இந்தியாவில் அறுவடையில் களிகூருதல்
எனக்கு அது நம்புவதற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது—பத்து மொழிகளில் 21 மாநாடுகள் நடைபெற்றதும், தெய்வீக நீதியின் அர்த்தத்தைப் பற்றி கற்றறிய 15,000-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராயிருந்ததும், நீதியின் உன்னதக் கடவுளான யெகோவாவுக்குத் தங்களுடைய அன்பை அடையாளப்படுத்த 545 பேர் முழுக்காட்டப்பட்டதும்! இந்தியாவிலுள்ள 9,000 யெகோவாவின் சாட்சிகளுக்கு இது 1989-ன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனால் விசேஷமாக எனக்கோ களிகூருவதற்குக் காரணமிருந்தது. ஏன்? 1926, ஜூலை மாதம் முதன்முதலாக இந்திய மண்ணில் காலெடுத்து வைத்த போது, இப்பேர்ப்பட்ட மகத்தான நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் என்று நான் கற்பனை செய்துபார்க்கவில்லை. அந்தச் சமயத்தில் முழு தேசத்திலுமே 70-க்கும் குறைவான ராஜ்ய செய்தியின் பிரஸ்தாபிகளே இருந்தனர். 64 ஆண்டுகளுக்கு முன்பாக நானும் என் கூட்டாளியும் பெற்றுக்கொண்ட நியமிப்புதான் என்னே!
நான் எவ்வாறு இந்தியாவுக்கு வந்தேன்
1926, மே மாதம் இங்கிலாந்திலுள்ள லண்டனில் ஒரு பெரிய மாநாட்டில் ஆஜராயிருந்துவிட்டு, பின்னர் ஷெஃபீல்டிலிருந்த என்னுடைய வீட்டுக்கு உடனடியாகத் திரும்பினேன். இரண்டு நாட்களுக்குப் பின்பு வெளி ஊழியத்திலிருந்து திரும்பிய போது எனக்காக ஒரு தந்தி காத்திருந்ததை நான் கண்டேன். அது வாசித்ததாவது: “ஜட்ஜ் ரதர்ஃபோர்டு உங்களைக் காண விரும்புகிறார்.”
காவற்கோபுரம் சங்கத்தின் இரண்டாவது தலைவர் சகோதரர் ரதர்ஃபோர்டு அண்மையில் நடந்த மாநாட்டுக்காக நியு யார்க்கிலிருந்து வந்து, இன்னும் லண்டனில்தானே இருந்தார். அடுத்தநாள் காலை, லண்டனுக்குச் செல்லும் இரயிலிலிருந்தபடியே, ‘இதன் அர்த்தம் என்ன?’ என்பதாக சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிளைக்காரியாலயத்தில் நான் சகோதரர் ரதர்ஃபோர்டிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என்னிடம், “உலகின் எந்தப் பகுதியில் ஊழியம் செய்கிறாய் என்பதை நீ பொருட்படுத்துகிறாயா?” என்றார்.
“இல்லை” என்று நான் பதிலளித்தேன்.
“இந்தியாவுக்குப் போக நீ விரும்புவாயா?”
“எப்போது நான் போகவேண்டும்?” என்பதாக தயக்கமின்றி பதிலளித்தேன். இவ்விதமாக, மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜார்ஜ் ரைட்டும் நானும் இந்தியாவை நோக்கிக் கப்பற் பயணம் மேற்கொண்டோம். எனக்கு 31 வயதாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்பினேன் என்பது குறித்து என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எந்தச் சந்தேகமுமிருக்கவில்லை.
வாழ்க்கைப் போக்கைக் குறித்து தீர்மானித்தல்
1918-ற்குள் முதல் உலகப் போர் முடிவுக்கு வந்திருந்தது. பிரிட்டன் நாட்டுப் படையில் நான்காண்டு சேவையை நான் அப்போதுதான் முடித்திருந்தேன். எனக்குப் புகைப்படக்கலையிலும் வானொலி ஒலிபரப்பிலும் ஆர்வமிருந்தது. நல்ல வியாபார வாய்ப்புகள் எனக்குத் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் நான் விவாகம் செய்துகொள்வதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்றபோதிலும் அதேசமயத்தில், சில காரியங்களை நான் புரிந்து கொள்ள ஆரம்பிக்க, இது என்னுடைய வாழ்க்கையின் முழுகவனத்தையும் மாற்றிக் கொண்டிருந்தது.
