உலக ஆட்சி மாறுகிறது
நீங்கள் தெரிந்துகொள்ள முடிகிறதாக இருந்தால், என்ன விதமான ஓர் அரசாங்கத்தின் கீழ் வாழ விரும்புவீர்கள்? நம்மில் அநேகர், நியாயமான அளவு தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்த ஒரு நிலையான அரசாங்கத்தையே பெரும்பாலும் தெரிந்துகொள்வோம். குற்றச் செயலைக் கட்டுப்படுத்தி, அமைதியை ஊக்குவித்து, சமுதாய நீதியைப் பேணிக் காத்து, பொருளாதார செழுமையை மேம்படுத்தும் அரசாங்கத்தையே நாம் விரும்புவோம். நிச்சயமாகவே ஒடுக்குகின்ற அல்லது ஊழல் நிறைந்த ஓர் அரசாங்கத்தை நாம் விரும்ப மாட்டோம்.
விசனகரமாக, பெரும்பாலான அரசாங்கங்கள் இவ்விதமாக இல்லை. இந்த 20-ம் நூற்றாண்டின் பின்பாதியில் இருக்கின்றவிதமாக, இந்த உலகைப் பற்றி நாம் சிந்திக்கையில் நாம் என்ன காண்கிறோம்? வறுமை, ஊழல், திறமையின்மை, ஒடுக்குதல், சமுதாய அநீதி, குற்றச் செயல் மற்றும் சர்வதேசீய பதட்ட நிலை. இதுவே ஆயிரக்கணக்கான வருடங்களாக மனித அரசாங்கத்தின் முடிவான விளைவாகும்.
நிச்சயமாகவே தனிப்பட்ட ஒரு சில ஆட்சியாளர்கள் தூய மனமுள்ளவர்களாகவும், திறமையுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது உண்மையே. மேலும் ஒரு சில அரசாங்க அமைப்புகள், ஒப்பிடப்படுகையில், நிலையானதாயும், ஒரு காலப்பகுதியில் திறமைவாய்ந்ததாயும் இருந்திருக்கின்றன. ஆனால் மனித அரசாங்கங்கள், மனிதவர்க்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதாக நாம் இயல்பாக யோசிப்போமோ அதைச் செய்வதில் மனித அரசாங்கம் மொத்தமாக தோல்வியடைந்திருப்பது, பைபிளின் பின்வரும் கூற்று மெய் என்பதை நிரூபிக்கிறது: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) வேறு வார்த்தைகளில் சொன்னால் மனிதன் வேறு இடத்து உதவியின்றி தன்னைத்தானே ஆண்டுகொள்ளும்படியாக உண்டாக்கப்படவில்லை.
இதன் காரணமாகவே, உலக ஆட்சி மாறுகிறது என்பதை அறிந்துகொள்வது நல்லதாக இருக்கிறது. இந்தச் சொற்றொடரினால் நாம் அர்த்தப்படுத்துவது என்ன? மனிதவர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையை ஆளும் காரியம் விரைவில் முற்றிலும் வெற்றிகரமானதாக இருக்கப்போகும் முற்றிலும் புதிய வகையான ஓர் அரசாங்கத்தின் கைகளில் இருக்கும் என்பதை நாம் அர்த்தப்படுத்துகிறோம். இந்தத் தீவிரமான அரசாங்க மாற்றம் கடவுளால் முன்னறிவிக்கப்பட்டது. ஆம், அதுவே பைபிளின் முக்கிய பொருளாக இருக்கிறது.
