கோடெக்ஸ் பெசே—ஈடிணையற்ற ஒரு கையெழுத்துப் பிரதி
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பெயர்பெற்ற ஃபிரெஞ்சு அறிஞர் தியோடர் டி பெசே, புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான ஜான் கெல்வினின் நெருங்கிய கூட்டாளியும் வாரிசுமாக இருந்தார். அதிகமாக எல்லாராலும் அறியப்பட்டபடி பெசா 1562-ம் ஆண்டில் அசாதாரணமான பண்டைய கையெழுத்துப் பிரதி ஒன்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார். இதை அவர் ஃபிரான்சில் லையான்சிலுள்ள “தூய” ஈரேனியஸ் துறவி மாடத்திலிருந்து, அந்நகரம் தீவிர ஃபிரெஞ்சு சீர்திருத்தவாதிகளால் கொள்ளையிடப்பட்டப் பின்பு பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். அது எழுதப்பட்ட இடம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆனால் வட ஆப்பிரிக்கா அல்லது எகிப்து அது தோன்றிய இடமாக இருப்பது அதிக சாத்தியமாகும்.
கோடெக்ஸ், பத்தின் கீழ் எட்டு அங்குல அளவுள்ளதாக, பொதுவாக பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டிற்குரியதாக, சீனாய்டிகஸ், வத்திக்கன் மற்றும் அலெக்ஸாண்டிரின் கையெழுத்து பிரதிகளுக்குச் சற்றுப் பிற்பட்டதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதில் 406 பக்கங்கள் உள்ளன, இது நான்கு சுவிசேஷங்களையும் அப்போஸ்தலருடைய நடபடிகளையும் மாத்திரமே சில இடைவெளியோடுகூட கொண்டிருக்கிறது. ஆனால் கோடெக்ஸ் பெசேயில் ஆரம்பத்தில் மற்ற கடிதங்களும்கூட இருந்திருக்கக்கூடும், ஏனெனில் யோவான் எழுதிய மூன்றாம் நிருபத்தின் எஞ்சியப் பகுதி இருக்கின்றது. மத்தேயு மற்றும் யோவான் சுவிசேஷங்கள் லூக்கா மற்றும் மாற்குவுக்கு முன்பாக வரிசையில் வருகின்றன.
இந்தக் கையெழுத்துப் பிரதி, இடது பக்கத்தில் கிரேக்கையும் வலது பக்கத்தில் லத்தீனையும் கொண்ட இருமொழியில் எழுதப்பட்ட பூர்வ வாசகத்துக்கு ஓர் உதாரணமாக இருக்கின்றது. இது ஒருவேளை முற்காலத்திய வாசகத்தைக் கொண்ட ஒரு நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியின் ஒரு நகலாக P29, P38, மற்றும் P48 என்று அறியப்பட்ட மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டைச் சேர்ந்த மற்ற ஒருசில நாணற்புல் தாளில் எழுதப்பட்ட பிரதிகளை இது ஒத்திருக்கிறது.
கொட்டை எழுத்துக்களில், நேர்த்தியான முகட்டெழுத்தில் எழுதப்பட்ட கோடெக்ஸ் பெசே ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டில்லை. ஒரே சீராயிராத நீளமுள்ள கோடுகளிலும், ஒவ்வொரு கோடு முடிவும் வாசிக்கையில் நிறுத்தத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. லத்தீன் அசாதாரணமாக கிரேக்க எழுத்துப் பாணியில் எழுதப்பட்டு அநேக சந்தர்ப்பங்களிலும் கிரேக்க வாசிப்புக்கு ஏற்ப வாசகம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. மறுபட்சத்தில் கிரேக்க வாசகம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும், அதை ஆரம்பத்தில் எழுதிய வேதபாரகன் உட்பட அநேக கைகளால் திருத்தப்பட்டும் உள்ளது.
கோடெக்ஸ் பெசேயின் அதிகாரப்பூர்வமான சுட்டுப்பெயர் “D” ஆகும். இது மற்ற எல்லா முக்கிய கையெழுத்துப் பிரதிகளிலிருந்தும் வெகுவாக வித்தியாசப்பட்டதாயும் அவற்றை சார்ந்திராமலும் இருக்கின்றன. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பின் அடிகுறிப்பு சுட்டிக்காண்பிக்கும் விதமாகவே கோடெக்ஸ் சில சமயங்களில், சீனாய்ச்சுவடி (S), வத்திக்கன் (B), மற்றும் அலெக்ஸாண்டிரியா (A), கையெழுத்துப்பிரதிகளோடு ஒத்துப்போவதாயும் மற்ற சமயங்களில் ஒத்துப்போகாமலும் இருக்கிறது. இந்தக் கோடெக்ஸின் மிக உயர்ந்த மதிப்பு, அதன் விடுபாடுகளிலும் சேர்ப்புகளிலுமுள்ள தனித்தன்மையாக இல்லாமல், மற்ற முக்கிய கையெழுத்துப் பிரதிகளை உறுதிப்படுத்துவதில் தானே இருக்கிறது.—பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு–ஒத்துவாக்கியங்களோடு, மத்தேயு 23:14; 24:36; 27:49; மாற்கு 7:16; 9:44, 46; 11:26; லூக்கா 15:21; யோவான் 5:4 அடிக்குறிப்புகளைப் பார்க்கவும்.
ஒருசில அசாதாரணமான பதிப்பின் பாடபேதங்கள் மற்றும் சிறிய வேறுபாடுகளின் மத்தியிலும், கோடெக்ஸ் பெசே, நம்முடைய நாள் வரையாக பைபிள் பாதுகாக்கப்பட்டு வந்திருப்பதற்கு மற்றுமொரு சிறந்த அத்தாட்சியாகும். (w90 2/15)