கடவுளின் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியால் அனைவருக்கும் நீதி
“பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து . . . நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்.”—யோவான் 5:20, 22.
நீதி உங்களுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறது? பூமி முழுவதிலும் மெய்யான நீதியும், ஏற்றதாழ்வுமில்லாத வாழ்க்கையும் இருக்கும் போது, அதை பெற்றுக் கொள்வதை நிச்சயப்படுத்திக் கொள்ள நீங்கள் எவ்வளவு முயற்சியை செயலில் ஈடுபடுத்துவீர்கள்? கிரீஸில் அத்தேனேயிலிருந்த பிரபலமான சில ஆண்களும் பெண்களும் செய்தது போலவே இந்தக் கேள்விகளைக் குறித்து நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாயிருக்கிறது.
2 அவர்கள் பிரபலமான மார்ஸ் மேடையில் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த எளிதில் மறக்கமுடியாத பேச்சைக் கேட்டார்கள். அவன் முதலாவதாக, நாம் அனைவரும் நம்முடைய ஜீவனுக்காக கடன்பட்டிருக்கும் ஒரே கடவுளாகிய சிருஷ்டிகர் இருப்பதை நியாயமாக விளக்கிக் காட்டினான். இது நாம் இந்தக் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் என்ற நியாயமான முடிவுக்கு வழிநடத்தியது. இந்த இடத்தில் பவுல் அறிவித்ததாவது: “அறியாமையுள்ள காலங்களை [மனிதர்கள் விக்கிரகங்களை வணங்குவது] தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.”—அப்போஸ்தலர் 17:30.
3 வெளிப்படையாகவே அந்த அவையோருக்கு மனந்திரும்புதல் என்பது அதிர்ச்சிதரும் ஒரு கருத்தாக இருந்திருக்கும். ஏன் அப்படி? ஏதோ ஒரு செயலைக் குறித்து அல்லது சொல்லைக் குறித்து மனஉறுத்தலான உணர்வே மனந்திரும்புதல் என்று கிரேக்கர்கள் நம்பினார்கள். என்றபோதிலும் அகராதி ஒன்று குறிப்பிடுகிறபடியே, இந்த வார்த்தை “அனைத்தும் அடங்கிய ஒழுக்க மனநிலையில் மாற்றத்தை, வாழ்க்கைப் போக்கில் தீவிரமான மாற்றத்தை, முழு நடத்தையையும் பாதிக்கும் ஒரு மதமாற்றத்தை ஒருபோதும் குறிப்பிடவில்லை.”
4 என்றபோதிலும், இப்படியாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனந்திரும்புவது ஏன் பொருத்தமாக இருக்கிறது என்பதை உங்களால் காணமுடிவதைப் பற்றி சந்தேகமில்லை. பவுலின் தர்க்கத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அனைவரும் தங்களுடைய ஜீவனுக்காக கடவுளுக்கே கடன்பட்டிருக்கிறார்கள். ஆகவே அனைவருமே அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். அப்படியென்றால் கடவுள் அவர்கள் தம்மை தேட வேண்டும், தம்மைப் பற்றிய அறிவைக் கண்டடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதும் நியாயமானதுமாகவே இருக்கிறது. அந்த அத்தேனே பட்டணத்தார் அவருடைய நியமங்களையும் சித்தத்தையும் அறியாதவர்களாக இருந்தால் இந்தக் காரியங்களை அவர்கள் கற்றுக் கொண்ட பின்னர் அவைகளுக்கு இசைவாக தங்களுடைய வாழ்க்கையைக் கொண்டுவரும் பொருட்டு மனந்திரும்புவது அவசியமாயிருந்தது. இது, அவ்விதமாகச் செய்வது எவ்வளவு செளகரியமாக இருக்கும் என்பதை சார்ந்ததாக இருக்காது. பவுலின் வலிமையான உச்சக்கட்டத்திலிருந்து ஏன் என்பதை காணமுடியும்: “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 17:31.
