உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w92 9/15 பக். 12-17
  • மனிதரைப் பிடிப்பவர்களாக சேவித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதரைப் பிடிப்பவர்களாக சேவித்தல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “மனுஷரை உயிரோடே பிடிப்பது”
  • மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
  • மனிதகுலத்தின் கடலிலே மீன்பிடித்தல்
  • “கர்த்தருடைய நாளில்” மனுஷரைப் பிடித்தல்
  • நான்கு சீஷர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆகிறார்கள்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • நான்கு சீஷர்கள் அழைக்கப்படுகின்றனர்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • நான்கு சீஷர்கள் அழைக்கப்படுகிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • உலகளாவிய தண்ணீர்களில் மீன்களைப் பிடிப்பது போல மனிதர்களைப் பிடித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
w92 9/15 பக். 12-17

மனிதரைப் பிடிப்பவர்களாக சேவித்தல்

“இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் [உயிரோடே, NW] பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.”—லூக்கா 5:10.

1, 2. (எ) மனிதகுலத்தின் சரித்திரத்தில் மீன் பிடித்தல் என்ன பங்கை வகித்திருக்கிறது? (பி) 2,000-க்கும் சற்றே குறைவான ஆண்டுகளுக்கு முன்பு என்ன புதிய வகையான ஒரு மீன்பிடித்தல் அறிமுகப்படுத்தப்பட்டது?

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதகுலம் பூமியின் சமுத்திரங்களிலிருந்தும், ஏரிகளிலிருந்தும், ஆறுகளிலிருந்தும் உணவுக்காக மீன் பிடித்து வந்திருக்கிறது. பண்டைய எகிப்தில் நைல் நதி மீன்கள் உணவு திட்டத்தின் ஒரு முக்கிய பாகமாக இருந்திருக்கிறது. மோசேயின் நாளில், நைல் நதி தண்ணீர்கள் இரத்தமாக மாறின போது, எகிப்தியர்கள் இதன் விளைவாக ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாட்டினால் மட்டுமல்லாமல், மீன்கள் மாண்டு போனதன் காரணமாக அவர்களுடைய உணவு வழங்கீடும் பாதிக்கப்பட்டதால் கஷ்டப்பட்டனர். பின்னர், சீனாய் மலையில், யெகோவா இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த போது, அவர் அவர்களிடம் சில மீன் வகைகளைப் புசிக்கலாம் என்றும் ஆனால் மற்றவை அசுத்தமானவை என்றும் அவற்றைப் புசிக்கக்கூடாது என்றும் சொன்னார். ஆகவே இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு வந்துசேர்ந்த போது, அவர்கள் மீன்களைச் சாப்பிடுவார்கள் என்று இது சுட்டிக்காட்டியது. எனவே அவர்களில் சிலர் மீனவர்களாக இருப்பர்.—யாத்திராகமம் 7:20, 21; லேவியராகமம் 11:9-12.

2 என்றபோதிலும், 2,000-க்குச் சற்றே குறைவான ஆண்டுகளுக்கு முன்பு, மனிதகுலத்துக்கு மற்றொரு வகையான மீன்பிடிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீனவர்களுக்கு மட்டுமல்லாமல், மீனுக்குங்கூட நன்மை பயக்கக்கூடிய ஓர் ஆவிக்குரிய வகையான மீன்பிடித்தலாக இருந்தது! இந்த வகையான மீன்பிடித்தல் இன்று இன்னமும் கையாளப்பட்டு வருகிறது. உலக முழுவதுமுள்ள லட்சக்கணக்கான ஆட்களுக்கு நன்மைப் பயப்பதாயிருக்கிறது.

“மனுஷரை உயிரோடே பிடிப்பது”

3, 4. எந்த இரண்டு மீனவர்கள் இயேசு கிறிஸ்துவில் மிகுதியான அக்கறையை காண்பித்தனர்?

