விசுவாசதுரோகிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
யூதாவின் கடிதத்திலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவாவின் ஊழியர்கள் “தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.” (ரோமர் 12:9) இதை மற்றவர்கள் செய்வதற்கு உதவும்வகையில் பைபிள் எழுத்தாளன் யூதா ஏறக்குறைய பொ.ச. 65-ல் பலஸ்தீனாவிலிருந்து தன் கடிதத்தை எழுதினான்.
யூதா தன்னை “இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன்” என்று குறிப்பிட்டான், ஆனால் ‘யாக்கோபின் ஒரு சகோதரன்.’ இந்த யாக்கோபுதானே இயேசு கிறிஸ்துவின் நன்கு அறியப்பட்ட ஒன்றுவிட்ட சகோதரன். (மாற்கு 6:3; அப்போஸ்தலர் 15:13–21; கலாத்தியர் 1:19) இப்படியாக யூதா தாமே இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன். என்றபோதிலும், அவன் இந்தச் சரீரப்பிரகாரமான உறவைக் குறிப்பிடுவதை பொருத்தமற்றதாக எண்ணியிருக்கக்கூடும், ஏனென்றால் கிறிஸ்து அந்தச் சமயத்தில் பரலோகத்தில் மகிமைப்படுத்தப்பட்ட ஆவி ஆளாக இருந்தார். புத்திமதி கொடுப்பதில் யூதாவின் கடிதம் மிகவும் நேரடியாக இருக்கிறது. “நன்மையைப் பற்றிக்கொண்டிருக்க”வும் விசுவாச துரோகிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவும் இது நமக்கு உதவியாக இருக்கும்.
“தைரியமாய்ப் போராடவேண்டும்”
கிறிஸ்தவர்கள் பொதுவில் பற்றிக்கொண்டிருக்கும் இரட்சிப்பைக் குறித்து எழுத யூதா நினைத்தபோதிலும், அவன் தன்னுடைய வாசகரை “விசுவாசத்திற்காக . . . தைரியமாகப் போராடவேண்டும்” என்று துரிதப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கண்டான். (வசனங்கள் 1–4) ஏன்? ஏனென்றால் தேவபக்தியில்லாத மனிதர் சபையில் நுழைந்து ‘தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டிக்கொண்டு’ இருந்தார்கள். கடவுளுடைய சட்டத்தை மீறி, அதே சமயத்தில் அவருடைய மக்களோடு இருக்கலாம் என்று அவர்கள் தவறாக நினைத்தார்கள். அப்படிப்பட்ட பொல்லாத யோசனைகளுக்கு நாம் இடங்கொடுத்துவிடாதிருப்போமாக, ஆனால் எப்பொழுதும் நீதியைத் தொடருகிறவர்களாக, இயேசுவின் இரத்தத்தால் கடவுள் தயவுடன் நம்முடைய பாவங்களைக் கழுவினார் என்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போமாக.—1 கொரிந்தியர் 6:9–11; 1 யோவான் 1:7.
நமக்கு முன்பாக எச்சரிப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன
சில மனநிலைகள், நடத்தை மற்றும் மக்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். (வசனங்கள் 5–16) எகிப்திலிருந்து மீட்கப்பட்ட சில இஸ்ரவேலரிடம் விசுவாசம் இல்லாமலிருந்ததால், அவர்கள் அழிக்கப்பட்டார்கள். தங்களுக்குரிய இடத்தைவிட்டு வந்த தேவ தூதர்கள் “மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, [ஆவிக்குரிய] அந்தகாரத்தில் அடைத்துவைக்கப்”பட்டிருக்கின்றனர். வினைமையான ஒழுக்கக்கேடு சோதோம் கொமோரா மீது “நித்திய அக்கினியின் ஆக்கினையைக்” கொண்டுவந்தது. எனவே, நாம் எப்பொழுதுமே கடவுளைப் பிரியப்படுத்துவோம், “ஜீவ மார்க்கத்தை” விடாதிருப்போமாக.—சங்கீதம் 16:11.
பிசாசுக்கு எதிராகவுங்கூட தூஷணமான வார்த்தைகளில் ஆக்கினைத்தீர்ப்பைக் கொண்டுவராத பிரதான தூதனாகிய மிகாவேலுக்கு மாறாக, தேவபக்தியில்லாத மனிதர்கள் “மகத்துவமுள்ளவர்களை,” கடவுளாலும் கிறிஸ்துவாலும் அபிஷேகம்பண்ணப்பட்ட மூப்பர்களாக ஓரளவு மகத்துவம் அல்லது மகிமை கொடுக்கப்பட்டிருப்பவர்களை தூஷணமாகப் பேசினார்கள். கடவுள் கொடுத்திருக்கும் அதிகாரத்தை நாம் அவமதியாதிருப்போமாக!
காயீன், பிலேயாம் மற்றும் கோராவின் கெட்ட முன்மாதிரிகளை அந்தத் தேவபக்தியில்லாதவர்கள் பின்பற்றினார்கள். அவர்கள் தண்ணீரின் கீழ் மறைந்திருக்கும் பாறைகளாக ஆவிக்குரிய அச்சுறுத்தலாக இருந்தார்கள்; தண்ணீரற்ற மேகங்களைப் போலவும், செத்து வேரற்றுப்போன மரங்களைப் போலவும் நன்மையான எதையும் ஈன்றாதவர்களாய் இருந்தார்கள். அந்த விசுவாச துரோகிகள் முறுமுறுப்பவர்களாகவும், குறைகூறுகிறவர்களாகவும், ‘தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்கிறவர்களாகவும்’ இருந்தார்கள்.
தொடர்ந்து எதிர்த்துநில்லுங்கள்
அடுத்து, யூதா கெட்ட செல்வாக்குகளை எதிர்த்துநிற்பது குறித்து புத்திமதி கொடுத்தான். (வசனங்கள் 17–25) “கடைசி காலத்திலே” பரியாசக்காரர் இருப்பார்கள், எனவே உண்மைக் கிறிஸ்தவர்கள் அவர்களையும் அவர்களுடைய நிந்தனைமிகுந்த வார்த்தைகளையும் இன்று சகித்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கெட்ட செல்வாக்குகளை எதிர்த்துநிற்க, நம்மை நாமே “மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல்” கட்டியமைக்க வேண்டும். மற்றும் இயேசுவின் இரக்கம் வெளிப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியோடு ஜெபித்து கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.
தெளிவாகவே பொய் போதகர்கள் ஸ்தானத்தில் தேவபக்தியில்லாதவர்கள் சிலரை சந்தேகம் கொள்ளச் செய்திருக்கிறார்கள். (2 பேதுரு 2:1–3-ஐ ஒப்பிடவும்.) சந்தேகிப்பவர்களுக்கு என்ன தேவையாயிருந்தது? ஏன், நித்திய அழிவாகிய “அக்கினியிலிருந்து” இழுத்துவிட ஆவிக்குரிய உதவி! (மத்தேயு 18:8, 9) ஆனால் தேவபக்தியுள்ளவர்கள் அந்த முடிவைக் குறித்து பயப்படவேண்டாம், ஏனென்றால் யெகோவா தேவன் அவர்களை பாவத்திற்குள்ளும் விசுவாச துரோகிகளுக்குக் காத்துக்கொண்டிருக்கிற அழிவுக்குள்ளும் “இடறுவதிலிருந்து” பாதுகாப்பார். (w91 4⁄15)
[பக்கம் 32-ன் பெட்டி]
மறைந்திருக்கும் பாறைகள்: ‘தங்களுடைய அன்பின் விருந்துகளில் மறைந்திருக்கும் பாறைகள்’ குறித்து யூதா உடன் கிறிஸ்தவர்களை எச்சரித்தான். (யூதா 12) விசுவாசிகளிடமாக பாசாங்குத்தனமான அன்பைக் காண்பிக்கும் அப்படிப்பட்ட விசுவாச துரோகிகள் கப்பலைக் கவிழ்த்திடும் அல்லது நீச்சலுக்குச் செல்கிறவர்களை கிழித்துக் கொன்றுவிடும் தண்ணீருக்குக் கீழே இருக்கும் கூரிய பாறைகள் போன்று இருந்தனர். அன்பின் விருந்துகள் பொருள் சம்பந்தமாக செல்வச் செழிப்பிலிருந்த கிறிஸ்தவர்கள், ஏழை உடன் விசுவாசிகளுக்குக் கொடுத்த விருந்துகளாக இருந்திருக்கக்கூடும். சர்ச் தந்தை கிறிஸாஸ்டம் (பொ.ச. 347?—407) இவ்விதமாகச் சொன்னார்: “அவர்கள் எல்லாரும் ஒரு பொது விருந்தில் கூடினார்கள்: பணக்காரர் தேவைகளை கொண்டுவர, ஏழைகளும் ஒன்றும் இல்லாதவர்களும் அழைக்கப்பட்டிருக்க, அவர்கள் எல்லாருமே பொதுவில் விருந்துண்டார்கள்.” ஆரம்பக்கால அன்பின் விருந்துகள் எத்தன்மையினதாய் இருந்திருந்தாலும், ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விசுவாச துரோக ‘மறைந்திருக்கும் பாறைகள்’ குறித்து எச்சரிக்கையாயிருப்பதற்கு யூதாவின் எச்சரிப்புகள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு உதவியது. அன்பின் விருந்துகள் வைக்கும்படியாகக் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்படவில்லை. இன்று அவை ஏற்பாடு செய்யப்படுவதில்லை என்றாலும், யெகோவாவின் மக்கள் தேவை எழும்பும் சமயங்களில் ஒருவருக்கொருவர் பொருள் சம்பந்தமாக உதவியளிக்கின்றனர், மற்றும் மகிழ்ச்சியான கூட்டுறவைக் கொண்டிருக்கின்றனர்.