யெகோவா—உங்களுக்கு அறிமுகமானவரா அல்லது உங்களுடைய நண்பரா?
“ஜான், நான் உங்களை என்னுடைய நண்பருக்கு அறிமுகப்படுத்தட்டுமா? இவருடைய பெயர்—மன்னிக்கவும், என்ன பெயர் சொன்னீர்கள்?”
இப்படிப்பட்ட சம்பாஷணை உளறலை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? “நண்பன்” என்ற வார்த்தையை எவ்வாறு சில ஜனங்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதற்கு அது ஓர் உதாரணம். உண்மையில் அவர்கள் “அறிமுகமானவரை” மட்டும் தான் அர்த்தப்படுத்துகின்றனர் அல்லது சில சமயங்களில் அதைக்கூட அர்த்தப்படுத்துவதில்லை. தெருவின் எதிர்ப்பக்கத்தில் வசிக்கும் திரு. ஸ்மித் என்பவரோடு அறிமுகமாகியிருப்பது ஒரு காரியம்; அவருடைய நண்பராக இருப்பது முற்றிலும் வித்தியாசமான காரியம்.
“அறிமுகமானவர்” என்ற சொல்லுக்கு “ஒரு நபரோடு சமுதாயப் பழக்கத் தொடர்பு கொண்டிருப்பவர், ஆனால் அவருக்காக எந்தப் பலமான தனிப்பட்ட பற்றுதலும் இல்லாதவர்” என்று ஓர் அகராதி விளக்கம் கொடுக்கிறது. “நண்பனைக் காட்டிலும் குறைவான அறிமுகம், நெருக்கம், நட்பு, நலத்தில் அக்கறை” என்பதை அது குறிக்கிறது.
அறிமுகமானவர்களுக்கு என்ன ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஏன் சிறிதளவே கவனம் செலுத்துகிறோம், ஆனால் நம்முடைய நண்பர்களின் வாழ்க்கைகளில் அன்பு கொள்ளத்தக்க விதத்தில் நாம் ஈடுபடுகிறோம் என்பதை இந்தப் பலமான தனிப்பட்ட பற்றுதல் குறைவுபடுவது விளக்குகிறது. நாம் அவர்களுடைய சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். அவைகள் நம்மை ஆழமாக பாதிக்கும் அளவுக்கு அனுமதிக்கிறோம். உணர்ச்சி சம்பந்தப்பட்ட ஈடுபாடு, அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதற்கு நம்மை தவறாக வழிநடத்தும்படி அனுமதிக்காமல் இருக்க நாம் கவனமாயிருக்க வேண்டும்.—1 பேதுரு 4:15.
நம்முடைய நண்பர்களிடம் பலமான தனிப்பட்ட பற்றுதலைக் கொண்டிருப்பது, நாம் ஏன் பொதுவாக நம்முடைய நண்பர்களை பிரியப்படுத்த முயற்சி செய்கிறோம் என்பதையும் விளக்குகிறது. நமக்கு அறிமுகமானவர் நம்முடைய நடத்தை சரியல்லாததாக அல்லது விருப்பமற்றதாக கண்டால், அவருடைய மனக்குறை நம்மை மாற்றிக் கொள்ள அவ்வளவாக தூண்டுவதில்லை. ஆனால் உடை, நடத்தை அல்லது மனநிலை போன்ற விஷயங்களில் ஒரு நண்பர் உண்மையிலேயே பலமான செல்வாக்கை உண்டுபண்ணலாம்.
நம்பிக்கை, பாசம், மரியாதை, உத்தமத்தன்மை ஆகியவற்றைக் குறித்ததில் நண்பராயிருக்கும் நிலை அறிமுகமாகியிருக்கும் நிலையை விட அதிக அளவு உத்தரவாதத்தைக் கேட்கிறது. உத்தரவாதமே உட்பட்டிராத நட்பைக் கேட்பவர், உண்மையில் அறிமுகமானவரை தான் விரும்புகிறார். நண்பனை அல்ல. நெருங்கிய நண்பர்கள் பலமான தனிப்பட்ட பற்றுதலினால் உருவாக்கப்படும் உத்தரவாதங்கள் தங்கள் நட்பை நிரூபிக்க ஒரு வாய்ப்பைத் தங்களுக்கு கொடுக்கின்றன என்பதை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற சந்தோஷப்படுகின்றனர்.
