வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
◼ பைபிள் வரலாற்றில், லூக்கா 3:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள திபேரியு ராயனுடைய ஆட்சியின் ஆரம்பமாகிய பொ.ச. 14-க்கு பதிலாக, பொ.ச. 29 அதிமுக்கியமான தேதியாக கருதப்படுவது ஏன்?
திபேரியுவினுடைய ஆட்சியின் ஆரம்பம் பைபிளில் குறிப்பிடப்பட்டில்லை. ஆனால் அவருடைய 15-ம் ஆண்டின் பிற்பகுதியில் சம்பவித்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. இது, அச்சம்பவம் பொ.ச. 29-ல் நடந்தேறியதை உறுதிபடுத்த பைபிள் மாணாக்கர்களுக்கு உதவி செய்கிறது. பைபிள் நோக்குநிலையிலிருந்து இது ஒரு மைய தேதியாகக் கருதப்படலாம்.
ரோமாபுரியின் இரண்டாவது பேரரசன் திபேரியுராயனுடைய ஆட்சியை வரலாறு சந்தேகத்திற்கிடமின்றி ஏற்றுக்கொள்கிறது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்வதாவது: “பொ.ச. 14-ல் ஆகஸ்ட் 19-ம் தேதி அகுஸ்து [முதல் பேரரசன்] மரித்துப்போனார். இப்பொழுது உயர் பதவியில் இருந்த திபேரியு, சட்ட மாமன்ற மேலவையை தன்னுடைய சொந்த லாபத்துக்காக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஏறக்குறைய ஒரு மாதம் வரை இது தன்னை பேரரசனாக நியமனம் செய்ய அனுமதிக்கவில்லை, ஆனால், செப்டம்பர் 17-ம் தேதி அவர் ஆட்சிக்கு வந்தார்.”a
திபேரியுவின் ஆட்சியினுடைய ஆரம்பத்தைக் குறித்த முடிவுசெய்யப்பட்ட இந்தக் காலம், பைபிள் பூர்வமாக பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால், லூக்கா 3:1–3 யோவான் ஸ்நானகனின் ஊழியத்தைக் குறித்து இவ்விதமாகச் சொல்கிறது: “திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும் . . . இருந்த காலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. . . . அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.”
திபேரியு ராஜ்ய பாரம் பண்ண ஆரம்பித்த போது யோவான் பிரசங்கித்தலையும் ஞானஸ்நானங் கொடுத்தலையும் தொடங்கவில்லை. ஆனால் “திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே” அவ்விதமாகச் செய்தான். அந்தப் பதினைந்தாம் வருஷம் பொ.ச. 28 இலையுதிர் காலத்திலிருந்து பொ.ச. 29 இலையுதிர் காலம் வரை நீடித்தது. என்றபோதிலும் இதைத் தெரிந்திருப்பது தானே, யோவானின் ஊழியம் அந்த ஆண்டில் எப்போது ஆரம்பித்தது அல்லது தொடர்புடைய சம்பவங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை எம்முறையிலும் துல்லியமாக தீர்மானிக்க ஒருவருக்கு உதவி செய்வதில்லை.
ஆனால் பைபிள் நமக்கு இன்றியமையாத கூடுதலான தகவலைக் கொடுக்கிறது. உதாரணமாக, “எழுபது வாரங்களைப்” பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனம் மேசியாவின் வருகையைப் பொ.ச. 29-க்குச் சுட்டிக்காட்டியது. இது இயேசுவின் ஊழியம் மூன்றரை ஆண்டு காலம் நீடிக்கும் என்பதையும்கூட குறித்துக்காட்டியது. (தானியேல் 9:24–27) இதோடு பின்வரும் இந்தப் பைபிள் விவரங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: இயேசு யோவானுக்கு ஆறு மாதங்களுக்குப் பின்பு பிறந்தார்; இயேசு முழுக்காட்டப்பட்ட போது அவர் “ஏறக்குறைய முப்பது வயதுள்ள”வராயிருந்தார்; இயேசு 33 1/2 வயதுள்ளவராயிருக்கையில், பொ.ச. 33-ன் வசந்த காலத்தில் (பஸ்கா சமயத்தில்) மரித்தார்.—லூக்கா 1:24–38; 3:23; 22:14–16, 54.b
இப்படிப்பட்ட துல்லியமான பைபிள் தகவலும் திபேரியுவின் ஆட்சிகாலத்தைப் பற்றிய உலகப்பிரகாரமான சரித்திர தேதியும் இருப்பதால், யோவானின் ஊழியம் பொ.ச. 29-ன் வசந்த காலத்தில் ஆரம்பமானது என்பதையும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் பொ.ச. 29-ன் இலையுதிர்காலத்தில் யோவான் இயேசுவை முழுக்காட்டினார் என்பதையும் பைபிள் மாணாக்கரால் கணக்கிட முடியும். ஆகவே, பொ.ச. 14 அல்ல, ஆனால் பொ.ச. 29 பைபிளின் நோக்குநிலையிலிருந்து மைய தேதியாகக் கருதப்படுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a ஜூலியன் நாட்காட்டியில் செப்டம்பர் 17, இன்று மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகிய கிரகோரியன் நாட்காட்டியில் செப்டம்பர் 15-க்கு ஒத்திருக்கிறது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொசையிட்டி ஆஃப் நியு யார்க், இங்க்., வெளியிட்டிருக்கும் வேதவசனங்களின் பேரில் உட்பார்வை, புத்தகம் 1, பக்கங்கள் 458, 463, 467; புத்தகம் 2, பக்கங்கள் 87, 899–902, 1099, 1100 ஒப்பிடவும்.