சகோதர அன்பு செயல்படுகிறது
பிலேமோனிலிருந்து முக்கிய குறிப்புகள்
இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினோருக்கு “புதிதான கட்டளையைக்” கொடுத்தார், அதாவது தாம் அவர்களில் அன்பாயிருந்ததுபோல் அவர்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டும் என்பதே. (யோவான் 13:34, 35) இந்த அன்பினிமித்தம், அவர்கள் ஒருவருக்காக ஒருவர் மரிக்கவும் செய்வர். ஆம், சகோதர அன்பு அவ்வளவு உறுதியானதும் செயல்படுவதுமாயுள்ளது.
சின்ன ஆசியாவிலிருந்த ஒரு பட்டணமாகிய கொலோசேயில் இருந்த சபையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவனான பிலேமோனைச் சகோதர அன்பு தூண்டுவிக்குமென அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாயிருந்தான். பிலேமோன் தன் வீட்டைக் கிறிஸ்தவக் கூட்டம் நடத்தப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும்படி அன்பு ஏற்கெனவே அவனைத் தூண்டி இயக்கியிருந்தது. பிலேமோனின் அடிமையாகிய ஒநேசிமு அவனைவிட்டு ஓடிவிட்டிருந்தான், ஒருவேளை ரோமுக்குச் செல்ல பயணச்செலவுக்கான பணத்தைத் திருடிக்கொண்டு ஓடியிருக்கலாம். ரோமில் அவன் பின்னால் பவுலைச் சந்தித்து கிறிஸ்தவத்தை ஏற்றான்.
பெரும்பாலும் பொ.ச. 60-61-ல் ரோமில் சிறைப்படுத்தப்பட்டிருக்கையில், பவுல் முக்கியமாய்ப் பிலேமோனுக்கு முகவரியிட்டு ஒரு கடிதம் எழுதினான். அதில் திரும்பிவரும் ஒநேசிமுவை சகோதர அன்புக்குரிய ஆவியில் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டான். இந்த நிருபத்தை வாசியுங்கள், இது—யெகோவாவின் ஜனங்கள் நன்றாய்ப் பின்பற்றக்கூடிய ஒன்றாயுள்ள—உருக்கமான அன்புக்கும் சமயோசித புத்தி நுட்பத்துக்குமுரிய சிறந்த முன்மாதிரியாயிருப்பதைக் காண்பீர்கள்.
அன்புக்கும் விசுவாசத்துக்கும் பாராட்டுதலளித்தல்
பிலேமோனுக்கும் மற்றவர்களுக்கும் முகவரியிட்டு, பவுல் முதல் பாராட்டுதலளித்தான். (வசனங்கள் 1-7) கிறிஸ்துவுக்கும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் பிலேமோன் கொண்டிருந்த அன்பைப்பற்றியும், அவனுடைய விசுவாசத்தைப்பற்றியும் அப்போஸ்தலன் தொடர்ந்து கேள்விப்பட்டான். இது யெகோவாவுக்கு நன்றிசெலுத்தும்படி பவுலைத் தூண்டியது மேலும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொண்டுவந்தது. அன்பிலும் விசுவாசத்திலும் முன்மாதிரியாயுள்ள உடன் விசுவாசிகளுக்கு நாம்தாமே தனிப்பட்டு பாராட்டுதல் தெரிவிக்கிறோமா? நாம் அவ்வாறு செய்ய வேண்டும்.
பவுலின் வார்த்தைகள் காட்டுகிறபடி உடன் விசுவாசிகளோடு கையாளுகையில் அன்பின் ஆதாரத்தின்பேரில் அறிவுரை கொடுப்பது எப்பொழுதும் விரும்பத்தக்கது. (வசனங்கள் 8-14) தன் சாதுரியமான அணுகுதலுக்குப் பின், அப்போஸ்தலன், பிலேமோன் “செய்யத்தக்கதை” அவனுக்குத் தான் கட்டளையிடலாமெனினும் அதற்குப் பதில் அவனிடம் பரிந்து கேட்டுக்கொள்வதையே தான் தெரிந்துகொண்டானென அறிவித்தான். என்ன செய்வதற்கு? அடிமை ஒநேசிமுவை அன்பான முறையில் திரும்ப ஏற்றுக்கொள்வதைச் செய்யவே! பயனுள்ள சேவைகளைச் செய்ய ஒநேசிமுவைத் தன்னிடம் வைத்துக்கொள்ள பவுல் விரும்பினபோதிலும் பிலேமோனின் சம்மதமில்லாமல் அவ்வாறு செய்யப்போவதில்லை.
