மணிக் கற்கள் அரும்பொருள்கள் மத்தேயுவின் சவிசேஷத்திலிருந்து
யெகோவா தேவன், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய கிளர்ச்சியூட்டும் ஒரு பதிவை எழுதுவதற்கு முன்னாள் ஆயக்காரனாகிய மத்தேயுவை தம்முடைய ஆவியினால் ஏவினார். பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னான கையெழுத்துப் பிரதிகள் பலவற்றின் அடியெழுத்துக்கள், இந்தச் சுவிசேஷம், இயேசு பரலோகத்துக்கு ஏறிச் சென்ற பின்பு சுமார் எட்டாவது ஆண்டில் (பொ.ச. 41-ல்) எழுதப்பட்டது என்பதாக தெரிவிக்கின்றன. இது அதன் உட்புற அத்தாட்சிகளை முரண்படச் செய்வது கிடையாது. ஏனென்றால், இயேசு பொ.ச. 33-ல் சீஷராக்குபவர்களுக்குக் கட்டளை கொடுப்பதோடு பதிவு முடிவடைகிறது. மேலும் இது பொ.ச. 70-ல் ரோமர்களின் கைகளில் எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவைக் குறித்து எதுவும் சொல்வது கிடையாது.
ஹிஸ்டோரியா எக்ளியசிஸ்டிக்காவில் (மதகுருமார் சரித்திரம்) நான்காவது நூற்றாண்டு சரித்திராசிரியர் யூஸிபியஸ், இரண்டாவது நூற்றாண்டு பாப்பியஸும் இரேனியஸும், மூன்றாவது நூற்றாண்டு ஆரிஜின்னும் இந்தச் சுவிசேஷத்தை மத்தேயு எழுதியதாகவும் அதை அவன் எபிரெயுவில் எழுதியதாகவும் சொல்வதாக குறிப்பிடுகிறார். இது உண்மையில் அரமிக்காக இருந்ததா? ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் சமய பேராசிரியர் ஜார்ஜ் ஹோவார்டினால் குறிப்பிடப்பட்ட ஆதாரச் சான்றுகளின்படி அது அப்படி இல்லை. அவர் எழுதினார்: “இயேசுவின் நாட்களில் எபிரெய மொழி பலஸ்தீனாவில் பயன்படுத்தப்படவில்லை, அதற்கு பதிலாக அராமிக்கே பயன்படுத்தப்பட்டது என்ற நம்பிக்கையே அடிப்படையில் இந்த ஊகிப்புக்குக் காரணமாயிருந்தது. பிற்காலத்தில் அநேக எபிரெய தொகுப்புகளைக் கொண்டிருந்த சவக் கடல் சுருள் கண்டெடுக்கப்பட்டதும், இயேசுவின் பொதுவான காலப்பகுதியிலிருந்து பெறப்பட்ட மற்ற எபிரெய பத்திரங்களும், இப்போது, முதல் நூற்றாண்டில் எபிரெயு மொழி உபயோகத்திலும் கணிசமான அளவிலும் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது.” எபிரெய கிறிஸ்தவர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்படி மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை எழுதினான். அதைப் பொதுவான வழக்கிலிருந்த கிரேக்க மொழிக்கும்கூட அவன் மொழிபெயர்த்திருக்கக்கூடும்.
மத்தேயு சுவிசேஷத்தை வாசிக்கும்படியாக நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம். அதிலுள்ள மணிக்கற்கள் சிலவற்றை நாம் பார்க்கும் போது பதிவை தெளிவாக்கும் பின்னணி தகவலை கவனிக்கவும்.
பிறப்பும் ஆரம்ப கால ஊழியமும்
மத்தேயுவின் சுவிசேஷம், வம்சாவழியையும், இயேசுவின் பிறப்பையும் பற்றிய விவரத்தோடு ஆரம்பமாகிறது. மரியாள் கர்ப்பவதியாயிருப்பது தெரிய வந்தபோது, அவளை விவாகம் பண்ணிக் கொள்ள இருந்த யோசேப்பு “இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.” (1:19) ஆனால் அவர்கள் வெறுமென விவாகத்துக்காக நிச்சயிக்கப்பட்டு மாத்திரமே இருப்பதன் காரணமாக அவன் எவ்விதமாக இதைச் செய்ய முடியும்? ஆம், யூதர்களை பொறுத்தமட்டில், ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட கன்னிகையான பெண்ணுக்கு விவாகமான பெண்களைப் போன்ற அதே பொறுப்புகள் இருந்தன. அவள் வேறு ஒருவனோடு பாலுறவுக் கொண்டால், அவள் ஒரு விபசாரி என்பது போல அவள் கல்லெறியப்படலாம். (உபாகமம் 22:23–29) நிச்சயதார்த்தத்தின் கட்டுப்படுத்துகிற இந்தத் தன்மையின் காரணமாக அவர்களை எந்த ஒரு சமயசடங்கும் சேர்த்து வைக்காதிருந்த போதிலும் யோசேப்பு மரியாளைத் தள்ளிவிட திட்டமிட்டான்.
