திருமணமே மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோலா?
“தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். ஆகிலும் . . . அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள்.”—1 கொரிந்தியர் 7:39, 40.
1. வேத எழுத்துக்கள் யெகோவாவை எவ்வாறு விவரிக்கின்றன? அவர் தம்முடைய சிருஷ்டிகளுக்கு என்ன செய்திருக்கிறார்?
யெகோவா “நித்தியானந்த தேவன்.” (1 தீமோத்தேயு 1:11) ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ ஏராளமாய் அளிப்பவராக, அவர்—மனிதரும் ஆவி ஆட்களுமான—தம்முடைய பகுத்தறிவுள்ள சிருஷ்டிகள் எல்லாருக்கும் தம்முடைய சேவையில் மகிழ்ச்சியாயிருப்பதற்கு அவர்களுக்கு நுட்பமாய்த் தேவைப்படுவதைக் கிடைக்கச் செய்கிறார். (யாக்கோபு 1:17) இதைக் குறித்துக் கவனிக்கையில், முழு தொனியில் பாடும் பறவை, குதித்து விளையாடும் நாய்க்குட்டி, அல்லது விளையாட்டு விருப்புடைய கடற்பன்றி ஆகிய யாவும், மிருகங்கள் அவற்றிற்குரிய இயற்கையான உறைவிடங்களில் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும்படி யெகோவா அவற்றைப் படைத்தாரென சாட்சிபகருகின்றன. சங்கீதக்காரன், “யெகோவாவின் மரங்களும் அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் திருப்தியடைந்தன,” என்று செய்யுள் பாணியில் சொல்லுமளவுக்கும் சென்றான்.— சங்கீதம் 104:16, தி.மொ.
2. (எ) இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதில் மகிழ்ச்சியைக் கண்டடைகிறாரென எது காட்டுகிறது? (பி) மகிழ்ச்சிக்குரிய என்ன காரணங்கள் இயேசுவின் சீஷர்களுக்கு இருந்தன?
2 இயேசு கிறிஸ்து ‘கடவுளுடைய தன்மையின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்கிறார்.’ (எபிரெயர் 1:3, NW) அவ்வாறெனில், இயேசு “நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி” என அழைக்கப்பட வேண்டியது வியப்பூட்டுவதாய் இல்லை. (1 தீமோத்தேயு 6:15) யெகோவாவின் சித்தத்தைச் செய்வதே எவ்வாறு உணவைப் பார்க்கிலும் அதிக திருப்தியைத் தந்து, தனி இன்ப பெருமகிழ்ச்சியை உண்டுபண்ணும் என்பதற்கு அவர் அதிசயமான முன்மாதிரியை நமக்கு அளிக்கிறார். மேலும் கடவுளுக்குப் பயந்து நடக்கையில், அதாவது, மிக ஆழ்ந்த பயபக்தியுடனும், அவருக்குப் பிரியமில்லாததைச் செய்துவிடுவோமோவென்ற ஆரோக்கியமான பயத்துடனும் நடக்கையில் மகிழ்ச்சியனுபவம் இருக்குமென்றும் இயேசு நமக்குக் காட்டுகிறார். (சங்கீதம் 40:8; ஏசாயா 11:3; யோவான் 4:34) அந்த 70 சீஷர்கள், தங்கள் ராஜ்ய-பிரசங்கிப்புப் பயணத்துக்குப் பின் “சந்தோஷத்தோடு” திரும்பிவந்தபோது, இயேசுதாமே “பரிசுத்த ஆவியில் அகமகிழ்ந்”தார். தம்முடைய மகிழ்ச்சியைத் தம்முடைய பிதாவுக்கு ஜெபத்தில் வெளிப்படுத்திக் கூறினபின்பு அவர் அந்த சீஷர்களிடம் திரும்பி பின்வருமாறு கூறினார்: “நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும் நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும் காணாமலுங் கேளாமலும் போனார்கள்.”—லூக்கா 10:17-24, தி.மொ.
மகிழ்ச்சியுடனிருப்பதற்குக் காரணங்கள்
3. மகிழ்ச்சிக்குரிய சில காரணங்கள் யாவை?
