உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 5/1 பக். 10-15
  • நீங்கள் தகுதிபெற நாடுகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் தகுதிபெற நாடுகிறீர்களா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மூப்பர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்
  • சேவை செய்ய தேவனால் அருளப்பட்ட விருப்பம்
  • யெகோவாவின் சித்தத்தின்படி சந்தோஷமாய் சேவியுங்கள்
  • எதிர் காலத்தை நோக்கியிருங்கள்
  • சகோதரர்களே, கடவுளுடைய சக்திக்கென்று விதையுங்கள், தகுதி பெறுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • தகுதிபெற மற்றவர்களைப் பயிற்றுவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • ‘தகுதிபெற முயலுகிறீர்களா?’
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • சேவை செய்ய நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 5/1 பக். 10-15

நீங்கள் தகுதிபெற நாடுகிறீர்களா?

“கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடுகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்.” —1 தீமோத்தேயு 3:1, NW.

1. யெகோவாவின் சாட்சிகளிடையே எந்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவது அதி முக்கியமாகும்?

தெய்வீக முறையில் செயல்படுத்தப்படும் மேலும் வழிநடத்தப்படும் சரியான இலக்குகளை யெகோவாவின் சாட்சிகள் கொண்டிருக்கின்றனர், அவர்களுடைய தேவன் உன்னதமான இலக்குகளை கொண்டிருப்பதாலும், அவருடைய நோக்கங்களை எப்போதுமே நிறைவேற்றுவதாலும், இது ஆச்சரியப்படுவதற்கான ஒன்றல்ல. (ஏசாயா 55:8-11) ஒரு நல்ல இலக்கின்றி, தங்களைத் தவிர வேறு எவரும் பயனடைய ஒன்றும் செய்யாமல் அக்கறையின்றி வாழ்க்கையை நடத்திவரும் ஜனங்களைப் போல் யெகோவாவின் ஊழியர்கள் இருக்கக்கூடாது. ராஜ்ய செய்தியை அறிவிப்பதும், ஜீவனளிக்கும் தேவனுடைய வார்த்தையைப் பற்றிய அறிவை பகிர்ந்து கொள்வதுமான சிறந்த நோக்கத்தை நிறைவேற்றுவதுதானே கடவுளுடைய சாட்சிகளுக்கு அதி முக்கியமாகும்.—சங்கீதம் 119:105; மாற்கு 13:10; யோவான் 17:3.

2. 1 தீமோத்தேயு 3:1-ல் கிறிஸ்தவ ஆண்களுக்கு எந்த இலக்கை பவுல் குறிப்பிட்டார்?

2 யெகோவாவினுடைய அமைப்பில், மற்ற சிறந்த இலக்குகளுங்கூட உள்ளன. அப்போஸ்தலனாகிய பவுல் “கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடுகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை” என்று எழுதும்போதும் இவற்றில் ஒன்றை குறிப்பிட்டார். மற்றவர் நன்மைக்காக ஏதாவது தான் செய்ய வேண்டுமென்று அப்படிப்பட்ட மனிதன் விரும்புகிறான். அவன் “ஒரு நல்ல வேலையை” விரும்புகிறான், சுகத்தையும் புகழையும் தேடும் வாழ்க்கையை அல்ல. மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது: “தலைவனாவதற்கு நாடும் ஒருவன் போற்றத்தக்க ஓர் இலட்சியத்தை கொண்டிருக்கிறான் என்பது நிச்சயமாகவே உண்மையாகும்.”—1 தீமோத்தேயு 3:1, பிலிப்ஸ்.

மூப்பர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள்

3, 4. கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடுகிற மனிதன் ஏன் தன் இருதயத்தை காத்துக்கொள்ள வேண்டும்?