அரசாங்கத்தைப் பற்றிய கடவுளுடைய அக்கறை
மனிதவர்க்கத்தின் ஆட்சியைப் பற்றியதில் கடவுள் எப்போதுமே அக்கறையுள்ளவராக இருந்திருக்கிறார். மனித அரசாங்கங்கள் எந்த அளவுக்குத் தங்கள் உத்திரவாதங்களை நிறைவேற்றுகின்றன என்பதை அவர் உன்னிப்பாகக் கவனித்து சில சமயங்களில் அவர்களிடம் கணக்குக் கேட்கிறார். ஆம், கடந்த 2,500 ஆண்டுகால சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க சில அரசாங்க அமைப்புகளின் வரலாறுகள் பைபிளில் முன்னறிவிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்துவின் பிறப்புக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட தானியேல் புத்தகத்தில் பூர்வ பாபிலோனின் வீழ்ச்சி, மேதிய–பெர்சியா, கிரீஸ் மற்றும் ரோமின் எழுச்சியையும் வீழ்ச்சியையும்கூட முன்னறிவித்த தீர்க்கதரிசனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தீர்க்கதரிசனங்கள், நம்முடைய சொந்த நாளின் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் தோற்றத்தையும்கூட முன்னுரைத்தன. இந்தத் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றைச் சுருக்கமாகச் சிந்திப்பது, உலக ஆட்சி மாறுகிறது என்ற கூற்றினால் அர்த்தப்படுத்தப்படுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவி செய்யும்.
வியப்பூட்டும் இந்தத் தீர்க்கதரிசனங்களில் முதலாவதானது, தானியேலின் நாள் முதற்கொண்டு நம்முடைய நாள் வரையான அரசியல் உலக வல்லரசுகளை ஒரு மாபெரும் சிலையினால் பிரதிநிதித்துவம் செய்த ஆவியால் ஏவப்பட்ட ஒரு சொப்பனமாகும். பின்னர், கையினால் பெயர்க்கப்படாத ஒரு கல் அந்தச் சிலையின் மேல் மோதி அதைத் தூள்தூளாக்கியது. அந்தக் கல் இந்த உலக வல்லரசுகளைத் தூளாக நொறுக்க, அது “கோடை காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்து போகிற பதரைப் போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக் கொண்டுபோயிற்று.”—தானியேல் 2:31–43.
அதே தானியேல் அதிகாரம் இது எதை அர்த்தப்படுத்தியது என்பதை விளக்குகிறது. குறைபாடுள்ள மனித அரசாங்கங்களின் இடத்தை எல்லையற்ற உன்னதமான ஏதோ ஒன்று நிரப்பப்போகிறது. அது நமக்குச் சொல்கிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அப்படியே அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். . . . சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்.”—தானியேல் 2:44, 45.
ஆனால் அதுவே காரியத்தின் முடிவாக இருக்கவில்லை. இரண்டாவது காட்சியில், வரிசையாக உலக வல்லரசுகள், அவைகளின் தனித்தன்மைகளைக் கொண்ட மாபெரும் மிருகங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. பின்பு தானியேல் பிரமிக்க வைக்கும் “நீண்ட ஆயுசுள்ளவரின்” பரலோக சிங்காசனம் வரையாகக் காண அனுமதிக்கப்பட்டான். மேலும், அவன், தன்னுடைய நாளில் அல்ல, ஆனால் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு ஆட்சி காலத்தின் போது நடக்க இருக்கும் ஏதோ ஒன்று அவனுக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த உலக வல்லரசுகளின் மீது, யெகோவாவின் மகத்துவமான நியாய சங்கம் உட்காருவதை அவன் பார்த்தான். (தானியேல் 7:2–12) பின்வரும் வசனங்கள் காண்பிக்கிறபடியே, ஆட்சியில் ஒரு மாற்றத்துக்காக தெய்வீகக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. யாருக்கு இந்த ஆட்சி கொடுக்கப்படும்?
மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்
தானியேல் கிளர்ச்சியூட்டும் பதிலைத் தருகிறான்:
“இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”—தானியேல் 7:13, 14.
