வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
தேசத்தைச் சென்று பாருங்கள், ஆடுகளைச் சென்று பாருங்கள்!
சம்பவங்கள் நடைபெற்ற இடங்களைப் பார்ப்பது, பைபிளை புரிந்துகொள்ளவும், அதை அதிக அர்த்தமுள்ளதாக்கவும் உதவி செய்யும் என்பதாக எண்ணி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சென்று பார்த்திருக்கிறார்கள். அது அவ்விதமாகவே இருந்திருக்கிறது.
நீங்கள் நேராகச் சென்று பார்த்திருந்தாலும் சரி, அல்லது தேசத்தைப் பற்றிய புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் கற்பனையில் அவைகளைச் சென்று பார்த்திருந்தாலும் சரி, ஆடுகளைச் சென்று பார்ப்பது பற்றி என்ன? ‘ஆடுகளுக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கும் சம்பந்தம் என்ன?’ என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். உண்மையில், பைபிள் காலங்களில் ஆடுகள் அவ்வளவாக வாழ்க்கையோடு ஒன்றிவிட்டிருந்தபடியால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சென்று பார்ப்பது, ஒரு கருத்தில், ஆடுகளைச் சேர்க்காமல் முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது.
இங்கே நீங்கள் பார்க்கும் புகைப்படங்கள் உங்கள் விஜயத்தின் ஒரு பாகமாக இருக்கக்கூடும், ஏனென்றால் இன்று இப்பகுதியில் காணப்படும் ஆடுகள், பைபிள் காலத்தின் போது வழக்கமாக காணப்பட்டவற்றைப் போன்றே பெரும்பாலும் இருக்கின்றன.a அவைகளின் அகன்ற வாலை கொழுப்பு மூடி இருப்பதால் அது கனமாக இருக்கின்றது. (லேவியராகமம் 7:3; 9:19) நெருக்கமான கம்பளி பொதுவாக வெள்ளையாக உள்ளது. ஆனால் யாக்கோபின் பெரிய மந்தையில், ‘புள்ளியும், வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளும்’ இருந்ததை நினைவில் வையுங்கள்.—ஆதியாகமம் 30:32.
அதே பதிவு, பெரிய மந்தையுள்ள ஒரு மனிதன் செல்வந்தனாக கருதப்பட்டான் என்று விளக்குகிறது. (ஆதியாகமம் 30:43) யோபுவைப் பற்றி நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருக ஜீவன்கள் இருந்தது . . . அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.” (யோபு 1:3; 42:12) அல்லது நாபாலுக்கு 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். தாவீதின் நாளில் அவனுடைய அந்தஸ்தையும் செல்வாக்கையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (1 சாமுவேல் 25:2) ஆனால் துல்லியமாக பெரிய ஒரு மந்தை ஏன் பேரளவான செல்வத்தை உண்டுபண்ணியது?
இது ஏனென்றால் ஆடுகள் தங்கள் மேய்ப்பருக்கு அல்லது சொந்தக்காரருக்கு மதிப்புள்ள பொருட்களை அளித்தன. கம்பளம் தானே புதுப்பிக்கப்படும் ஒரு சொத்தாக இருந்தது. நீதிமொழிகள் 31:13, 21, 22 ஒரு ஞானமுள்ள, கடினமாக உழைக்கும் மனைவி எவ்விதமாக தன் குடும்பத்துக்கோ அல்லது விற்கப்படக்கூடிய ஆடைகளை உண்டுபண்ணவோ இவைகளை பயன்படுத்தக்கூடும் என்பதைக் காண நமக்கு உதவி செய்கிறது. (யோபு 31:20) கம்பளம் முக்கியமான ஒரு வாணிக பயனுள்ள பொருளாக இருந்தது. ஒரு மோவாபிய அரசன் “ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக் கடாக்களையும் செலுத்தி வந்தான்” என்ற குறிப்பிலிருந்து இது தெரிகிறது. (2 இராஜாக்கள் 3:4) ஆம் அவை “குறும்பாட்டுக்கடாக்களாக” இருந்தன; அவைகளின் ஏராளமான கம்பளம் அவற்றின் மதிப்பைக் கூட்டியது.
