சர்வதேச பாதுகாப்புக்கான மனிதனின் திட்டங்கள்
“இவை அனைத்தும் முடிந்த பிறகு, நாம் குணப்படுத்துகிறவர்களாக இருக்க விரும்புகிறோம். புதிய உலக ஒழுங்கு முறை என்று நான் தளராத நம்பிக்கையுடன் அழைப்பதை கொண்டு வருவதை எளிதாக்க நம்மால் ஆனதைச் செய்ய நாம் விரும்புகிறோம்.”—ஐ.மா. ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஜனவரி 1991, ஈராக்குடன் போர் துவங்கின உடன்.
“புதிய உலக ஒழுங்கு முறையைப் பற்றிய ஜனாதிபதி புஷ்ஷின் கருத்து, சட்ட ஒழுங்கு முறையையும், சுதந்திரத்தையும் நீதியையும் அடைய தேசங்களுக்கிருக்கும் பொதுவான உத்தரவாதத்தையும் அழுத்திக் காண்பிக்கிறது. கெடுபிடிப் போர் முடிந்துவிட்டதை அடுத்து, புதிய ஒரு சகாப்தம் மலர்ந்து கொண்டிருக்கிறது.”—ஆஸ்திரேலியாவுக்கு ஐ.மா. தூதுவர், ஆகஸ்ட் 1991.
“இன்றிரவு, உலகம் முழுவதிலும் மக்களாட்சியின் விளைவுகள் அபிவிருத்தியாவதை நான் காண்கையில் ஒருவேளை—ஒருவேளை முன்னொருபோதும் இராதவகையில் நாம் இப்பொழுது புதிய உலகின் அருகாமையில் இருக்கலாம்.”—ஐ.மா. ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், செப்டம்பர் 1991.
அநேக உலகத் தலைவர்கள், ஜனாதிபதி புஷ் போன்றே எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு நல்ல காரணமிருக்கிறதா? இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு நடந்து வரும் சம்பவங்கள் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கு ஆதாரத்தை அளிக்கிறதா? அரசியல்வாதிகளால் சர்வதேச பாதுகாப்பைக் கொண்டுவர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
மனிதனின் முனைப்பான திட்டம்
“இரண்டாம் உலகப் போரின் கடைசி இரண்டு ஆண்டுகளின் போது, ஒவ்வொரு மாதமும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்பதாக போரே நீ போய் வா என்ற தொலைக்காட்சி திரைப்படம் விளக்கியது. அந்தச் சமயத்தில் மறுபடியுமாக அப்பேர்ப்பட்ட ஒரு போர் நடைபெறுவதை தவிர்ப்பதற்காக திட்டமொன்றுக்கான அவசரத் தேவையை தேசங்கள் உணர்ந்தன. போர் நடந்துகொண்டிருந்த போதே, 50 தேசங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து சர்வ தேச பாதுகாப்புக்காக மனிதரால் எக்காலத்திலும் உருவாக்கப்பட்டதுள் மிகப் பெரிய ஒரு திட்டத்தை உருவாக்கினர்: ஐக்கிய நாடுகளின் சாசனம். சாசனத்தின் ஆரம்ப வரிகள், “போர்களின் அழிவினின்று வருங்கால மக்களைக் காப்பாற்றுவதற்கு” உறுதியை வெளிப்படுத்தியது. ஐக்கிய நாடுகளின் எதிர்கால உறுப்பினர்கள், “உலக நாடுகளிடையே அமைதியையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ள ஒருங்கிணைந்து பாடுபட” வேண்டியவர்களாக இருந்தனர்.
நாற்பத்தியோரு நாட்களுக்குப் பின்பு, விமானம் ஒன்று ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது. அது நகரத்தின் மையப் பகுதிக்கு மேல் வெடித்து, 70,000-க்கு மேற்பட்ட ஆட்களைக் கொன்றது. அந்தக் குண்டு வெடிப்பும் மூன்று நாட்களுக்குப் பின் அதைத் தொடர்ந்து நாகசாகியின் மீது போடப்பட்டதும், ஜப்பானோடு போரை திறம்பட்ட வகையில் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜப்பானின் நட்பு நாடான ஜெர்மனி 1945, மே 7-ம் தேதி சரணடைந்துவிட்டதால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. என்றபோதிலும் அதுவே எல்லா போர்களின் முடிவாகவும் இருந்ததா?