மத்தேயு சுவிசேஷத்தின் ஆரம்ப அதிகாரங்களில் இயேசுவின் மலைப்பிரசங்கம் இடம் பெறுகிறது. அதில் கிறிஸ்து ஒரு சகோதரனை “இகழ்ச்சியான பேசக்கூடாத வார்த்தையினால் பேசுகிறவன்” “உச்ச நீதிமன்றத்துக்கு” ஏதுவாயிருப்பான் என்பதாக எச்சரித்தார். (5:22 NW) இப்படிப்பட்ட ஒரு பேச்சு ஒரு சகோதரனை அறிவில்லாத முட்டாள் என்று அழைப்பதற்கு சமமாக இருந்தது.
ஆனால் “உச்ச நீதிமன்றம்” எது? அது எருசலேமின் 71 உறுப்பினர் அடங்கிய ஆலோசனை சங்கமாக இருந்தது. அதில் உறுப்பினராக தகுதியுள்ளவராவதற்கு என்ன அனுபவம் தேவையாக இருந்தது? மக்ளின்டாக் மற்றும் ஸ்டாரங்ஸ் சைக்ளோப்பீடியா சொல்கிறது: “விண்ணப்பதாரர் ஒழுக்கத்திலும், சரீரத்திலும் குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் நடுத்தர வயதினனாக, உயரமானவனாக, நல்ல தோற்றமுள்ளவனாக, பணக்காரனாக, படித்தவனாக இருக்க வேண்டும் . . . அவன் பல மொழிகளை அறிந்தவனாய் இருத்தல் வேண்டும் . . . மிகவும் வயதானவர்களும், மதம் மாறியவர்களும், மந்திரிகளும், நிதினீமியரும் அவர்களுடைய தனி மனப் போக்குகளின் காரணமாக தகுதிப் பெற்றில்லை; அதேவிதமாக பிள்ளைகளில்லாத வேட்பாளர்களும்கூட குடும்ப விவகாரங்களில் அனுதாபப்படக்கூடாதவர்களாக இருக்கும் காரணத்தால் தேர்ந்தெடுக்கப்படமுடியாது . . . மேலும் ஓர் ஆசாரியன் லேவியன் அல்லது இஸ்ரவேலனுக்கு முறையாக பிறந்த பிள்ளைகள் என்பதை நிரூபிக்க இயலாதவர்களும்கூட தேர்ந்தெடுக்கப்பட முடியாது. உயர் ஆலோசனை சங்கத்துக்கான வேட்பாளர் எல்லாவற்றிற்கும் முதலாவதாக எழுபத்தியோரு உறுப்பினரில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக தன்னுடைய சொந்த ஊரில் ஒரு நியாயாதிபதியாக இருந்திருப்பது அவசியமாகும்; அதற்குப் பின்னர் சிறிய ஆலோசனை சங்கத்துக்கு அவர் மாற்றலாகியிருக்க வேண்டும் . . . பின்பு மீண்டுமாக இரண்டாவது சிறிய ஆலோசனை சங்கத்துக்கு அவர் தகுதிப் பெற்று முன்னேறியிருக்க வேண்டும்.”
ஆகவே, “தன் சகோதரனை, இகழ்ச்சியான பேசக்கூடாத வார்த்தையினால் பேசுகிறவன்”, யூத உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்க்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவன் சுமக்கிறதற்கு ஒத்த குற்றத்தையுடையவனாயிருக்கிறான் என்று இயேசு அர்த்தப்படுத்தினார். நம்முடைய சகோதரர்களை அவதூறாக பேசாதிருப்பதற்கு என்னே ஓர் எச்சரிப்பு! மிக உயர்ந்த நீதிமன்றத்தில், “சர்வலோக நியாயாதிபதி”யாகிய யெகோவாவுக்கு முன்பாக நாம் கண்டனம் செய்யப்பட ஒரு போதும் தகுதியுள்ளவர்களாகாதபடிக்கு நம்முடைய நாவை நாம் அடக்குவோமாக.—ஆதியாகமம் 18:25; யாக்கோபு 3:2–12.