5 அர்த்தம் நிறைந்ததும், அத்தனை நம்ப வைக்கும் ஆற்றலுள்ளதாகவும் இருக்கும் அந்த வசனம் நம்முடைய கவனமான ஆராய்ச்சிக்குத் தகுதியுள்ளதாக இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய நாளில் பரிபூரணமான நீதிக்கான நம்பிக்கையை அது தூண்டிவிடுகிறது. இந்தச் சொற்றொடர்களை கவனியுங்கள்: “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்,” “பூலோகத்தை நியாயந்தீர்ப்பார்,” “நீதியாய்,” “தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு,” “விளங்கப்பண்ணினார்,” “மரித்தோரிலிருந்து எழுப்பினார்” என்ற வார்த்தைகள் பவுலின் அவையோரிடமிருந்து பலமான பிரதிபலிப்பைக் கொண்டுவந்தது. வசனங்கள் 32–34 காண்பிக்கிறபடி, சிலர் இகழ்ந்தார்கள். மற்றவர்கள் எழுந்து போய்விட்டார்கள். என்றாலும் ஒரு சிலர் மனந்திரும்பி விசுவாசிகளானார்கள். ஆனால் அத்தேனேவின் பெரும்பாலான அவையோரைவிட நாம் ஞானமுள்ளவர்களாக இருப்போமாக. ஏனென்றால், நாம் மெய்யான நீதிக்காக ஏங்குகிறவர்களாக இருப்போமானால் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரியமாகும். வசனம் 31-ன் முழு கருத்தைப் புரிந்துகொள்ள “அவர் பூலோகத்தை நியாயந்தீர்க்க நோக்கங் கொண்டிருக்கிறார்” என்ற சொற்றொடரை முதலாவதாக கவனியுங்கள். அந்த “அவர்” யார்? விசேஷமாக நீதியின் சம்பந்தமாக அவருடைய தராதரங்கள் யாவை?
6 ஆம், அப்போஸ்தலர் 17:30 பவுல் யாரைப் பற்றி குறிப்பிடுகிறான் என்பதைக் காண்பிக்கிறது—எல்லாரையும் மனந்திரும்பும்படியாகச் சொல்லுகின்ற, நமக்கு ஜீவனைக் கொடுத்த நம்முடைய சிருஷ்டிகரான அதே கடவுளையே குறிப்பிடுகிறான். இயல்பாகவே கடவுளைப் பற்றி, அவருடைய சிருஷ்டிப்பின் வேலையிலிருந்து அதிகத்தைக் கண்டு அறியலாம். ஆனால் அவருடைய நீதியின் தராதரம், மற்றொரு ஊற்றுமூலமாகிய பைபிளிலிருந்து விசேஷமாக தெளிவாகத் தெரிகிறது. இதில் மோசே போன்ற மனிதர்களிடமாக கடவுளின் செயல்தொடர்புகளைப் பற்றிய பதிவும், இஸ்ரவேலுக்கு கடவுள் கொடுத்த கட்டளைகளும் அடங்கியிருக்கின்றன.
என்னவிதமான நியாயத்தீர்ப்பும் நீதியும்?
7 பல பத்தாண்டுகளாக மோசே கடவுளோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தான். அது அத்தனை நெருக்கமானதாக இருந்ததால் மோசேயுடன் “முகமுகமாக” பேசியதாக கடவுள் சொன்னார். (எண்ணாகமம் 12:8) யெகோவா தன்னை எவ்விதமாக நடத்தினார், மற்ற மனிதர்களோடும், முழு தேசங்களோடும் எவ்விதமாகச் செயல் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை மோசே அறிந்திருந்தான். ஏறக்குறைய அவனுடைய வாழ்க்கையின் முடிவில் மோசே நம்பிக்கையூட்டும் இந்த வருணனையைக் கொடுத்தான்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
8 ஞானத்துக்கும் உணர்வுக்கும் பேர் போனவனாக இருந்த மனிதனாகிய எலிகூவின் அத்தாட்சியையும்கூட கவனியுங்கள். அவன் அவசரமாக முடிவுகளை எடுத்த ஒரு மனிதன் அல்ல என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். மாறாக, ஒரு சந்தர்ப்பத்தில் இரு சாராரும் கலந்துகொண்டு செய்த நீண்ட வாய்மொழி தர்க்கத்தை ஒரு வார காலமாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். இப்பொழுது எலிகூ தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும் கடவுளுடைய வழிகளை அவன் ஆராய்ந்து படித்ததிலிருந்தும் கடவுளைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருந்தான்? அவன் அறிவித்ததாவது: “ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிக்கொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வ வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. மனுஷனுடைய செய்கைக்குத் தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார். தேவன் அநியாயஞ் செய்யாமலும் சர்வ வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.”—யோபு 34:10–12.