கடவுளோடு நட்பு
சிருஷ்டிகராகிய யெகோவா மனிதவர்க்கத்தின் பரலோகத் தகப்பனாக இருக்கிறார். அன்பு, கீழ்ப்படிதல், மரியாதை ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார். வெறும் கடமையுணர்ச்சியினால் அல்ல, பலமான தனிப்பட்ட பற்றுதலின் காரணமாக மானிடர்கள் இதை அவருக்கு அளிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (மத்தேயு 22:37) ஒரு நண்பரைப் போல் அவர்கள் அவரை நேசிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். (சங்கீதம் 18:1) “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால்,” அப்படிப்பட்ட ஒரு நட்புக்கான பரிபூரண அஸ்திபாரத்தை அவர் தாமே போட்டிருக்கிறார்.—1 யோவான் 4:19.
நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் யெகோவாவோடு அறிமுகமாகியிருந்தார்கள். கேள்வி என்னவாயிருந்தது என்றால்: அவர் அளித்த நட்பை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? விசனகரமாக அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடவுளிடமிருந்து பிரிந்து அவர்கள் சுயநலத்தோடு சுதந்திரத்தை ஆவலோடு பெற்றுக் கொள்ள நாடியது, பலமான தனிப்பட்ட பற்றுதல் உணர்ச்சி இல்லாமல் இருந்ததை குறிப்பிட்டுக் காட்டியது. அவர் அளித்த நட்பின் ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அதன் உத்தரவாதங்களை நிறைவேற்ற அவர்கள் விருப்பமில்லாதவர்களாய் இருந்தனர். வாடகை கொடுக்க விருப்பமில்லாமல் அவர்களுடைய சொகுசான பரதீஸிய வீட்டின் வசதிகளையும் பாதுகாப்பையும் அவர்கள் அனுபவித்து மகிழ விரும்பியதற்கு அது ஒப்பாக இருந்தது.
நாம் அனைவரும், சிலர் மற்றவர்களைக் காட்டிலும் அதிக அளவில், இந்தப் போற்றுதலற்ற சுதந்திரமான ஆவியை சுதந்தரித்துக் கொண்டிருக்கிறோம். (ஆதியாகமம் 8:21) சில இளைஞர்கள், உதாரணமாக, தங்கள் பெற்றோர்களிடம் போற்றுதலற்ற மனப்பான்மை கொள்ளும்படி சுதந்தரத்துக்கான தங்களுடைய இயற்கையான விருப்பத்தை அனுமதித்திருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையே இருக்க வேண்டிய நட்பு இதன் விளைவாக முறிந்து போயிருக்கிறது. நம்முடைய பரலோக தகப்பனோடு இருக்கும் நம்முடைய நட்பு முறிந்து போவது இதைக் காட்டிலும் அதிக வினைமையானதாக இருக்கிறது. உண்மையில், அது அழிவு உண்டாக்குவதாக இருக்கக்கூடும்!
நட்புக்கான தேவைகள்
மனிதர்களோடோ அல்லது கடவுளோடோ ஏற்படும் எந்த உறவும் நம்பிக்கையின்றி நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது. முற்பிதாவாகிய ஆபிரகாம் இதை புரிந்து கொண்டார். அதன் காரணமாகத்தான் அவர் அடிக்கடி கடவுள் பேரில் முழுநிறைவான நம்பிக்கையை வெளிக்காட்டினார். யெகோவாவின் பேரில் அவருக்கு இருந்த நம்பிக்கையின் இரண்டு முதன்மையான உதாரணங்களை ஆதியாகமம் 12:1-5, 22:1-18-ல் வாசித்துப் பாருங்கள். ஆம், “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.” அதன் காரணமாக “அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.”—யாக்கோபு 2:23.
கடவுளோடு நட்பு கொள்வதற்கு அத்தியாவசியமான மற்றொரு காரியம், இந்த நட்பு தேவைப்படுத்தும் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகும். யெகோவாவோடு ஒப்பிடுகையில் நம்முடைய நிலை அதிக தாழ்வானதாக இருப்பதால், ஒரு மானிட நட்பில் இருப்பதைக் காட்டிலும் இந்தக் கடமைப் பொறுப்புகள் நியாயமாகவே வெகு அதிகமாக இருக்கின்றன. ஒரு மனித நண்பரோடு நாம் செய்வது போல் சில காரியங்களில் மட்டும் நாம் அவரைப் பிரியப்படுத்துவதற்கு அப்பால் அவைகள் செல்கின்றன. நாம் அவரை எல்லா காரியங்களிலும் பிரியப்படுத்த விரும்புவதை அவைகள் உட்படுத்துகின்றன. கடவுளுடைய குமாரனும், மிக நெருங்கிய நண்பருமான இயேசு யெகோவாவைப் பற்றி பின்வருமாறு சொன்ன போது இதை காண்பித்தார்: “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்.”—யோவான் 8:29.
ஆக, யெகோவாவோடு அல்லது அவருடைய குமாரனோடு நட்பு கொள்வது, எந்த உத்தரவாதங்களும் அற்ற அடிப்படையில் கிடைப்பதில்லை; யெகோவாவும் அவருடைய குமாரனும் ஏற்படுத்தி வைத்திருக்கும் நட்புக்கான நிபந்தனைகளுக்கு இசைவாக நாம் வாழ்வதன் பேரில் அது சார்ந்திருக்கிறது. (சங்கீதம் 15:1-5-ஐ பாருங்கள்.) இயேசு தம் சீஷர்களோடு சம்பாஷிக்கையில் இதை தெளிவாக காண்பித்தார். “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” என்று அவர் அவர்களிடம் சொன்னார்.—யோவான் 15:14.
ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேச்சுத் தொடர்பு கொண்டிருப்பது நட்பு கொள்வதற்கு மற்றொரு தேவையாகும். “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்று இயேசு தம் மரண நாளின் போது தம்முடைய உண்மையான அப்போஸ்தலர்களிடம் சொன்னார். (யோவான் 15:15) தம்முடைய நண்பர்களோடு தம் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதில் இயேசு தம் பரலோக தகப்பனின் முன்மாதிரியை பின்பற்றினார். “கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்” என்று அவரைக் குறித்து ஆமோஸ் 3:7 சொல்கிறது.
நண்பர்களிடையே இது இயல்பான காரியமல்லவா? தெருவின் எதிர்ப்பக்கத்தில் வசிக்கும் திரு. ஸ்மித் என்பவரோடு நம்முடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நமக்கு எந்த ஆர்வமும் உண்டாவதில்லை. நம்முடைய உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நாம் நிச்சயமாகவே அவரிடம் சொல்ல விரும்ப மாட்டோம். அவர் நமக்கு வெறும் அறிமுகமானவர் மட்டும் தான். ஆனால் நம்முடைய நண்பர்களிடம் அப்படிப்பட்ட காரியங்களை சொல்லாமல் இருப்பது கடினமாக இருக்கும்!
கடவுளோடு நாம் கொண்டிருக்கும் நட்பில் அவ்வாறு தான் இருக்கிறது. நம்முடைய தேவைகள், நம்முடைய விருப்பங்கள், நம்முடைய உள்ளார்ந்த உணர்ச்சிகள் ஆகியவற்றை ஜெபத்தில் அவரிடம் அணுகி சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. நண்பர்களில் ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நட்பு சீக்கிரத்தில் அழிந்து போகும். ஆகையால் கடவுள் நம்மோடு பேசுவதற்கும் நாம் அனுமதிக்க விருப்பமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அவருடைய எழுதப்பட்ட வார்த்தைக்குக் கவனமாக செவிகொடுப்பது, அவருடைய புத்திமதியின் பேரில் தியானிப்பது, பின்னர் நம்மால் முடிந்த அளவு அதைப் பொருத்துவது ஆகியவற்றின் மூலம் நாம் இதைச் செய்ய வேண்டும்.
யெகோவாவின் நட்பு உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க உங்களுக்கு உதவி செய்ய, ஒரு விசேஷ விதமான மானிட நட்பை சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஓர் இளம் நபராக இருந்தால், திருமணத்துக்கு வழிநடத்தும் ஒரு நட்பில் நீங்கள் ஒருவேளை ஆவல் உள்ளவர்களாய் இருக்கலாம். உங்களுடைய வருங்கால துணைவரோடு வெறுமென அறிமுகமாகியிருப்பது மட்டும் திருமணத்துக்கு போதிய சரியான அடிப்படையில்லை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அறிமுகமாகியிருக்கும் நிலை முதலில் நண்பராயிருக்கும் நிலைக்கு மாற்றப்பட வேண்டும். பிறகு இந்த நட்பு வளர்க்கப்பட்டு மிக நெருங்கிய உறவாக உருவாக்கப்படலாம். அது இறுதியில் ஒரு மகிழ்ச்சியான திருமணத்துக்கு சரியான அடிப்படையாக அமையும்.