இல்லை. இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு, மனிதகுலம் 1 கோடியே 90 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியிருக்கும் 150-க்கும் அதிகமான சிறிய போர்களை பார்த்திருக்கிறது. முனைப்பான ஐ.நா. திட்டம் இன்னும் சர்வ தேச பாதுகாப்பைக் கொண்டுவரவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. என்ன தவறு நேரிட்டுவிட்டது?
கெடுபிடிப் போர்
இரண்டாம் உலகப் போரின் முன்னாள் நேசநாடுகளிடையே விரைவில் உருவாகி வந்த போட்டியினை ஐ.நா.-வை திட்டமிட்டவர்கள் எதிர்நோக்க தவறினர். அநேக நாடுகள், வல்லரசு போட்டியில் சேர்ந்து ஆதரவு கொடுக்க, இது கெடுபிடிப்போர் என்றழைக்கப்படலானது. இது ஓரளவில் கம்யூனிஸத்துக்கும் முதலாளித்துவத்துக்குமிடையிலான போட்டியாக இருந்தது. போரை நிறுத்துவதற்கு சேர்ந்து பாடுபடுவதற்குப் பதிலாக, இரண்டு தேசங்களின் கூட்டணிகளும் உள்நாட்டுப் போர்களில் எதிர் பக்கங்களை ஆதரித்து, இவ்விதமாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன.
1960-களின் பிற்பகுதியில் கெடுபிடிப்போரின் பகைமை குறைய ஆரம்பித்தது. இது 1975-ல் 35 நாடுகள் ஹெல்சிங்கி ஒப்பந்தம் என்றழைக்கப்பட்டதில் கையொப்பமிட்டபோது அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. இதில் பங்குகொண்டவர்களில் சோவியத் யூனியனும், ஐக்கிய மாகாணங்களும் முறையே அவற்றின் ஐரோப்பிய நேசநாடுகளும் அடங்கும். அனைவருமே “அமைதிக்கும் பாதுகாப்புக்கும்” பாடுபடவும் “எந்த ஒரு நாட்டின் பிராந்திய உரிமை அல்லது அரசியல் சுதந்திரத்துக்கு எதிராக மிரட்டலையோ அல்லது படைவலிமையையோ பயன்படுத்துவதிலிருந்து அல்லது ஐக்கிய நாடுகளின் நோக்கங்களுக்கு முரணாக இருக்கும் வேறு எதிலிருந்தும் . . . விலகியிருக்க” உறுதி எடுத்துக் கொண்டனர்.
ஆனால் இந்தக் கருத்துகள் பலனளிக்கவில்லை. 1980-களின் ஆரம்பத்தில் வல்லரசுகளிடையே போட்டி மறுபடியும் தீவிரமானது. 1982-ல் காரியங்கள் அத்தனை மோசமாகிவிட்டதால் ஐக்கிய நாடுகளின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலர் டாக்டர் ஏவியர் பெரஸ் டி குவேயர் தன்னுடைய அமைப்பின் தோல்வியை ஒப்புக்கொண்டு “ஒரு புதிய சர்வதேச குழப்பம்” குறித்து எச்சரித்தார்.
என்றபோதிலும், இன்று, ஐ.நா. பொதுச்செயலரும் ஏனையத் தலைவர்களும் தளரா நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். செய்தி அறிவிப்புகள் “கெடுபிடிப் போருக்குப் பிற்பட்ட சகாப்தம்” குறித்து பேசுகின்றன. இந்த மாற்றம் எவ்விதமாக ஏற்பட்டது?