3 இந்தப் புதிய வகையான மீன்பிடித்தலை அறிமுகப்படுத்தக்கூடிய ஒருவர் யோர்தான் நதியில் முழுக்காட்டுபவனாகிய யோவானால் பொ.ச. 29-ம் ஆண்டு முழுக்காட்டப்பட்டார். ஒரு சில வாரங்களுக்குப் பின்பு, யோவான் தன்னுடைய சீஷர்கள் இருவரிடமாக இயேசுவைச் சுட்டிக்காட்டி இவ்வாறு சொன்னார்: “இதோ, தேவஆட்டுக்குட்டி!” இந்தச் சீஷர்களில் ஒருவருடைய பெயர் அந்திரேயா, அவர் உடனடியாக தன்னுடைய சகோதரன் சீமோன் பேதுருவிடம் போய், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்,” என்றார். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், அந்திரேயா மற்றும் பேதுரு ஆகிய இருவருமே மீனவர்கள்.—யோவான் 1:35, 36, 40, 41; மத்தேயு 4:18.

4 கொஞ்ச காலத்துக்குப் பின்பு, இயேசு கலிலேயக் கடலருகே, பேதுருவும் அந்திரேயாவும் வசித்த இடத்துக்குச் சற்றே தொலைவாக, மக்கள் கூட்டத்தாரிடம் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவர் மக்களிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார்: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.” (மத்தேயு 4:13, 17) பேதுருவும் அந்திரேயாவும் அவருடைய செய்தியைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளவர்களாய் இருந்தனர் என்பதை நாம் கற்பனைச் செய்து பார்க்கலாம். என்றபோதிலும், அந்த நாளில் இயேசு அவர்களிடம் அவர்களுடைய வாழ்க்கையை என்றுமாக மாற்றப்போகும் ஏதோ ஒரு காரியத்தைப் பற்றி பேசப்போகிறார் என்பதை அவர்கள் உணரவில்லை. கூடுதலாக, இயேசு அப்பொழுது அவர்களுக்கு முன்னால் சொன்னதும் செய்ததுமான காரியங்கள் நம்மெல்லாருக்கும் இன்று முக்கிய அர்த்தமுடையதாய் இருக்கிறது.

5. மீனவனான பேதுரு எவ்விதமாக இயேசுவுக்கு சேவை செய்யக்கூடியவராக இருந்தார்?

5 நாம் வாசிக்கிறோம்: “அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 5:1, 2) அந்தக் காலத்தில், மீனவ தொழிலாளிகள் அநேகமாக இரவு நேரங்களில் வேலை செய்தார்கள், இந்த மனிதர் இரா முழுவதும் மீன் பிடித்தப் பின்னர் தங்கள் வலைகளைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். ஜனக்கூட்டத்தாரிடம் இன்னும் அதிக திறம்பட்ட விதத்தில் பிரசங்கிப்பதற்கு இயேசு அவர்களுடைய படவுகளில் ஒன்றைப் பயன்படுத்தத் தீர்மானித்தார். “அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார்.”—லூக்கா 5:3.

6, 7. மீன்பிடித்தலை உட்படுத்திய என்ன அற்புதத்தை இயேசு நடப்பித்தார், மீன்பிடித்தலைப் பற்றிய எந்தக் கூற்றுக்கு இது வழிநடத்தியது?

6 ஜனக்கூட்டத்தாருக்குப் போதிப்பதைக் காட்டிலும் இயேசு இன்னும் அதிகமான ஏதோ ஒன்றை மனதில் கொண்டிருந்தார் என்பதைக் கவனியுங்கள்: “அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய் மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.” இந்த மீனவர்கள் ஏற்கெனவே இரா முழுவதும் பிரயாசப்பட்டுக் கொண்டிருந்ததை நினைவுகூருங்கள். இதற்கு பேதுரு, “ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்,” என்று சொன்னது ஆச்சரியமாயில்லை. இதை அவர்கள் செய்த போது என்ன நடந்தது? “தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.”—லூக்கா 5:4-7.

