நிலைமையில் சோகமான சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக நியு யார்க்கிலுள்ள புரூக்லினில், ஒரு தெருவில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதன் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு விவாதத்தில், ஒரு மனிதன் கொல்லப்பட்டான். பைபிள் பின்வருமாறுச் சொல்லுகையில் பிரச்னையை உயர்த்திக் காண்பிக்கிறது. “கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான் மூர்க்கன் பெரும் பாதகன்.“ (நீதிமொழிகள் 29:22) பின்வரும் இந்த புத்திமதியைப் பின்பற்றுவது எத்தனை ஞானமானதாக இருக்கும்: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள் . . . கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”—ரோமர் 12:17, 18.
ஆகவே மக்களோடுகூடி வாழ விரும்புகையில் கோபத்தை வெளியிடுவது நமக்கு பிரயோஜனமாயிராது. சரீரப்பிரகாரமாக நமக்கு அது நன்மையாயிருக்கிறதா? அநேக மருத்துவர்கள் இல்லை என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்கள். கோபத்தை வெளிகாட்டும் மனசாய்வுள்ள ஆட்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன. கோபமானது, இருதயம் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளுக்கு, தலைவலிகளுக்கு, மூக்கில் இரத்த கசிவுக்கு, மயக்கத்துக்கு அல்லது பேசும் திறமையை இழப்பதற்கு வழிநடத்துகிறது என்பதாக சிலர் தெரிவித்திருக்கிறார்கள். மறுபட்சத்தில் நமக்கு ஜீவனைக் கொடுத்தவர் பின்வருமாறு விளக்குகிறார்: “சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்.” (நீதிமொழிகள் 14:30) இயேசு சொன்னார்: “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.”—மத்தேயு 5:9.
கோபத்துக்கு காரணங்கள்
நம்முடைய சுயமதிப்பின் மீது செய்யப்படும் தாக்குதல், தனிப்பட்டவராக குறைகூறப்படுதல், பழி தூற்றப்படுதல், அநியாயமாக நடத்தப்படுதல், நியாயமில்லாத ஏமாற்றம் ஆகியவை கோபத்துக்கு ஒருசில காரணங்களாக இருக்கின்றன. மக்கள் கோபமாக இருக்கையில் அவர்கள் அழுத்தமாக தெரிவிக்கும் செய்தி இதுவே: “என்னுடைய மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நீ அச்சுறுத்தலாயிருக்கிறாய்! என்னுடைய தற்பெருமைக்கு நீ தீங்கிழைக்கிறாய்! என் சுய மரியாதையை நீ பறித்துக் கொள்கிறாய்! நீ என்னை உன்னுடைய சுய நலத்துக்காக அனுகூலப்படுத்திக் கொள்கிறாய்!
சில சமயங்களில் சிலர் தங்களுடைய சொந்த எண்ணங்களை மறைத்துக்கொள்வதற்காக கோபத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணமாக, நியு யார்க்கிலுள்ள ஒரு 14 வயது பையன், எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவனாய், எப்பொழுதும் சண்டைப் பண்ணுகிறவனாய் இருந்தான். ஒரு மருத்துவரின் உதவியோடு கடைசியாக பையன் இவ்விதமாக ஒப்புக்கொண்டான்: “சரி, எனக்கு உதவி தேவை, எனக்கு பேசுவதற்கு யாராவது ஒருவர் வேண்டும் என்ற அவசியத்தை நான் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை . . . மற்றவர்கள் நம்மை விரும்ப மாட்டார்களோ என்பதே பயமாக இருக்கிறது.” ஆகவே, உண்மையில் அவனுக்கு தேவையாய் இருந்தது கவனமும் அன்புமே.
கலிபோர்னியாவில் வாழ்ந்துவந்த ஒரு தம்பதி, மனைவி அவளுடைய சிநேகிதியைப் பார்க்கப்போன ஒவ்வொரு சமயமும் கோபாவேசத்தோடு சண்டை போட்டுக்கொண்டனர். கணவனின் கோபாவேசமான நடத்தை மனைவியையும் அதே விதமாக நடந்துக்கொள்ளச் செய்தது. அவர்கள் உதவிக்காக சென்றிருந்த ஒரு இடத்தில், கடைசியாக கணவன் இதுவரை எவரிடமும் வெளியிடாத ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னான். கொஞ்ச நேரத்துக்கும்கூட மனைவி தன்னை விட்டுவிட்டு தனியாகச் சென்றபோது, அவள் தன்னை விட்டு மொத்தமாக பிரிந்து போய்விடுவாளோ என்ற பயம் தன் உள்ளத்தின் ஆழத்தில் ஏற்படுவதாகச் சொன்னான். ஏனென்றால் அவனுடைய தகப்பன் அவன் சிறுவனாக இருந்தபோது அவனை கைவிட்டு விட்டு போய்விட்டிருந்தார். தன்னுடைய கணவனின் கோபத்துக்குரிய அடிப்படைக் காரணத்தை—கைவிடப்படுவோமோ என்ற பயத்தை—மனைவி புரிந்துகொண்டபோது, அது அவனிடமாக அவளுக்கிருந்த கோபத்தை அகற்றிவிடவும், தன் அன்பை மீண்டும் உறுதி செய்யவும் அவளுக்கு உதவியது.
ஆகவே கோபம் என்பது ஒரு நோய்க் குறியாகவே இருக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களின் விஷயங்களில் அதன் அடிப்படைக் காரணத்தை அடையாளங் கண்டுகொள்வதன் மூலம், அதைச் சரியாக கையாள நாம் கற்றுக்கொள்ளலாம். (w87 7⁄1)
[பக்கம் 4-ன் படம்]
அநேக மருத்துவர்கள், கோபத்தை வெளியிடுவது ஆரோக்கியமற்றதாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்