9 உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ஒரு நியாயாதிபதி எந்தப் பாரபட்சமுமில்லாமல் அல்லது நீதியைப் புரட்டாமல் அவனவனுடைய செய்கைகளுக்கு அல்லது கிரியைகளுக்குத் தக்கதாக அவனவனை நடத்த வேண்டும் என்று நாம் எதிர்பார்த்து விரும்புகின்றதையே அது துல்லிபமாக விவரிக்கிறதல்லவா? ஒரு மனித நியாயாதிபதியை நீங்கள் எதிர்ப்பட வேண்டியிருந்து, அவர் இவ்விதமாக இருந்தால் உங்களுக்கு அது பெரும் நிம்மதியாக இருக்குமல்லவா?
10 பைபிள் யெகோவாவை “சர்வலோக நியாயாதிபதி” என்பதாக குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 18:25) ஆனால் சில சமயங்களில் அவர் மனித நியாயாதிபதிகளை பயன்படுத்தினார். தம்மைப் பிரதிநிதித்துவம் செய்யும் இஸ்ரவேல நியாயாதிபதிகளிடம் அவர் எதிர்பார்த்தது என்ன? நியாயாதிபதிகளின் பணியின் வருணனைக்கு சமமாக இருக்கும் கடவுளின் அறிவுரைகளை நாம் உபாகமம் 16:19, 20-ல் வாசிக்கிறோம்: “நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். நீ பிழைக்கும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.” நீதியை விளக்கிக் காட்டும் நவீன சிலைகள், பாரபட்சமின்மைக்கு அடையாளமாக ஆர்வத்தோடு அவளை கண்கட்டுடன் இருப்பதாக வருணிக்கிறார்கள். ஆனால் கடவுள் அதற்கும் அப்பால் சென்றதை உங்களால் காணமுடியும். அவர் தம்மை பிரதிநிதித்துவம் செய்து தம்முடைய சட்டங்களை செயல்படுத்திய மனித நியாயாதிபதிகளிடமிருந்து பாரபட்சமின்மையை உண்மையில் வற்புறுத்தினார்.
11 நீதியின் சம்பந்தமாக கடவுளுடைய கருத்தைப் பற்றிய இந்த விவரங்கள் பவுலின் பேச்சினுடைய உச்சகட்டத்தோடு நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது. பவுல், அப்போஸ்தலர் 17:31-ல் கடவுள் “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்” என்பதாக அறிவித்தான். அதைத்தானே சரியாக நாம் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கலாம்—நியாயம், நீதி, பாரபட்சமின்மை. அப்படியிருந்தாலும் சில ஆட்கள் கவலைப்படக்கூடும். ஏனென்றால் வசனம் 31-ன்படி அவர் “மனுஷனைக்” கொண்டு எல்லா மனிதர்களையும் நியாயந்தீர்க்கப் போகிறார். அந்த “மனுஷன்” யார்? அவர் கடவுளுடைய உயர்வான நீதியின் தராதரத்தை கடைப்பிடிப்பார் என்பதற்கு என்ன உறுதி நமக்கிருக்கிறது?
12 அப்போஸ்தலர் 17:18, பவுல் “இயேசுவையும் உயிர்த்தெழுதலையும்” பிரசங்கித்து வந்தான் என்று நமக்குச் சொல்கிறது. ஆகவே அவனுடைய பேச்சின் முடிவிலே, ‘கடவுள் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினார்’ என்பதாக பவுல் சொன்ன போது, அவன் இயேசு கிறிஸ்துவையே அர்த்தப்படுத்தினான் என்பதை அவையோர் அறிந்திருந்தனர்.
13 தெய்வீக தராதரங்களை நிறைவேற்றிய ஒரு நியாயாதிபதியாக, கடவுள் தம்மை நியமித்திருக்கிறார் என்பதை இயேசு ஒப்புக் கொண்டார். யோவான் 5:22-ல் அவர் சொன்னார்: “பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” ஞாபகார்த்த கல்லறைகளிலிருப்பவர்கள் உயிர்த்தெழுப்பப்பட இருப்பதைப் பற்றி குறிப்பிட்ட பின்பு இயேசு மேலுமாகச் சொன்னார்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.”—யோவான் 5:30; சங்கீதம் 72:2–7.