7 இயேசு ஓர் அற்புதத்தை நடப்பித்தார். சமுத்திரத்தின் அந்தப் பரப்பெல்லை இரா முழுவதும் பலன் தராத ஒன்றாயிருந்தது; இப்பொழுதோ அது மீன்களால் நிரம்பியிருந்தது. அந்த அற்புதம் பேதுருவின் மீது பலமான பாதிப்பை ஏற்படுத்தியது. “சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள்.” இயேசு பேதுருவை சாந்தப்படுத்தி, அதன் பின்பு அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க இருந்த வார்த்தைகளைச் சொன்னார். “பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்.”—லூக்கா 5:8-10.

மனுஷரைப் பிடிக்கிறவர்கள்

8. ‘மனுஷரை உயிரோடே பிடிப்பதற்கான,’ அழைப்புக்கு நான்கு மீனவத் தொழிலாளர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்?

8 இயேசு இவ்விதமாக மனிதரை மீன்களுக்கு ஒப்பிட்டார். அந்த எளிமையான மீனவர்களிடம் இதைக் காட்டிலும் மிக மேம்பட்ட வகையான ஒரு மீன்பிடிப்புக்காக—மனிதரை உயிரோடு பிடிப்பதற்காக—தங்கள் உலகப்பிரகாரமான மீன்பிடிப்புத் தொழிலை விட்டுவரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பேதுருவும் அவருடைய சகோதரர் அந்திரேயாவும் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். “உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.” (மத்தேயு 4:18-20) அடுத்து இயேசு தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த யாக்கோபையும் யோவானையும் கண்டு அவர்களை அழைத்தார். இவர்களையும்கூட மனுஷரைப் பிடிப்பதற்காக அழைத்தார். அவர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? “உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.” (மத்தேயு 4:21, 22) ஆத்துமாக்களைப் பிடிப்பதில் இயேசு திறமையை வெளிக்காட்டினார். இந்தச் சமயத்தில் அவர் நான்கு மனிதர்களை உயிரோடு பிடித்தார்.

9, 10. பேதுருவும் அவருடைய தோழர்களும் என் விசுவாசத்தைக் காண்பித்தனர், ஆவிக்குரிய மீன்பிடிப்பில் அவர்கள் எவ்விதமாக பயிற்றுவிக்கப்பட்டனர்?

9 ஒரு மீனவத் தொழிலாளன், தான் பிடித்த மீன்களை விற்பதன் மூலம் பிழைப்பை நடத்துகிறான், ஆனால் ஆவிக்குரிய மீனவன் அதைச் செய்ய முடியாது. ஆகவே இந்தச் சீஷர்கள் இயேசுவுக்குப் பின்னால் செல்ல அனைத்தையும் விட்டு வந்த போது மிகுதியான விசுவாசத்தைக் காண்பித்தனர். இருப்பினும் அவர்களுடைய ஆவிக்குரிய மீன்பிடிப்பு வெற்றியடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் அவர்களுக்கு இருக்கவில்லை. பலன் தராத தண்ணீர்கள் ஏராளமான சொல்லர்த்தமான மீன்களால் நிறைந்திருக்கும்படி இயேசு செய்திருக்கிறார். அதேவிதமாக அவர்கள் இஸ்ரவேல் தேசத்தின் தண்ணீர்களுக்குள் தங்கள் வலைகளை வீசும் போது, கடவுளுடைய உதவியோடு மனிதர்களை அவர்கள் உயிரோடே பிடிக்க முடியும் என்பதைக் குறித்து சீஷர்கள் நிச்சயமாயிருக்கலாம். அப்போது ஆரம்பமான ஆவிக்குரிய மீன்பிடிப்பு வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, யெகோவா இன்னும் நிறைவான அறுவடையைக் கொடுத்து வருகிறார்.

10 மனித மீன்களைப் பிடிப்பதற்காக அந்தச் சீஷர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இயேசுவால் பயிற்றுவிக்கப்பட்டார்கள். ஒரு சமயம் அவர் அவர்களுக்கு கவனமுள்ள போதனைகளைக் கொடுத்த பின்னர், பிரசங்கிக்கும்படி அவர்களைத் தமக்கு முன்னே அனுப்பினார். (மத்தேயு 10:1-7; லூக்கா 10:1-11) இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சீஷர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இயேசுவின் மரணம், இனிமேலும் மனித மீன்பிடிப்பு இராது என்பதை அர்த்தப்படுத்தியதா? நிகழ்ச்சிகள் விரைவில் அதற்கு பதிலளித்தது.