இயேசு ஒரு திறம்பட்ட போதகர்
இந்தச் சுவிசேஷம் இயேசுவை கேள்விகளுக்குத் திறம்பட்ட வகையில் பதிலளிக்கக்கூடிய ஒரு போதகராகவும்கூட சித்தரித்துக் காட்டுகிறது. உதாரணமாக, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், அவர், தம்முடைய சீஷர்கள் ஏன் உபவாசிக்கிறதில்லை என்பதை விளக்கினார். (9:14–17) அவர் உயிரோடிருக்கையில் அவர்கள் உபவாசமிருக்க எந்தக் காரணமுமிருக்கவில்லை. ஆனால் அவர் முன்னறிவித்தவிதமாகவே, அவர் மரித்தபோது அவர்கள் உபவாசித்து துக்கித்தார்கள். ஏனென்றால் அவருடைய மரணம் ஏன் அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாதவர்களாயிருந்தார்கள். என்றபோதிலும் பெந்தெகொஸ்தேவின் போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பின்பு அவர்கள் அதிகமான அறிவை பெற்றுக் கொள்ள, அவர்கள் இனிமேலும் துக்கத்தில் உபவாசிக்கவில்லை.
அதே பொருளைப் பற்றி இன்னும் பேசுபவராய், இயேசு பழைய வஸ்திரத்தோடு, சுருங்காத கோடி துண்டை எவரும் இணைக்க மாட்டார்கள், ஏனென்றால் அதனுடைய பலம், ஒரு கிழிசலை இன்னும் மோசமாக்கிவிடும் என்று சொன்னார். மேலுமாக புது திராட்சரசம் பழந்துருத்திகளில் வார்த்து வைக்கப்படுவதில்லை. ஒரு துருத்தி அல்லது தோல் சீசா என்பது பதனிடப்பட்ட ஒரு மிருகத்தின் தடித்த தோலாக, ஒரு திறப்பைத் தவிர எல்லாப் பக்கங்களிலும் தைக்கப்பட்டிருக்கும். புதிய திராட்சரசம் பொங்குகையில் அது கரியமில வாயுவை உற்பத்தி செய்ய, இது பழைய, காய்ந்து போன துருத்திகள் வெடித்துவிடுவதற்கு போதிய அழுத்தத்தை உருவாக்குவதாக இருக்கும். இதோடு ஒப்பிட, கிறிஸ்து கற்பித்த சத்தியமானது பழமையான வளைந்துக் கொடுக்காத யூதேய மதத்துக்கு ஏற்றுக் கொள்வதற்கு அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலுமாக, அவர் அதன் உபவாச பழக்கவழக்கங்களோடும் மற்ற சடங்குகளோடும்கூட நீடித்து வழங்கி வழக்கற்றுப் போன எந்த ஒரு மத அமைப்பையும் ஒட்டுப்போட்டு சீராக்கவோ அல்லது நீடித்திருக்கச் செய்யவோ முயற்சிக்கவில்லை. மாறாக, கடவுள் ஒரு புதிய வணக்க முறையை ஏற்படுத்த இயேசுவை உபயோகித்தார். அப்படியென்றால் நிச்சயமாகவே நாம் கலப்பு விசுவாச இயக்கங்களை ஆதரிக்கவோ அல்லது பொய்மதத்தை நீடித்திருக்கச் செய்யவோ எதையும் செய்யக்கூடாது.
