வேதவாக்கியங்கள் கற்பிக்கும் பாடங்கள்: மீகா 1:1–7:20
யெகோவாவின் நீதியும் நாமமும் உயர்த்தப்படுகிறது
மீகா தீர்க்கதரிசி பொ.ச.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தான். அது இஸ்ரவேலிலும் யூதாவிலும் விக்கிரகாராதனையும் அநீதியும் இருந்த காலம். அந்த நிலைமைகள் இன்று இருப்பவற்றிற்கு அவ்வளவு இணையாக இருப்பதால், மீகாவின் செய்திகளும் எச்சரிப்புகளும் நம்முடைய காலத்துக்குப் பொருத்தமாக இருக்கிறது. அவன் அறிமுகப்படுத்திய நம்பிக்கையளிக்கும் நற்செய்திகள் சாத்தானின் ஆதிக்கம் கொண்ட ஓர் உலகில் நமக்கு நம்பிக்கையூட்டுகின்றன.—1 யோவான் 5:19.
மீகாவின் செய்தி ஒருவேளை பின்வரும் மூன்று கூற்றுகளில் சுருங்கச் சொல்லப்படுகிறது: “பொல்லாப்புச் செய்கிறவர்களுக்கு . . . ஐயோ!” “நியாயஞ்செய்து, மனதார இரக்கத்தைப் பாராட்டி, உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமென கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்?” “நாங்களும் எங்கள் கடவுளாகிய யெகோவாவின் நாமத்திலே என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.”—மீகா 2:1; 6:8; 4:5, தி.மொ.
விக்கிரகாராதனை கண்டனம் செய்யப்படுகிறது
யெகோவா தவறிழைப்பவர்களை என்றென்றுமாக பொறுத்துக்கொள்ளமாட்டார். இஸ்ரவேலிலும் யூதாவிலும் விக்கிரகாராதனையும் கலகமும் மிகுதியாகிவிட்டன. எனவே, யெகோவா அவர்களுக்கு விரோதமான சாட்சியாக செயல்படுகிறார். அவர்களுடைய விக்கிரகங்கள் நொறுக்கப்படும். அந்த விக்கிரகாராதனைக்காரர் “கழுகைப்போல முழுமொட்டை”யாவார்கள், சிறைபிடித்துச்செல்லப்படுவார்கள்.—1:1–16.
உண்மையுள்ளவர்களுக்கு, யெகோவா நம்பிக்கையின் கடவுளாக நிரூபிக்கிறார். சதிசெய்யும் கொடுங்கோலர் கள்ளர்களாகவும் திருடர்களாகவும் கண்டனம் செய்யப்படுகின்றனர். அவர்கள் அழிக்கப்படுவார்கள். என்றபோதிலும் “இஸ்ரவேலில் மீதியானவர்கள்” திரும்ப நிலைநாட்டப்படுவார்கள் என்ற வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. “தொழுவத்தில் ஆடுகளைப்போல் . . . நான் அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்,” என்று யெகோவா உரைக்கிறார்.—2:1–13.
தம்முடைய மக்களில் உத்தரவாதங்களை ஏற்றிருப்பவர்கள் நீதியை நடப்பிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதிகார துர்ப்பிரயோகம் செய்த இஸ்ரவேலின் தலைவர்களிடம் பின்வருமாறு சொல்லப்பட்டது: “நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கல்லவோ அடுத்தது. ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள் மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கினீர்கள்.” மீகா “யெகோவாவுடைய ஆவியின் பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்ட”வனாய் அவர்களுக்கு விரோதமாகக் கடவுளுடைய நியாயத்தீர்ப்புச் செய்தியை அறிவிக்கிறான். அநீதியான தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள், ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள், தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள் என்றுரைக்கிறான். எனவே, எருசலேம் “மண்மேடுகளாய்ப்போம்.”—3:1–12.