ஆகவே அடக்கி ஆளும் மனித அரசாங்கங்களின் மோசமான ஆட்சியை “நீண்ட ஆயுசுள்ள”வரான யெகோவா தேவனே ஒழித்துக்கட்டுவார் என்பதை முன்னறிவிக்க தானியேல் பயன்படுத்தப்பட்டான். இந்த ஆட்சிக்குப் பதிலாக அவர் மனிதவர்க்கம் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாத மிகச் சிறந்த அரசாங்கத்தைக் கொண்டுவருவார்—பரலோகத்திலிருந்து வல்லமையையும் அதிகாரத்தையும் செலுத்தும் காணக்கூடாத ஒரு ராஜ்யம். ஆனால் ராஜ்யத்தைப் பெறப் போகிற “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” யார்?
நாம் சந்தேகத்தில்விடப்படுவதில்லை. இயேசு தம்மை “மனுஷகுமாரன்” என்பதாக அடையாளங் காட்டுகிறார். அவர் தம்முடைய பிரசன்னத்தை, “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடும்” வரும் காலமாக விவரித்தார். (மத்தேயு 25:31) யூத பிரதான ஆசாரியன், இயேசுவைச் சங்கத்தாரிடமாக அவர் “தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”தானா என்பதைச் சொல்லும்படியாக வற்புறுத்திய போது, இயேசு சொன்னதாவது: “நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.”a—மத்தேயு 26:63, 64.
கடைசி மனித உலக வல்லரசு
தானியேலின் காலத்துக்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்பு, அப்போஸ்தலனாகிய யோவான், தெய்வீக ஏவுதலின் கீழ் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலை எழுதினான். அந்தப் புத்தகம் இந்த உலக வல்லரசுகளை வல்லமை மிக்க “ராஜாக்கள்” என்பதாகக் குறிப்பிட்டு சொல்வதாவது: “அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.”—வெளிப்படுத்துதல் 17:10.
யோவான் இதை எழுதுகையில், ஏற்கெனவே விழுந்துபோயிருந்த ஐந்து வல்லரசுகள், எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய–பெர்சியா மற்றும் கிரீஸ் ஆகும். ரோம பேரரசு இன்னும் ‘இருந்து’ கொண்டிருந்தது, நம்முடைய காலத்தின் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இன்னும் வரவில்லை. வெளிப்படுத்துதலின் பிரகாரம், இன்று இருந்து வரும் ஏழாவது உலக வல்லரசுக்குப் பின் எந்த உலக வல்லரசுமில்லை. இதுவே கடைசியானதாகும். இனி வேறு இருக்காது.
என்றபோதிலும், அது அச்சமூட்டும் எண்ணமாக இருக்கக்கூடாது—அது கிளர்ச்சியூட்டும் ஒன்றாகும்! அநீதியான, போரீடுபாடுள்ள மனித ஆட்சி, அதன் முடிவுக்குச் சமீபமாயிருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. பூமி ஆளப்படும் விதத்தில் முக்கியமான ஒரு மாற்றத்தைப் பற்றி தெரிவிப்பதில் தீர்க்கதரிசனங்கள் இணைகின்றன—சுயநலமிக்க மனித அரசாங்கங்களிலிருந்து நீதியுள்ள பரலோக அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்துக்கு ஒரு மாற்றமாக அது இருக்கும்.
ராஜ்ய அரசாங்கம்
ஆனால் அந்த ராஜ்யம் என்பது என்ன? அது வெறுமென மனிதர்களின் இருதயங்களிலும் வாழ்க்கையிலும் நன்மைக்கான ஒரு செல்வாக்காக இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாகும். கிறிஸ்தவ சர்ச் என்றழைக்கப்படுவதினுடைய வாழ்நாளைக் காட்டிலும்கூட மிக அதிகமானதாகும். கடவுளுடைய ராஜ்யம் மெய்யான ஓர் அரசாங்கமாகும். அது ஒரு ராஜாவையும், உடன் அரசர்களையும், ஒரு பிராந்தியத்தையும் குடிமக்களையும் கொண்டதாக இருக்கிறது. அது முன்னர் குறிப்பிடப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.