3 ஒரு கிறிஸ்தவ கண்காணியாக வேண்டுமென்று நாடும் ஒருவன் எவ்விதத்தில் ஒரு “போற்றத்தக்க இலட்சியத்தைக்” கொண்டிருக்கிறான்? ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான தீவிரமான ஆர்வமே இலட்சியமாகும். உன்னதமான மற்றும் இழிவான இலட்சியங்கள் இருப்பது உண்மைதான். மற்றவருக்கு ஊழியம் செய்ய விரும்பி, கண்காணிப்பு வேலைக்கு தகுதிபெற ஒருவன் மனத்தாழ்மையுடன் விரும்புவானாகில், அவனுடைய ஊழியம் நேர்மையான உள்நோக்கங்களுடன் செய்யப்படுகிறது, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விளைவிக்கிறது. ஆனால் அவன் தன் இருதயத்தை காத்துக்கொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 4:23.

4 இலட்சியமுடைய சிலர் புகழைத் தேடுகின்றனர், மற்றவர் சக மனிதரை ஆள ஆசைப்படுகின்றனர். மேன்மைக்கும் அதிகாரத்திற்குமானப் பேராசை, ஆரோக்கியமாக தோன்றும் ஒரு மரத்தைக்கூடக் கீழே வேகமாக விழுந்து முறியச் செய்யக்கூடிய ஓர் அழுகிய வேரைப் போலாகும். அப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்தினால் வரும் இலட்சியத்திற்கு ஒரு கிறிஸ்தவன்கூட இடங்கொடுக்கலாம். (நீதிமொழிகள் 16:18) அப்போஸ்தலனாகிய யோவான் கூறியதாவது: “நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு [“எல்லாவற்றிலும் தலைமையாயிருக்க விரும்பும்,” பிலிப்ஸ்] எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்து வருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.” (3 யோவான் 9, 10) தியோத்திரேப்புவுக்கிருந்த இலட்சியமானது கிறிஸ்தவத் தன்மையற்றதாக இருந்தது. இயேசுவின் உண்மையான ஊழியர் மத்தியில் அகந்தைக்கும் மற்றவர்கள் மீது அதிகாரத்தைத் தேடி ஓடும் இலட்சியத்திற்கும் இடமில்லை.—நீதிமொழிகள் 21:4.

5. தங்களுடைய உத்தரவாதங்கள் மீது அக்கறையுள்ள கண்காணிகள் எந்த ஒரு மனநிலையை கொண்டிருக்க வேண்டும்?

5 தன்னுடைய உத்தரவாதங்கள் மீது சரியான உள்நோக்கத்துடன் அக்கறையுள்ள ஒரு கிறிஸ்தவக் கண்காணி, தன்னலமான இலட்சியங்களை தேடி ஓட மாட்டார். நல்ல வேலையாகிய இந்தக் கிறிஸ்தவ கண்காணிப்பை தேவன் தந்த ஒரு சிலாக்கியமாகக் கருதி, தேவனுடைய மந்தையை, “கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும் அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும்” மேய்ப்பார்கள். (1 பேதுரு 5:2, 3) ஆம், இறுமாப்பு வளருவதையும், அதிகாரத்தை துர்ப்பிரயோகஞ் செய்வதையும் குறித்து கண்காணிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

6. கடவுளுடைய ஜனங்கள் மீது ஒரு மூப்பர் ஏன் இறுமாப்பாய் ஆளுகை செலுத்தக்கூடாது?

6 ஒரு மூப்பர் மற்ற கிறிஸ்தவர்கள் மீது இறுமாப்பாய் ஆளுகை செலுத்தக்கூடாது; ஏனென்றால், “அவர்கள் விசுவாசத்திற்கு அதிகாரியாயிராமல்,” அவர் அவர்களுடைய சக ஊழியனாக இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:24) சில அப்போஸ்தலர்கள் முக்கியத்துவத்தை நாடியபோது, இயேசு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக் கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:20-28) ஒரு மூப்பர் பிரதான மேய்ப்பரல்ல, மாறாக வெறுமென ஓர் உதவி மேய்ப்பர்தான். மந்தையின் மீது இறுமாப்பாக ஆளுகை செய்தால், அவர் மேட்டிமையான ஆவியை வெளிக்காட்டுகிறார். குறிப்பாக, அவருடைய மேட்டிமையான இலட்சியங்களை மேலும் அதிகரிப்பதற்கு அவருக்கு உதவ மற்றவர்களை அவர் தவறாகத் தூண்டினால் கேடு விளையும். ஒரு நீதிமொழி கூறுகிறது: “மன மேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.”—நீதிமொழிகள் 16:5.