நம்பிக்கை தரும் செய்தி
உண்மை வணக்கம் பூமியெங்கும் கைக்கொள்ளப்படும். “கடைசி நாட்களில்” பல தேச மக்கள் யெகோவாவின் வழியில் போதிக்கப்படுவார்கள் என்று மீகா தீர்க்கதரிசனமுரைக்கிறான். கடவுள் நியாயந்தீர்ப்பார், இனிமேல் யுத்தம் இராது. உண்மை வணக்கத்தார் ‘தங்களுடய தேவனாகிய யெகோவாவின் நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றும் நடப்பார்கள்.’ நாடுகடத்தப்பட்ட நிலையும் வேதனையும் இருந்தபோதிலும், அவருடைய மக்கள் பகைவர்களின் கைக்குள்ளிருந்து மீட்கப்படுவார்கள்.—4:1–13.
கடவுள் வாக்குக்கொடுத்த மீட்பரில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கலாம். பெத்லகேமிலிருந்து எழும்பும் ஓர் அரசர் யெகோவாவுடைய பலத்தோடு மேய்ப்பார். “அசீரியனிடமிருந்து மீட்பு” முன்னறிவிக்கப்படுகிறது. உண்மை வணக்கத்தாரில் மீதியானவர்கள் புத்துணர்ச்சியளிக்கும் பனிபோலவும் வளமூட்டும் மழை போலவும் ஆவார்கள். எல்லா வகையான பொய் மதமும் பேய்த்தனமும் அடியோடு பிடுங்கப்படும்.—5:1–15.
யெகோவாவின் நீதி நிலைக்கும்
யெகோவாவின் மக்கள் தம்முடைய நீதியும் செம்மையுமான தராதரங்களின்படி நடக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அருவருப்பான வணக்கம் செலுத்தப்படுவதற்கு அவர் என்ன செய்தார்? தம்முடைய மக்களுக்கு நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார். “நியாயஞ்செய்து, மனதார இரக்கத்தைப் பாராட்டி, உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமென கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்?” அவர்களுடைய பொல்லாத வன்முறைச் செயல்களிலும் தன்னல சுரண்டல் வாழ்க்கையிலும் அவர்கள் தொடருவார்களானால், தங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பையே எதிர்பார்க்கலாம்.—6:1–16.
நாம் யெகோவாவின் நீதியிலும் இரக்கத்திலும் நம்பிக்கையாயிருக்க வேண்டும். குடும்ப அங்கத்தினருங்கூட விரோதிகளாக மாறிவிடுவார்கள். ஆனால் மீகா சொல்லுகிறான்: “நானோ யெகோவாவை நோக்கியவண்ணமாய் என் இரட்சிப்பின் கடவுளுக்குக் காத்திருப்பேன், என் கடவுள் எனக்கு செவிசாய்த்தருளுவார்.” (தி.மொ.) கடவுள் “கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்,” என்பதை அறிந்தவனாய்த் தீர்க்கதரிசி யெகோவாவின் நீதியில் நம்பியிருக்கிறான்.—7:1–20.
இன்றைக்குரிய பாடங்கள்: தம்முடைய மக்கள் நீதியை அப்பியாசிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். வியாபார பழக்கங்கள் சம்பந்தமாக, கிறிஸ்தவன் பின்வருமாறு தன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: “கள்ளத்தராசையும் கள்ளப்படிக்கற்களுள்ள பையையும் நான் பொறுப்பேனானால் நான் நீதியுள்ளவரோ?” (6:11, தி.மொ.) இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் மக்கள் அனைவருமே அவருடைய பூமிக்குரிய அமைப்பின் ஐக்கியத்துக்குத் தங்களுடைய பாகத்தைச் செய்து, அவருடைய சமாதான வழிகளில் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாவின் நாமத்தை உயர்த்துவதற்கும் உண்மை வணக்கத்தைப் பரப்புவதற்கும் நம்மால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும்.—2:12; 4:1–4. (w89 5⁄1)
[பக்கம் 32-ன் படம்]
வேத வசனங்களை ஆராய்தல்
●1:16—இஸ்ரவேலில் மொட்டை என்பது வெட்கம், துக்கம் மற்றும் கவலை ஆகியவற்றோடு சம்பந்தப்படுத்தப்பட்டது. (ஏசாயா 3:24–26; 15:2, 3. எரேமியா 47:5) இறந்த உறவினருக்காக துக்கிக்கும் சமயத்தில் தங்களுடைய தலைகளை மொட்டை அடித்துக் கொள்வதைச் சில புறமத தேசங்கள், ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தன. இயற்கையாக ஏற்படும் மொட்டை நியாயப்பிரமானத்தின் கீழ் அசுத்தமாகக் கருதப்படவில்லை, என்றாலும், இஸ்ரவேலர் துக்கிப்பவர்களாகத் தங்களுடைய தலைகளை மொட்டையடிக்கக்கூடாது, ஏனென்றால் அவர்கள் “யெகோவாவுக்குப் பரிசுத்த ஜனமாக” இருந்தார்கள். (உபாகமம் 14:1, 2, தி.மொ.) என்றபோதிலும் தங்களுடைய தலைகளை மொட்டையடிக்குமாறு மீகா இஸ்ரவேலிடமும் யூதாவிடமும் சொன்னான், காரணம், அவர்களுடைய பாவமுள்ள விக்கிரகாராதனைப் போக்கு அவர்களைப் பரிசுத்தமுள்ள மக்களாக இருக்க தகுதியற்றதாக்கிவிட்டதுடன், அவர்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் சிறையிருப்புக்குப் பாத்திரமாக்கியது. “கழுகு” என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அந்த எபிரெய வார்த்தை, தன் தலையில் சற்றே மென்மையான வெள்ளை இறகுடைய கழுகு வகையை (griffon vulture) சேர்ந்த கழுகைக் குறிக்கக்கூடும். கழுகின் அதே இனத்தைச் சேர்ந்திராவிட்டாலும், அதே குடும்பத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
●2:12—இந்த வார்த்தைகள் ஆவிக்குரிய இஸ்ரவேலரில் நவீன நாளைய நிறைவேற்றத்தைக் காண்கிறது. (கலாத்தியர் 6:16) குறிப்பாக 1919 முதல் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோர் மதசம்பந்தமான மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து தப்பித்து வெளியேற வழி திறக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 18:2) மீகா முன்னறிவித்தபடி, அவர்கள் “தொழுவத்தில் ஆடுகளைப்போல், மேய்ச்சல் காட்டின் நடுவில் மந்தையைப்போல்,” கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். 1935 முதல் “வேறே ஆடு”களின் “திரள் கூட்டம்” அவர்களைச் சேர்ந்திருப்பதால் அவர்கள் உண்மையிலேயே “ஜனத்திரளினால் இரைச்சலுள்ள”வர்களாகியிருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16.
●3:1–3—இங்கு தயவுள்ள மேய்ப்பராகிய யெகோவாவுக்கும் மீகாவின் நாட்களிலிருந்த அவருடைய பூர்வ மக்களின் கொடூரமான மேய்ப்பர்களுக்கும் இடையே ஒரு பலமான முரண்பாடு காணப்படுகிறது. நீதியைக் கடைபிடிப்பதன் மூலம் மந்தையைப் பாதுகாக்க அவர்களுக்கிருந்த பொறுப்பில் அவர்கள் தவறிவிட்டார்கள். அடையாள அர்த்தமுள்ள ஆடுகளிலிருந்து கம்பளி கத்தரிப்பது மட்டுமல்லாமல் ஓநாய்களைப் போல ‘அவர்களுடைய தோலையும் பிடுங்கி,’ அவர்களைக் கொடூரமாகக் கொள்ளைக்கொண்டார்கள். அந்தப் பொல்லாத மேய்ப்பர்கள் மக்களுக்கு நீதி வழங்காமல் அவர்களை “இரத்தப் பழிக்குக்” கீழ்ப்படுத்தினார்கள். (3:10) நீதியான தீர்ப்புகள் வழங்கப்படாததால், தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலாதவர்கள் தங்கள் வீடுகளையும் வேலைகளையும் இழந்தார்கள்.—2:2; எசேக்கியேல் 34:1–5-ஐ ஒப்பிடவும்.