ஆண் ஆடுகளான ஆட்டுக்கடாக்களுக்கு, வலது பக்கத்திலுள்ள புகைப்படத்திலிருப்பது போல கவர்ச்சியான கொம்புகள் இருக்கக்கூடும். இது யூபிலி வருஷத்தை அறிவிக்க ஆட்டுக்கடாவின் கொம்பு பயன்படுத்தப்பட்டதை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறதா? (லேவியராகமம் 25:8-10) இது போன்ற துளையிடப்பட்ட கொம்புகள் அபாய அறிவிப்பொலியை முழங்க அல்லது போரில் சூழ்ச்சி முறைத்திட்டத்துடன் படைகளை வழிநடத்த பயன்படுத்தப்பட்டன.—நியாயாதிபதிகள் 6:34; 7:18, 19; யோவேல் 2:1.
உங்களுக்கு ஓர் ஆட்டு மந்தை இருக்குமானால் உங்களுக்கு உணவு கிடைப்பது உறுதியாக இருக்கிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே, ஏனென்றால் இஸ்ரவேலர் சாப்பிடக்கூடிய சுத்தமான மிருகங்களில் ஆடுகளும் இடம்பெற்றிருந்தன. (உபாகமம் 14:4) மாம்சம் (ஆட்டிறைச்சி) வேகவைக்கவோ வாட்டவோ படலாம். வருடாந்தர பஸ்காவில் நெருப்பினால் சுடப்பட்ட ஆடு, முக்கியமான ஒரு மூலப்பொருளாக இருந்தது. (யாத்திராகமம் 12:3-9) குடிப்பதற்கும் பாலாடைக் கட்டி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பாலும் ஆடுகளிலிருந்து ஒழுங்காக கிடைத்தன.—1 சாமுவேல் 17:17, 18; யோபு 10:10; ஏசாயா 7:21, 22.
மந்தைக்கும் அதன் மேய்ப்பனுக்குமிடையிலான நெருக்கமான உறவை கவனிக்காமல் ஆடுகளைச் சென்று பார்த்தல் முழுமை பெறாது. உண்மையுள்ள ஒரு மேய்ப்பன் ஆடுகள் பேரில் அக்கறையுள்ளவனாக இருந்தான். இயேசு குறிப்பிட்ட வண்ணமாகவே, அவை தங்கள் மேய்ப்பனின் சத்தத்தை அடையாளங்கண்டு கொண்டு அவைகளை பேர் சொல்லி அழைக்கையில் பிரதிபலித்தன. (யோவான் 10:3, 4) ஒன்று காணாமற்போனால், கவனமுள்ள மேய்ப்பன் அதற்காக தேடுவான். காணாமற்போன ஆட்டை கண்டுபிடிக்கையில் அவன் அதை தன் தோளின் மீது சுமந்து வந்து திரும்பவுமாக மந்தையிடம் சேர்ப்பான்.—லூக்கா 15:4, 5.
தாவீது, யெகோவாவை மேய்ப்பராகக் கொண்ட ஓர் ஆட்டுக்குத் தன்னை ஒப்பிட்ட போது அவர் மந்தையோடு தனக்கிருந்த சொந்த அனுபவங்களை பயன்படுத்தினார். தாக்கவரும் மிருகங்களிலிருந்து ஆடு பாதுகாக்கப்படுவது போல தாவீது பாதுகாக்கப்பட்டார். ஆடுகள் அக்கறையுள்ள தங்கள் மேய்ப்பனின் பின்னால் செல்ல முடியும். அவைகளுக்கு காயம் ஏற்பட்டால், அவர் காயங்களை ஒருவேளை வேதனையை தணிக்கும் எண்ணெய் வைத்து கட்டுவார். எசேக்கியேல் 34:3-8-ல் விவரிக்கப்பட்டுள்ள இஸ்ரவேல் தலைவர்களின் சுயநலமான செயல்களிலிருந்து என்னே வேறுபாடு!
ஆடுகளைக் குறித்து எண்ணற்ற தீர்க்கதரிசன மற்றும் அடையாள அர்த்தமுள்ள குறிப்புரைகளை பைபிள் கொண்டிருக்கிறது. ஆகவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் ஆடுகளைச் சென்று பார்ப்பதும் அவைகளோடு பழக்கப்பட்டவர்களாவதும், “சிறு மந்தை,” “தேவனுடைய ஆட்டுக்குட்டி,” மற்றும் “வேறே ஆடுகள்” போன்ற பதங்களின் உங்களுடைய புரிந்துகொள்ளுதலை மிகுதியாக்க முடியும்.—லூக்கா 12:32; யோவான் 1:36; 10:16. (w92 3/1)
[அடிக்குறிப்புகள்]
a யூதேய வனாந்தரத்திலுள்ள மேலே காணப்படும் ஆடுகளின் புகைப்படத்தை 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியில் நுணுக்கமாக காணமுடியும்.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian