யெகோவாவின் நாளுக்காக ஆயத்தமாயிருங்கள்!
ஒன்று தெசலோனிக்கேயரிலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவாவின் நாள்! அது உடனடியாக வரப்போகிறது என்று பூர்வ தெசலோனிக்கேயாவிலுள்ள கிறிஸ்தவர்கள் எண்ணினார்கள். அவர்கள் எண்ணம் சரியா? அது எப்பொழுது வரும்? இந்தக் காரியம் அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின முதல் கடிதத்தில் முக்கியமாக சிந்திக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் நம்முடைய பொது சகாப்தம் 50-வது ஆண்டுபோல் கொரிந்துவிலிருந்து அனுப்பப்பட்டது.
தெசலோனிக்கேயாவிலுள்ள சபையைப் பவுலும் சீலாவும் ஸ்தாபித்தார்கள். இது மக்கெதோனியா என்ற ரோம் மாகாணத்தின் நிர்வாக ஸ்தலமாக இருந்தது. (அப்போஸ்தலர் 17:1–4) பின்னர், தெசலோனிக்கேயருக்குத் தான் எழுதிய முதல் கடிதத்தில் பவுல் போற்றுதல் அளித்தான், புத்திமதி கொடுத்தான், மற்றும் யெகோவாவின் நாளைக் குறித்தும் சிந்தித்தான். யெகோவாவின் நாள் இப்பொழுது மிகவும் அண்மையிலிருப்பதால் இந்தக் கடிதத்திலிருந்து நாமும் நன்மையடையலாம்.
போற்றுதலளித்து உற்சாகப்படுத்துங்கள்
பவுல் முதலாவது தெசலோனிக்கேயரைப் போற்றினான். (1:1–10) அவர்களுடைய உண்மையான வேலைக்கும் சகிப்புத்தன்மைக்கும் அவர்களுக்குப் போற்றுதல் உரியதாயிருந்தது. அவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்ட” காரியமும் போற்றுதலுக்குரியது. பவுல் செய்ததுபோல நீங்கள் மற்றவர்களுக்குப் போற்றுதலளிக்கிறீர்களா?
அப்போஸ்தலன் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தான். (2:1–12) பிலிப்பியில் மோசமாக நடத்தப்பட்டப் போதிலும், அவன் தெசலோனிக்கேயரிடம் ‘சுவிசேஷத்தைச் சொல்லுவதற்கு தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தான்.’ அவன் முகஸ்துதியையும், பிறர் பொருளை இச்சிப்பதையும், புகழ் தேடுவதையும் அறவே வெறுத்தான். பவுல் அதிக செலவை உட்படுத்தும் வகையில் அவர்களுக்குப் பாரமாயிருக்கவில்லை, ஆனால் பால் கொடுக்கிற தாய் தன் குழந்தையிடம் இருப்பதுபோல பட்சமாய் நடந்துகொண்டான். இன்றைய மூப்பர்களுக்கு என்னே ஓர் அருமையான முன்மாதிரி!
பவுலின் அடுத்த வார்த்தைகள் துன்புறுத்தப்படும்போது உறுதியாக நிலைத்திருக்கும்படியாக தெசலோனிக்கேயரை உற்சாகப்படுத்தின. (2:13–3:13) அவர்களுடைய தேசத்தாரிடமிருந்து வந்த துன்புறுத்தலை அவர்கள் சகித்தார்கள். மற்றும் அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையைக் குறித்து தீமோத்தேயு நல்லதோர் அறிக்கையைச் பவுலுக்குச் சமர்ப்பித்தான். அவர்கள் அன்பில் பெருகி அவர்களுடைய இருதயங்கள் ஸ்திரப்படவேண்டும் என்று பவுல் ஜெபித்தான். அதுபோல, இன்றும் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படும் தங்களுடைய உடன் விசுவாசிகளுக்காக ஜெபிக்கிறார்கள், கூடுமானவரை அவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள், அவர்கள் உண்மையாய் நிலைத்திருந்தது பற்றிய அறிக்கைகளில் சந்தோஷம் காண்கிறார்கள்.
ஆவிக்குரியவிதத்தில் விழிப்பாயிருங்கள்!