14 அப்போஸ்தலர் 17:31-ல் நாம் வாசிப்பதோடு இந்த உறுதியான நம்பிக்கை எத்தனை சரியாய் பொருந்துகிறது! அங்கே குமாரன் “பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்” என்ற உறுதியையும்கூட பவுல் கொடுத்தான். அது, மிகக் கண்டிப்பான, வணங்காத, உணர்ச்சிகளற்ற நீதியைக் குறிப்பதாக இல்லை அல்லவா? மாறாக நீதியான நியாயத்தீர்ப்பு அதைப் பொருத்தமானதாக்க, நீதியோடு இரக்கத்தையும் புரிந்துகொள்ளுதலையும் சேர்ப்பதை உட்படுத்துகிறது. இதை நாம் கவனிக்க தவறிவிடாதிருப்போமாக: இயேசு இப்போது பரலோகத்திலிருந்த போதிலும் அவர் ஒரு மனிதனாக இருந்திருக்கிறார். ஆகவே அவரால் தம்மிடத்தில் நம்மை வைத்துப் பார்க்க முடியும். எபிரெயர் 4:15, 16-ல் இயேசுவை ஒரு பிரதான ஆசாரியனாக வருணிக்கையில் இந்தக் குறிப்பை பவுல் சுட்டிக் காட்டுகிறான்.
15 எபிரெயர் 4:15, 16-ஐ வாசிக்கையில், இயேசுவை நியாயாதிபதியாக கொண்டிருப்பதில் நாம் எவ்வளவு நிம்மதியாக உணர வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்: “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் [மற்றும் நியாயாதிபதி] நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” நீதிமன்றத்தில் இன்று, அநேகமாக நடுவர் முன்னால் அழைக்கப்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. என்றபோதிலும், நியாயாதிபதியாக கிறிஸ்துவினுடைய விஷயத்தில் நாம் சகாயத்தையும் கிருபையையும் ஏற்ற சமயத்தில் உதவியையும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக தைரியமாய் கிருபாசனத்தண்டையில் சேர முடியும். ஆனால் நேரத்தைப் பொறுத்த வரையில், ‘இயேசு எப்போது மனிதவர்க்கத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்?’ என்று கேட்பதற்கு உங்களுக்கு நல்ல காரணமிருக்கிறது.
நியாயத்தீர்ப்புச் செய்ய “ஒரு நாள்”—எப்போது?
16 கடவுள் தாம் நியமித்த நியாயாதிபதியைக் கொண்டு உலகத்தை நியாயந்தீர்க்க “ஒரு நாளைக் குறித்திருக்கிறார்” என்பதாக பவுல் சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த நியாயத்தீர்ப்பு “நாளை” எதிர்ப்பார்த்து, இயேசு இன்று, ஆம் இப்பொழுதே இன்றியமையாத ஒரு நியாயத்தீர்ப்பு வேலையை செய்து கொண்டிருக்கிறார். அதை நாம் எப்படிச் சொல்ல முடியும்? அவர் கைது செய்யப்பட்டு அநியாயமாக மரண தீர்ப்பளிக்கப்படுவதற்கு சற்று முன்பு நம்முடைய நாளை உட்படுத்தும் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற தீர்க்கதரிசனத்தை இயேசு கொடுத்தார். அதை நாம் மத்தேயு 24-ம் அதிகாரத்தில் காண்கிறோம். இயேசு, “காரிய ஒழுங்கின் முடிவு” என்பதாக அழைக்கப்படும் காலப்பகுதியை அடையாளங்காட்டும் உலக சம்பவங்களை விவரித்தார். முதல் உலகப் போர் முதற்கொண்டு நடந்து வரும் யுத்தங்கள், உணவு குறைபாடுகள், பூமியதிர்ச்சிகள் இன்னும் மற்ற வேதனைகள் இயேசுவின் தீர்க்கதரிசனம் இப்பொழுது நிறைவேறிக் கொண்டிருப்பதையும் சீக்கிரத்தில் “முடிவு வரும்” என்பதையும் காண்பிக்கிறது. (மத்தேயு 24:3–14) பல பத்தாண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள் இதைப் பைபிளிலிருந்து விளக்கிக் கொண்டு வருகிறார்கள். அநீதி நிறைந்த இந்த ஒழுங்கின் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம் என்பதை நாம் ஏன் அறிவோம் என்பதன் பேரில் உங்களுக்கு கூடுதலான அத்தாட்சி தேவைப்பட்டால் யெகோவாவின் சாட்சிகளால் உங்களுக்கு இதைக் கொடுக்கமுடியும்.