என்னுடைய தந்தை, வேதாகமத்தில் படிப்புகள் (Studies in the Scriptures) என்ற புத்தகத் தொகுப்பை, அந்தச் சமயத்தில் கோல்போர்டர் என்றழைக்கப்பட்ட ஒரு பயனியரிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தார். அவர் எங்கள் குடும்பத்தோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்திருந்தார். அந்தப் பெண் ஒரு பள்ளி ஆசிரியையாக இருந்தவர். காலப்போக்கில், என் வயதிலிருந்த ஒரு சில ஆண்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவளுடைய வீட்டுக்குத் தேநீர் அருந்தவும் ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்கவும் சென்றுகொண்டிருந்தோம். யெகோவாவால் பயன்படுத்தப்படுவதற்கு எங்களை அளிக்கும்படியாக அவள் எங்களிடம் திரும்பத் திரும்பச் சொன்னாள். “ஒரு நியமிப்பை ஒருபோதும் மறுத்துவிடாதீர்கள்” என்றாள். விவாகமில்லாதிருக்கவும்கூட அவள் என்னை உற்சாகப்படுத்தினாள்.
கொஞ்ச காலம், நான் என்ன செய்வேன் என்பதைக் குறித்து போராடினேன். மத்தேயு 19:21-ல் இயேசு ஐசுவரியவானாயிருந்த இளம் அதிபதியிடம் சொன்ன வார்த்தைகள் எனக்கு உதவி செய்தன: “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா.” நான் வேலை செய்து கொண்டிருந்த வியாபார ஸ்தலத்தில் என் வேலையை ராஜினாமா செய்தேன், மூன்றே மாதங்களில், நான் ஒரு கோல்போர்டர் ஆனேன். இதுவும், விவாகமில்லாதிருக்க நான் செய்த தீர்மானமும், நான்காண்டுகள் கழித்து இந்தியாவுக்கு அந்த அருமையான நியமிப்பைப் பெற்றுக் கொள்ள என்னைத் தகுதியுள்ளவனாக்கியது.
பிரமாண்டமான புதிய நிலம்
ஜார்ஜ் ரைட்டும் நானும் இந்தியாவில் மட்டுமல்ல, பர்மாவிலும் (இப்பொழுது மையன்மார்) இலங்கையிலும்கூட ராஜ்ய பிரசங்கிப்பு வேலையைக் கண்காணிக்கும் பொறுப்பளிக்கப்பட்டோம். பின்னால் பெர்சியாவும் (இப்பொழுது ஈரான்) ஆப்கானிஸ்தானும் சேர்க்கப்பட்டன. இந்தியாவின் நிலபரப்பு ஐக்கிய மாகாணங்களைவிட ஓரளவு சிறியதாக இருப்பினும் அதன் மக்கள்தொகை பல மடங்குகள் அதிகமாக இருந்தது. அது பல்வேறு உணவுபொருட்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள், பல்வேறு மத நம்பிக்கைகளையுடைய—இந்துக்கள், முகமதியர்கள், பார்சி, சமணர்கள், சீக்கியர், புத்த மதத்தினர், கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டன்டினர்—மக்களைக் கொண்ட தேசமாக இருந்தது.
