ஏதாவது ஒரு மதம் போதுமானதா?
“நம்முடைய காலங்களின் விதி துயர் மிகுந்ததாகும். நமக்கு ஒரு மதம் தேவை, ஆனால் அதில் பொருந்த ஒரு கடவுளை நாம் எங்கும் காணமுடிவதில்லை.”—லூஷான் பிளாகா, ரோமானிய நாட்டுக் கவியும் தத்துவஞானியும்
“மதமும் மதகுருமாரும் முன்னேற்றத்துக்கும் சுயாதீனத்துக்கும் மிகப்பெரிய விரோதிகளாக இருந்திருக்கிறார்கள், ஒருவேளை நீண்ட காலத்துக்கும் அவர்கள் அவ்விதமாகவே இருக்கக்கூடும்.”—கிறீஸ்டோ போட்டெஃப், பல்கேரியா நாட்டுக் கவி
இங்குள்ள மேற்கோள்கள், அநேக உண்மை மனதுள்ள ஆட்கள் தங்களைக் காணும் அந்த இரண்டக நிலையை எதிரொலிக்கிறது. உள்ளத்தின் ஆழத்தில் மதத்துக்கான தேவையை அவர்கள் உணருகிறார்கள், ஆனால் மதகுருமார் போதிக்கின்ற அந்த மனித புத்திக்கு எட்டாத கடவுள், அவர்கள் புரிந்துகொண்டு அன்பு செலுத்தக்கூடிய கடவுளாக இல்லை. மேலுமாக, மதகுருமாரும் அவர்களுடைய மதங்களும் மனித முன்னேற்றத்தையும் சுயாதீனத்தையும் தடை செய்ய அதிகத்தைச் செய்திருப்பதை அவர்கள் உணருகிறார்கள். ஆம், மதத்துக்கான தேவை அதிகமதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்டு வருகையில் நேர்மையான ஆட்கள் ஏதாவது ஒரு மதம் போதுமென்பதாக இருந்துவிடமாட்டார்கள்.
முக்கியமான ஒரு வேறுபாடு
மனிதனின் ஒழுங்கமைப்பிலும் வரலாற்றிலும் மதம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா, மதத்தை “மனித அனுபவம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் ஓர் உண்மை” என்பதாக பேசுகிறது. அது மேலுமாகச் சொல்கிறது: “மத சம்பந்தமான மனநிலைகளுக்கும் பற்றுறுதிகளுக்கும் அத்தாட்சிகள், மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படுகிறது.” ஆனால் உலகிலுள்ள முக்கிய மதங்களில் எதுவுமே, மனிதகுலத்துக்கு ஆசீர்வாதமாக இருந்ததில்லை என்பதை வரலாறு காண்பிக்கிறது.
இந்திய அரசியல்மேதை ஜவஹர்லால் நேரு ஒரு சமயம் இவ்விதமாகச் சொன்னார்: “இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ மதம் என்றோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட மதம் என்றோ எப்படியோ அழைக்கப்படுகின்ற அந்தக் காரியம் அச்சத்தால் நம்மை நிரப்புகிறது.” மதத்தின் பெயரில் தொடுக்கப்பட்ட போர்களையும், செய்யப்பட்ட குற்றச்செயல்களையும் சிந்திக்கையில், உங்களால் உண்மையாக அவரோடு கருத்து வேற்றுமை கொள்ள முடியுமா?
18-வது நூற்றாண்டில், பிரெஞ்சு தத்துவ ஞானி வால்டேர் அக்கறையூட்டும் ஒரு வேறுபாட்டைக் குறிப்பிட்டார். அவர் எழுதினார்: “மதம், எண்ணிலடங்கா இழிவானச் செயல்களைச் செய்திருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு மாறாக, மூடநம்பிக்கை, நம்முடைய துயரமான பூகோளத்தின் மீது ஆதிக்கம் செய்யும் மூடநம்பிக்கைகள்தான் அவ்விதமாகச் செய்திருக்கிறது என்று நீங்கள் சொல்ல வேண்டும். நம்முடைய கடவுளுக்கு நாம் செலுத்த கடமைப்பட்டிருக்கும் தூய்மையான வணக்கத்துக்கு மூடநம்பிக்கையே இரக்கமற்ற விரோதியாக இருக்கிறது.” வால்டேர் அவருடைய நாட்களிலிருந்த மத சம்பந்தமான குறுகிய மனப்பான்மையை எதிர்த்துப் போராடினார், ஆனாலும் கடவுள் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் என்ற நம்பிக்கையைக் காத்துக்கொண்டார். உண்மை மதத்துக்கும் பொய் மதத்துக்குமிடையே ஒரு வேறுபாட்டை அவர் கண்டார்.
