கிறிஸ்தவ வணக்கம் ஏன் மேம்பட்டது
எபிரெயருக்கு எழுதின நிருபத்திலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவா தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பினபோது வணக்கத்துக்குரிய மேம்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தினார். அவ்வாறு இருந்ததேனெனில், கிறிஸ்தவத்தைத் தொடங்கிவைத்தவரான இயேசு, தேவதூதர்களுக்கும் தீர்க்கதரிசியாகிய மோசேக்கும் மேம்பட்டவர். கிறிஸ்துவின் ஆசாரியத்துவம், பூர்வ இஸ்ரவேலிலிருந்த லேவியரின் ஆசாரியத்துவத்துடன் ஒப்பிடுகையில், மிக அதிக மேம்பட்டதாயுள்ளது. மேலும் இயேசுவின் பலி மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ்ச் செலுத்தப்பட்ட மிருக பலிகளைப் பார்க்கிலும் மிக அதிக மேம்பட்டது.
இந்தக் குறிப்புகள் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலும் பொ.ச. 61-ல் ரோமில் அப்போஸ்தலன் பவுலால் எழுதப்பட்டு யூதேயாவிலிருந்த எபிரெய விசுவாசிகளுக்கு அனுப்பப்பட்டதெனத் தெரிகிறது. பவுலே இதை எழுதினவனென பூர்வகாலமுதற்கொண்டே கிரேக்க மற்றும் ஆசியா கண்டத்தவரான கிறிஸ்தவர்கள் கருதினர், இது தனிப்பட இந்த அப்போஸ்தலனுக்குரியதாயுள்ள நடைமுறைமாதிரிப்படி, எழுத்தாளன் எபிரெய வேத எழுத்துக்களைப் புரிந்துகொண்டு பழக்கப்பட்டிருப்பதாலும் அவனுடைய வாதப் பொருத்தமான விளக்கத்தின் உபயோகத்தாலும் ஆதரிக்கப்படுகிறது. தனக்கு எதிராக யூதர் கொண்டிருந்தத் தப்பெண்ணத்தினிமித்தமும் மேலும் தான் “புறஜாதிகளுக்கு அப்போஸ்தலன்” என அறியப்பட்டிருந்ததினிமித்தமும் அவன் ஒருவேளை தன் பெயரைக் குறிப்பிடாமல் விட்டிருக்கலாம். (ரோமர் 11:13) இப்பொழுது, எபிரெயருக்கு எழுதின பவுலின் நிருபத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, கிறிஸ்தவத்தின் மேம்பட்ட அம்சங்களுக்கு நாம் கூர்ந்த கவனத்தைச் செலுத்தலாம்.
கிறிஸ்து தேவதூதர்களுக்கும் மோசேக்கும் மேம்பட்டவர்
முதலாவது கடவுளுடைய குமாரனின் மேம்பட்ட பதவி காட்டப்பட்டுள்ளது. (1:1–3:6) தேவதூதர்கள் அவருக்கு பணிவு வணக்கம் தெரிவிக்கின்றனர், அவருடைய ராஜரிக ஆட்சி கடவுள்மீது தங்கியிருக்கிறது. ஆகையால் குமாரனால் பேசப்பட்டதற்கு நாம் மிகைப்பட்ட கவனத்தைச் செலுத்தவேண்டும். மேலும், மனிதனான இயேசு தேவதூதர்களைப் பார்க்கிலும் சிறியவராயிருந்தபோதிலும், அவர் அவர்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டு வரவிருக்கும் குடியிருக்கப்பட்ட பூமியின்மீது ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும் இயேசு கிறிஸ்து மோசேக்கும் மேம்பட்டவர். எவ்வாறு? மோசே இஸ்ரவேலராலாகிய தேவனுடைய வீட்டில் பணிவிடைக்காரனாய் மாத்திரமே இருந்தான். எனினும், இயேசுவை யெகோவா அந்த முழு வீட்டின்மீது, அல்லது கடவுளுடைய ஜனத்தின் சபையின்மீது மேற்பட்டவராக வைத்தார்.
கிறிஸ்தவர்கள் கடவுளுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கின்றனர்
கடவுளுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியுமென அப்போஸ்தலன் அடுத்தப்படி குறிப்பிட்டுக் காட்டுகிறான். (3:7–4:13) எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைசெய்யப்பட்ட இஸ்ரவேலர் அதற்குள் பிரவேசிக்கத் தவறினர் ஏனெனில் அவர்கள் கீழ்ப்படியாமலும் விசுவாசமில்லாமலும் இருந்தனர். ஆனால் நாம் கடவுளில் விசுவாசங்காட்டி கிறிஸ்துவைக் கீழ்ப்படிதலுடன் பின்பற்றினால் அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும். அப்படியானால், வெறுமென வாராந்தர ஓய்வுநாளைக் கைக்கொள்வதற்கு மாறாக, நாம் ஒவ்வொரு நாளும் எல்லாத் தன்னல செயல்களிலிருந்தும் ஓய்ந்திருக்கும் மேம்பட்ட ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ்வோம்.
கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பது கடவுளுடைய வார்த்தையின் ஒரு வாக்குத்தத்தமாகும், அவருடைய வார்த்தை “இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், . . . பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருக்கிறது.” உள்நோக்கங்களையும் மனநிலைகளையும் ஊடுருவிக் காண்பதற்கு, மாம்ச ஆசைகளையும் மனப்போக்குகளையும் பிரிப்பதற்கு அது ஊடுருவிச் செல்வதில் அவ்வாறு செய்கிறது. (ரோமர் 7:25-ஐ ஒத்துப்பாருங்கள்.) நம்முடைய “ஆத்துமா” அல்லது ஓர் ஆளாக உயிர், தெய்வபக்தியுள்ள “ஆவி,” அல்லது மனப்போக்குடன் இணைந்திருந்தால், நாம் கடவுளுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும்.
மேம்பட்ட ஆசாரியத்துவமும் உடன்படிக்கையும்
கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தின் மற்றும் புதிய உடன்படிக்கையின் மேம்பட்டத் தன்மையைப்பற்றிப் பவுல் அடுத்தப்படியாகக் காட்டுகிறான். (4:14–10:31) பாவமில்லாதவரான இயேசு கிறிஸ்து பாவமுள்ள மனிதரின்பேரில் இரக்கமுள்ளவராயிருக்கிறார், ஏனெனில், நம்மைப்போல் அவர் எல்லா வகைகளிலும் சோதிக்கப்பட்டிருக்கிறார். மேலும், கடவுள் அவரை “மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக” நியமித்திருக்கிறார். லேவிய பிரதான ஆசாரியர்களைப்போல் இராமல், இயேசு அழிக்கமுடியாக ஜீவனை உடையவர், இவ்வாறு இரட்சிக்கும் வேலையில் அவருக்கு வாரிசுகள் தேவையில்லை. அவர் மிருக பவிகளைச் செலுத்தவேண்டியதில்லை, ஏனெனில் அவர் தம்முடைய மிக அதிக மேம்பட்ட பாவமற்ற உடலைப் பலிசெலுத்தி தம்முடைய இரத்தத்தின் விலைமதிப்புடன் பரலோகத்துக்குள் பிரவேசித்துவிட்டார்.
இயேசுவின் இரத்தத்தால் சட்டப்படி உறுதிசெய்யப்பட்ட புது உடன்படிக்கை, நியாயப்பிரமாண உடன்படிக்கையைவிட மேம்பட்டது. புது உடன்படிக்கையிலுள்ளவர்கள் கடவுளுடைய சட்டங்களைத் தங்கள் இருதயங்களில் கொண்டுள்ளனர் பாவமன்னிப்பை அனுபவித்து மகிழ்கின்றனர். (எரேமியா 31:31-34) இதற்கான நன்றியறிதல் தங்கள் நம்பிக்கையைப்பற்றி யாவரறிய அறிவிப்பு செய்யவும் உடன் விசுவாசிகளோடு ஒன்றுகூடிவரவும் அவர்களைத் தூண்டுவிக்கிறது. அவர்களைப்போலிராமல், வேண்டுமென்றே பாவஞ்செய்வோருக்குப் பாவங்களுக்கான எந்தப் பலியும் இனிமேலும் இல்லை.
விசுவாசம் இன்றியமையாதது!
மேம்பட்ட புது உடன்படிக்கையிலிருந்து பயனடைய, நமக்கு விசுவாசம் தேவை. (10:32–12:29) யெகோவா வாக்குக்கொடுத்திருப்பதை நாம் பெறவேண்டுமானால் சகித்துநிலைத்திருக்கும் தன்மையும் தேவைப்படுகிறது. சகித்துநிலைத்திருப்பதற்கு ஊக்கமூட்டுதலாக, கிறிஸ்தவத்துக்கு முந்தின ‘மேகம்போன்ற திரளான’ சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துள்ளனர். எனினும், முக்கியமாய், துன்பத்தின்கீழ் இயேசுவின் பழுதற்றப் போக்கை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். நமக்கு ஏற்படும்படி கடவுள் அனுமதிக்கும் எந்தத் துன்பத்தையும் நீதிக்குரிய சமாதான பலனைத் தரும் சிட்சையாக ஒரு வகையில் கருதலாம். யெகோவாவின் வாக்குகளின் நம்பத்தக்கத்தன்மை அவருக்குப் “பயத்தோடும் பக்தியோடும்” பரிசுத்த சேவை செய்யும்படியான நம்முடைய ஆவலை அதிகரிக்கவேண்டும்.
பவுல் ஊக்க அறிவுரைகளைக் கூறி முடிக்கிறான். (13:1-25) விசுவாசம் சகோதர அன்பைக் காட்டும்படி நம்மைத் தூண்டுவிக்கவேண்டும், உபசரிக்கவேண்டும், துன்பப்படும் உடன் விசுவாசிகளை நினைவுகூரவேண்டும், விவாகத்தைக் கனமுள்ளதாய்க் காத்துக்கொள்ளவேண்டும், “இருக்கிறவைகள் போதுமென்று எண்ண”வேண்டும். சபையில் பொறுப்பேற்று நடத்துகிறவர்களின் விசுவாசத்தை நாம் பின்பற்றி அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். மேலும், நாம் விசுவாசத்துரோகத்தைத் தவிர்க்கவேண்டும், இயேசு சுமந்த நிந்தையைச் சுமந்து, ‘ஸ்தோத்திரபலியை எப்போதும் தேவனுக்குச் செலுத்தி,’ தொடர்ந்து நன்மைசெய்ய வேண்டும். இத்தகைய நடத்தையும் உண்மையான கிறிஸ்தவத்தின் மேம்பட்ட அம்சங்களுக்குள் அடங்கியிருக்கிறது. (w91 1⁄1)
[பக்கம் 12-ன் பெட்டி/படம்]
பலவகை முழுக்காட்டுதல்கள்: இஸ்ரவேலின் ஆசரிப்புக்கூடார வணக்க அம்சங்கள் “போஜனபானங்களும் பலவித ஸ்நானங்களும் [முழுக்காட்டுதல்களும், NW]” ஆனவையே சம்பந்தப்பட்டிருந்தன. (எபிரெயர் 9:9, 10) இந்த முழுக்காட்டுதல்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தால் கட்டளையிடப்பட்ட சடங்குமுறையான கழுவுதல்களாகும். அசுத்தமாக்கப்பட்ட பாத்திரங்கள் கழுவப்பட்டன, ஆசார சுத்திகரிப்பில் ஒருவரின் உடைகளைத் துவைப்பதும் குளிப்பதும் உட்பட்டிருந்தன. (லேவியராகமம் 11:32; 14:8, 9; 15:5) ஆசாரியர்கள் குளித்தார்கள், தகன பலிகளோடு சம்பந்தப்பட்ட பொருட்கள் நீரில் முழுக்கிக் கழுவப்பட்டன. (யாத்திராகமம் 29:4; 30:17-21; லேவியராகமம் 1:13; 2 நாளாகமம் 4:6) ஆனால் இந்தப் ‘பலவகை முழுக்காட்டுதல்கள்’ மேசியா வந்த காலத்தின்போது சில யூதர்கள் அனுசரித்த ‘செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் முழுக்காட்டும்’ சடங்காசாரம் உட்பட்டில்லை; மேலும் முழுக்காட்டுபவனான யோவான் நடப்பித்தத் தண்ணீர் முழுக்காட்டையோ அல்லது கிறிஸ்தவர்களாகக் கடவுளுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினவர்களின் முழுக்காட்டுதலையோ எபிரெயர் 9:10 குறிக்கிறதில்லை.—மத்தேயு 28:19, 20; மாற்கு 7:4; லூக்கா 3:3.