இந்தியாவில் பிரசங்க வேலை 1905-ல் ஆரம்பமாயிருந்தது. 1912-ல் உவாட்ச் டவர் சோஸையிட்டியின் முதல் தலைவர் சார்லஸ் T. ரஸல் வந்தபோது அது தீவரமடைந்தது. ரஸல், வைராக்கியமுள்ள ஓர் இளம் பைபிள் மாணாக்கனாகிய A. J. ஜோஸப்பை நேருக்கு நேர் சந்தித்துப் பேசியது, தொடர்ந்து பிரசங்க வேலை நடை பெறுவதற்காக நிரந்தரமான ஓர் ஏற்பாட்டுக்கு வழிநடத்தியது. ஜோசப் பைபிள் பிரசுரங்களைத் தன் தாய் மொழியாகிய மலையாளத்தில் மொழிபெயர்த்து குறிப்பாக தென் இந்தியாவில் விரிவாக பிரயாணம் செய்து சொற்பொழிவுகளை ஆற்றினார். இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 3 சதவிகிதம் மாத்திரமே இப்பகுதியில் வாழ்ந்தபோதிலும் இன்று, இந்தியாவிலுள்ள பிரஸ்தாபிகளில் பாதிபேர் மலையாளம் பேசப்படும் இந்தப் பகுதியில்தானே இருக்கிறார்கள். முன்னர் திருவாங்கூராகவும் கொச்சினாகவும் இருந்த இந்தப் பகுதி 1956-ல் கேரளம் மாநிலமானது.
ஜார்ஜ் ரைட்டும் நானும் மாறி மாறி பம்பாய் கிளைக்காரியாலயத்துக்குச் செல்வதும் விரிவாக பிரசங்கிப்புப் பிரயாணங்களுக்குச் செல்வதுமாக இருந்தோம். இந்தியாவின் இரயில்பாதைகளையும் குதிரைகளையும் மாட்டுவண்டிகளையும் நாங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டோம். பின்னர் ஒரு காரை நாங்கள் பயன்படுத்தினோம். அப்போதெல்லாம், பிரசுரங்களை வெறுமென விட்டு வருவதும், தொகுதியாகப் படிப்பதற்காக ஓரிடத்தில் கூடிவரும்படியாக அழைப்பு விடுப்பதுமே முறையாக இருந்தது. ஆங்கிலம் பேசும் பெயர் கிறிஸ்தவர்களுக்கு நாங்கள் கவனம் செலுத்தினோம்.
ஆரம்பத்தில், எல்லாக் காவற்கோபுரம் சந்தாதாரர்களின் பெயர்களும் விலாசங்களும் எனக்குக் கொடுக்கப்பட்டது. இவர்கள் பெரும்பாலும் இரயில்வேயில் அல்லது தந்தி அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களாக இருந்தார்கள். உண்மையாக அக்கறைக் காண்பிப்பவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பொருட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் நான் சென்று சந்தித்தேன். பல ஆண்டுகளாக, நான் ஜனவரியில் வட இந்தியாவிலுள்ள பஞ்சாபுக்குச் சென்று லாகூரிலிருந்து கராச்சி வரை பயணம் செய்வேன். பொதுமக்கள் பைபிளில் விருப்பமில்லாதவர்களாக இருந்ததால், பெயர் கிறிஸ்தவர்கள் இருந்த கிராமங்களிலும் அவர்கள் வெகுசிலராயும் தூர இடங்களிலும் இருந்தனர்.
மொழிபெயர்ப்பாளராக ஒரு சகோதரர் என்னோடே பிரயாணம் செய்வார். நாங்கள் மக்களோடு வாழ்ந்து அவர்களோடு சாப்பிட்டோம். கிராமவாசிகள், மேலே கூரை அல்லது உத்திரம் கொண்ட வெயிலில் காயவைத்து கெட்டியாக்கப்பட்ட மண்வீடுகளில் வசித்து வந்தனர். அவர்கள் கயிறு கொண்டு பின்னி முறுக்கப்பட்டதும், மரத்தாலான நான்கு கால்களையுடையதுமான எளியக் கட்டில்களில் உறங்கினர். அநேக விவசாயிகள், கையில் பைபிளோடு எளிய கட்டில்களில் அமர்ந்து கொண்டு, அரை அல்லது ஒரு மீட்டர் நீளமுள்ளத் தண்டைக்கொண்ட புகைக்கும் குழாயில் புகைத்துக் கொண்டு, நாங்கள் கடவுளுடைய சத்தியங்களை விளக்குகையில் ஒரு வசனத்திலிருந்து அடுத்த வசனத்துக்குத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருப்பர். வருடத்தில் பெரும்பகுதி மழையில்லாமல் இருப்பதால், திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்துவது மிகச் சிறந்ததாக இருந்தது. பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் பெருமித உணர்வினால், இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு வராத போதிலும் இந்தியர்கள் எவ்விடத்திலும் கூடிவருவர்.