மனிதகுலத்தின் கடலிலே மீன்பிடித்தல்

11, 12. தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, மீன்பிடித்தல் சம்பந்தப்பட்ட என்ன அற்புதத்தை இயேசு நடப்பித்தார்?

11 எருசலேமுக்கு வெளியே இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு விரைவிலேயே சீஷர்கள் கலிலேயாவுக்குத் திரும்பச் சென்றார்கள். ஒரு சமயம் அவர்களில் ஏழு பேரும் ஒன்றாகக் கலிலேயக் கடலருகே இருந்தனர். பேதுரு தான் மீன்பிடிக்கப் போவதாகச் சொன்னார், மற்றவர்கள் அவரோடே சேர்ந்து கொண்டார்கள். எப்பொழுதும் போல, அவர்கள் இரவில் மீன்பிடிக்கச் சென்றார்கள். உண்மையில் அவர்கள் இரா முழுவதும் ஒன்றையும் பிடிக்காமல் கடலிலே தங்கள் வலைகளை விரித்தார்கள். பின்னர் விடியற்காலமான போது, கரையிலே நின்றுகொண்டிருந்த ஓர் உருவம் அவர்களைப் பார்த்து தண்ணீரினூடே அழைத்து, “பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா” என்றது. அதற்கு சீஷர்கள் பதிலளிப்பவர்களாய், “ஒன்றுமில்லை” என்றார்கள். ஆகவே கரையில் நின்றுகொண்டிருந்தவர் அவர்களிடம்: “நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால் அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.”—யோவான் 21:5, 6.

12 என்னே ஒரு வியப்பூட்டும் அனுபவம்! மீன்பிடித்தல் சம்பந்தப்பட்ட இயேசுவின் முந்தின அற்புதத்தை அந்தச் சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் அவர்களில் ஒருவர் மட்டுமாவது கரையிலிருந்த உருவம் யார் என்பதை அடையாளங்கண்டு கொண்டார். “ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.”—யோவான் 21:7, 8.

13. இயேசு பரத்துக்கு ஏறிச் சென்ற பின்பு என்ன சர்வதேச மீன்பிடிப்பு திட்டம் ஆரம்பமானது?

13 இந்த அற்புதம் எதைச் சுட்டிக்காட்டியது? மனிதரைப் பிடிப்பதற்கான அந்த வேலை முடிவடையவில்லை என்பதையே. இயேசு பேதுருவிடம்—அவர் மூலமாக மற்ற எல்லா சீஷரிடமும்—இயேசுவின் ஆடுகளை மேய்க்கும்படியாக மூன்று முறை சொன்னதன் மூலம் இந்த உண்மை வலியுறுத்திக் காண்பிக்கப்பட்டது. (யோவான் 21:15-17) ஆம், ஓர் ஆவிக்குரிய போஷாப்புத் திட்டம் எதிர்காலத்தில் இருக்கிறது. தம்முடைய மரணத்துக்கு முன்பாக அவர் முன்னுரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.” (மத்தேயு 24:14) இப்பொழுது இந்தத் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் நிறைவேற்றமடைய துவங்குவதற்கான சமயமாக இருந்தது. அவருடைய சீஷர்கள் தங்கள் வலைகளை மனிதகுலக் கடலிலே வீசும் நிலையில் இருந்தார்கள், அந்த வலைகள் ஒன்றும் பிடிக்காமல் மேல் எழும்பி வராது.—மத்தேயு 28:19, 20.

14. எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பாக இருந்த வருடங்களில், இயேசுவை பின்பற்றினவர்களின் மீன் பிடித்தல் என்ன வகையில் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது?