7, 8. (எ) கிறிஸ்தவ மூப்பர்கள் தாழ்மையாக இருப்பது ஏன் அவசியமாகிறது? (பி) தாழ்மையான மூப்பர் ஒருவரின் உதாரணம் தாருங்கள்.

7 ஆகவே, கிறிஸ்தவ மூப்பர்கள் ‘தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டும்.’ ஆவிக்குரிய வகையில் பிரயோஜனம் நிறைந்த தன்மைக்குத் தடையாக இறுமாப்பு நிற்கிறது; ஏனென்றால் தெய்வீக சித்தத்தை செய்வதற்கான சரியான இருதய மற்றும் மன நிலையை மனத்தாழ்மையுடையோர் மட்டுமே கொண்டிருக்கிறார்கள். “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ, கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5, 6) ஆம், மனத்தாழ்மையுள்ளவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் மத்தியிலிருந்தே தகுதி பெற்றவர்கள் கிறிஸ்தவ மூப்பர்களாக சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்கள்.

8 யெகோவாவின் சாட்சிகளின் நவீன-நாளைய வரலாறு, தேவபக்தியுள்ள ஊழியரால் அளிக்கப்படும் தாழ்மையான ஊழியச் செய்திகளால் நிறைந்திருக்கிறது. உதாரணமாக, ஒருசமயம் யாத்ரீகன் அல்லது பயணக் கண்காணியான, நெடுங்காலமாக பெத்தேல் ஊழியராய் இருந்த சாந்த-சுபாவமுள்ள W. J. தார்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைப் பற்றி, ஒரு கிறிஸ்தவர் சொன்னார்: “எனக்கு இந்நாள்வரை உதவியுள்ள, சகோதரர் தார்ண் கூறிய ஓர் கூற்றை நான் ஒருபோதும், ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் சொன்னதை நான் எடுத்துக் கூறுகிறேன், ‘என்னைப்பற்றி நானே அதிகமாக நினைக்கும்போது, என்னை நானே ஒரு மூலையில் எடுத்துச்சென்று, சொல்வேன்: ‘நீ தூசுவினாலான சிறிய புள்ளி. நீ மேட்டிமை கொள்ள எதைக் கொண்டிருக்கிறாய்?’’” மூப்பர்களும் மற்றவர்களும் வெளிக்காட்டுவதற்கு என்னே போற்றத்தக்க தன்மையாகும்! “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்,” என்பதை நினைவில் வையுங்கள்.—நீதிமொழிகள் 22:4.

சேவை செய்ய தேவனால் அருளப்பட்ட விருப்பம்

9. கண்காணியாக சேவை செய்வதற்கான விருப்பம் கடவுளால் கொடுக்கப்பட்டது என்று ஏன் கூறலாம்?

9 கண்காணியாக சேவை செய்வதற்கான விருப்பம் கடவுளால் கொடுக்கப்பட்டதா? ஆம், ஏனென்றால் யெகோவாவினுடைய ஆவி அவருக்குப் பரிசுத்த சேவையை செய்வதற்கான செயல் நோக்கம், தைரியம் மற்றும் பலத்தை அளிக்கிறது. உதாரணமாக, இயேசுவின் துன்புறுத்தப்பட்ட ஊழியக்காரர்கள் பிரசங்கிப்பதற்கான தைரியத்திற்காக ஜெபம் செய்தபோது என்ன நடந்தது? “அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” (அப்போஸ்தலர் 4:27-31) பரிசுத்த ஆவி அப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியதால், அது ஒருவரை சேவை செய்ய விரும்பத் தூண்டக்கூடும்.

10. (எ) கிறிஸ்தவ மனிதன் எந்த ஒரு காரணத்தால் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடாமல் இருக்கலாம்? (பி) தேவன் நமக்கு ஓர் ஊழிய சிலாக்கியத்தை அளித்தாரென்றால், நாம் எதை குறித்து உறுதியாய் இருக்கலாம்?

10 ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவன் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடாமல் ஏன் இருக்கக்கூடும்? அவன் ஆவிக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் தன் திறமைகள் போதாதென உணரலாம். (1 கொரிந்தியர் 2:14, 15) உண்மைதான், நாம் நம்மைக் குறித்து நம் குறைபாடுகளை அறிந்தவர்களாய், மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். (மீகா 6:8) ஒரு குறிப்பிட்ட உத்தரவாதத்திற்கு நாம் தான் உள்ளவர்களிலேயே அதிகம் தகுதி உடையவர்கள் என்று அகந்தையுடன் எண்ணுவதற்கு பதிலாக, “தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என்பதை நினைவில் வைப்பது நல்லது. (நீதிமொழிகள் 11:2) ஆனால் தேவன் நமக்கு ஓர் ஊழிய சிலாக்கியத்தை அளித்தாரென்றால், அதை செய்வதற்குத் தேவையான பலத்தையும் அவர் அளிப்பாரென்று நாம் அறிந்துணர வேண்டும். “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” என்று பவுல் சொல்லியதுபோல்.—பிலிப்பியர் 4:13.

11. ஆலோசனை வழங்குவதற்குப் போதிய ஞானமில்லையென்று உணருவதால் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடாத ஒரு கிறிஸ்தவன் என்ன செய்யலாம்?

11 ஆலோசனை வழங்குவதற்குப் போதிய ஞானமில்லை என்று நினைப்பவனாய் ஒரு கிறிஸ்தவன் கண்காணிப்புக்கு தகுதிபெற நாடாதவனாக இருக்கலாம். கடவுளுடைய வார்த்தையை அதிக ஊக்க ஆர்வத்துடன் கற்று அறிபவனாக இருப்பதன் மூலம் அவன் ஒருவேளை ஞானத்தை பெறலாம்; மேலும், நிச்சயமாகவே அவன் ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். யாக்கோபு எழுதுகிறார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனிதன் தான் யெகோவாவினிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:5-8, NW) நியாயம் விசாரிக்கும்போது நன்மை, தீமை இன்னதென்று பகுத்துணருவதை அவனுக்கு சாத்தியமாக்கிய “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” தேவன் சாலொமோனுக்கு அவன் செய்த ஜெபத்திற்கு விடையளிப்பவராக கொடுத்தார். (1 இராஜாக்கள் 3:9-14) சாலொமோனின் காரியம் சிறப்பான ஒன்றானது, ஆனால் ஊக்க ஆர்வத்துடன் படிப்பதாலும், தேவனுடைய உதவியாலும், சபை உத்தரவாதத்தை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு நீதியான ஆலோசனை வழங்கலாம், “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”—நீதிமொழிகள் 2:6.

12. கவலையினால் ஒரு மனிதன் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடாமல் இருந்தால் அவனுக்கு எது உதவி செய்யக்கூடும்?

12 ஓரளவு கவலையுங்கூட ஒரு மனிதன் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடாதவனாக பின்வாங்கச் செய்யலாம். ஒரு மூப்பராக இருப்பதன் பாரமான உத்தரவாதத்தை தான் தாங்க முடியாதென அவன் ஒருவேளை எண்ணலாம். பவுலுங்கூட ஒப்புகொண்டார்: “எல்லாச் சபைகளைக் குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.” (2 கொரிந்தியர் 11:28) ஆனாலும் கவலையாயுள்ளபோது என்ன செய்யவேண்டும் என்று அந்த அப்போஸ்தலர் அறிந்திருந்தார்; ஏனெனில் அவர் எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) ஆம், ஜெபமும் கடவுளை நம்பியிருத்தலும் கவலையைப் போக்க உதவ முடியும்.

13. கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடுவதில் மனசஞ்சலமுடைய மனிதன் ஒருவன் எவ்வாறு ஜெபிக்கலாம்?

13 ஏதாவது கவலை தொடர்ந்து நிலைத்திருந்தால், கண்காணிப்பை விரும்புவதில் மனசஞ்சலமுடைய ஒருவன் தாவீது ஜெபித்ததுபோல் ஜெபிக்கலாம்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23, 24) நம்முடைய “மன அமைதியை குலைக்கும்” அல்லது “கவலையை உண்டாக்கும்” சிந்தனைகள் எப்படிப்பட்டவையானதாக இருந்தாலும், நாம் ஆவிக்குரிய முன்னேற்றமடைவதற்கு இவற்றை சமாளிக்க கடவுள் நமக்கு உதவக்கூடும். (தி நியு இன்டர்நேஷனல் வெர்ஷன் பார்க்கவும்.) இது மற்றுமொரு சங்கீதத்தில் நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது: “என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, யெகோவாவே, (NW) உமது கிருபை என்னைத் தாங்குகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.”—சங்கீதம் 94:18, 19.

யெகோவாவின் சித்தத்தின்படி சந்தோஷமாய் சேவியுங்கள்

14. ஒரு கிறிஸ்தவ மனிதன் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடத் தவறினால் கடவுளுடைய பரிசுத்த ஆவிக்காக ஏன் ஜெபிக்க வேண்டும்?

14 கவலையினாலோ, திறமைகள் போதாதென்ற உணர்வுகளினாலோ செயல்பட தூண்டுதல் இல்லாததினாலோ, ஒரு கிறிஸ்தவ மனிதன் கண்காணிப்புக்கு தகுதிபெறுவதை நாட தவறினால், கடவுளுடைய ஆவிக்காக ஜெபிப்பது நிச்சயமாகவே பொருத்தமானதாக இருக்கும். இயேசு சொன்னார்: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (லூக்கா 11:13) சமாதானம் மற்றும் தன்னடக்கமானது ஆவியின் கனிகளைச் சேர்ந்தவையாதலால், கவலை மற்றும் போதாமை உணர்வுகளை சமாளிக்க இந்த ஆவி நமக்கு உதவக்கூடும்.—கலாத்தியர் 5:22, 23.

15. செயல்பட தூண்டுதலில்லாதவர்கள் ஊழிய சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்ள தங்களை தாங்களே அர்ப்பணிப்பதற்கு எப்படிப்பட்ட ஜெபங்கள் உதவி செய்யும்?

15 செயல்பட தூண்டுதலில்லாததைக் குறித்து என்ன? அவருக்குப் பிரியமானதைச் செய்யவைக்கும்படி, முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்களாகிய நாம், கடவுளிடமாக ஜெபிக்க வேண்டும். தாவீது மன்றாடினார்: “யெகோவாவே, (NW) உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும் . . . உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்.” (சங்கீதம் 25:4, 5) இப்படிப்பட்ட ஜெபங்கள் தவறான ஒரு பாதையைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவும்; மேலும் கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடுவதில் செயல்பட தூண்டுதலில்லாதவராக நாம் இருப்பின், இதே விதமாக நாம் ஜெபிக்கலாம். ஊழிய சிலாக்கியங்களை ஏற்பதற்கு நம்மை விரும்பும்படி செய்ய யெகோவாவை நாம் கேட்கலாம். உண்மையிலேயே, நாம் கடவுளுடைய ஆவிக்காக ஜெபித்து, அதனுடைய வழிநடத்துதலுக்கு இணங்கினால், நாம் சந்தேகமின்றி நமக்கு ஊழிய சிலாக்கியங்கள் அளிக்கப்படும்போது நம்மை நாமே முன்வந்து அளிப்பவர்களாக இருப்போம். என்ன இருந்தாலும், கடவுளுடைய ஊழியர்கள் எந்த விதத்திலும் அவருடைய ஆவியை எதிர்க்க விரும்புவதில்லை.—எபேசியர் 4:30.