3 இந்த முடிவின் காலத்தில் யெகோவாவின் வார்த்தையின் மற்றும் நோக்கங்களின் நிறைவேற்றமாக நாம் காணும் காரியங்களைக் கவனித்துப் பார்ப்பதற்கு நம்முடைய கண்கள் மகிழ்ச்சிகொண்டிருக்க வேண்டுமல்லவா? ஏசாயா, தானியேல், மற்றும் தாவீது போன்ற அத்தகைய உண்மையுள்ள தீர்க்கதரிசிகளும் இராஜாக்களும் புரிந்துகொள்ள முடியாதிருந்த தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்வதில் நாம் அகமகிழ வேண்டுமல்லவா? நித்தியானந்தமுள்ள சக்கராதிபதியாகிய நம்முடைய அரசர் இயேசு கிறிஸ்துவின் தலைமையின்கீழ், நாம், நித்தியானந்த கடவுளாகிய யெகோவாவைச் சேவிப்பதில் இன்ப பெருமகிழ்ச்சியடைகிறோம் அல்லவா? நிச்சயமாகவே பெருமகிழ்ச்சியடைகிறோம்!
4, 5. (எ) யெகோவாவின் சேவையில் மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்க, நாம் எதைத் தவிர்க்க வேண்டும்? (பி) மகிழ்ச்சிக்கு உதவிசெய்யும் சில காரியங்கள் யாவை? இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
4 எனினும், கடவுளுடைய சேவையில் நாம் மகிழ்ச்சியுடன் நிலைத்திருக்க விரும்பினால், மகிழ்ச்சிக்கு முதல் தேவைப்படுபவற்றை உலகப்பிரகாரமான எண்ணங்களின்பேரில் அடிப்படைகொள்ள நாம் வைக்கக்கூடாது. இவை எளிதில் நம் சிந்தனையை மங்கவைக்கும் ஏனெனில் அவற்றில் பொருளாதார செல்வம், ஆடம்பர வாழ்க்கை-முறை, மற்றும் இவைபோன்றவை உட்பட்டுள்ளன. இத்தகைய காரியங்களின்பேரில் ஆதாரங்கொண்ட “மகிழ்ச்சி” சொற்ப காலமே நீடித்திருக்கும், ஏனெனில் இந்த உலகம் ஒழிந்துபோகிறது.—1 யோவான் 2:15-17.
5 உலகப்பிரகாரமான இலக்குகளை முயன்று அடைவது உண்மையான மகிழ்ச்சியைக் கொண்டுவராதென யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் பெரும்பான்மையர் உணருகின்றனர். நம்முடைய பரலோகத் தகப்பன் ஒருவரே தம்முடைய ஊழியர்களின் மெய்யான மகிழ்ச்சிக்கு உதவிசெய்யும் ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான காரியங்களை அளிக்கிறார். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் அவர் நமக்குக் கொடுக்கும் ஆவிக்குரிய உணவுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளோராய் இருக்கிறோம்! (மத்தேயு 24:45-47) கடவுளுடைய அன்புள்ள கரங்களிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் உடலுக்குரிய உணவுக்காகவும் மற்ற பொருட்களுக்காகவுங்கூட நாம் நன்றியறிதலுடன் இருக்கிறோம். பின்னும், அதிசயமான ஈவாகிய திருமணமும் அதோடு சம்பந்தப்பட்ட குடும்ப வாழ்க்கை சந்தோஷங்களும் இருக்கின்றன. விதவைகளாகிவிட்ட தன் மருமகள்களுக்கான நகோமியின் இருதயப்பூர்வ விருப்பம் பின்வரும் இவ்வார்த்தைகளில் வெளிப்படுத்திக் கூறப்பட்டது வியப்பாயில்லை: “யெகோவா உங்களுக்கு ஒரு வரத்தை அருளுவாராக, நீங்கள் அவரவருடைய கணவனின் வீட்டில் இளைப்பாறுதலின்-இடத்தைக் கண்டடைவீர்களாக.” (ரூத் 1:9, NW) ஆகையால் திருமணம் மிகுந்த மகிழ்ச்சிக்குச் செல்லும் கதவைத் திறக்கக்கூடிய ஒரு திறவுகோலாக உள்ளது. ஆனால் திருமணமே மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைக்குப் புகுவழியான வாசலைத் திறக்கும் ஒரே திறவுகோலா? இவ்வாறு உள்ளதாவென, முக்கியமாய் இளைஞர்கள் கருத்துடன் ஆராய்வது அவசியம்.