இப்போது சிந்தியுங்கள். இந்த விதமான நட்பை வளர்ப்பதற்கு பெரும்பாலான ஆட்கள் எவ்வளவு முயற்சி எடுக்கின்றனர்? அதை நிலைநாட்டுவதற்கும், பிறகு அதை காத்துக்கொள்வதற்கும் எவ்வளவு நேரமும் பணமும் அவர்கள் செலவிடுகின்றனர்? அதைக் குறித்து சிந்திப்பதில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றனர்? இந்த நட்பை மேம்படுத்துவதற்கு அல்லது காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காக எந்த அளவுக்கு அவர்கள் திட்டங்கள் போடுகின்றனர்—அல்லது திட்டங்களை மாற்றுவதற்கு—விருப்பத்தைக் காண்பிக்கின்றனர்?
பிறகு உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சிருஷ்டிகரோடு நட்பை வளர்ப்பதற்கு அல்லது அதை மேம்படுத்தி பலப்படுத்துவதற்கு நான் எடுக்கும் முயற்சிகள் இதோடு ஒப்பிடுகையில் எவ்வாறு இருக்கிறது? அவ்விதமாகச் செய்வதில் நான் எவ்வளவு நேரம் செலவிடுகிறேன்? யெகோவாவோடு கொண்டுள்ள நட்பு எந்த அளவுக்கு என்னுடைய சிந்தனைகளை நிரப்பியிருக்கிறது? இந்த நட்பை மேம்படுத்துவதற்கும், பிறகு அதை காத்துக்கொள்ளும் நோக்கத்துக்காக எந்த அளவுக்கு நான் திட்டங்களை போடுகிறேன்—அல்லது திட்டங்களை மாற்றுவதற்கு—விருப்பத்தைக் காண்பிக்கிறேன்?’
இறுதியில் திருமணத்துக்கு வழிநடத்தும் நட்பும் உட்பட எல்லா மனித நட்புகளும் தங்கள் சிருஷ்டிகரோடு கொண்டிருக்க வேண்டிய நட்புக்கு அடுத்து இரண்டாவது இடத்தைத்தான் முக்கியத்துவத்தில் பெறுகின்றன என்பதை இளம் கிறிஸ்தவர்கள் நன்கு மனதில் வைத்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் பிரசங்கி 12:1-ல் அவர்கள் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” வெளிப்படையாக கடவுளுடைய ஊழியர்களாக சேவிப்பதன் மூலம் அநேகர் இதை செய்கின்றனர். அவர்களில் அநேகர் முழு-நேர பிரசங்கிப்பாளர்களாக அல்லது பயனியர்களாக சேவிக்கின்றனர். அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அவர்களைச் சுற்றி வெறுப்பு மனப்பான்மையும், மதப்பற்று அற்ற நிலையும் இருந்தாலும், யெகோவாவுக்கு எதிராக குத்திப் பேசுவதையும், பொய்க் குற்றச்சாட்டுகளையும் கேட்கும் போது அவர்கள் தைரியமாக யெகோவாவின் சார்பாக வாதாடுகின்றனர். இதை தான் யெகோவா தம் நண்பர்களிடமிருந்து உரிமையோடு எதிர்பார்க்க வேண்டுமல்லவா? இதை தான் நாமும் நம்முடைய நண்பர்களிடமிருந்து எதிர்பார்ப்போமல்லவா? இதை நம்முடைய நண்பர்கள் வைராக்கியத்தோடும் உறுதியான நம்பிக்கையோடும் செய்கின்றனர் என்பதை நாம் கண்டுபிடித்தால், அது நம்முடைய இருதயங்களை மகிழ்விக்கச் செய்யும் அல்லவா?—நீதிமொழிகள் 27:11-ஐ ஒப்பிடவும்.
ஆம், கடவுளோடு நட்பு—மனிதர்களுடைய நட்பைப் போன்றே—உத்தரவாதங்களைக் கொண்டு வருகிறது. அந்த நட்பு நிலைத்திருக்க வேண்டுமென்றால் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்ள ஒரு நபர் விருப்பமில்லாதவராய் இருந்தால் அல்லது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து பிறகு அதை நிறைவேற்றி முடிக்க தயாராக இல்லையென்றால், அவர் உண்மையிலேயே யெகோவாவோடு வெறுமென அறிமுகமாகி மட்டுமே இருக்கக்கூடும். அவரை ஒரு நண்பராக கொண்டிருக்கும் சந்தோஷங்களை அவர் இன்னும் அனுபவிக்காமல் இருக்கிறார்.
[பக்கம் 25-ன் படம்]
ஆபிரகாம் கடவுள் பேரில் நம்பிக்கை வைத்தார், ஆகையால் யெகோவாவின் நண்பர் என்று அழைக்கப்பட்டார்