17 ஆனால் கடைசி நாட்களைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் பாகமாக இருக்கும் மத்தேயு 25-ம் அதிகாரத்தின் பிற்பகுதியை ஆராய்ந்து பாருங்கள். மத்தேயு 25:31, 32 நம்முடைய காலத்தின் போது பொருந்துகிறது: “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் [பரலோகத்தில்] வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரி”ப்பார். இப்பொழுது அவருடைய பிரிக்கும் அல்லது நியாயத்தீர்ப்புச் செய்யும் வேலையின் விளைவைப் பற்றி இயேசு சொல்லும் குறிப்பை கீழே பாருங்கள். வசனம் 46: “அந்தப்படி இவர்கள் [வெள்ளாடுகளாக அவர் தீர்ப்புச் செய்யும் ஜனங்கள்] நித்திய ஆக்கினையை அடையவும் நீதிமான்களோ [செம்மறியாடுகள்] நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.”
18 ஆகவே நாம் முக்கியமான நியாயத்தீர்ப்பு காலத்தில் வாழ்ந்துவருகிறோம். இன்று ‘கடவுளைத் தேடி அவரை கண்டுபிடிக்கிறவர்கள்’ தற்போதைய ஒழுங்கின் முடிவை தப்பிப் பிழைத்து அதைத் தொடர்ந்து வர இருக்கும் புதிய உலகத்துக்குள் பிரவேசிக்கத் தகுதியுள்ள “செம்மறியாடுகளாக” நியாயந்தீர்க்கப்படுவர். அப்போது 2 பேதுரு 3:13 செயலுருவில் காணப்படும். “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” இதுவே அப்போஸ்தலர் 17:31-லுள்ள பவுலின் வார்த்தைகள் முழுமையாக பொருந்துகிற அந்த “நாளாக”, நீதியாக பூமி நியாயந்தீர்க்கப்பட போகிற சமயமாக இருக்கும்.
19 நியாயத்தீர்ப்பு நாளானது, புதிய உலகினுள் பிரவேசிப்பதற்கு தகுதியுள்ளவர்களாக ஏற்கெனவே நியாயத்தீர்ப்பு செய்யப்பட்டிருக்கும் தப்பிப் பிழைக்கின்ற “செம்மறியாடு”களைக் காட்டிலும் அதிகமான ஆட்களை உட்படுத்தும். தம்முடைய பிதா நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை தமக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்று சொன்னபிறகு, இயேசு நடக்கவிருக்கும் ஓர் உயிர்த்தெழுதலைப்பற்றி பேசியதை நினைவுகூருங்கள். மேலுமாக அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 10:42-ல் இயேசு கிறிஸ்து “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி” என்று சொன்னான்.
20 இதன் காரணமாக கடவுள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக “பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்க்கப்”போகும், அப்போஸ்தலர் 17:31-ல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த “நியமித்த நாள்”, மரித்தோர் உயிர்த்தெழுப்பப்படும் ஒரு சமயமாக இருக்கும். அநேகமாக அனுபவிக்கப்படும் மிகப் பெரிய அநீதியாக இருக்கும் மரணத்தை மேற்கொள்ள தெய்வீக வல்லமை செயலில் பயன்படுத்தப்படுவதை காண்பது எத்தனை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சில ஆட்கள் இயேசுவின் விஷயத்திலிருந்தது போலவே அநியாயமாக அரசாங்கங்களால் அல்லது படையெடுத்து தாக்கும் சேனைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் சுழற்காற்றுகள், பூமியதிர்ச்சிகள், தீ விபத்துக்கள் மற்றும் இது மாதிரியான விபத்துக்கள் போன்ற எதிர்பாரா சம்பவங்களில் உயிரிழந்திருக்கின்றனர்.—பிரசங்கி 9:11.
