கடவுளுடைய வார்த்தை—நம்பத்தகுந்தது என்பதற்கான அத்தாட்சிகள்
சரியா அல்லது தவறா?—பைபிள் பல சகாப்தங்களினூடே எவ்வித மாற்றமுமின்றி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
சரியா அல்லது தவறா?—பைபிள் ஏடுகளில் காணப்படும் ஆயிரக்கணக்கான வித்தியாசங்கள் கடவுளுடைய வார்த்தை என்ற அதன் உரிமைப்பாராட்டலை பலவீனப்படுத்துகிறது.
அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிப்பதற்கு முன், ஐயர்லாந்தில் டப்ளின் என்ற ஊரில் அமைந்த செஸ்டர் பீட்டி நூலகத்தில் நடைபெற்ற “கடவுளுடைய வார்த்தை” கண்காட்சியில் அளிக்கப்பட்ட சில தகவல்களைக் கவனியுங்கள்.
பழுதுபட்ட, உடைந்துகொண்டிருக்கும் நாணற்புல் தாளில் எழுதப்பட்ட நூல்களின் ஏடுகள் வயதால் தொய்ந்து அழியும் நிலையிலிருக்கின்றன. இருந்தாலும், செஸ்டர் பீட்டி நாணற்புல் தாள் ஏடுகள்தானே அந்த நூலகத்தில் மிகுந்த மதிப்புவாய்ந்த ஏடுகளாகும். அவை 1930-ல் கோப்டிக் (எகிப்து) கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டன. “[அது] ஒரு கண்டுபிடிப்பு,” என்றார் சர் ஃப்ரெட்ரிக் கென்யான், “கோடெக்ஸ் சீனாய்டிகஸ் சுவடிக்கு போட்டி.”
நம்முடைய பொது சகாப்தத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டில் இந்த நாணற்புல் கையெழுத்துப் பிரதிகள் ஏட்டு வடிவில் நகல் எடுக்கப்பட்டன. நூலகர் வில்பிரட் லாக்வுட் கூறினார்: “அவற்றில் சில மூலப் பிரதிகள் எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) ஒரு கோடெக்ஸ் ஏடு நான்கு சுவிசேஷங்களையும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தையும் கொண்டிருக்கிறது. மற்றொன்று அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெயருக்கு எழுதிய நிருபம் உட்பட அவனுடைய நிருபங்களில் பலவற்றைக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற மூலப் பிரதிகளின் நகல் எடுப்பது அதிகக் கஷ்டமான களைப்பான ஒரு வேலையாக இருந்தது மட்டுமல்லாமல், பிழைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்தது. நகல் எடுப்பவர் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் ஓர் எழுத்தைத் தவறாக வாசிப்பதும் அல்லது ஒரு வரியை விட்டுவிடுவதும் கூடிய காரியம். சில சமயங்களில் நகல் எடுப்பவர் மூல பிரதியின் சொற்களில் அக்கறையாக இருப்பதற்கு பதிலாக அந்தப் பகுதியின் சாராம்சம் அல்லது அர்த்தத்தில் அக்கறையாக இருப்பதுண்டு. நகல்களிலிருந்து நகல்கள் எடுக்கப்பட்டதால், பிழைகள் தொடரக்கூடும். இவ்வேடுகளின் அறிஞர்கள் ஒத்திருக்கும் வித்தியாசங்களை குடும்பத் தொகுதிகளாகப் பிரித்து தொகுத்தனர். இந்தச் செஸ்டர் பீட்டி நாணற்புல் தாள் ஏடு, இப்பொழுது இருக்கும் கிரேக்க பைபிளின் மிகப் பழமையான மூலப்பிரதி, இது அறிஞர்களுக்குக் காரியங்களின்பேரில் ஒரு புதிய திருப்பத்தை அளிப்பதாயிருந்தது, ஏனென்றால் அது ஏற்கெனவே தொகுதியாக அமைக்கப்பட்ட எந்தக் குடும்பங்களிலும் அமையக்கூடாதவையாக இருந்தன.