16. சபை உத்தரவாதங்களுக்குத் தகுதிபெற நாடுவதற்கு எந்த ஒரு மனநிலை பலமான தூண்டுதலை அளிக்கிறது?

16 “கிறிஸ்துவின் சிந்தையை” கொண்டிருக்கும் நாம் தெய்வீக சித்தத்தை செய்வதில் சந்தோஷமடைகிறோம். (1 கொரிந்தியர் 2:16) “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று சொன்ன சங்கீதக்காரனின் அதே மனநிலையை இயேசு கொண்டிருந்தார். (சங்கீதம் 40:8) இயேசு கூறினார்: “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்.” அது வேதனையின் கழுமரத்தில் மரணம்வரை சென்றது. (எபிரெயர் 10:9, 10) யெகோவாவின் சேவையில் சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற ஆசை, சபை உத்தரவாதங்களை விரும்புவதற்கு பலமானத் தூண்டுதலை அளிக்கிறது.

எதிர் காலத்தை நோக்கியிருங்கள்

17. (எ) ஒரு சமயம் முழுமையாக சேவை செய்ததுபோல், இப்பொழுது செய்யாத மனிதர்கள் ஏன் மனம் சோர்ந்து போகக்கூடாது? (பி) எல்லாவற்றைப் பார்க்கிலும் மிகச் சிறந்த சிலாக்கியம் எது?

17 உடல்நலப் பிரச்னைகளாலும் அல்லது மற்ற காரணங்களாலும், முக்கியமான சபை வேலைகளை கவனித்து வந்த சிலர் தற்போது அப்படிப்பட்ட சிலாக்கியங்களை கொண்டில்லை. இவர்கள் மனம் சோர்ந்து போகக்கூடாது. ஒரு காலத்தில் முழுமையாக செய்ததுபோல இன்னமும் செய்ய இயலாத விசுவாசமுள்ள பல மனிதர்கள் தங்கள் உத்தமத் தன்மையைக் காத்துக் கொள்ளுபவர்களாய் தொடர்ந்து நிலைநிற்கிறார்கள் என்று நாம் அறிவோம். (சங்கீதம் 25:21) நிச்சயமாகவே, மனத்தாழ்மையுள்ள, நெடுங்காலமாக மூப்பராயிருந்து வந்தவர்கள் தொடர்ந்து தங்கள் அனுபவத்தை அளிக்க மூப்பர் குழுவில் இருக்கலாம். முதிர் வயதாலோ முடியாமையினாலோ பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் விலக வேண்டியதில்லை. இதற்கிடையில், அவருடைய பரிசுத்த நாமத்தை தாங்குபவர்களாக, எல்லாவற்றையும் பார்க்கிலும் சிறந்த சிலாக்கியமான ‘கடவுளுடைய ராஜரீகத்தின் மகிமையைப் பற்றி பேசுவதை’ யெகோவாவின் ஒவ்வொரு சாட்சியும் போற்றி அனுபவிப்பானாக.—சங்கீதம் 145:10-13.

18. (எ) ஒரு மூப்பரோ அல்லது உதவி ஊழியரோ நீக்கப்பட்டிருந்தால் என்ன தேவைப்படலாம்? (பி) நீக்கப்பட்ட ஒரு மூப்பர் எந்த ஒரு சிறந்த மனநிலையை வெளிப்படுத்தினார்?