14 பரலோகத்தில் தம்முடைய தகப்பனின் சிங்காசனத்திடமாக ஏறிச்செல்வதற்கு முன்பு இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடமாக சொன்னார்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி சீஷர்கள் மீது ஊற்றப்பட்ட போது, மாபெரும் சர்வதேச வேலையான ஆவிக்குரிய மீன்பிடித்தல் ஆரம்பமானது. பெந்தெகொஸ்தே நாளில் மட்டுமே, மூவாயிரம் ஆத்துமாக்கள் உயிரோடே பிடிக்கப்பட்டனர், அதன் பின்பு, “அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.” (அப்போஸ்தலர் 2:41; 4:4) அதிகரிப்பு தொடர்ந்து இருந்தது. பதிவு நமக்குச் சொல்கிறது: “திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 5:14) விரைவில் சமாரியர்கள் நற்செய்திக்குப் பிரதிபலித்தார்கள், அதன்பின்பு சீக்கிரத்திலேயே விருத்தசேதனமில்லாத புறஜாதியாரும் அவ்வாறு செய்தனர். (அப்போஸ்தலர் 8:4-8; 10:24, 44-48) பெந்தெகொஸ்தேவுக்கு ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பின்னர், அப்போஸ்தலனாகிய பவுல் இந்த நற்செய்தி, “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டாயிற்று,” என்று கொலோசெ கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். (கொலோசெயர் 1:23) இயேசுவின் சீஷர்கள் கலிலேயா கடலுக்கு அப்பால் மீன்பிடித்தலை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் சிதறியிருந்த யூதர்கள் மத்தியில் அவர்கள் தங்கள் வலைகளை விரித்தார்கள், பலனற்றதாகத் தோன்றிய யூதரல்லாத மக்களின் கடல்களிலும் அவ்விதமாகவே செய்திருந்தார்கள். அவர்களுடைய வலைகள் நிரம்பி வந்தன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் தேவைக்காக, பொ.ச. 70-ல் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பாக மத்தேயு 24:14-லுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்தது.

“கர்த்தருடைய நாளில்” மனுஷரைப் பிடித்தல்

15. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், மேலுமான என்ன மீன்பிடிக்கும் வேலை முன்னுரைக்கப்பட்டது, அது எப்போது நிறைவேற்றப்பட இருந்தது?

15 என்றபோதிலும் எதிர்காலத்தில் இன்னும் அதிகம் நிகழவிருந்தது. முதல் நூற்றாண்டின் முடிவுக்கு அண்மையில் கடைசியாக உயிருடனிருந்த அப்போஸ்தலனாகிய யோவானுக்கு யெகோவா “கர்த்தருடைய நாளில்,” சம்பவிக்கப் போகும் காரியங்களைப் பற்றிய ஒரு தரிசனத்தை அருளினார். (வெளிப்படுத்துதல் 1:1, 10) அதில் முனைப்பான ஓர் அம்சம் உலகம் முழுவதிலும் நற்செய்தியை சொல்வதாக இருந்தது. நாம் வாசிக்கிறோம்: “வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனா”யிருந்தான். (வெளிப்படுத்துதல் 14:6) தேவதூதருடைய வழிநடத்துதலின் கீழ் கடவுளுடைய ஊழியர்கள் வெறுமென ரோம சாம்ராஜ்யம் முழுவதிலும் மட்டுமல்ல, குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சொல்லர்த்தமாய் நற்செய்தியைப் பிரசங்கிப்பார்கள். ஆத்துமாக்களைப் பிடிக்கும் பூகோள வேலை மேற்கொள்ளப்படவிருந்தது, நம்முடைய நாள் அந்தத் தரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பார்த்திருக்கிறது.

16, 17. பிந்திய-நாளைய ஆவிக்குரிய மீன்பிடிக்கும் வேலை எப்போது ஆரம்பமானது, யெகோவா எவ்விதமாக அதை ஆசீர்வதித்திருக்கிறார்?