முடிந்தவரை அநேக மொழிகளில் நாங்கள் பிரசுரங்களை வெளியிட முயற்சி செய்தோம். கன்னட மொழியில் வெளியான உலக வேதனைகள் சிறு புத்தகம், குறிப்பாக நற்பயன் விளைவித்தது. இது, கன்னட மொழி மத பத்திரிகை ஆசிரியரை அவருடைய பத்திரிகைக்குக் கட்டுரைகளை எழுதும்படியாக எங்களை அழைக்கத் தூண்டியது. கொஞ்ச காலமாக இருவாரங்களுக்கு ஒரு முறை தொடர்கட்டுரைகளாக மீட்பு புத்தகத்தை நாங்கள் அதில் வெளியிட்டோம்.
1926 முதல் 1938 வரையான வருடங்களில் உற்சாகமுள்ள பயனியர்களால் பிரமாண்டமான அளவில் பிரசங்கிப்பு வேலை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நாங்கள் பயணம் செய்து ஏராளமான பிரசுரங்களை விநியோகித்தோம். ஆனால் அதிகரிப்பு மிதமாகவே இருந்தது. 1938-ற்குள், 24 சபைகளில் 18 பயனியர்களும் 273 பிரஸ்தாபிகளும் மாத்திரமே இந்தியா முழுவதிலும் அங்குமிங்குமாக இருந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் போது
இரண்டாம் உலகப் போர் 1939-ல் துவங்கியது, என்றாலும் நாங்கள் எங்கள் பிரசங்கிப்பு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம். உண்மையில், 1940-ம் ஆண்டின் ஆரம்பத்தில் தெரு ஊழியம் அறிமுகப்படுத்தப்பட்டது. நமது இந்திய சகோதரிகளும்கூட இதில் கலந்து கொண்டனர். உள்ளூர் பழக்க வழக்கங்களை முன்னிட்டுப் பார்க்கையில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பல வருடங்களுக்குப் பின்னால், இப்படிப்பட்ட வேலையில் பங்கு கொள்ளுமாறு பைபிள் மாணாக்கர் ஒருவரை சாட்சி, கேட்ட போது அவள் சொன்னாள்: “நான் ஓர் இந்தியப் பெண். தெருவில் நின்றுகொண்டு ஓர் ஆணிடம் நான் பேசக்கூடாது, ஏனென்றால் ஊரே என்னை இழிவாகப் பேசிவிடும். ஓர் உறவினனாக இருந்தாலும்கூட தெருவில் நான் ஒரு மனிதனோடு பேச முடியாது.” என்றபோதிலும் இந்தியாவிலுள்ள நமது கிறிஸ்தவ சகோதரிகள், வெளிப்படையாய் ஊழியஞ் செய்யும் வைராக்கியமுள்ள ஊழியர்களாக இருக்கிறார்கள்.
அந்த ஆரம்ப காலங்களில், மாநாடுகளும்கூட நடத்தப்பட்டன. காலைப் பொழுது வெளிஊழியத்துக்காக ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று அங்கு வசிப்பவர்களுக்கும் வழியில் நடந்து செல்பவர்களுக்கும் பொதுக்கூட்டங்களைப் பற்றிச் சொல்லப்பட்டது. இவைகளில் ஒன்றுக்கு 300 பேர் வந்திருந்தார்கள். கூட்டங்கள் மூங்கில் மற்றும் பனை ஓலை கொண்டு அமைக்கப்பட்ட பந்தலின் நிழலில் நடத்தப்பட்டன. வெகுசிலரே கடிகாரங்களைச் சொந்தமாக வைத்திருந்ததால், ஆரம்பிக்கும் நேரத்தைக் குறிப்பாகச் சொல்வது பிரயோஜனமாயிருக்கவில்லை. அவர்கள் நினைத்தபோது வந்தார்கள். போதிய அளவு ஆட்கள் சேர்ந்தவுடன் கூட்டங்கள் துவங்கப்பட்டன. கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில் நாடோடிகள் வந்தவண்ணமிருந்தனர்.