இயேசுவின் காலத்துக்கு முன்பு, விசேஷமாக எருசலேமின் அழிவை (பொ.ச.மு. 607) தொடர்ந்தும் அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு ஏற்பட்ட அழுத்தமான காலத்தைத் தொடர்ந்தும் பரிசுத்த எபிரெய வேத எழுத்துக்களின் அநேகக் கையெழுத்து நகல்கள் எடுக்கப்பட்டன. ஏறக்குறைய பொ.ச. 100-ல், ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் ஏற்றுக்கொண்ட ஓர் எபிரெய வேத வாக்கியத்தை உறுதிப்படுத்த யூத நிபுணர்கள் அப்படிப்பட்ட நகல்களைப் பயன்படுத்தினர்.
மேலும் அவர்கள் மூல வசனங்களைச் சரியாக அப்படியே நகல் எடுப்பதற்கான விதி முறைகளையும் ஏற்படுத்தினர். என்ன பொருட்கள் பயன்படுத்தப்படலாம், மற்றும் எழுத்துக்கள், வார்த்தைகள், வரிகள் மற்றும் பத்திகளின் அளவையும் இடைவெளியையும் வகுத்திருந்தனர். “ஒரு வார்த்தை அல்லது எழுத்து கூட, ஒரு யோத் [எபிரெயு எழுத்துக்களிலேயே மிகவும் சிறிய எழுத்து] கூட நினைவிலிருந்து எழுதப்படக்கூடாது,” என்றார்கள். இப்படியாக நகல் எழுதுபவர்கள் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களையும் எஸ்தர் புத்தகத்தையும் கொண்ட டோரா (போதனை) போன்ற சுருள்களை உருவாக்கினர். எபிரெயு வேத வசனங்களைக் கொண்ட அப்படிப்பட்ட மூலப் பிரதிகள் “அழுத்தமாகக் கவர்ந்திடுமளவுக்கு ஒத்திருக்கின்றன,” என்கிறது அந்தக் கண்காட்சியின் பெயர்ப்பட்டியல்.
எபிரெயு மற்றும் கிரேக்க வேதாகமத்தின் மூலப் பிரதிகளில் நுழைந்தப் பிழைகள் எந்தளவுக்கு மோசமானது? “புறமத இலக்கியங்களின் மூலப் பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்களுடன் பைபிளின் மூலப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்களை ஒப்பிடுகையில் இவை மேலோட்டமானவை என்பதை அழுத்தமாகக் கூறவேண்டும், . . . எழுதுவதில் ஏற்படும் பிழைகளால் கிறிஸ்தவ கோட்பாட்டின் எந்த ஒரு குறிப்பும் பாதிக்கப்பட்டில்லை,” என்றார் திருவாளர் லாக்வுட்.—தடித்த எழுத்துக்கள் எங்களுடையது.
இயேசுவின் காலத்துக்கு முற்பட்டதும் பிற்பட்டதுமான பைபிள் புத்தகங்கள் மற்ற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகளில் மிகப் பழமையான ஒன்றுதான் சமாரிய ஆகமங்கள் (Samaritan Pentateuch). அசீரிய அரசன் இஸ்ரவேலரைச் சிறைபிடித்துச் சென்றதற்குப் (பொ.ச.மு. 740) பின்னர் இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தின் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள்தான் சமாரியர். அவர்கள் யூதருடைய வணக்கத்தின் சில அம்சங்களைத் தங்களுடைய வணக்கத்தில் கொண்டிருந்தனர், மற்றும் பைபிளில் முதல் ஐந்து புத்தகங்களை, ஆகமங்களை மாத்திரம் ஏற்றுக்கொண்டனர். ஒரு வகை பூர்வீக எபிரெயுவில் எழுதப்பட்ட இந்தப் புத்தகங்களின் சமாரிய வசனங்கள் எபிரெயு வேத வசனத்திலிருந்து ஏறக்குறைய 6,000 வித்தியாசங்களைக் கொண்டிருக்கின்றன. “அவற்றில் பெரும்பாலானவை மூலவசனத்துக்கு முக்கியத்துவமற்றதாக இருந்தது என்றாலும் பூர்வீக உச்சரிப்பு அல்லது இலக்கணத்தின் அம்சங்கள் காக்கப்பட்டிருப்பது அக்கறைக்குரியதாயிருக்கிறது,” என்று பெயர்ப்பட்டியல் கூறினது.
பொ.ச.மு. மூன்றாவது நூற்றாண்டில், எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவிலுள்ள யூத அறிஞர் எபிரெய வேதாகமத்தின் கிரேக்க செப்டுவஜின்ட் (Septuagint) மொழிபெயர்ப்பை உருவாக்கினர். இது உலகமுழுவதுமிருந்த கிரேக்கு பேசும் யூதர்களால் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் யூதர்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர், ஆனால் ஆரம்ப கிறிஸ்தவ சபையின் பைபிளாக அது பயன்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ பைபிள் எழுத்தாளர்கள் பரிசுத்த எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள்களைக் காட்டிய போது, அவர்கள் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தினர். எபிரெய வேதாகமத்தின் செஸ்டர் பீட்டி நாணற்புல் தாள் ஏடு செப்டுவஜின்ட் தானியேல் புத்தகத்திலிருந்து 13 பக்கங்களை கொண்டிருக்கிறது.
பின்னர் பைபிளின் மொழிபெயர்ப்புகள் லத்தீன், கோப்டிக், சீரியாக், ஆர்மீனியன் போன்ற மொழிகளில் வெளிவந்தன. இந்தக் கண்காட்சியில் ஓர் எடுத்துக்காட்டு, பொ.ச. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டு பைபிள் பகுதியின் கோப்டிக் மொழிபெயர்ப்பின் ஒரு மென்தோல் கையெழுத்து ஏடாகும். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் பைபிள் அறிஞர்களுக்கும் வசனத் திறனாய்வாளருக்கும் எவ்விதத்தில் உதவுகின்றன? அப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்திய கிரேக்க மூலப்பிரதிகளின் சொல்லர்த்தமான மொழிபெயர்ப்புகளாகும். “மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்திய கிரேக்க மூலப்பிரதி நல்ல ஒன்றாயிருக்குமானால், அந்த மொழிபெயர்ப்பு கிரேக்க மூல வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதற்கு விசேஷ உதவியாக இருக்கும்,” என்று விளக்குகிறார் திருவாளர் லாக்வுட்.
அந்த நூலகத்தில் ஒரு மதிப்புவாய்ந்த, தனித்தன்மை வாய்ந்த ஒரு காட்சிநூல், நான்காவது நூற்றாண்டு சீரியாவின் எழுத்தாளர் ஈஃப்ரேம், டாஷியனின் டயடேசரான் (Diatessaron) பேரில் எழுதிய ஒரு விளக்கவுரை. ஏறக்குறைய பொ.ச.170 போல், டேஷியன் இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும் பற்றிய ஓர் ஒத்திசைவான விவரப்பதிவை இயற்றினார். இதற்கு அவர் நான்கு சுவிசேஷங்களிலிருந்து குறிப்புகளை எடுத்தார் (டயடேசரான் என்பதற்கு “நான்கின் மூலமாக” என்று பொருள்). எந்த நகல்களும் தப்பியிருக்கவில்லையாதலால், சுவிசேஷங்களில் அப்படிப்பட்ட ஓர் ஒத்திசைவு இருந்ததோ என்று கடந்த நூற்றாண்டுத் திறனாய்வாளர்கள் விவாதித்தனர். இந்தத் திறனாய்வாளர்கள், நான்கு சுவிசேஷங்களும் இரண்டாம் நூற்றாண்டின் மத்திபம் வரையாக எழுதப்படவில்லை என்றனர்.
என்றபோதிலும், கடந்த நூறு ஆண்டுகளில், டயடேசரான் ஆர்மேனியன் மற்றும் அராபிக் மொழிகளுக்கு மொழிபெயர்த்த பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து திறனாய்வாளர்கள் பின்வாங்கவேண்டியதாயிருக்கிறது. பின்பு, 1956-ல் டாஷியனின் சொந்த எழுத்துக்களில் நீண்ட வேறுபட்ட பகுதிகளைக் கொண்டதிலிருந்து இந்தத் தனித்தன்மை வாய்ந்த ஐந்தாவது/ஆறாவது நூற்றாண்டு விளக்கவுரையை சர் செஸ்டர் பீட்டி வாங்கினார். “நான்கு சுவிசேஷங்களும் அந்தச் சகாப்தத்தில் விநியோகிப்பில் இல்லை என்ற எண்ணத்தை அது பலமாக எதிர்த்தது,” என்றார் திருவாளர் லாக்வுட்.
“கடவுளுடைய வார்த்தை” என்ற கண்காட்சி, பைபிள் அறிஞருக்கும் வேதவசன திறனாய்வாளருக்கும் ஏராளமான தகவல் இருப்பதை நினைப்பூட்டின. இந்த அறிஞரில் ஒருவராகிய சர் ஃப்ரெட்ரிக் கென்யான், கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அனைத்து பைபிள் மூலப்பிரதிகளின் குறிப்பிடத்தக்க தன்மையை விளக்குவதுடன் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு விடை அளிக்கட்டும்:
“கடந்த சகாப்தங்களினூடே மாற்றங்களின்றி பைபிள் கைகள் கடந்து வந்திருக்கிறது என்ற கருத்துடன் பிரிவது சிலருக்கு கஷ்டமாக இருக்கக்கூடும் . . . இந்தக் கண்டுபிடிப்புகளின் பொதுவான பலனும் இந்த ஆய்வுகளும் வேதவசனங்களின் நம்பத்தகுந்த தன்மைக்கும் நம்முடைய கைகளில் நாம் கொண்டிருப்பது, வேண்டியளவு உத்தமத்துடன் நாம் கொண்டிருப்பது கடவுளுடைய வார்த்தை என்ற நம்பிக்கைக்கும் அத்தாட்சியைப் பலப்படுத்துகிறது என்பதை அறிவது நமக்கு உறுதியூட்டுவதாயிருக்கிறது.” (பைபிள் கதை (The Story of the Bible), பக்கம் 113)—சங்கீதம் 119:105; 1 பேதுரு 1:25. (w89 2/1)
[பக்கம் 29-ன் படம்]
மூன்றாவது நூற்றாண்டு நாணற்புல் தாள் ஏடு—2 கொரிந்தியர் 4:13–5:4
[படத்திற்கான நன்றி]
Reproduced by permission of the Chester Beatty Librar
[பக்கம் 30-ன் படம்]
எஸ்தர் புத்தகத்தின் 18-வது நூற்றாண்டு தோல் மற்றும் மென்தோல் கையெழுத்து சுருள்கள்
[படத்திற்கான நன்றி]
Reproduced by permission of the Chester Beatty Library
[பக்கம் 31-ன் படம்]
ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டு மென்தோல் கையெழுத்து கோடெக்ஸ் ஏடு —யோவான் 1:1–9, கோப்டிக் மொழிபெயர்ப்பு
[படத்திற்கான நன்றி]
Reproduced by permission
[பக்கம் 30-ன் படம்]
ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு மென்தோல் கோடெக்ஸ் ஏடு—சீரியா நாட்டு மொழியில் டாஷினியன் டயடேசரானின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஈஃப்ரேமின் விளக்கவுரை