உருவங்கள் கடவுளிடம் உங்களை நெருங்கிவரச் செய்யக்கூடுமா?
மிகப் பல எண்ணிக்கையில் எகிப்திய, பாபிலோனிய மற்றும் கிரேக்க உருவங்கள் இன்று அருங்காட்சியகங்களில் நிறைந்து காணப்படுகின்றன. ஒரு சமயம் மிகுந்த ஈடுபாட்டோடு வழிபாட்டுக்குரியவையாக இருந்து வந்த சிலைகள், வெறுமனே பண்டைய கலைப் பொருட்களாக இப்பொழுது காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அவைகளின் சக்தி, அவைகளை வணங்கியவர்களின் கற்பனையில் மாத்திரமே இருந்திருக்கிறது. அவைகளை வழிபட்ட ஆட்கள் இறுதியில் மறைந்து போகையில், இந்த உருவங்களுக்கு இருப்பதாக கருதப்பட்ட சக்தியும்கூட மறைந்து விட்டது. உருவங்கள் சக்தியற்றவை—உண்மையில் அவை அவ்விதமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது—அவை வெறுமனே உயிரில்லா மரம், கல் அல்லது உலோக பொருட்களே என்பது வெளிப்படுத்தப்பட்டது.
இன்று மக்களால் வழிபட்டு வணங்கப்பட்டு வரும் உருவங்களைப் பற்றி என்ன? இந்த உருவங்கள், பண்டைய எகிப்திய, பாபிலோனிய மற்றும் கிரேக்க உருவங்களைவிட அதிக சக்தி வாய்ந்தவையா? மனிதன் கடவுளிடமாக நெருங்கிவர உதவி செய்வதில் உண்மையில் அவை கருவிகளாக இருந்திருக்கின்றனவா?
ஒவ்வொரு சந்ததியும் மறைந்து போகையில், மனிதகுலம் கடவுளிடமிருந்து மேலும் மேலுமாக விலகி போய் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. உலகிலுள்ள எல்லா உருவங்களும் அதைக்குறித்து என்ன செய்யக்கூடும்? கவனிக்கப்படாமல் விடப்பட்டால், அவற்றின் மேல் தூசு படிய, கடைசியாக அவை அழிந்து அல்லது சிதைந்துவிடுகின்றன. அவற்றால் தங்களையே கவனித்துக் கொள்ள இயலாத பட்சத்தில் மனிதர்களுக்கு எதையாவது செய்வதைக் குறித்து சொல்லவே தேவையில்லை. ஆனாலும், அதி முக்கியமாக இந்த விஷயத்தின் பேரில் பைபிளுக்கு என்ன சொல்லயிருக்கிறது?
பெரும் மதிப்புள்ளது, நுட்பமாக செய்யப்பட்டது, ஆனால் பயனற்றது
உருவங்கள் பயனற்றது என்றும் தங்களுடைய பக்தர்கள் கடவுளிடமாக நெருங்கி வர உதவி செய்ய முற்றிலும் இயலாதவை என்றும் பைபிள் அவைகளைக் குறித்து வெளிப்படுத்துவது ஆச்சரியமாயில்லை. மத சம்பந்தமான உருவங்கள் பொதுவாக பெரும் மதிப்புள்ளதும் நுட்பமாக செய்யப்பட்டதாகவும் இருந்தபோதிலும் பைபிள் பின்வருமாறு சொல்கையில் அவைகளின் உண்மையான மதிப்பைக் காண்பிக்கிறது: “அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிலிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்.”— சங்கீதம் 115:4-8.
பைபிள் உருவங்களைப் பயனற்றது என்பதாக வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், உருவங்களையும் அவற்றை வணங்குபவர்களையும் கண்டித்துப் பேசுகிறது: “அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார். மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது.”—எரேமியா 10:5, 14, 15.
கத்தோலிக்க கருத்து
மத சம்பந்தமான உருவங்களுக்கு முன்பாக தலை வணங்கி, ஜெபம் செய்து, மெழுகுவர்த்தி ஏற்றி, அவைகளை முத்தமிடும் அநேகர் தங்களை விக்கிரகாராதனைக்காரராக அல்லது உருவ வழிபாட்டுக்காரராக கருதுவதில்லை என்பது உண்மையே. உதாரணமாக, கத்தோலிக்கர்கள் கிறிஸ்துவினுடைய மற்றும் மரியாளுடைய உருவங்களை வழிபடுவதற்குக் காரணம், உருவங்கள் தாமே எந்தத் தெய்வீகத்தன்மையும் பெற்றிருக்கிறது என்பதால் அல்லாமல் அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன அந்த நபர்களின் நிமித்தமாக அவ்விதமாகச் செய்வதாக அவர்கள் உரிமைப்பாராட்டுகின்றனர். உவர்ல்ட் புக் என்சைக்ளோப்பீடியா, “ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், உருவங்கள் அவைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறவர்களுடைய சின்னமாக வழிபடப்படுகின்றன,” என்று சொல்கிறது. உருவ வழிபாட்டின் தரம், கடவுளுக்குதாமே கடன்பட்டிருக்கின்ற அந்த வழிபாட்டுக்கு தாழ்ந்தவையாக இருக்கும் வரை உருவங்களை வழிபடுவது சரியே என்று கத்தோலிக்க மதகுருக்கள் பிரசங்கித்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் இந்த உருவங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. நியு கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியா-வும்கூட இப்படிப்பட்ட வழிபாடு, “ஒரு வணக்கச் செயல்” என்றே ஒப்புக்கொள்கிறது. என்றபோதிலும், கடவுளை அணுகுவதற்கு உருவங்களை பயன்படுத்துவது தகுதியற்றதென இயேசு கிறிஸ்து அறிவித்திருக்கிறார். அவர் சொன்னார்: “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) ஆகவே முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வணக்கத்தில் உருவங்களைப் பயன்படுத்த மறுத்தது குறித்து ஆச்சரிப்படுவதற்கில்லை.
இருந்தபோதிலும், இன்று கிறிஸ்தவமண்டல மதங்கள் உருவங்களின் பெருக்கத்தில் மற்ற அனைத்தையும் விஞ்சிவிடுகின்றன. ஆம், உருவங்களை வழிபடுவதிலிருக்கும் மடமையை வெளிப்படுத்தும் எல்லா சரித்திரப்பூர்வமான மற்றும் வேதபூர்வமான அத்தாட்சியின் மத்தியிலும் உலகம் முழுவதிலும் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டுகிறவர்கள் கடவுளைத் தேடும் தங்கள் உண்மையான முயற்சியில் உருவங்களுக்கு முன்னால் தொடர்ந்து தலைவணங்கி ஜெபம் செய்து வருகிறார்கள். ஏன்?
ஒரு சத்துருவினால் தூண்டப்பட்டு
ஏசாயா தீர்க்கதரிசி, அவருடைய நாளில் இருந்த உருவ வணக்கத்தாரின் கண்கள், “காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டி”ருந்தபடியால் தங்களுடைய செயல்களின் மடமையை அவர்கள் காண தவறினார்கள் என்று சொன்னார். (ஏசாயா 44:18) மனிதர்கள் மீது யார் இப்படிப்பட்ட ஒரு செல்வாக்கைச் செலுத்தக்கூடும்? மனிதரை மெய்க் கடவுளிடத்திலிருந்து விலகிப் போகச் செய்விக்கும் நோக்கத்தோடு சாத்தானால் உருவ வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது என்று பொ.ச. 754-ன் உருவத்தகர்ப்பு குழு அறிவித்தது. இந்த முடிவு சரியா?
ஆம், ஏனென்றால் ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிளுக்கு இது இசைவாக இருக்கிறது. கடவுளுடைய பிரதான சத்துருவாகிய பிசாசாகிய சாத்தான் சத்தியம் “பிரகாசமாயிராதபடி” மக்களின் “மனதைக் குருடாக்கி”யிருக்கிறான் என்று அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறது. (2 கொரிந்தியர் 4:4) ஆகவே ஓர் உருவத்தை வழிபடும் போது கடவுளிடம் நெருங்கிவருவதற்குப் பதிலாக ஒருவர் உண்மையில் பிசாசின் அக்கறைகளையே சேவிக்கிறார்.—1 கொரிந்தியர் 10:19, 20.
கடவுளிடம் நெருங்கி வருதல்
உருவங்கள் கடவுளிடம் நெருங்கி வர நமக்கு உதவி செய்யமுடியாது. மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் உருவ வழிபாட்டினை அருவருக்கிறார். (உபாகமம் 7:25) “யெகோவா தனிப்பட்ட பக்தியை வற்புறுத்துகிற தேவன்.” (நாகூம் 1:2, NW) அவர் சொல்கிறார்: “நான் கர்த்தர், [யெகோவா, NW] இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.” (ஏசாயா 42:8) இதன் விளைவாக உருவங்களை வழிபடுகிறவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்று பைபிள் எச்சரிக்கிறது.—கலாத்தியர் 5:19-21.
என்றபோதிலும், யெகோவா இரக்கமும் மன்னிக்கிறவருமான தேவன். விக்கிரகங்களிலிருந்து விலகி கடவுளிடமாக திரும்பி, தங்கள் விக்கிரக பழக்க வழக்கங்களை விட்டொழித்த பின்பு, நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. (1 கொரிந்தியர் 6:9-11; 1 தெசலோனிக்கேயர் 1:9) அவர்கள் இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்த்தார்கள்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.”—யோவான் 4:24.
பைபிளை ஊக்கமாக படிப்பது, கடவுளிடம் நெருங்கி வருவது கடினமானதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 17:26-28) அவர் அனலான, அன்புள்ள அணுகப்பட முடிகிற ஆள்தன்மையை உடையவராக இருந்து, தம்மோடு ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள அவர் நம்மை அழைக்கிறார், நம்மிடம் எதிர்பார்க்கிறார்.—ஏசாயா 1:18.
நம்முடைய பரலோக தகப்பனை ஒரு நபராக அறிந்து கொள்ளவும், யெகோவா என்ற அவருடைய பெயரையும் அவருடைய குணாதிசயங்களையும் மனிதகுலத்தோடு அவருடைய செயல்தொடர்புகளையும் பற்றி கற்றறியவும் யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். அவருடைய வார்த்தையாகிய பைபிளின் பக்கங்கள் மூலமாக, கடவுளை அணுகுவதற்கு உங்களுக்கு உண்மையில் உருவங்கள், படங்கள் போன்ற காணக்கூடிய உபகரணங்கள் தேவையில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஆம், “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.”—யாக்கோபு 4:8. (w92 2/15)
[பக்கம் 6-ன் பெட்டி]
சரித்திராசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் . . .
◻ “பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட புத்த மதம், சுமார் பொ.ச. முதல் நூற்றாண்டு வரை அதனுடைய ஸ்தாபகரின் முதல் உருவத்தைப் பார்க்கவில்லை என்பது நன்கு அறியப்பட்ட உண்மையாகும்.”
“பல நூற்றாண்டுகளாக, இந்து மத பாரம்பரியம் முக்கியமாக விக்கிரகங்கள் அல்லது உருவங்கள் நீங்கலாகவே இருந்தது.”
“இந்து மதமும் புத்த மதமும் உருவ வழிபாடு இல்லாமலே ஆரம்பித்து, படிப்படியாகவே தங்கள் வணக்கத்துள் உருவங்களை ஏற்றுக்கொண்டன. கிறிஸ்தவமும் அதையே செய்தது.”—மிர்சியா எலியாட் எழுதிய மத கலைக்களஞ்சியம்.
◻ “கடவுளின் மெய் வணக்கம் உருவங்களை முழுதும் தவிர்த்தாயிருந்தது என்பது பல்வேறு பைபிள் பதிவுகளிலிருந்தும் தெளிவாக இருக்கிறது. . . . புதிய ஏற்பாட்டிலும்கூட, அந்நிய தேவர்கள் மற்றும் விக்கிரகங்களின் வணக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது.”—புதிய கத்தோலிக்க என்சைக்ளோப்பீடியா.
◻ “பூர்வ கிறிஸ்தவர்களின் வணக்கத்தில் உருவங்கள் அறியப்படாதவையாக இருந்தன.”—மக்ளின்டாக் மற்றும் ஸ்டாரங்கின் பைபிள், இறையியல் மற்றும் மதகுரு இலக்கிய கலைக்களஞ்சியம்.
◻ “புதிய ஏற்பாட்டிலோ அல்லது கிறிஸ்தவத்தின் முதல் தலைமுறையின் எந்த ஓர் உண்மையான எழுத்துக்களிலோ, கிறிஸ்தவர்கள் பொதுவாகவோ தனிப்பட்ட விதமாகவோ செய்த அவர்கள் வணக்கத்தில் சிலைகள் அல்லது படங்களை உபயோகித்ததாக எந்த ஒரு தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாது.”—எலியாஸ் பென்ஜமீன் சான்ஃபோர்ட் எழுதிய மத அறிவின் பேரில் ஒரு சுருக்கமான சைக்ளோபீடியா.
◻ “பூர்வ கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் உருவங்களை வைக்கும் வெறும் யோசனையையே வெறுப்போடு நோக்கியிருப்பார்கள், அவைகளுக்கு முன்னால் தலைவணங்குவதை அல்லது ஜெபிப்பதை விக்கிரகாராதனையாகவே கருதியிருப்பார்கள்.”—ஜான் ஃப்ளாட்சர் ஹர்ஸ்ட் எழுதிய கிறிஸ்தவ சர்ச்சின் சரித்திரம்.
◻ “பூர்வ சர்ச்சில், கிறிஸ்துவின் மற்றும் புனிதர்களின் உருவப்படங்களை உண்டுபண்ணுவதும் வழிபடுவதும் எப்போதும் எதிர்க்கப்பட்டு வந்தது.”—தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.
◻ “முற்காலத்திய சர்ச் கலையை வெறுக்காவிட்டாலும், அது கிறிஸ்துவின் உருவங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.”—ஸ்காஃப்-ஹெர்சாக் மத அறிவு கலைக்களஞ்சியம்.
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்கிற”வர்களுக்காக தேடிக்கொண்டிருக்கிறார் என்று இயேசு அழுத்தமாகக் கூறினார்