நிகழ்ச்சி நிரல் பொதுவாக இரவு 10 மணிவரை நீடித்தது. அநேகர் வீடு திரும்ப அநேக கிலோமீட்டர்கள் தூரம் நடந்து செல்ல வேண்டியவர்களாக இருந்தனர். நிலா வெளிச்சம் இருக்கையில், நடந்து செல்வது நன்றாக இருந்தது. குளிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நிலா வெளிச்சம் இல்லாதபோது, மக்கள் ஒரு பனைக்குருத்தை எடுத்து அதைக் கைப்பந்தமாக முறுக்கிக் கொண்டனர். அது பற்றவைக்கப்படுகையில் கைப்பந்தம் மங்கிய செந்நிறமாக ஒளிவீசியது. கூடுதலாக வெளிச்சம் தேவைப்படுகையில் கைப்பந்தம் ஒளிப்பிழம்பாக மாறும்வரை காற்றில் அசைக்கப்பட்டது. இது கரடுமுரடானத் தரையில் பாதையைக் கண்டுபிடிக்க போதிய வெளிச்சத்தைக் கொடுத்தது.
இந்தச் சமயத்தில், சங்கத்தின் பிரசுரங்களை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் வருவிப்பதன் பேரில் அரசாங்க தடையுத்தரவு போடப்பட்டது. திருவாங்கூரிலிருந்து நமது சிறிய அச்சு இயந்திரம் கைப்பற்றப்பட்டு, நமது பிரசுரங்களை அச்சிடுவதைத் தடை செய்யும் ஆணை மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டது. பின்னால் 1944-ல் அரச பிரதிநிதியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சர் ஸ்ரீவஸ்தவாவுக்கு நமது சகோதரர்களில் ஒருவர் இயன் மருத்துவ சிகிச்சையளித்து வந்தார். தடையுத்தரவு பற்றிய விஷயம் அவரிடம் கொண்டுசெல்லப்பட்டது.
“சரி, கவலைப்படாதீர்கள்” என்பதாக நமது சகோதரருக்குச் சொல்லப்பட்டது. (நமது வேலையை விரும்பாத மந்திரி) திருவாளர் ஜென்கின்ஸ் விரைவில் ஓய்வுபெற இருப்பதாகவும் சர் ஸ்ரீவஸ்தவாவின் நல்ல நண்பர் ஒருவர் அவருடைய இடத்துக்கு வர இருப்பதாகவும் சர் ஸ்ரீவஸ்தவா அவரிடம் விளக்கினார். “திருவாளர் ஸ்கின்னர் அவர்களை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள். ஜென்கின்ஸின் இடத்துக்கு வரப்போகிற சர் ஃபிரான்சிஸ் மூடியை நான் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்,” என்று சர் ஸ்ரீவஸ்தவா ஊக்கப்படுத்தினார். கடைசியாக நான் அழைக்கப்பட்டேன். நான் திருவாளர் மூடி அவர்களிடம் பேசினேன். 1944 டிசம்பர் 9-ம் தேதி தடையுத்தரவு முறைப்படி நீக்கப்பட்டது.
களிகூருவதற்குக் காரணங்கள்
1947-ல் கிலியட்–பயிற்சி பெற்ற முதல் மிஷனரிமார்கள் இந்தியாவுக்கு வந்துசேர்ந்த போது களிகூருவதற்கு அது நல்ல காரணமாக இருந்தது. அவர்கள் வந்துசேர்ந்த சமயம், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான சமயத்தோடு தற்செயலாகப் பொருந்தியது. ஏனென்றால் அதே ஆண்டில் ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. தேசம் இந்து இந்தியாவாகவும், முஸ்லிம் பாக்கிஸ்தானாகவும் பிளவுற்றபோது கொடூரமான படுகொலைகள் நிகழ்ந்தன. இதன் மத்தியிலும் ஆகஸ்ட் 14-ம் தேதி சுதந்திர தேசமான பாக்கிஸ்தானுக்கு இரண்டு கிலியட் பட்டதாரிகள் அனுப்பப்பட்டனர். விரைவில் இந்தியாவில்தானே இன்னும் 10 மிஷனரிமார்கள் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். தொடர்ந்துவந்த வருடங்களில் உதவி செய்வதற்காக இன்னும் அநேகர் வந்துசேர்ந்தனர்.