கடந்த கால அநீதிகளுக்குத் தீர்வு காணப்படுகின்றன
21 நமக்கு அன்பானவர்கள் மீண்டும் ஜீவனுக்கு கொண்டுவரப்படப் போவதை காணக்கூடியவர்களாக இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அநேகர் ‘கடவுளைத் தேடவும் உண்மையில் அவரை கண்டடையவும்’ முதல் வாய்ப்பைப் பெறுகிறவர்களாக, பின்னர் “செம்மறியாடுகளின்” வெகுமதியாக இருக்கும் “நித்திய ஜீவனை” தங்களுக்கு முன்னால் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். உயிர்த்தெழுப்பப்படும் சிலரும், அநீதி நிறைந்த இந்த ஒழுங்கு முறையை தப்பிப்பிழைப்பவர்களும் பிறப்பிலேயே அங்கவீனம், குருடு, செவிடு அல்லது தெற்றுவாய் போன்ற அநியாயங்களின் பலிஆட்களாக இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் “நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியில்” தகுதியுள்ளவையாக இருக்குமா? வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளின் போது சொல்லர்த்தமான மகத்துவமான நிறைவேற்றத்தைக் காண இருக்கும் பல்வேறு தீர்க்கதரிசனங்களை உரைக்க யெகோவா ஏசாயாவை பயன்படுத்தினார். நாம் என்ன எதிர்பார்க்கக்கூடும் என்பதை கவனியுங்கள்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும் கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.”—ஏசாயா 35:5, 6.
22 இப்பொழுது இத்தனை துக்கத்தை உண்டுபண்ணும் மற்ற அநீதிகளைப் பற்றி என்ன? ஏசாயா 65-ம் அதிகாரத்தில் மகிழ்ச்சியூட்டும் உற்சாகமான சில பதில்கள் இருக்கின்றன. ஏசாயா 65:17-ஐ 2 பேதுரு 3:13-உடன் ஒப்பிடுவது, இந்த அதிகாரமும்கூட “புதிய வானங்களும் புதிய பூமி”யுமாகிய நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்கு இருக்கும் சமயத்தை சுட்டிக்காண்பிப்பதை தெரிவிக்கின்றன. இப்படியிருந்தாலும் சமாதானத்தையும் நீதியையும் கெடுப்பதிலிருந்து ஒரு சில துன்மார்க்கரை எது தடைசெய்வதாக இருக்கும்? இன்னும் சற்று மேலே வாசிக்கையில் ஏசாயா 65, பிரச்னையாக தோன்றுவதை தீர்த்துவிடுகிறது.
23 இந்த நியாயத்தீர்ப்பு நாளின் போது, தனிப்பட்டவர்கள் நித்திய ஜீவனுக்கு தகுதியுள்ளவர்களா என்பதை நியாயந்தீர்க்கும் தம்முடைய வேலையை இயேசு தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். சிலர் தகுதியுள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். கடவுளைத் தேடுவதற்குப் போதிய காலம் கொடுக்கப்பட்ட பின்பு, ஒரு வேளை “நூறு ஆண்டுகள்”கூட இருக்கலாம், சிலர் நீதியை அப்பியாசிக்க அவர்கள் மறுப்பதை காண்பிப்பார்கள். ஏசாயா 65:20-லிருந்து நாம் காண்கிறவிதமாகவே நியாயமாகவே அந்தப் புதிய உலகில் அவர்கள் ஜீவனை இழந்துவிடுவார்கள்: “நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.” இப்படியாக ஜீவனுக்குத் தகுதியற்றவர்களாக தீர்க்கப்படும் ஆட்கள் சிறுபான்மையினராக இருப்பர். நாமும்—பெரும்பாலான மற்றவர்களும் நீதியைக் கற்று அதை அப்பியாசிக்க மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்போம் என்று எதிர்பார்க்க எல்லாக் காரணமும் நமக்கிருக்கிறது.—ஏசாயா 26:9.
24 அது செயல்முறையில், ஏற்றத்தாழ்வுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்கூட அங்கு இருக்காது என்பதை அர்த்தப்படுத்துகிறது. திட்டவட்டமாக! ஏசாயா 65:21–23 அந்த உண்மையை சுட்டிக் காண்பிக்கிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும் அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள்.” இன்றைய நிலையிலிருந்து என்னே ஒரு மாற்றம்! என்னே ஓர் ஆசீர்வாதம்!