18 நீங்கள் ஒரு சமயம் மூப்பராகவோ அல்லது ஓர் உதவி ஊழியராகவோ இருந்து, ஆனால் தற்போது அப்படி பணியாற்றவில்லையென்றால், கடவுள் உங்கள் மீது இப்போதுங்கூட அக்கறையுள்ளவராயிருக்கிறார் என்று நிச்சயமாயிருங்கள். மேலும், எதிர் காலத்தில் சில எதிர்பாராத சிலாக்கியங்களை அவர் ஒருவேளை அளிப்பார். (1 பேதுரு 5:6, 7) நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தால், குறையை ஒத்துக்கொள்ள மனமுள்ளவராயிருந்து, கடவுளுடைய உதவி கொண்டு அதைக் குறித்து வேலை செய்யுங்கள். மூப்பர்களாக இருந்து விலக்கப்பட்ட சிலர், கிறிஸ்தவத்தன்மையற்ற நோக்கு நிலையைக் கொண்டுள்ளார்கள். மேலும் சிலர் செயலற்றவர்களாக ஆகியுள்ளார்கள் அல்லது சத்தியத்தை விட்டு வெளியே சென்றுள்ளார்கள். ஆனால் ஓர் அருமையான ஆவியை வெளிக்காட்டியவர்களைப் போல் இருப்பது எவ்வளவு ஞானமாக இருக்கிறது! உதாரணமாக, மத்திய அமெரிக்காவில் பல வருடங்கள் சேவை புரிந்துள்ள ஒரு மூப்பர் விலக்கப்பட்டபோது, அவர் சொன்னார்: “நான் இவ்வளவு காலமாக பொக்கிஷமாக கருதி வந்த இந்தச் சிலாக்கியத்தை இழந்தது எனக்கு அதிக வேதனையை அளிக்கிறது. ஆனால் எந்த விதத்தில் சகோதரர்கள் என்னை உபயோகிக்க விரும்பினாலும் நான் கடினமாக உழைக்கப் போகிறேன். மேலும், ஊழிய சிலாக்கியங்களை மறுபடியுமாக பெறவும் வேலை செய்யப் போகிறேன்.” காலப்போக்கில், மறுபடியுமாக ஒரு மூப்பராகச் சேவை செய்ய இந்தச் சகோதரர் சிலாக்கியம் பெற்றார்.

19. ஒரு மூப்பராகவோ அல்லது உதவி ஊழியராகவோ இருந்து விலக்கப்பட்ட ஒரு சகோதரருக்கு என்ன ஒரு பொருத்தமான ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது?

19 நீங்கள் ஒரு மூப்பர் அல்லது உதவி ஊழியராக இருந்து விலக்கப்பட்டால், அப்போது, ஒரு மனத்தாழ்மையான ஆவியை கொண்டிருங்கள். எதிர்கால சிலாக்கியங்களுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கக்கூடிய ஒரு கசப்பான மனநிலையைத் தவிருங்கள். தெய்வீக ஆவி மரியாதையைப் பெறுகிறது. சோர்வடைவதற்குப் பதிலாக, யெகோவா எப்படி உங்கள் ஊழியத்தையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ ஆசீர்வதித்து வருகிறார் என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்தை ஆவிக்குரிய வகையில் கட்டுங்கள், நோயுற்றவர்களை சென்று பாருங்கள், மேலும் பலவீனமானவர்களை உற்சாகப்படுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக கடவுளைத் துதிக்கவும், நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் இருக்கும் உங்கள் சிலாக்கியத்தைப் போற்றி மகிழுங்கள்.—சங்கீதம் 145:1, 2; ஏசாயா 43:10-12.

20. ஒரு முன்னாள் கண்காணிக்கோ அல்லது உதவி ஊழியருக்கோ, எவ்வாறு ஒரு மூப்பர் குழு உதவி செய்யலாம்?