கடவுளுடைய குமாரனிடமிருந்து வரும் புத்திமதிக்குச் செவி கொடுங்கள்
மத்தேயுவினுடைய மறுரூபப் பதிவின்படி, கடவுள் இயேசுவை தம்முடைய அங்கீகரிக்கப்பட்ட குமாரன் என்றழைத்து நாம் அவருக்கு செவி கொடுக்க வேண்டும் என்று சொன்னார். (17:5) எனவே தம்மில் விசுவாசம் வைக்கும் நபரை இடறலடையச் செய்கிற எவனையும் அவனுடைய கழுத்திலே ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்பது போன்ற கிறிஸ்துவின் எல்லாப் புத்திமதிக்கும் நாம் செவி கொடுக்க வேண்டும். (18:6) இது எப்படிப்பட்ட ஒரு கல்லாக இருந்தது? இது சிறிய ஒன்றல்ல. ஏனென்றால், விட்டத்தில் நான்கு அல்லது ஐந்து அடிகளாக இருக்கும் ஒரு மேற்பாதி எந்திரக்கல்லை இயேசு அர்த்தப்படுத்தினார். இதை ஒரு பெரிய கீழ்ப்பாதி கல்லில் பொருத்துவது மிருக பலத்தைக் கேட்பதாக இருந்தது. தன்னுடைய கழுத்தைச் சுற்றி இப்படிப்பட்ட பாரமான எடையோடு எவரும் சமுத்திரத்தில் உயிர்பிழைத்திருக்க முடியாது. அப்படியென்றால், செயல்முறையில், இயேசுவைப் பின்பற்றும் எவரையும் இடறலடையச் செய்யும் குற்றத்தை தவிர்க்கும்படியாக இயேசு நமக்கு புத்திமதி கொடுத்துக் கொண்டிருந்தார். அதேப் போன்ற ஓர் எண்ணத்தோடு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும் உன் சகோதரன் இடறுகிறதற்கு ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.”—ரோமர் 14:21.
கடவுளுடைய குமாரன், சதுசேயர்களுக்கும் பரிசேயர்களுக்கும் ஐயோ என்று சொல்லி அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருப்பதாகச் சொன்னபோது அவர் மறைமுகமான புத்திமதியைக் கொடுத்தார். (23:27, 28) கல்லறைகளையும் சமாதிகளையும் மக்கள் தற்செயலாக தொட்டு அதனால் தீட்டுப்பட்டவர்களாகாதபடிக்கு அவைகளுக்கு வெள்ளையடிப்பது பழக்கமாயிருந்தது. இந்தப் பழக்கத்தை ஜாடையாக குறிப்பிடுவதன் மூலம், சதுசேயரும் பரிசேயரும் வெளிப்புறத்தில் நீதிமான்களாக தோற்றமளித்து ஆனால் “உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்”திருந்தார்கள் என்பதை இயேசு காண்பித்தார். மறைமுகமாக குறிப்பிடப்பட்ட இந்தப் புத்திமதிக்குச் செவி கொடுப்பது வழி விலகிச் செல்வதை விட்டொழித்து “மாயமற்ற விசுவாசத்தில்” நம்மை செயல்படச் செய்யும்.—1 தீமோத்தேயு 1:5; நீதிமொழிகள் 3:32; 2 தீமோத்தேயு 1:5.
நமக்கு முன்மாதிரியாயிருப்பவர் உத்தமத்தைக் காத்தவர்
இயேசுவினுடைய ‘வந்திருத்தலைப் பற்றிய அடையாளத்தை’க் குறித்து பதிவு செய்த பின்பு, மத்தேயு, இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டது, கைது செய்யப்பட்டது, விசாரிக்கப்பட்டது, மேலுமாக அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிச் சொல்கிறான். கழுமரத்தில் இயேசு நோவு உணர்ச்சியை அகற்றும் பாதிப்புடையதாக இருந்த கசப்பு கலந்த காடியை குடிக்க மறுத்துவிட்டார். (27:34) குற்றவாளிகள் கழுமரத்தில் ஏற்றப்படுகையில் நோவை தணிக்க பெண்கள் அவர்களுக்கு இப்படிப்பட்ட காடியைக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மாற்கு 15:23-ல் வாசனையை மேம்படுத்த திராட்சரசம் “வெள்ளைப் போளம் கலந்த”தாயிருந்தது என்று சொல்லுகிறது. இயேசு குடிக்க மறுத்த திராட்சரசத்தில் வெள்ளைப்போளமும் இருந்தது என்பது தெளிவாக இருக்கிறது. அவர் தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையில் உச்சக்கட்டத்தை எட்டியபோது அவர் போதை மயக்க மருந்தை உட்கொள்ளவோ அல்லது உணர்வுகளை மழுங்கச் செய்யவோ விரும்பவில்லை. மரணம் வரையாக உண்மையுள்ளவராய் நிலைத்திருப்பதற்கு தம்முடைய உணர்ச்சிகளை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டிருக்க அவர் விரும்பினார். நம்முடைய முன்மாதிரியைப் போலவே, யெகோவா தேவனிடமாக நம்முடைய உத்தமத்தைக் காத்துக் கொள்வது குறித்து எப்பொழுதும் அக்கறையுள்ளவர்களாயிருப்போமாக.—சங்கீதம் 26:1, 11. (w89 7⁄15)