தெரிவு செய்வதற்குரிய தேவை
வால்டேரோடு அனைவரும் ஒத்துப் போகமாட்டார்கள். சிலர் எல்லா மதத்திலும் நல்லதைக் காண்பதாக தெரிவிக்கிறார்கள். ஆகவே உண்மையான மதத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டிய உண்மையான தேவையை அவர்கள் உணருவது கிடையாது. இப்படிப்பட்டவர்கள், ஏசாயா தீர்க்கதரிசி கொடுக்கும் எச்சரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். அவர் எழுதினார்: “தீமையை நன்மையென்றும் நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5:20) பொய் மதம் மனிதருக்குத் தீமையை விளைவித்திருக்கிறது. அது ஆவிக்குரிய இருளில் விளைவடைந்து, நேர்மையான இருதயமுள்ள ஆட்களின் வாய்களில் ஒரு கசப்பான சுவையை விட்டுச்சென்றிருக்கிறது.
ஆகவே தெரிவு ஒரு நாத்தீகனாக இருப்பதற்கும் ஏதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை வைப்பதற்குமிடையில் செய்யப்படுவதில்லை. அது அவ்வளவு எளிதல்ல. கடவுளுக்கான தேவையை ஒருவர் கண்டுணருகையில் அவர் மெய் மதத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மதங்களின் மிகப் பெரிய நிலப்படம்-ல் ஆய்வாளர் எமீல் பூலா நேர்த்தியாக குறிப்பிடும் வண்ணமாக: “[மதங்கள்] கற்பிக்கும் மற்றும் வற்புறுத்தும் காரியங்கள் மிகுதியான அளவில் வித்தியாசப்பட்டிருப்பதன் காரணமாக, அவை அனைத்தையும் நம்புவது சாத்தியமற்றதாகும்.” இதற்கு இசைவாக, பிரெஞ்சு யூனிவெர்சல் என்சைக்ளோபீடியா இவ்விதமாகச் சொல்கிறது: “21-ம் நூற்றாண்டு மதத்துக்குத் திரும்பிவருமேயானால், . . . மனிதன் அவனுக்கு அளிக்கப்படும் பரிசுத்த காரியங்கள் சரியா தவறா என்பதை தீர்மானித்தாக வேண்டும்.”
சரியான மதத்தை எவ்வாறு தெரிவு செய்வது
சரியான மதத்தைத் தெரிவு செய்வதில் எது நம்மை வழிநடத்தும்? யூனிவெர்சாலிஸ் என்சைக்ளோபீடியா உண்மையின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காண்பிக்கையில், அது சரியாகவே இருக்கிறது. பொய்களைக் கற்பிக்கும் மதம் உண்மையாக இருக்க முடியாது. பூமியில் வாழ்ந்தவருள் மிகப் பெரிய தீர்க்கதரிசி இவ்விதமாகச் சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.”—யோவான் 4:24.
அந்தத் தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்து. அவர் மேலுமாக சொன்னார்: “பொய் மதப் போதகர்களுக்கு எதிராக எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; அவர்கள் உண்மையில் பேராசையுள்ள ஓநாய்கள். நீங்கள் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறியமுடியும் . . . நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:15–17, பிலிப்ஸ்) உலகிலுள்ள “பெரிய” மதங்களினுடைய மற்றும் முளைத்து எழுந்திருக்கும் மத உட்பிரிவுகள் மற்றும் கருத்துவேறுபாட்டுக் குழுக்களின் கெட்ட கனிகளைப் பார்த்து, அநேக உண்மை மனதுள்ள ஆட்கள் அவைகள் அனைத்தையும் ‘கெட்ட மரங்களாக,’ போதிய அளவு நல்லதாக இல்லாதிருப்பதாக கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்விதமாக உண்மை மதத்தைக் கண்டடைய முடியும்?
தெரிவு செய்வதற்கு முன்பாக கிறிஸ்தவமண்டலத்தின் உள்ளேயும் வெளியேயுமிருக்கும் ஆயிரக்கணக்கான மதங்களையும் நுணுக்கமாக ஆய்வு செய்வது சாத்தியமற்றதாக இருக்கும் என்பது தெளிவாக இருக்கிறது. என்றபோதிலும், இயேசு சொன்னவிதமாக, சத்தியத்தையும் கனிகளையும் உரைக்கல்லாக நாம் பயன்படுத்துவோமானால் மெய் மதத்தை அடையாளங்கண்டுகொள்வது சாத்தியமாகும்.
சத்தியமும் கனிகளும்
இயேசு சத்தியத்தைப் பற்றி பேசினார். இதைப் பொறுத்தமட்டில், பெரும்பாலான மதங்களில் ஊடுருவி பரவியிருக்கும் பூர்வ புராணங்கள் மற்றும் கிரேக்க தத்துவங்களிலிருந்து பெறப்பட்ட மதசம்பந்தமான பொய்களை எந்த விசுவாசிகளின் ஒரு தொகுதி ஏற்க மறுத்திருக்கிறது? மனித ஆத்துமா உள்இயல்பில் சாவாமையுள்ளது என்பது இப்படிப்பட்ட பொய்களில் ஒன்றாகும்.a இந்தப் போதகம் கடவுளை கனவீனப்படுத்தும் நரக அக்கினி கோட்பாட்டுக்கு வழிவகுத்திருக்கிறது.