6. ஆதியாகமத்தின்படி, திருமண ஏற்பாட்டின் முதல் நோக்கமென்ன?
6 திருமணத்தின் தொடக்கத்தை எடுத்துரைத்து, பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, . . . ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (ஆதியாகமம் 1:27, 28) யெகோவா திருமணத்தை ஏற்படுத்தி தொடங்கிவைத்ததால், ஆதாம் மேலுமான மனித சிருஷ்டிகளைப் பிறப்பித்து உயிர்வாழச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டான், இவ்வாறு மனித குலம் பெருகச் செய்யப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு இதைப் பார்க்கிலும் அதிகம் உண்டு.
“கர்த்தருக்குட்பட்டவனை மாத்திரமே”
7. என்ன திருமணத் தேவையை நிறைவேற்ற உண்மையுள்ள கோத்திரப் பிதா ஒருவர் மிகுந்த பிரயாசங்கள் எடுத்தார்?
7 யெகோவா தேவனே திருமணத்தைத் தொடங்கிவைத்தவராதலால், தம்முடைய ஊழியருக்கு மகிழ்ச்சியுண்டாவதில் பலன்தரும் மண வாழ்க்கைக்கான தராதரங்களை ஏற்படுத்தி வைப்பதற்கு நாம் அவரையே எதிர்பார்ப்போம். கோத்திரப் பிதாக்களின் காலங்களில், யெகோவாவின் வணக்கத்தாரல்லாதவர்களை மணஞ்செய்வது கூடாதென கண்டிப்பாக வற்புறுத்தப்பட்டது. கோத்திரப் பிதாவாகிய ஆபிரகாம், தன் குமாரன் ஈசாக்குக்கு ஒரு மனைவியை கானானியரிலிருந்து எலியேசர் தெரிந்துகொள்ள மாட்டானென யெகோவாவின்பேரில் ஆணையிட்டுக்கொடுக்கும்படி செய்தான். எலியேசர் வெகுதூரப் பிரயாணஞ்சென்று, ‘தன் எஜமானின் குமாரனுக்கு யெகோவா நியமித்தப் பெண்ணைக்’ கண்டடைவதற்கு ஆபிரகாமின் கட்டளைகளைச் சிறிதும் வழுவாமல் பின்பற்றினான். (ஆதியாகமம் 24:3, 44, தி.மொ.) ஆகவே ஈசாக்கு ரெபெக்காளை மணம் செய்தான். இவர்களுடைய குமாரன் ஏசா புறமத ஏத்தியருக்குள்ளிருந்து மனைவிகளைத் தெரிந்துகொண்டபோது, இந்தப் பெண்கள் “ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.”—ஆதியாகமம் 26:34, 35; 27:46; 28:1, 8.
8. திருமணத்தின்பேரில் என்ன தடைக்கட்டுப்பாட்டை நியாயப்பிரமாண உடன்படிக்கை கட்டளையிட்டது? ஏன்?
8 நியாயப்பிரமாணத்தின்கீழ், தனிப்பட பெயர் குறிப்பிட்டிருந்த கானானிய தேசத்தாரின் ஆண்களையோ பெண்களையோ மணம் செய்வது கூடாதென தடைக்கட்டளையிடப்பட்டது. யெகோவா தம்முடைய ஜனத்துக்குப் பின்வருமாறு கட்டளையிட்டார்: “அவர்களோடே சம்பந்தம் கலவாதே, உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாதே, அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாதே; என்னைப் பின்பற்றாமல் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள். அப்பொழுது யெகோவா உங்கள்மேல் கோபமூண்டவராய் உங்களைச் சீக்கிரத்தில் அழிப்பார்.”—உபாகமம் 7:3, 4, தி.மொ.
9. திருமணத்தின்பேரில் என்ன அறிவுரையை பைபிள் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கிறது?
9 யெகோவாவை வணங்காதவர்களை மணம் செய்வதன்பேரில் இதைப்போன்ற கட்டுப்பாடுகள் கிறிஸ்தவ சபைக்குள் பயன்படுத்த வேண்டியது ஆச்சரியந்தருவதில்லை. அப்போஸ்தலன் பவுல் தன் உடன் விசுவாசிகளுக்குப் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?” (2 கொரிந்தியர் 6:14, 15) அந்த அறிவுரை பல்வேறு வழிகளில் பொருந்துகிறது, நிச்சயமாகவே திருமணத்துக்கும் பொருந்துகிறது. யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் எல்லாருக்கும் பவுலின் திட்டவட்டமான போதனையானது, ஒருவரை “கர்த்தருடன் ஐக்கியத்தில் அவன் இருந்தால் மாத்திரமே” மணம் செய்ய கருதலாம் என்பதாகும்.—1 கொரிந்தியர் 7:39, அடிக்குறிப்பு, ஆங்கில துணைக்குறிப்புகளுள்ள பைபிள்.
“கர்த்தருக்குட்பட்டவ”ரை மணம் செய்ய முடியாதபோது
10. மணமாகாத கிறிஸ்தவர்கள் பலர் என்ன செய்கிறார்கள்? என்ன கேள்வி எழும்புகிறது?
10 மணமாகாத கிறிஸ்தவர்கள் பலர், மணம் செய்யாதிருக்கும் வரத்தை வளர்ப்பதால் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றத் தெரிந்துகொண்டிருக்கின்றனர். பின்னும், கடவுள் பயமுள்ள ஒரு துணையைத் தற்போது கண்டடைந்து இவ்வாறு “கர்த்தருக்குட்பட்டவ”ரை மணம் செய்ய முடியாதிருப்பதால், உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் பலர், அவிசுவாசி ஒருவரை மணம் செய்வதற்குப் பதிலாக, யெகோவாவில் தங்கள் நம்பிக்கையை வைத்து மணமாகாத நிலையிலேயே நிலைத்திருக்கின்றனர். கடவுளுடைய ஆவி அவர்களுக்குள் சந்தோஷம், சமாதானம், விசுவாசம், மற்றும் தன்னடக்கம் போன்ற இத்தகைய கனிகளைப் பிறப்பித்து, கற்புள்ள ஒற்றை நிலையைக் காத்துவரக்கூடியதாக்குகிறது. (கலாத்தியர் 5:22, 23) கடவுள்-பக்தியுடனிருக்கும் இந்தப் பரீட்சையை வெற்றிகரமாய் எதிர்ப்பட்டவருக்குள் நம்முடைய கிறிஸ்தவ சகோதரிகள் மிகப் பலர் இருக்கின்றனர், அவர்களை நாம் மிக ஆழ்ந்த மதிப்புடன் கருதுகிறோம். பல்வேறு நாடுகளில், எண்ணிக்கையில் அவர்கள் சகோதரரைவிட மிகைப்படுகின்றனர், ஆகையால் பிரசங்க வேலையில் பெரும் பாகத்தைக் கொண்டுள்ளனர். நிச்சயமாகவே, “யெகோவாதாமே வசனிப்பைக் கொடுக்கிறார்; நற்செய்தியைக் கூறும் பெண்கள் ஒரு பெரும் சேனையாக இருக்கின்றனர்.” (சங்கீதம் 68:11, NW) உண்மையில், இரு பாலாரிலும் கடவுளுடைய மணமாகாத ஊழியர்களில் பலர், தங்கள் ‘முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதால், அவர் அவர்களுடைய பாதைகளை நேராக்குகிறார்.’ (நீதிமொழிகள் 3:5, 6, தி.மொ.) ஆனால் “கர்த்தருக்குட்பட்டவ”ரைத் தற்போது மணம் செய்ய முடியாதவர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியற்றிருப்பார்களா?
11. பைபிள் நியமங்களுக்கு மதிப்புக்கொடுத்து மணமாகாத நிலையில் நிலைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
11 நாம், நித்தியானந்த கடவுளாகிய யெகோவாவின் சாட்சிகள், நித்தியானந்தமுள்ள சக்கராதிபதி, இயேசு கிறிஸ்துவின்கீழ் சேவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் வைப்போமாக. ஆகையால், பைபிளில் தெளிவாகக் குறித்து வைத்துள்ள கட்டுப்பாடுகளை நாம் மதிப்பது, “கர்த்தருக்குட்பட்ட” மணத்துணை ஒருவரைக் கண்டடைய முடியாததனால் ஒற்றை நிலையிலேயே இருந்துவிடும்படி நம்மைத் தூண்டினால், கடவுளும் கிறிஸ்துவும் நம்மை மகிழ்ச்சியற்றோராக இருக்கும்படி விட்டுவிடுவார்களென்று நினைப்பது நியாயமாகுமா? நிச்சயமாகவே இல்லை. ஆகையால், மணமாகாத நிலையில் இருக்கையில் கிறிஸ்தவர்களாக மகிழ்ச்சியுடனிருக்க முடியுமென நாம் முடிவுக்கு வரவேண்டும். நாம் மணம் செய்தவர்களாயினும் செய்யாதவர்களாயினும் யெகோவா நம்மை உண்மையில் மகிழ்ச்சியுடையோராக்க முடியும்.