பவுல் அடுத்தப்படியாகக் குறித்துக் காட்டினபடி, தோற்றத்துக்குச் சாதகமல்லாதவைபோல் நடைபெறும் காரியங்கள் அடிக்கடி நன்மைபயக்குபவையாய் நிரூபிக்கின்றன. (வசனங்கள் 15-21) உண்மையில், ஒநேசிமு ஓடிப்போனது நன்மையாய் முடிந்தது. ஏன்? ஏனெனில் இப்பொழுது, பிலேமோன் அவனை, மனமற்ற, பெரும்பாலும் நேர்மையற்ற அடிமையாக அல்ல, மனமுவந்த, நேர்மையுள்ள கிறிஸ்தவ சகோதரனாகத் திரும்பக் கொண்டிருக்க முடியும். பவுலை வரவேற்பதுபோல் ஒநேசிமுவை ஏற்றுக்கொள்ளும்படி பவுல் பிலேமோனைக் கேட்டுக்கொண்டான். எவ்வகையிலாவது ஒநேசிமு பிலேமோனுக்குத் தவறுசெய்திருந்தால், அப்போஸ்தலன் அதைத் திரும்பச் செலுத்துவான். பிலேமோனை இன்னும் அதிக மனமுவந்து இணங்கச் செய்ய, பிலேமோன்தானேயும் தான் கிறிஸ்தவனானதற்கு அப்போஸ்தலனுக்குக் கடன்பட்டிருப்பதை அவனுக்கு நினைப்பூட்டினான். ஆகையால், செய்யும்படி தான் கேட்கப்பட்டதற்கும் மேலாகப் பிலேமோன் செய்வானென பவுல் நிச்சயமாயிருந்தான். எத்தகைய சாதுரியமான, அன்புள்ள வேண்டுகோள்! நிச்சயமாக, இதுவே நம் உடன் கிறிஸ்தவர்களோடு நாம் கையாளவேண்டிய முறை.
பவுல் தன் நிருபத்தை நம்பிக்கையுடனும், வாழ்த்துதலுடனும், நல்விருப்ப உரையுடனும் முடித்தான். (வசனங்கள் 22-25) தன் சார்பாக மற்றவர்கள் செய்யும் ஜெபங்களின்மூலம், தான் சீக்கிரத்தில் காவலிலிருந்து விடுதலைசெய்யப்படுவானென நம்பினான். (பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபம் காட்டுகிறபடி அந்த ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன.) பவுல் வாழ்த்துதல்களை அனுப்பி மேலும் பிலேமோனும் யெகோவாவை வணங்கும் அவன் உடன் வணக்கத்தாரும் காட்டும் ஆவியுடன் இயேசு கிறிஸ்துவின் தகுதியற்றத் தயவு இருக்கும்படியான தன் விருப்பத்தைத் தெரிவித்துத் தன் நிருபத்தை முடித்தான். (w91 2⁄15)
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
அடிமைக்கும் மேலானவன்: பிலேமோனின் ஓடிப்போன அடிமை ஒநேசிமு திரும்பி வருவதைப் பற்றி, பவுல் சொன்னதாவது: “இனி அவனை என்றென்றைக்கும் அடிமையாகவல்ல, அடிமையிலுமேலான பிரிய சகோதரனாக நீ பெறுவதற்கென்றே அவன் சிறிதுகாலம் பிரிந்துபோனான்போலும். எனக்கே அவன் அதிகப் பிரியமான சகோதரன்; உனக்கோ மாம்சத்தின்படியும் ஆண்டவருக்குள்ளும் இன்னும் எவ்வளவு அதிகப் பிரியமானவன்.” (பிலேமோன் 15, 16, தி.மொ.) ரோமப் பேரரசில், அடிமைகளை உடைமையாகக் கொண்டிருப்பது பேரரசு ஆட்சிமுறை அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாய்ச் செயல்படுத்தப்பட்டிருந்தது, பவுல் அத்தகைய “மேலான அதிகாரங்களுக்கு” மதிப்புக்கொடுத்தான். (ரோமர் 13:1-7) அடிமை புரட்சிசெய்வதை அவன் ஆதரித்து வாதாடவில்லை ஆனால் கிறிஸ்தவர்களாக ஆவிக்குரிய சுயாதீனத்தை அடையும்படி அத்தகைய தனி ஆட்களுக்கு அவன் உதவிசெய்தான். அடிமைகள் தங்கள் எஜமானருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி கூறின தன் சொந்த அறிவுரைக்குப் பொருந்த, பவுல் ஒநேசிமுவை பிலேமோனிடம் திரும்பச் செல்லும்படி அனுப்பினான். (கொலோசெயர் 3:22-24; தீத்து 2:9, 10) ஒநேசிமு இப்பொழுது உலகப்பிரகாரமான அடிமையைப் பார்க்கிலும் மேம்பட்டவனாயிருந்தான். அவன் பிலேமோனுக்கு மேம்பட்ட அடிமையாக சம்பந்தப்பட்டக் கீழ்ப்படிதலுடனிருக்கும் பிரியமுள்ள உடன் விசுவாசியாயிருந்தான், தெய்வீக நியமங்களால் ஆளப்பட்டு சகோதர அன்பைக் காட்டும் ஒருவனாயிருந்தான்.