இயேசு கனிகளைப் பற்றியும்கூட பேசினார். இதைப் பொறுத்தமட்டில், அன்பினாலும் பரஸ்பர புரிந்துகொள்ளுதலினாலும் இன, மொழி மற்றும் தேசிய தடைகளை மேற்கொண்டுவிட்டிருக்கும் ஓர் உண்மையான சர்வதேசிய கூட்டுறவை உண்டுபண்ணியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் அறிவீர்களா? தங்கள் சகோதர சகோதரிகளைப் பகைக்கவும், தேசப்பற்று அல்லது மதத்தின் பெயரில் அவர்களைக் கொல்லவும் அரசியல்வாதிகள் அல்லது மதத் தலைவர்கள் தங்களைத் தூண்டிவிட அனுமதிப்பதைக் காட்டிலும் துன்பமனுபவிக்கும் உலகளாவிய ஒரு மத சமுதாயத்தை நீங்கள் அறிவீர்களா? இப்படிப்பட்ட மத சம்பந்தமான பொய்களை ஏற்க மறுத்து, இப்படிப்பட்ட கனிகளைப் பிறப்பித்த ஒரு மதம் உண்மையான ஒன்றாக இருப்பதற்கு வலிமை மிக்க அத்தாட்சியைக் கொடுக்குமல்லவா?
மெய் மதம் இன்று கடைபிடிக்கப்பட்டுவருகிறது
இப்பேர்ப்பட்ட ஒரு மதம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. ஆனால் அது உலகிலுள்ள முதன்மையான மதங்களில் ஒன்றாக இல்லை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். இது நமக்கு ஆச்சரியமாக இருக்க வேண்டுமா? இல்லை. இயேசு தம்முடைய பிரசித்திப் பெற்ற மலைப்பிரசங்கத்தில் சொன்னதாவது: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—மத்தேயு 7:13, 14.
ஆகவே உண்மை மதத்தை எங்கே காணமுடியும்? இந்த ‘இடுக்கமும் நெருக்கமுமான பாதையில்’ நடந்துசெல்லும் சர்வ தேசிய சமுதாயத்தை உண்டுபண்ணுகிறவர்கள் யெகோவாவின் சாட்சிகளே என்று எல்லா மனத்தாழ்மையோடும் நேர்மையோடும் நாம் சொல்ல வேண்டும். உண்மைதான் தற்போது செல்வாக்குள்ள மதங்கள் யெகோவாவின் சாட்சிகளை ஏளனமாக ஒரு மத உட்பிரிவு என்பதாக அழைக்கிறார்கள். ஆனால் அவ்விதமாகத்தானே பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த விசுவாசதுரோக மதத் தலைவர்கள் பூர்வ கிறிஸ்தவர்ளை அழைத்தனர்.—அப்போஸ்தலர் 24:1–14.
யெகோவாவின் சாட்சிகள் ஏன் தாங்கள் மெய் மதத்தையுடைவர்களாக இருப்பதாக நம்புகிறார்கள்? ஆம், 200-க்கும் மேற்பட்ட தேசங்களில், தேசிய, இன, மொழி மற்றும் சமுதாய வர்க்கத்தின் பிரிவினைகளை மேற்கொண்டுவரும் ஒரு சர்வதேச சகோதரத்துவத்தை உண்டுபண்ணுகிறவர்கள் அவர்களே. மேலுமாக எத்தனை பழமையானதாக இருப்பினும், பைபிள் சொல்வதற்கு தெளிவாக முரணாக இருக்கும் கோட்பாடுகளை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்விதமாக இத்தகைய பொறாமையுறத்தக்க நிலைமைக்குள் வருகிறார்கள்? மேலும் மெய் மதத்தைக் கடைபிடிப்பது எதை உட்படுத்துகிறது? மதத்தைப் பற்றிய இதுவும் மற்ற கேள்விகளும் அடுத்த இரண்டு கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும். (w91 12/1)
[அடிக்குறிப்புகள்]
a ஆதாரமற்ற இந்த நம்பிக்கையின் தோற்றத்தைப்பற்றிய நல்ல ஆதாரமுள்ள அத்தாட்சிக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி, நியு யார்க், இங்க், வெளியிட்டுள்ள மனிதவர்க்கம் கடவுளைத் தேடுதல் (Mankind’s Search for God) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கங்கள் 52–7 பார்க்கவும்.
[பக்கம் 7-ன் படம்]
சிலுவைப்போர்கள் பொய் மதத்தின் கெட்ட கனிகளின் பாகமாக இருந்தன
[படத்திற்கான நன்றி]
[பக்கம் 8-ன் படம்]
உண்மை மதம் நல்ல கனிகளைப் பிறப்பிக்கிறது