உண்மையான மகிழ்ச்சிக்குத் திறவுகோல்
12. திருமணத்தைக் குறித்ததில் கீழ்ப்படியாதுபோன தூதர்களின் காரியம் எதைக் காட்டுகிறது?
12 கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் திருமணமே மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோல் அல்ல. உதாரணமாக, தேவதூதர்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஜலப்பிரளயத்துக்கு முன்னால், தூதர்கள் சிலர் ஆவி சிருஷ்டிகளுக்கு இயற்கைக்கு மாறாயுள்ள ஆசைகளை வளர்த்து, தாங்கள் மணம் செய்ய முடியாததைக் குறித்து அதிருப்தியடைந்து, பெண்களை மனைவிகளாகக் கொள்ளும்படி மாம்ச உடல்களை ஏற்றனர். இந்தத் தூதர்கள் இவ்வாறு “தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட”தனால், கடவுள் அவர்களை “மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய கட்டுகளில் அந்தகாரத்தின்கீழ் அடைத்து வைத்திருக்கிறார்.” (யூதா 6; ஆதியாகமம் 6:1, 2, தி.மொ.) தெளிவாகவே, தேவதூதர்கள் மணம் செய்வதற்குக் கடவுள் ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. ஆகையால் திருமணம் அவர்களுடைய மகிழ்ச்சிக்குத் திறவுகோலாக நிச்சயமாகவே இருக்கமுடியாது.
13. பரிசுத்த தூதர்கள் ஏன் மகிழ்ச்சியுடனிருக்கின்றனர்? இது கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?
13 எனினும், உண்மையுள்ள தூதர்கள் மகிழ்ச்சியுடனிருக்கிறார்கள். யெகோவா பூமியின் அஸ்திபாரங்களைப் போட்டபோது “விடிவெள்ளிகள் ஒன்றுகூடிப் பாட்டுப் பாடின, கடவுளின் [தூதர்] புதல்வர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்.” (யோபு 38:7, தமிழ் கத்தோலிக்க பைபிள்) பரிசுத்த தூதர்கள் ஏன் மகிழ்ச்சியாயிருக்கின்றனர்? ஏனெனில் அவர்கள் யெகோவா தேவன் அருகில் இடைவிடாது இருந்து, அவர் சொற்படி செய்யும்படி, அவர் “சொல்லின் சத்தத்துக்குச் செவிகொடுத்து”க் கொண்டிருக்கின்றனர். “அவருக்குப் பிரியமானதைச் செய்”வதில் அவர்கள் இன்பப் பெருமகிழ்ச்சியடைகின்றனர். (சங்கீதம் 103:20, 21, தி.மொ.) ஆம், இந்தப் பரிசுத்த தூதர்களின் மகிழ்ச்சி யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதிலிருந்தே உண்டாகிறது. அதுவே மனிதருக்குங்கூட மெய்யான மகிழ்ச்சிக்குத் திறவுகோலாகும். இதைப்பற்றியவரையில், இப்பொழுது கடவுளை மகிழ்ச்சியுடன் சேவித்துக்கொண்டிருக்கும் மணம்செய்துள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுகையில் மணம் செய்வதில்லை, ஆனால் ஆவி சிருஷ்டிகளாக கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கையில் அவர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள். அவ்வாறெனில், மணமானவர்களாயினும் மணமாகாதவர்களாயினும், யெகோவாவின் உண்மைபற்றுறுதியுள்ள ஊழியர்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும், ஏனெனில் மகிழ்ச்சிக்குரிய மெய்யான அடிப்படை சிருஷ்டிகருக்கு உண்மையுடன் சேவை செய்வதேயாகும்.