இயேசுவே ராஜ்யத்தின் ராஜாவாக அடையாளங்காண்பிக்கப்படுகிறார். அவர் தம்மை “ராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிவரும்படி தூர தேசத்துக்குப் போகப் புறப்பட்ட” பிரபுவுக்கு ஒப்பிட்டுப் பேசினார். அந்த எதிர்காலத்தைப் பற்றி அவர் சொன்னார்: “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.”—லூக்கா 19:12; மத்தேயு 25:31.
மனுஷகுமாரன் எப்போது வருவார்? நாம் பதிலுக்காக ஊகிக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே இயேசுவின் வார்த்தைகள், “உம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்கின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலின் பாகமாக இருந்தது. (மத்தேயு 24:3, 30) இந்தப் பத்திரிகையின் பக்கங்களில், அடிக்கடி காண்பிக்கப்பட்டுள்ளபடி, அந்த “வந்திருத்தல்”, 1914-ல்b “ஜாதிகளுக்கு நியமிக்கப்பட்ட காலங்களின் முடிவி”லே பரலோகங்களில் காணக்கூடாத வகையில் ஆரம்பமானது.—லூக்கா 21:24.
வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரம் சம்பவிக்கும் என்பதாகச் சொன்னவிதமாகவே, இயேசு தம்முடைய வல்லமையை ஏற்றுக்கொண்டு சாத்தானைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு விழத் தள்ளினார். பரலோகத்தில் ஒரு குரல் அறிவித்ததாவது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப் போனான்.” இது அந்தச் சமயம் முதற்கொண்டு மோசமாகி வரும் உலகநிலைமைகளுக்கு விளக்கமளிப்பதாய் இருக்கிறது. இதன் காரணமாக, பரலோகத்தில் அந்தக் குரல் தொடர்ந்து சொன்னதாவது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.”—வெளிப்படுத்துதல் 12:9–12.
அந்தக் கொஞ்ச காலம் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும். ஒருசில அதிகாரங்களுக்குப் பின்பு, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு ஒரு வெள்ளைக் குதிரையின் மீது காணப்படுகிறார். அவர் “தேவனுடைய வார்த்தை” என்றழைக்கப்படுகிறார், அவர் “புறஜாதிகளை வெட்டி”, அவர்தாமே “இருப்புக் கோலால் அவர்களை அரசாளுவார்”—கடவுளுடைய கல்போன்ற ராஜ்யம் தேசங்களை நொறுக்கி அதுதானே முழு பூமியையும் நிரப்பத்தக்கதாக வளரும் என்பதாக தானியேல் காண்பித்தபடியே இது இருக்கும்.—வெளிப்படுத்துதல் 19:11–16; தானியேல் 2:34, 35, 44, 45.
மீண்டும் ஒருபோதும் மிருகத்தனமான மனித அரசியல் வல்லரசுகள் மனிதவர்க்கத்தை ஒடுக்க மாட்டா!
உடன் அரசர்கள்
ஆனால் இன்னும் அதிகமிருக்கிறது. ராஜ்யம் வெறுமென “மனுஷகுமாரனுடைய சாயலான” ஒருவருக்கு மாத்திரமல்லாமல் “உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்” என்பதாகச் சொல்வதற்கு தானியேல் ஆவியால் ஏவப்பட்டான்.—தானியேல் 7:27.
இவர்கள் யார்? வெளிப்படுத்துதல் ஆட்டுக்குட்டியானவராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றி இவ்விதமாகச் சொல்கிறது: “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.” மேலுமாக அவர்கள் “தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என்று அது சொல்கிறது. அவர்களுடைய எண்ணிக்கை 1,44,000 என்பதாக கொடுக்கப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1; 20:6.
இவர்கள், மகா உன்னதக் கடவுள் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உலக அரசாங்கத்தில் பங்கு கொள்ள தெரிந்துகொள்ளும் ஆட்களாக இருக்கிறார்கள். நம்முடைய எதிர்காலம் கடவுள் தெரிந்துகொள்ளும் இவர்களுடைய கைகளில் இருப்பதைவிட வேறு எங்கு அதிக பாதுகாப்பாக இருக்க முடியும்? இல்லை, இந்த ராஜ்யம் மிகச் சிறந்த அரசாங்கமாக—மனிதன் அறிந்திருக்கும் எதையும்விட அதிஉயர்வானதாக இருக்கும். அதன் ஆட்சியின் கீழ், பூமி முழுவதும், கடவுளுடைய ஆதி நோக்கத்திற்கிசைவாக பரதீஸாக மாற்றப்படும்.
பின்வரும் கட்டுரையை வாசித்து, இதுவே நீங்கள் வாழ விரும்புவதற்கு தெரிந்துகொள்ளும் வகையான அரசாங்கமாக இருக்குமா என்பதைப் பாருங்கள். (w88 6/15)
[அடிக்குறிப்புகள்]
a தானியேலுடைய காட்சியைப் பற்றி நியு கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியா சொல்வதாவது: “முடிவின் காலத்திலே நித்தியமான முக்கியத்துவமுள்ள ஒரு சம்பவத்தைக் குறித்து தானியேல் இங்கு பேசிக்கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்து எந்தச் சந்தேகமுமிருக்க முடியாது.” அது மேலுமாகச் சொல்வது: “நியாய சங்கத்துக்கு முன்னால் இயேசுவின் வெளிப்படையான அறிவிப்பு, அவர் மனுஷகுமாரன் என்று உறுதி செய்யப்பட்டதற்கும் வல்லமையில் அவருடைய வருகையின் சம்பந்தமாக தெளிவான குறிப்புக்கும் மறுக்க முடியாத அத்தாட்சியை நமக்குக் கொடுக்கிறது.”
b 1982, மே 1 மற்றும் 1984, ஏப்ரல் 1 ஆங்கில காவற்கோபுரம் பார்க்கவும்.
[பக்கம் 8-ன் பெட்டி]
“இயேசுவினுடைய போதனையின் மையப் பொருள்”
“தேவனுடைய ராஜ்யம் என்ற பொருளே இயேசுவின் பிரசங்கிப்பில் மைய இடத்தைப் பெற்றிருக்கிறது.”—புதிய கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியா.
“[தேவனுடைய ராஜ்யமே] பொதுவாக இயேசுவினுடைய போதகத்தின் மையப் பொருளாக கருதப்படுகிறது.”—என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
ஆனால் “இயேசுவின் போதகத்தின் அந்த மையப் பொருள்” ஒரு சர்ச்சில் பேசப்பட்டதை நீங்கள் கடைசியாக எப்போது கேட்டீர்கள்?
[பக்கம் 9-ன் பெட்டி]
தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி குழப்பம்
சில ஆட்கள் “பூமியின் மீதுள்ள சர்ச்சே” தேவனுடைய ராஜ்யம் என்பதாக எண்ணியிருக்க, மற்றவர்கள், தற்போதைய உலகம், “ராஜ்யமாக மாறும் வரை கிறிஸ்தவ செல்வாக்கின் கீழ் படிப்படியாக மலர்ச்சியடையும்” என்பதாக நம்புகிறார்கள். இன்னும் மற்றவர்கள் “தனி நபரின் இருதயத்திலும் வாழ்க்கையிலும் கடவுளுடைய ஆட்சியே” தேவனுடைய ராஜ்யம் என்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் கடவுளுடைய ராஜ்யத்துக்கு இருப்பதெல்லாம்—ஒரு மத அமைப்பாக, படிப்படியான அரசியல் மாற்றமாக அல்லது மக்களுடைய இருதயங்களின் ஓர் ஆவிக்குரிய நிலைமையாக மாத்திரமே இருக்கிறதா?