நாம் எப்போதாவது அவர்களைத் திரும்பவும் பார்ப்போமா?
“நீர் எங்களை என்றுமாக விட்டுச்சென்றுவிட்டீர். அது சற்றும் எதிர்பாராதது. உம்முடைய மரணம் ஆழ்ந்த வடுக்களை விட்டுச்சென்றிருக்கிற போதிலும், எங்களுடைய இருதயங்களில் நீர் என்றும் இடம்பெற்றிருக்கிறீர். நாங்கள் உம்முடன் அனுபவித்திருக்கும் அந்த அற்புதமான ஆண்டுகளை மறக்கவும் முடியாது, உங்களை மீண்டும் என்றாவது ஒரு நாள் பார்க்கும் நம்பிக்கையை விட்டுவிடவும் முடியாது.”
கோமகன் ஆட்சிபுரியும் லக்சம்பர்க்கில், அன்பார்ந்த ஒருவரின் மரணத்துக்குப்பின், செய்தித்தாளில் வெளிவரும் நினைவு அறிக்கைகளில் இது போன்ற கருத்துகளைக் குடும்பத்தினரும் நண்பர்களும் அடிக்கடி வெளியிடுகிறார்கள். இதேப் போன்ற கருத்துகள் உலகம் முழுவதிலுமுள்ள மற்றவர்களின் மனங்களிலும், இழப்பைக் குறித்த நினைவுகளின் உணர்ச்சிமிகு எண்ணங்கள் சோர்வூட்டும் ஒரு நிராசையோடு சேர்ந்து—நம்பிக்கையும் அநிச்சயமுமாக கலந்து தோன்றுகின்றன. அன்பார்ந்த ஒருவரின் மரணத்துக்குப்பின் உங்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஒரு நண்பரிடமிருந்து கேட்டிருக்கலாம்.
பெரும்பாலான மக்களுக்கு மரித்துப்போன தங்களுடைய அன்பார்ந்தவர்களைத் திரும்பவும் பார்க்கும் நம்பிக்கை மனதைக் குழப்புவதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. முதலாவதாக, இப்பொழுதெல்லாம் இந்தக் காரியத்தின் பேரில் விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கு எவரும் நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. எவராவது முயற்சி செய்கையில், இந்தக் கேள்வியின் பேரில் பெரும்பாலான மதங்கள் அளிக்கும் தகவல் மிகவும் தெளிவற்றதாக அல்லது மிகவும் நம்பத்தகாததாக இருக்கிறது.
உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடிய வண்ணமாகவே, அநேகருக்கு மரித்தோருக்கு “எதிர்கால வாழ்க்கை” அவர்களுடைய குடும்ப வம்சம் தொடர்ந்திருப்பதில்தானே இருக்கிறது. மக்கள் தங்கள் ‘பிள்ளைகளில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்’ என்ற கருத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு “வாழ்க்கை” மரித்தோருக்கு உணர்வு நிலையில் நன்மையையோ அல்லது உயிரோடிருப்பவர்கள் அவர்களைத் திரும்பவும் பார்க்கும் எதிர்பார்ப்பையோ கொண்டுவருகிறதா? நிச்சயமாக இல்லை! ஆகவே இப்படிப்பட்ட ஒரு கருத்தில் உண்மையில் எந்த ஆறுதலுமில்லை!
மரித்துவிட்டிருப்பவர்களும் இன்னும் உயிரோடிருப்பவர்களுமான நம்முடைய சொந்த நேசமானவர்களின் மேல் நாம் அக்கறையுடையவர்களாயிருப்பதன் காரணமாக இந்தக் கேள்விகளுக்கு நமக்குப் பதில்கள் தேவை: நாம் நேசிக்கும் எவரோ ஒருவர் மரிப்பாரேயானால், அவரை நாம் திரும்பவும் எப்போதாவது பார்ப்போமா? ஆம் என்பது பதிலாக இருக்குமானால் அது எப்போது மற்றும் எங்கே இருக்கும்? பரலோகத்திலா? அல்லது இங்கே பூமியிலா? உண்மையில், மரித்த அன்பானவர்களுக்கும் நமக்கும் எதிர்காலத்தில் என்ன நம்பிக்கை இருக்கிறது?
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் இந்தக் கேள்விகளின் சம்பந்தமாக நல்ல செய்தி இருக்கிறது. நிச்சயமான, கிளர்ச்சியூட்டும் நம்பிக்கை இருக்கும் அர்த்தத்தில் அது நல்லதாக இருக்கிறது. இது செய்தியாக இருக்கிறது, ஏனென்றால் மதசம்பந்தமான ஏடுகளிலிருந்து பெரும்பாலான மக்கள் கேள்விப்பட்டிருப்பது உட்பட இது வித்தியாசமான செய்தியாக இருக்கிறது.
நம்முடைய பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவ மிஷனரியாகிய பவுல் கிரீஸிலுள்ள ஏதென்ஸிலிருந்தபோது, மரித்தவர்களுக்கான வேதபூர்வமான நம்பிக்கையைப் பற்றி பேசினான். சிலர் அறிய ஆர்வமுள்ள மனதோடு கேட்டார்கள், ஆனால் மற்றவர்கள் ஆணவத்தோடு கேட்டார்கள். ஒரு சில தத்துவ ஞானிகள் அவனோடு தர்க்கம் செய்ய விரும்பியவர்களாய் பின்வருமாறு சொன்னார்கள்: “இந்த வாயாடி என்ன பேசப்போகிறான்?” மற்றவர்கள், “இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தப்படியினாலே அப்படிச் சொன்னார்கள்.” (அப்போஸ்தலர் 17:18) ஆம், பவுல் சொல்லவிருந்த நற்செய்தி உயிர்த்தெழுதலை உட்படுத்தியது!
எதிர்கால உயிர்த்தெழுதலை—மரித்தோரை திரும்பவும் பார்ப்பது—பற்றிய ஒரு பேச்சை நீங்கள் எவ்விதமாக நோக்குவீர்கள்? பிரயோஜனமற்ற பேச்சாக அது தோன்றுமா? அல்லது உங்கள் மதசம்பந்தமான கல்வி மற்றும் உங்கள் சொந்தக் கருத்துகளின் காரணமாக மரித்தோருக்கான நம்பிக்கையைப் பற்றிய பரிசுத்த வேதாகமத்தின் செய்தி ‘அந்நிய தேவர்’களிடமிருந்து வருவது போன்று புதுமையாகவும் விநோதமாகவும் தோன்றுமா?
பவுலினிடமாக அத்தேனேப் பட்டணத்தார் சொன்னதாவது: “நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப் பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:20) நம்முடைய மரித்தவர்களுக்கும், உயிரோடிருக்கும் நமக்கும் பைபிளின் நம்பிக்கையைக் குறித்து அதிகத்தை கற்றறிய நீங்களும்கூட விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் கட்டுரை உங்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கும். (W89 6/15)