“குமாரரிலும் குமாரத்திகளிலும் சிறந்ததாக மதிக்கப்படுவது”
14. பூர்வ இஸ்ரவேலில் தெய்வபக்தியுள்ள அண்ணகர்களுக்கு என்ன தீர்க்கதரிசன வாக்கு கொடுக்கப்பட்டது? இது ஏன் விநோதமாகத் தோன்றலாம்?
14 உண்மைபற்றுறுதியுள்ள கிறிஸ்தவன் ஒருவன் ஒருபோதும் மணம் செய்யாவிடினும், அவனுக்கு மகிழ்ச்சியை யெகோவா நிச்சயப்படுத்த முடியும். பூர்வ இஸ்ரவேலில் அண்ணகர்களுக்குத் தீர்க்கதரிசனமாய்க் கூறப்பட்ட பின்வரும் இந்த வார்த்தைகளிலிருந்து ஊக்குவிப்பைப் பெறலாம்: “யெகோவா சொல்வதைக் கேளுங்கள்: என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கிற அண்ணகருக்கு என் ஆலயத்தில் என் மதில்களுக்குள்ளே, குமாரரிலும் குமாரத்திகளிலும் சிறந்ததாக மதிக்கப்படும் இடத்தையும் பேரையும் கொடுப்பேன்; என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.” (ஏசாயா 56:4, 5, NW) இந்த ஆட்கள் தங்கள் பெயரை நிலைத்திருக்கச் செய்ய மனைவியும் பிள்ளைகளும் வாக்களிக்கப்படுவார்களென ஒருவர் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு “குமாரரிலும் குமாரத்திகளிலும் சிறந்ததாக மதிக்கப்படும்” ஒன்று—யெகோவாவின் ஆலயத்துக்குள் நிலையான ஒரு பெயர்—வாக்களிக்கப்பட்டது.
15. ஏசாயா 56:4, 5-ன் நிறைவேற்றத்தைப்பற்றி என்ன சொல்லலாம்?
15 இந்த அண்ணகர்களைக் “கடவுளின் இஸ்ரவேல்” உட்பட்ட ஒரு தீர்க்கதரிசன படக்குறிப்பானோரென எடுத்துக்கொண்டால், அவர்கள் யெகோவாவின் ஆவிக்குரிய வீட்டில், அல்லது ஆலயத்துக்குள் நிலையான இடத்தைப் பெறும் அபிஷேகஞ் செய்யப்பட்டவர்களைக் குறிப்பார்கள். (கலாத்தியர் 6:16) சந்தேகமில்லாமல், இந்தத் தீர்க்கதரிசனம் உயிர்த்தெழுப்பப்படும் பூர்வ இஸ்ரவேலின் தெய்வபக்தியுள்ள அண்ணகர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். இவர்கள் கிறிஸ்துவின் மீட்கும் பலியை ஏற்று யெகோவாவுக்குப் பிரியமானதைத் தொடர்ந்து தெரிந்துகொண்டால், கடவுளுடைய புதிய உலகத்தில் “என்றும் அழியாத நித்திய நாமத்தை”ப் பெற்றுக்கொள்வார்கள். இது இந்த முடிவு காலத்தில் யெகோவாவின் சேவையில் மேலும் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்தும்படி, மணம் செய்வதையும் பிள்ளைகளைப் பெறுவதையும் துறந்துவிடுகிற “மற்றச் செம்மறியாடுக”ளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்துகிறது. (யோவான் 10:16, NW) இவர்களில் சிலர் மணமாகாமலும் குழந்தையற்றும் மரிக்கலாம். ஆனால் அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால், உயிர்த்தெழுதலில் “குமாரரிலும் குமாரத்திகளிலும் சிறந்ததாக மதிக்கப்படும்” ஒன்றை—“என்றும் அழியாத” ஒரு பெயரை அந்தப் புதிய காரிய ஒழுங்குமுறையில் பெற்றுக்கொள்வார்கள்.
திருமணமே மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோல் அல்ல
16. திருமணம் எப்பொழுதும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக இல்லையென ஏன் சொல்லலாம்?
16 மகிழ்ச்சி பிரிக்கமுடியாதபடி திருமணத்தோடு சம்பந்தப்பட்டுள்ளதென சிலர் உணருகின்றனர். எனினும், இன்று யெகோவாவின் ஊழியர்களுக்குள்ளும், திருமணம் எப்பொழுதும் மகிழ்ச்சி கொண்டுவருவதாக இல்லையென ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. சில பிரச்னைகளை அது தீர்க்கிறது, ஆனால் மணமாகாத ஆட்கள் அனுபவிப்பவற்றைப் பார்க்கிலும் கையாளுவதற்குக் கடினமாயிருக்கக்கூடிய மற்றப் பிரச்னைகளை அடிக்கடி உண்டுபண்ணுகிறது. திருமணம் ‘சரீரத்திலே உபத்திரவத்தைக்’ கொண்டுவருகிறதென பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 7:28) மணம் செய்த ஒருவர் “கவலையுற்றும்,” “இருமனப்பட்டும்” இருக்கும் சமயங்கள் உண்டு. “கருத்துச் சிதறாமல் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிரு”ப்பதை அவன் அல்லது அவள் அடிக்கடி கடினமாகக் காண்கின்றனர்.—1 கொரிந்தியர் 7:33-35, NW.
17, 18. (எ) பயணக் கண்காணிகள் சிலர் என்ன அறிக்கை கொடுத்திருக்கின்றனர்? (பி) பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்? அதைப் பொருத்திப் பயன்படுத்துவது ஏன் நன்மை பயக்குகிறது?
17 திருமணமும் மணமாகாத நிலையும் கடவுள் கொடுக்கும் வரங்கள். (ரூத் 1:9; மத்தேயு 19:10-12) எனினும், இந்த இரு நிலையிலும் வெற்றிகரமாயிருக்க, ஜெபத்துடன் சிந்தனைசெய்வது இன்றியமையாதது. சாட்சிகள் பலர் வெகு இளைஞராயிருக்கையிலேயே மணம் செய்து, அதன் பயனாக வரும் பொறுப்புகளை ஏற்கத் தயாராவதற்கு முன்பே பெற்றோராகின்றனரென பயணக் கண்காணிகள் அறிவிப்பு செய்கின்றனர். இந்தத் திருமணங்களில் சில முறிந்துபோகின்றன. மற்றத் தம்பதிகள் தங்கள் பிரச்னைகளைச் சமாளிக்கின்றனர், ஆனால் அவர்களுடைய திருமணம் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரவில்லை. உவில்லியம் கான்ங்ரீவ் என்ற ஆங்கில நாடக ஏட்டாசிரியர் எழுதினபடி, அவசரப்பட்டு மணம் செய்கிறவர்கள் “நிதானமாக மனம்வருந்துவர்.”
18 ஓரளவான காலம் மணம் செய்யாதிருக்கத் தேவைப்படுவதால் இளம் சகோதரர்கள் சிலர் பெத்தேல் சேவைக்கு மனுசெய்வதை அல்லது உதவி ஊழியர் பயிற்றுவிப்பு பள்ளிக்கு முன்வருவதைத் தவிர்க்கின்றனரெனவும் வட்டாரக் கண்காணிகள் அறிவிக்கின்றனர். “இளமையின் மலரும் பருவம் கடப்ப”தற்கு முன் மணம் செய்ய வேண்டாமென, அதாவது, தொடக்க பாலுணர்ச்சிவேகம் குறையும் வரை காத்திருக்கும்படி பவுல் அறிவுரை கொடுக்கிறார். (1 கொரிந்தியர் 7:36-38) பருவமடைந்து மணமாகாதவராய் வாழ்வதில் செலவிடும் ஆண்டுகள் ஒருவருக்கு விலைமதியா அனுபவத்தையும் உள்நோக்கையும் அளித்து, மணத் துணையைத் தெரிந்துகொள்ள அல்லது ஒற்றையராய் நிலைத்திருக்கக் கவனமாக ஆழ்ந்து சிந்தித்துத் தீர்மானம் செய்வதற்கு அவனை அல்லது அவளை மேம்பட்ட நிலையில் வைக்கிறது.
19. திருமணம் செய்வதற்கு மெய்யானத் தேவை நமக்கு இல்லையெனில் நாம் காரியங்களை எவ்வாறு கருதலாம்?