“கெடுபிடிப் போருக்குப் பிற்பட்ட சகாப்தம்”
ஐரோப்பாவில் பாதுகாப்புக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் 35-தேசங்கள் ஒரு மாநாட்டில் ஒன்றுகூடியது குறிப்பிடத்தக்கதாகும். 1986 செப்டம்பரில், 1975 ஹெல்சிங்கி ஒப்பந்தத்திற்கு தங்கள் வாக்குறுதியை மீண்டும் உறுதி செய்யும் வகையில் ஸ்டாக்ஹோம் பத்திரம் என்றழைக்கப்பட்டதில் கையொப்பமிட்டனர்.a ஸ்டாக்ஹோம் பத்திரம் இராணுவ நடவடிக்கைகளின் கண்காணிப்பைக் கட்டுப்படுத்தும் அநேக விதிகளைக் கொண்டிருக்கின்றது. “கடந்த மூன்று ஆண்டுகளின் விளைவுகள் உற்சாகமளிப்பதாக உள்ளன, சாதனைகள் ஸ்டாக்ஹோம் பத்திரத்தில் எழுத்துவடிவிலுள்ள கட்டுப்பாடுகளையும் விஞ்சிவிட ஆரம்பித்திருக்கின்றன” என்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் அதன் 1990 வருடாந்தர புத்தகத்தில் அறிவித்திருந்தது.
பின்பு, 1987-ல் வல்லரசுகள், 500-லிருந்து 5,500 கிலோ மீட்டருக்கு இடையிலான தொலைவில் நிலத்திலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் அனைத்தையும் அழிப்பதைத் தேவைப்படுத்தும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தை முயன்று அடைந்தன. “ஏவுகணைகளும் எறிபடை வீச்சுக் கருவிகளும் உண்மையில் திட்டமிட்டபடி அழிக்கப்பட்டு வருகின்றன, ஒப்பந்தத்தின் நிபந்தனைகளும் ஒவ்வொரு தரப்பினராலும் நேர்மையாக பின்பற்றப்பட்டு வருகிறது” என்று SIPRI சொல்கிறது.
அணுஆயுத யுத்த அபாயத்தைக் குறைக்க மற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக 1988-ல் வல்லரசுகள் “கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை எறிபடைகள் மற்றும் நீரில் மூழ்கி செலுத்தப்படும் உந்துவிசை எறிபடைகள்” சம்பந்தமாக ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இப்படிப்பட்ட ஆயுதங்களை செலுத்துவதற்கு முன்பாக, ஒரு தரப்பு, மற்ற தரப்புக்கு, “இருபத்து-நான்கு மணிநேரத்துக்கு முன்கூட்டியே, திட்டமிடப்பட்டுள்ள தேதி, எங்கிருந்து செலுத்தப்படவிருக்கிறது, தாக்குதலுக்குள்ளாகும் பிராந்தியம் ஆகியவற்றை” எச்சரிக்கையாக அறிவித்துவிட வேண்டும். SIPRI-ன் பிரகாரம், இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் “உண்மையில் உலகளாவிய அணுஆயுத யுத்தமாக மாறக்கூடிய உள்ளூர் சம்பவங்களின் சாத்தியத்தை ஒழித்துவிடுகின்றன.”
இதற்கிடையில், சர்வதேச பாதுகாப்பை மேம்படுத்த திட்டங்கள் வேகத்தை திரட்டிக்கொண்டன. மே 1990-ல், வாஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்ற வல்லரசு மாநாடு ஒன்றின் போது, சோவியத் ஜனாதிபதி மிக்கேல் கொர்பச்சேவ் ஐரோப்பிய நாடுகளின் இரண்டு கூட்டணிகளும் சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். ஜூலை மாதம் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பினுடைய (NATO) 16 மேற்கத்திய நாடுகள் லண்டனில் கூடின. “நாம் இனிமேலும் விரோதிகள் அல்ல என்றும் அச்சுறுத்துவதிலிருந்து அல்லது படை பலத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகியிருக்க நம்முடைய நோக்கத்தை உறுதிசெய்கிறோம் என்றும் நாம் முறைப்படி தெரிவிக்கின்ற ஒரு கூட்டு அறிவிப்பில்” கையொப்பமிட வேண்டும் என்பது மிக்கேல் கொர்பச்சேவின் யோசனைக்கு அவர்களுடைய பிரதிபலிப்பாக இருந்தது. ஓர் ஆப்பிரிக்க செய்தித்தாளின் முதல் பக்க தலைப்பு, “உலக சமாதானத்துக்கு ஒரு மாபெரும் நடவடிக்கை” என்பதாக இதை வருணித்தது.