●4:3—இந்தத் “திரளான ஜனங்களும்” “பலத்த ஜாதிகளும்” அரசியல் தேசங்களையும் அரசாங்கங்களையும் அடையாளப்படுத்துவதாயில்லை. மாறாக, இவர்கள் எல்லா தேசங்களிலிருந்தும் வரும் தனிப்பட்ட ஆட்கள், தங்களுடைய தேசபக்தியை விட்டுவிட்டு உண்மை வணக்கமாகிய யெகோவாவின் பர்வதத்தில் ஐக்கியமான சேவைக்குத் திரும்புகிறவர்கள். (ஏசாயா 2:2–4) இந்த விசுவாசிகள் கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாகத் தங்கள் நிலைநிற்கையை எடுத்திருப்பதால் யெகோவா அவர்களை ஆவிக்குரிய விதத்தில் ‘நியாயந்தீர்த்து காரியங்களைச் சீர்ப்படுத்துகிறார்.” “திரள் கூட்டத்”தின் இந்த ஆட்கள் தெய்வீக நியாயத்தீர்ப்புகளுக்கு இசைவாகத் தங்களை அமைத்துக்கொண்டு, பட்டயங்களைக் கலப்பைக்கொழுக்களாக அடித்து, இப்படியாக யெகோவாவுக்கு சாட்சிகளாயிருக்கும் தங்கள் உடன் சாட்சிகளுடன் சமாதானமாய் வாழ்கிறார்கள்.
●5:2—எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம் என்று அடையாளங்காட்டப்படுவதற்குக் காரணம் பெத்லகேம் என்ற பெயரில் இரண்டு பட்டணங்கள் இருந்தன. மீகா எருசலேமுக்குத் தெற்கே யூதாவில் இருந்தப் பட்டணத்தைக் குறிப்பிடுகிறான். இன்னொரு பட்டணம் வடக்கே செபுலோனில் இருந்தது. (யோசுவா 19:10, 15.) “எப்பிராத்தா” அல்லது “எப்பிராத்” என்ற பெயர் யூதாவில் இருந்த பெத்லகேமுக்கு அல்லது அதைச் சுற்றியிருந்த நகரப் பகுதிக்கு வழங்கப்பட்ட ஆரம்ப காலப் பெயராக இருந்தது. (ஆதியாகமம் 48:7; ரூத் 4:11) இப்படி விவரமாக அடையாளங்காட்டப்பட்டிருக்கும் காரியம் மேசியாவைப் பற்றி கடவுள் கூறின தீர்க்கதரிசனங்களின் திருத்தமான தன்மையை வலியுறுத்துகிறது.
●6:8—மீகா பாவநிவாரண பலிகளின் மதிப்பை மட்டுப்படுத்தவில்லை, ஆனால் யெகோவாவின் பார்வையில் உண்மையான மதிப்புடையது எது என்பதைச் சிறப்பித்துக் காண்பிப்பவனாயிருந்தான். (உபாகமம் 10:12–ஐ ஒப்பிடவும்.) பலிகள் யெகோவாவுக்கு ஏற்கத்தகுந்ததாக இருப்பதற்கு, பாவம் செய்தவன், நீதியையும், இரக்கத்தையும், மனத்தாழ்மையையும் காண்பிக்க வேண்டியதாயிருந்தது. இன்றும்கூட யெகோவா நம்முடைய ஊழியத்தில் அதே தன்மைகளைத்தான் எதிர்பார்க்கிறார்.—1 கொரிந்தியர் 13:4–8.
●7:4—முட்செடியும் நெரிஞ்சிலும் உடையில் சிக்கி சதையைக் கிழித்துவிடும் செடிகள். இங்கு மீகா தன்னுடைய நாளில் தேசத்தின் ஒழுக்க சம்பந்தமான வீழ்ச்சியை விளக்கிக்கொண்டிருந்தான். எனவே வழிவிலகிய இஸ்ரவேலரில் மிகச் சிறந்தவர்கூட அதிகமாக நெருங்குகிற எவருக்கும் ஒரு முட்செடியைப் போல அல்லது நெரிஞ்சிலைப் போல புண்படுத்துகிறவர்களாயும் வேதனைப்படுத்துகிறவர்களாயும் இருந்தனர் என்பதை அர்த்தப்படுத்தினான்.
[பக்கம் 31-ன் படம்]
மீகா இயேசுவின் பிறப்பிடத்தை முன்னறிவித்தான்