19 பாலுறவுக்கான அதன் பலத்த உணர்ச்சிவேகத்துடன்கூடிய இளமையின் மலரும் பருவத்தைக் கடந்தவர்களாக நம்மில் சிலர் இருக்கிறோம். நாம் ஒருவேளை எப்போதாவது திருமணத்தின் ஆசீர்வாதங்களின்பேரில் சிந்தனை செய்யலாம் ஆனால் உண்மையில் மணமாகாது நிலைத்திருக்கும் வரத்தை உடையோராய் இருக்கலாம். மணமாகாத நிலையில் நாம் தம்மைப் பயனுள்ள முறையில் சேவிக்கிறோம், திருமணத்துக்கு உண்மையானத் தேவை உடையோராய் இல்லை என யெகோவா காணலாம், திருமணம் அவருடைய சேவையில் குறிப்பிட்ட சிலாக்கியங்களை விட்டுவிடும்படி நம்மைத் தேவைப்படுத்தலாம். திருமணம் நம்முடைய தேவையாக இல்லையெனில் மற்றும் நமக்கு ஒரு துணை அருளப்பட்டில்லையெனில், கடவுள் நமக்கு வேறு எதையாவது முன்வைத்திருக்கலாம். ஆகையால், நமக்குத் தேவைப்படுவதை அவர் அருளுவாரென்று நாம் விசுவாசம் காட்டுவோமாக. நமக்கான கடவுளுடைய சித்தமெனத் தோன்றுவதை மனத்தாழ்மையுடன் ஏற்பது மிக அதிக மகிழ்ச்சியில் பலன் தருகிறது. புறஜாதியார் ஜீவனடையும்படி கடவுள் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளினார் என யூத சகோதரர்கள் கண்டுணர்ந்தபோது, அவர்கள் அதை ஏற்று “அமர்ந்திருந்து . . . தேவனை மகிமைப்படுத்தின”துபோல் நமக்கும் மகிழ்ச்சியுண்டாகும்.—அப்போஸ்தலர் 11:1-18.
20. (எ) மணம் செய்யாதிருப்பதன்பேரில் என்ன அறிவுரை இளம் கிறிஸ்தவர்களுக்கு இங்கே கொடுக்கப்படுகிறது? (பி) மகிழ்ச்சியைப் பற்றிய என்ன இன்றியமையாதக் குறிப்பு உண்மையாய் நிலைத்திருக்கிறது?
20 ஆகையால், திருமணம் மகிழ்ச்சிக்கு ஒரு திறவுகோலாக இருக்கலாமெனினும் அது பிரச்னைகளுக்கும் கதவைத் திறக்கலாம். ஒரு காரியம் நிச்சயமாயுள்ளது: திருமணம் மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கு ஒரே வழி அல்ல. ஆகவே, எல்லா காரியங்களையும் ஆழ்ந்து கவனிக்கையில், முக்கியமாய் இளம் கிறிஸ்தவர்கள், பல ஆண்டுகள் மணமாகாத நிலையில் இருக்கும்படி இடமளிக்க முயற்சி செய்வது ஞானமாயிருக்கும். அத்தகைய ஆண்டுகளை யெகோவாவைச் சேவிப்பதற்கும் ஆவிக்குரியபிரகாரம் முன்னேற்றமடைவதற்கும் நன்றாய்ப் பயன்படுத்தலாம். எனினும், வயது அல்லது ஆவிக்குரிய முன்னேற்றம் என்னவாயினும், எந்த நிபந்தனையுமில்லாமல் கடவுளுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்திருக்கும் எல்லாருக்கும் பின்வரும் இந்த இன்றியமையாதக் குறிப்பு உண்மையாய் இருக்கிறது: மெய்யான மகிழ்ச்சி யெகோவாவுக்குச் செய்யும் உண்மையுள்ள சேவையிலேயே கண்டடையப்படுகிறது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவாவின் ஊழியர்கள் ஏன் மகிழ்ச்சியுள்ளோராய் இருக்கின்றனர்?
◻ திருமணம் ஏன் மிகப் பெரும் மகிழ்ச்சிக்குத் திறவுகோல் அல்ல?
◻ மணத் துணையைத் தெரிந்துகொள்வதில், யெகோவாவின் ஜனங்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன?
◻ மணமாகாத நிலையில் தொடர்ந்திருக்கும் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாயிருக்க முடியுமென நம்புவது ஏன் நியாயமாயிருக்கிறது?
◻ திருமணத்தையும் மகிழ்ச்சியையும் பற்றியதில் எதை ஒப்புக்கொள்ள வேண்டும்?