அமைப்பு சம்பந்தப்பட்ட செயல்முறைகள் தொடங்கி வைக்கப்பட்ட போது அது என் இருதயத்துக்குக் கூடுதலான மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது. 1955-ல் வட்டார வேலை ஆரம்பமானது. கிலியட் பட்டதாரியான சகோதரர் டிக் காட்ரில் முதல் வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் 1988-ல் தன்னுடைய மரணம் வரையாக உண்மையுடன் சேவை செய்தார். பிறகு 1960-ல் நாங்கள் எங்களுடைய ஒழுங்கான முதல் மாவட்ட கண்காணி ஏற்பாட்டைக் கொண்டிருந்தோம். இது வட்டாரங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. 1966-க்குப் பின்பு அயல்நாட்டு மிஷனரிமார்கள் தேசத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் விரைவில் விசேஷித்த பயனியர் ஊழியம் ஆரம்பித்து வைக்கப்பட, தகுதியுள்ள இந்தியப் பயனியர்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். இன்று, இந்த வேலையில் சுமார் 300 பேர் இருக்கின்றனர்.
1958-ல்தானே கடைசியாக நாங்கள் 1,000 ராஜ்ய பிரஸ்தாபிகளை எட்டினோம். ஆனால் அதற்குப் பின்பு வேகம் கூடிட, இப்பொழுது 9,000-க்கும் மேல் இருக்கிறார்கள். மேலுமாக, 1989 ஞாபகார்த்த ஆசரிப்பு ஆஜர் எண்ணிக்கை 24,144 இன்னும் அநேக அக்கறையுள்ள ஆட்கள் உதவியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறது. இலங்கை இப்போது வேறொரு கிளையாக உள்ளது. 1944-ல் இரண்டு பிரஸ்தாபிகள் இருந்த தேசத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கலவரங்களின் மத்தியிலும் இன்று அவர்கள் 1,000-க்கும் மேலாக அதிகரித்திருப்பதைப் பார்ப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது.
பிரஸ்தாபிகளின் வளர்ச்சி நம்முடைய கிளைக்காரியாலயத்திலும்கூட வளர்ச்சியை அர்த்தப்படுத்தியிருக்கிறது. 52 ஆண்டுகள் இரைச்சல் மிகுந்த பம்பாயில் இருந்த நமது தலைமைக்காரியாலயம் 1978-ல் அருகிலுள்ள லோனாவ்லா நகருக்கு இடம் மாறிச் சென்றது. மெப்ஸ் கம்ப்யூட்டர் போன்ற நுணுக்கம் வாய்ந்த கருவிகளையும் அநேக இந்திய மொழிகளில் அச்சு செய்ய இரு–வண்ண அச்சியந்திரத்தையும் கொண்டிருப்போம் என்று ஒருபோதும் நான் எண்ணியதில்லை. இன்று நாங்கள் காவற்கோபுரம் பத்திரிகையை 9 மொழிகளிலும் மற்ற பிரசுரங்களை 20 வித்தியாசமான மொழிகளிலும் பிரசுரிக்கிறோம்.
எமது இரண்டு-பேர் கிளைக்காரியாலயம் இருந்த காலமெல்லாம் எப்போதோ மறைந்துவிட்டது. இப்பொழுது நாங்கள் 60-க்கும் மேற்பட்ட அங்கத்தினர்களைக் கொண்ட பெத்தேல் குடும்பத்தைக் கொண்டிருக்கிறோம்! 95 வயதில் கிளைக்காரியாலயத்தில் இன்னும் முழுநேர ஊழியத்தில் இருப்பதற்காகவும் இந்திய கிளைக்காரியாலய குழுவின் அங்கத்தினராக சேவிப்பதற்காகவும் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்தக் கடைசி நாட்களில் அறுவடை வேலையைக் காண்பதில் நான் விசேஷமாகக் கிளர்ச்சியடைகிறேன். உண்மையாகவே இது களிகூருவதற்குரிய ஒரு விஷயமாகும். (w90 1/1)
[பக்கம் 29-ன் படம்]
F. E. ஸ்கின்னர் கூறியது