25 ஆகவே நிலையான நீதிக்காக ஆவலாயிருப்பவர்கள் தைரியங் கொள்ளலாம். அது வருவது நிச்சயமாகும்—சீக்கிரத்தில் வரும். இப்பொழுது இந்த நியாயத்தீர்ப்பு காலத்தில் எஞ்சியுள்ள காலம் நித்திய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கடவுளைத் தேடி உண்மையில் அவரை கண்டடைவதில் யெகோவாவின் சாட்சிகளை சேர்ந்து கொள்வதற்குரிய காலமாக இருக்கிறது. (w89 2⁄15)
விமர்சனத்துக்குக் கேள்விகள்
◻ கடவுளுடைய நீதியின் தராதரத்துக்கு நமக்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ வரப்போகும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு எவ்விதமாக உட்பட்டிருப்பார்?
◻ தெய்வீக நியாயத்தீர்ப்பின் சம்பந்தமாக நம்முடையது ஏன் ஒரு நெருக்கடியான காலமாக இருக்கிறது?
◻ புதிய உலகில் கடந்த கால அநீதிகள் எவ்விதமாக சரி செய்யப்படும்?
[கேள்விகள்]
1. முதல் நூற்றாண்டில் சிலர் எதிர்ப்பட்டது போன்ற அதேவிதமான கேள்விகளை நீங்கள் எவ்விதமாக எதிர்ப்படுகிறீர்கள்?
2, 3. (எ) அத்தேனேவில் பவுல் தான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் மனந்திரும்பும்படி அழைப்பைக் கொடுக்க வழிநடத்தியது என்ன? (பி) அந்த அவையோருக்கு மனந்திரும்புதல் என்பது ஏன் விநோதமாக தொனித்திருக்கக்கூடும்?
4. மனந்திரும்புதலைப் பற்றிய பவுலின் குறிப்பு என்ன தர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டது?
5. பவுலின் பேச்சுக்கு அவையோர் எவ்விதமாக பிரதிபலித்தனர்? ஏன்?
6. பூலோகத்தை நியாயந்தீர்க்க ஒரு நாளைக் குறித்திருப்பவரைப் பற்றி நாம் எப்படிக் கற்றறியலாம்?
7. யெகோவாவையும் நீதியையும் பற்றி மோசே என்ன அத்தாட்சியைக் கொடுக்கிறான்?
8. நீதியின் விஷயத்தின் பேரில் எலிகூ சொன்ன காரியத்தை நாம் ஏன் கவனிக்க வேண்டும்?
9, 10. மனித நியாயாதிபதிகளுக்கான கடவுளுடைய தராதரங்கள் நம்மை ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்? (லேவியராகமம் 19:15)
11. நீதியைப் பற்றிய இந்தப் பைபிள் சம்பந்தமான தகவலின் இந்த மறுபரிசீலனையிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
12, 13. நியாயத்தீர்ப்பு செய்வதற்கு கடவுள் எந்த “மனுஷனை” பயன்படுத்துவார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
14. இயேசு எவ்விதமாக நம்மை நடத்த நாம் எதிர்பார்க்கலாம்?
15. மனித நியாயாதிபதிகளிடமிருந்து இயேசு எவ்விதமாக வித்தியாசப்படுகிறார்?
16, 17. பரலோகத்திலிருந்து நியாயத்தீர்ப்பு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு எப்படித் தெரியும்?
18. நம்முடைய காலத்தில் நடைபெறும் நியாயத்தீர்ப்பு எதற்கு வழிநடத்தும்?
19, 20. வர இருக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் யார் பாதிக்கப்படுவர்?
21. கடந்த கால அநீதிகள் எவ்விதமாக புதிய உலகில் வெற்றிக் கொள்ளப்படும்?
22. நீதியின் சம்பந்தமாக ஏசாயா அதிகாரம் 65 ஏன் அவ்வளவு உற்சாகமளிப்பதாக இருக்கிறது?
23. தனிப்பட்ட சிலருக்கு, நியாயத்தீர்ப்பு நாளின் சாத்தியமான விளைவு என்னவாக இருக்கும்?
24. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்த வரையில் நிலைமை என்னவாக இருக்கும்?
25. கடவுள் நியமித்திருக்கும் நியாயாதிபதியிடமிருந்து வரும் நீதியின் சம்பந்தமாக உங்களுடைய நம்பிக்கையும் தீர்மானமும் என்னவாக இருக்கிறது?