16 இந்த 20-ம் நூற்றாண்டின் போது இந்த மீன்பிடித்தல் வேலை எவ்வாறு இருந்துவந்திருக்கிறது? ஆரம்பத்தில் மீனவர்கள் வெறுமென சொற்ப எண்ணிக்கையினராய் இருந்தனர். முதல் உலகப் போர் முடிவடைந்த பின்னர் நற்செய்தியைச் சுறுசுறுப்பாய் பிரசங்கித்தவர்கள் நான்காயிரம் பேர் மட்டுமே இருந்தனர், அவர்களில் பெரும்பாலானோர் அபிஷேகம் செய்யப்பட்ட வைராக்கியமுள்ள ஆண்களும் பெண்களுமாவர். யெகோவா எங்கெல்லாம் வழியைத் திறந்தாரோ, அங்கெல்லாம் அவர்கள் தங்களுடைய வலையை விரித்தார்கள். அநேக ஆத்துமாக்கள் உயிரோடே பிடிக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து யெகோவா மீன் பிடிப்புக்கு புதிய தண்ணீர்களைத் திறந்து வைத்தார். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்குச் சென்ற மிஷனரிகள் வேலையை அநேக தேசங்களில் முன்நின்று நடத்தினர். ஆரம்பத்தில் பலன் தராததாகத் தோன்றிய ஜப்பான், இத்தாலி, மற்றும் ஸ்பெய்ன் போன்ற தேசங்கள் கடைசியாக நிறைவான ஆத்துமாக்களின் அறுவடைகளை கொடுத்தன. மீன் பிடிப்பு கிழக்கு ஐரோப்பாவில் எத்தனை வெற்றிகரமாக இருந்திருக்கிறது என்பதை சமீபத்தில் நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

17 இன்று, அநேக நாடுகளில் வலைகள் அநேகமாய்க் கிழியத் தொடங்கிவிட்டன. ஆத்துமாக்களின் மாபெரும் அறுவடை, புதிய சபைகளையும் வட்டாரங்களையும் ஒழுங்கமைப்பதைத் தேவைப்படுத்தியிருக்கிறது. இவைகளுக்கு இடமளிக்க, புதிய ராஜ்ய மன்றங்களும் அசெம்பிளி மன்றங்களும் எப்போதும் கட்டப்பட்டு வருகின்றன. அதிகரிப்பை கவனித்துக்கொள்ள அதிகமான மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தேவைப்படுகின்றனர். அந்த உண்மையுள்ளவர்களால் 1919-ல் ஒரு மாபெரும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. சொல்லர்த்தமாகவே ஏசாயா 60:22 நிறைவேற்றமடைந்திருக்கிறது. அந்த நான்காயிரம் மீன் பிடிப்பவர்கள் இன்று நாற்பது லட்சத்துக்கும் மேலாகி விட்டிருக்கையில், ‘சின்னவன் ஆயிரமாக ஆகியிருக்கிறான்.’ ஆகிலும் முடிவு இன்னும் வரவில்லை.

18. நாம் எவ்விதமாக முதல் நூற்றாண்டு ஆவிக்குரிய மனிதரைப் பிடிக்கிறவர்களின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

18 இவையனைத்தும் தனிப்பட்டவர்களாகிய நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரிடம் மனிதரைப் பிடிப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது, “அவர்கள் . . . எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருக்குப் [இயேசுவுக்குப்] பின்சென்றார்கள்,” என்று வேதவசனம் குறிப்பிடுகிறது. (லூக்கா 5:11) விசுவாசம் மற்றும் முழு இருதயத்தோடுகூடிய பக்திக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! யெகோவாவைச் சேவிப்பதற்கு என்ன செலவு ஆனாலும், அதேவிதமான தன்னலந்துறந்த ஆவியையும், அதேவிதமான தடையில்லா விருப்பத்தையும் நாம் விருத்திசெய்யக்கூடுமா? கூடும் என்று லட்சக்கணக்கானோர் பதிலளித்திருக்கின்றனர். முதல் நூற்றாண்டில் யெகோவா அனுமதித்த இடங்களிலெல்லாம் சீஷர்கள் மனிதரைப் பிடித்தார்கள். அது யூதர்கள் அல்லது புறஜாதியார் மத்தியில் இருந்தாலும் சரி, எவ்வித வித்தியாசமுமின்றி அவர்கள் மீன்பிடித்தார்கள். அப்படியே நாமும் எந்தவித தங்குதடையுமின்றி அல்லது தப்பெண்ணங்களுமின்றி எல்லாருக்கும் பிரசங்கிப்போமாக.

19. நாம் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் தண்ணீர்கள் பலன்தராத ஒன்றாய்த் தோன்றினால் நாம் என்ன செய்யவேண்டும்?

19 என்றபோதிலும், தற்போது உங்கள் பிராந்தியம் பலன்தராத ஒன்றாய்த் தோன்றினால் அப்பொழுது என்ன? சோர்ந்துவிடாதீர்கள். மீன்பிடிக்கும் வேலையில் சீஷர்கள் எவ்வித பலனுமின்றி ஓர் இரா முழுவதையும் செலவிட்டப் பின்னர், இயேசு அவர்களுடைய வலைகளை நிரப்பினதை நினைவுகூருங்கள். ஆவிக்குரிய வகையிலும் அதே காரியம் நிகழக்கூடும். உதாரணமாக, ஐயர்லாந்தில் உண்மையுள்ள சாட்சிகள் வெகு சொற்பமான பலன்களோடு பல ஆண்டுகளாகப் பிரயாசப்பட்டார்கள். எனினும் சமீபத்தில் அந்நிலை மாறிவிட்டது. 1990-ம் ஊழிய ஆண்டின் முடிவிற்குள்ளாக ஐயர்லாந்து வரிசையாக 29 உச்சநிலைகளை அனுபவித்து மகிழ்ந்ததாக யெகோவாவின் சாட்சிகளுடைய 1991 வருடாந்தர புத்தகம் அறிக்கை செய்கிறது! ஒரு நாள் உங்கள் பிராந்தியமும் அதேவிதமாக ஒருவேளை பலன் கொடுக்கும். யெகோவா அனுமதிக்கும் வரையில் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருங்கள்!

20. மனுஷரைப் பிடிப்பதில் நாம் எப்போது ஈடுபட வேண்டும்?

20 இஸ்ரவேலில் மீனவர்கள் இரவிலே மீன்பிடிக்கச் சென்றார்கள். இரவிலே மற்ற ஆட்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளிலே அனலாகவும் சொகுசாகவும் இருந்தபோது இவர்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள். இவர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் செல்லவில்லை, ஆனால் தாங்கள் அதிகப்படியான மீன்களைப் பிடிக்கக்கூடிய நேரத்தில் சென்றார்கள். அப்படியே நாமும்கூட நம்முடைய பிராந்தியத்தை கவனித்து ஆராய வேண்டும். மீன்பிடிப்பதை போலவே பெரும்பாலான ஆட்கள் வீட்டில் இருக்கக்கூடிய நேரங்களில், சொல்வதற்கு செவிசாய்க்கும் ஏற்புத்திறனுடைய சமயங்களில் மனுஷரைப் பிடிக்கச் செல்லலாம். இது ஒருவேளை மாலை வேளையாக, வார இறுதி நாட்களாக, அல்லது ஏதாவது ஒரு சமயமாக இருக்கலாம். அது எந்தச் சமயமாக இருந்தாலும், நேர்மை இருதயமுள்ள ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கு நம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்வோமாக.

21. நம்முடைய பிராந்தியம் அடிக்கடி ஊழியம் செய்யப்பட்டதாக இருக்குமானால் நாம் எதை நினைவில் கொள்ள வேண்டும்?