அடுத்து தெசலோனிக்கேயர் புத்திமதி பெற்றார்கள். (4:1–18) அவர்கள் கடவுளுக்குப் பிரியமான வழியில் அதிக முழுமையாக நடக்கவும், சகோதர சிநேகத்தை அதிகமாகக் காண்பிக்கவும், தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்குத் தங்களுடைய கைகளால் வேலைசெய்யவும் வேண்டியதாயிருந்தது. மேலும், இயேசு பிரசன்னமாகும்போது மரித்திருக்கும் ஆவியினால் பிறப்பிக்கப்பட்ட விசுவாசிகள் முதலாவது உயிர்த்தெழுப்பப்பட்டு அவரோடு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கையால் ஒருவருக்கொருவர் ஆறுதலளிக்கவேண்டியதாயும் இருந்தது. அதற்குப் பின்பு, உயிரோடிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள் மரித்து உயிர்த்தெழும்போது கிறிஸ்துவையும் பரலோக வாழ்க்கைக்கு ஏற்கெனவே உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கும் மற்றவர்களையும் சேர்ந்துகொள்வார்கள்.
அடுத்து பவுல் யெகோவாவின் நாளைக் குறித்துச் சொல்லி கூடுதல் புத்திமதிகள் கொடுத்தான். (5:1–28) யெகோவாவின் நாள் திருடன் வருகிறவிதமாய் வருவதாயிருந்தது, மற்றும் “சமாதானம் சவுக்கியம்!” என்ற அரைகூவலைத் தொடர்ந்து திடீர் அழிவு வருவது நிச்சயம். எனவே தெசலோனிக்கேயர் விசுவாசம், அன்பு என்னும் மார்க்கவசத்தாலும் இரட்சிப்பின் நம்பிக்கை என்னும் தலைச்சீராவாலும் பாதுகாக்கப்பட்டு ஆவிக்குரியவிதத்தில் விழிப்புடன் இருக்கவேண்டியிருந்தது. நாம் இருக்கவேண்டியதுபோல, சபையை நடத்துகிறவர்களுக்கு ஆழ்ந்த மதிப்புடையவர்களாக இருந்து, பொல்லாப்புக்கு அவர்கள் விலகியிருக்க வேண்டியதாயிருந்தது.
பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதல் கடிதம் நம்மைப் போற்றுதலளிக்கவும், உடன் விசுவாசிகளை உற்சாகப்படுத்தவும் தூண்டிடவேண்டும். அதே சமயத்தில் நடத்தையிலும், மனப்பான்மையிலும் முன்மாதிரிகளாக இருக்க நம்மை உந்துவிக்கவேண்டும். அதன் ஆலோசனை யெகோவாவின் நாளுக்காக நாம் ஆயத்தமாயிருக்க நமக்கு நிச்சயமாகவே உதவியாயிருக்கும். (w91 1/15)
[பக்கம் 31-ன் பெட்டி/படம்]
மார்க்கவசமும் தலைச்சீராவும்: ஆவிக்குரிய விழிப்புணர்ச்சியை ஊக்குவிக்கிறவனாய்ப் பவுல் பின்வருமாறு எழுதினான்: “நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும் இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:8) மார்க்கவசம் என்பது ஒரு போர்வீரனின் மார்பைப் பாதுகாக்கும் போராயுதவர்க்கத்தின் ஒரு பாகமாகும். இது செதிள்கள், சங்கிலிகள் அல்லது உறுதியான உலோகங்களைக் கொண்டது. அதுபோல விசுவாசம் என்னும் மார்க்கவசம் நம்மை ஆவிக்குரியப் பிரகாரமாய்ப் பாதுகாக்கிறது. பூர்வக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட தலைச்சீராக்களைப்பற்றியது என்ன? அநேகமாய் உலோகத்தாலான இது, போர் செய்கையில் போர்வீரனைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட தலைக்கவசமாகும். தலைச்சீரா ஒரு போர்வீரனின் தலையைப் பாதுகாப்பது போல, இரட்சிப்பின் நம்பிக்கை மன ஆற்றல்களைப் பாதுகாத்து, இப்படியாக ஒரு கிறிஸ்தவன் உத்தமத்தைக் காத்துக்கொள்ள உதவுகிறது. யெகோவாவின் மக்கள் இப்படிப்பட்ட ஆவிக்குரிய ஆயுதங்களைத் தரித்திருப்பது எவ்வளவு முக்கியம்!—எபேசியர் 6:11–17.