20 அவர் தானாகவே அந்தச் சிலாக்கியத்தை விட்டுகொடுத்தாலும், விலக்கப்படும்போது, ஒரு முன்னாள் கண்காணி அல்லது உதவி ஊழியர் மீது கவலையின் அழுத்தம் வரலாம் என்பதை மூப்பர் குழு உணர வேண்டும். அவர் சபை நீக்கம் செய்யப்படவில்லையென்றாலும், ஆனால் அந்தச் சகோதரர் மனச்சோர்வுடன் இருப்பதை மூப்பர்கள் கவனித்தால், அவர்கள் அன்பான ஆவிக்குரிய உதவியை கட்டாயமாகக் கொடுக்கவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:14) அவர் சபையில் தேவைப்படுகிறார் என்பதை உணர அவருக்கு அவர்கள் உதவிபுரிய வேண்டும். ஆலோசனை வழங்குவது தேவைப்பட்டாலும், மனத்தாழ்மையும் நன்றியுமுள்ள ஒரு மனிதன் மறுபடியுமாக சபையில் கூடுதலான ஊழிய சிலாக்கியங்களைப் பெற அவ்வளவு நீண்ட காலம் ஆகாது.

21. ஊழிய சிலாக்கியங்களுக்கு யார் காத்திருந்தார்கள், மேலும் இன்று அவற்றிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது?

21 கண்காணிப்புக்கு நீங்கள் தகுதிபெற நாடுவீர்களானால், இன்னும் அதிகமான ஊழிய சிலாக்கியங்களைப் பெற நீங்கள் சற்று காத்திருக்க வேண்டும். பொறுமையற்றவர்களாய் இராதேயுங்கள். எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்க அவரை கடவுள் உபயோகிக்கும் வரை 40 ஆண்டுகளுக்கு மோசே காத்திருந்தார். (அப்போஸ்தலர் 7:23-36) மோசேக்கு பின்தொடரும் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன் யோசுவா நெடுங்காலமாக அவரது ஊழியராக சேவை செய்தார். (யாத்திராகமம் 33:11; எண்ணாகமம் 27:15-23) இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்த்தப்படுவதற்கு முன் தாவீது சில காலம் காத்திருந்தார். (2 சாமுவேல் 2:7; 5:3) பேதுருவும் யோவான் மாற்கும் புடமிடப்படும் காலங்களை கழித்தார்கள் என தோன்றுகிறது. (மத்தேயு 26:69-75; யோவான் 21:15-19; அப்போஸ்தலர் 13:13; 15:36-41; கொலோசெயர் 4:10) ஆகவே இப்போது உங்களுக்கு சபை உத்தரவாதங்கள் இல்லையென்றால், அதிக அனுபவத்தை பெறுவதன் மூலம் பயனடைய யெகோவா உங்களை அனுமதிக்கலாம். எப்படியானாலும், கண்காணிப்புக்குத் தகுதிபெற நாடும்போது கடவுளுடைய உதவியை நாடுங்கள், அவர் கூடுதலான ஊழிய சிலாக்கியங்களால் உங்களை ஆசீர்வதிப்பார். இதற்கிடையில், சபை உத்தரவாதத்திற்கானத் தகுதி பெற ஊக்க ஆர்வத்துடன் வேலை செய்யுங்கள். “என் வாய் யெகோவாவின் (NW) துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது,” என்று சொன்ன தாவீதின் ஆவியை வெளிப்படுத்துங்கள்.—சங்கீதம் 145:21. (w90 9/1)

நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?

◻ கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன ஆபத்துகளைக் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும்?

◻ கவலையினாலோ, திறமைகள் போதாதென்ற உணர்வுகளினாலோ கண்காணிப்புக்கு தகுதிபெற நாடாதவர்களுக்கு எது உதவி செய்யக்கூடும்?

◻ சபை பொறுப்பை ஏற்க தன்னைத்தானே அர்ப்பணிக்க ஒருவரை எது செயல்பட தூண்டக்கூடும்?

◻ எதிர்காலத்தை எந்த மனநிலையோடு முன்னாள் மூப்பரும், உதவி ஊழியரும் நோக்க வேண்டும்?

[பக்கம் 11-ன் படம்]

W. J. தார்ண் மனத்தாழ்மையுள்ள ஒரு மூப்பராக ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்

[பக்கம் 13-ன் படம்]

இயேசுவைப் போல நீங்கள் யெகோவாவின் சேவையில் உங்களால் கூடிய எல்லாவற்றையும் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்