21 நம்முடைய பிராந்தியம் அடிக்கடி ஊழியம் செய்யப்பட்ட பிராந்தியமாக இருக்குமானால், அப்பொழுது என்ன? மீன்பிடித்தலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட உலகத்திலுள்ள மீனவர்கள் தங்களுடைய மீன்பிடிக்கும் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன என்று அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கின்றனர். நம்முடைய ஆவிக்குரிய மீன் பிடிக்கும் பகுதிகள் அவ்வாறு அளவுக்கு மிஞ்சி பிடிக்கப்பட்டிருக்கக்கூடுமா? உண்மையில் அப்படி இல்லை! அடிக்கடி ஊழியம் செய்யப்பட்டாலும்கூட அநேக பிராந்தியங்கள் அதிகரிப்பைக் கொடுக்கின்றன. இன்னும் சில பகுதிகள் மிக நன்றாய் ஊழியம் செய்யப்படுவதால் மேம்பட்ட பலன்களைத் தருகின்றன. என்றபோதிலும், அடிக்கடி வீடுகள் சந்திக்கப்படுகையில், பூட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் குறிக்கப்பட்டு பின்னால் சந்திக்கப்படுவதை நன்கு நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். பல்வேறு வகையான சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருட்களை கற்றுக்கொள்ளுங்கள். விரைவில் வேறு ஒருவர் மறுபடியும் சந்திப்பார் என்பதை மனதில் கொண்டு வரவேற்கப்படுகையில் அளவுக்கு அதிகமான நேரத்தை செலவிடவோ அல்லது கவனக்குறைவாக வீட்டுக்காரரின் எதிர்ப்பைத் தூண்டிவிடவோ செய்யாதீர்கள். தெரு ஊழியத்திலும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலிலும் உங்கள் திறமைகளை விருத்தி செய்து கொள்ளுங்கள். எல்லா சந்தர்ப்பங்களிலும் இயன்ற எல்லா வழிமுறைகளிலும் உங்கள் ஆவிக்குரிய வலைகளை வீசுங்கள்.

22. இந்தச் சமயத்தில் நாம் என்ன மகத்தான சிலாக்கியத்தை அனுபவித்துக் களிக்கிறோம்?

22 இந்த மீன் பிடித்தலில், மீன் பிடிப்பவர்களும் மீன்களுமாகிய இரு சாராருமே நன்மை அடைகின்றனர் என்பதை நினைவில் வையுங்கள். நாம் பிடிக்கிறவர்கள் விடாமல் நிலைத்திருப்பார்களேயானால், அவர்கள் என்றென்றுமாக வாழலாம். பவுல் தீமோத்தேயுவை இப்படியாக உற்சாகப்படுத்தினார்: “இவைகளில் நிலைக்கொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) ஆவிக்குரிய மீன்களைப் பிடிக்கும் வேலையில் இயேசு தாமே தம்முடைய சீஷர்களுக்கு முதல்முதலாகப் பயிற்றுவிப்பை அளித்தார், இந்த வேலை இன்னும் அவருடைய வழிநடத்துதலின் கீழ் நடந்துவருகிறது. (வெளிப்படுத்துதல் 14:14-16 ஒப்பிடவும்.) அதைச் செய்து முடிப்பதில் அவருக்குக் கீழே வேலை செய்வது என்னே ஒரு மகத்தான சிலாக்கியமாக நமக்கு இருக்கிறது! யெகோவா அனுமதிக்கும் காலம் வரையில் நம்முடைய வலைகளை விரித்துக்கொண்டிருப்போமாக. ஆத்துமாக்களை உயிரோடே பிடிக்கும் வேலையைக் காட்டிலும் பெரியதோர் வேலை வேறு எது நமக்கு இருக்க முடியும்?

உங்களால் நினைவுபடுத்திக் கூறமுடியுமா?

◻ என்ன வேலையைச் செய்வதற்கு இயேசு தம்மை பின்பற்றினவர்களைப் பயிற்றுவித்தார்?

◻ இயேசு எவ்விதமாக ஆவிக்குரிய மீன்பிடிக்கும் வேலை தம்முடைய மரணத்தோடு முடிவுறாது என்பதைக் காண்பித்தார்?

◻ என்ன விதத்தில் ஆவிக்குரிய மீன்பிடிக்கும் வேலையை யெகோவா முதல் நூற்றாண்டில் ஆசீர்வதித்தார்?

◻ “கர்த்தருடைய நாளின்” போது மீன்களின் என்ன நிறைவான அறுவடை பிடிக்கப்பட்டிருக்கிறது?

◻ தனிப்பட்டவர்களாக நாம் எவ்விதமாக அதிக வெற்றிகரமாக மனுஷரைப் பிடிக்கிறவர்களாக இருக்க முடியும்?

[பக்கம் 15-ன் படம்]

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, அவருடைய அப்போஸ்தலர்கள், மனுஷரைப் பிடிக்கிற தெய்வீக வேலையை விரிவுபடுத்தினர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்