பின்லாந்தில் ஹெல்சிங்கியில் வல்லரசு மாநாடு நடைபெறுவதற்கு சற்று முன்பு, “[மத்திய கிழக்கில்] யுத்தத்தின் சாத்தியம், உலக சமாதானத்துக்கு ஒரு புதிய கூட்டு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது” என்று ஐ.மா. அரசு பிரதிநிதி ஒருவர் சொன்னார். ஈராக் குவைத்தின் மீது படையெடுத்த போது சமாதானத்துக்கு தடங்கல் ஏற்பட்டது, போர் மத்திய கிழக்கிலுள்ள எல்லா தேசங்களுக்கும் பரவும் ஆபத்து இருப்பது போல தோன்றியது. ஆனால் ஐக்கிய நாடுகள் அதிகாரத்தின் கீழ், ஐக்கிய மாகாணங்களின் தலைமையிலான பன்னாட்டுப் படை, தாக்க வந்த படைகளை, அவர்களுடைய சொந்த தேசத்திற்குள் விரட்டி அடித்தது. அந்தப் போரில் காண்பிக்கப்பட்ட சர்வதேச நோக்கத்தின் ஒற்றுமை, ஒத்துழைப்பின் ஒரு புதிய சகாப்தம் விடிய ஆரம்பித்துவிட்டது என்று நம்புவதற்கு ஒரு சிலரை ஊக்குவித்தது.
அப்போது முதற்கொண்டு, உலக சம்பவங்கள் இன்னும் அபிவிருத்தி அடைந்துவிட்டிருக்கிறது. குறிப்பாக, சோவியத் யூனியனின் இயல்பே வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. பால்டிக் மாநிலங்கள் தங்கள் சுதந்தரத்தை அறிவிக்க அனுமதிக்கப்பட்டன. சோவியத் யூனியனிலுள்ள மற்ற குடியரசுகள் அவர்களுடைய முன்மாதிரியை பின்பற்றின. மைய கம்யூனிஸ்ட் ஆட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஐக்கியப்பட்டிருந்ததாக தோன்றிய தேசங்களில் வன்முறையான இன பகைமை வெளிப்பட ஆரம்பித்தது. 1991-ன் முடிவுக்குள், சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாக இல்லாமற் போனது.
உலக அரசியல் காட்சியில் இந்தத் தீவிர மாற்றங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. இது சம்பந்தமாக தி நியு யார்க் டைம்ஸ் சொன்னது: “உலக அளவிலான பதற்றம் குறைந்திருப்பதும் ஐக்கிய மாகாணங்களுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே புதிய ஒத்துழைப்பு ஆவியும் சர்வதேச விவகாரங்களில் உலக அமைப்புக்கு புதிய, அதிக ஆற்றல்மிக்க ஒரு பங்கை அர்த்தப்படுத்தக்கூடும்.”
கடைசியாக, அந்த 47-வயதான அமைப்பு, தன்னால் என்ன செய்யமுடியும் என்பதைக் காண்பிக்க இப்போது நேரம் ஆகிவிட்டதா? நாம் உண்மையிலேயே ஐக்கிய மாகாணங்கள் “சமாதானம், சுதந்திரம் மற்றும் செழுமையின் புதிய நூற்றாண்டு மற்றும் ஒரு புதிய ஆயிரமாண்டு” என்று அழைத்த அதற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறோமா? (w92 3/1)
[அடிக்குறிப்புகள்]
a இந்த ஒப்பந்தமே, ஹெல்சிங்கியில் கானடாவும், ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் 32 மற்ற நாடுகளும் கையொப்பமிட்ட தொடர்ச்சியான ஒப்பந்தங்களில் முதலாவதானதும் அதிமுக்கியமானதுமாகும். பிரதான ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வமான பெயர், ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மீதான மாநாட்டின் கடைசி சட்டம் ஆகும். கிழக்குக்கும் மேற்கிற்கும் இடையில் சர்வதேச பதற்ற நிலையை குறைப்பதே அதன் அடிப்படை நோக்கமாகும்.—உவார்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா.