கிறிஸ்தவமண்டலம் ஆப்பிரிக்காவில் என்ன விதைத்திருக்கிறது
ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கரான சார்லஸ் லாவீஷ்ரீ 1867-ல் அல்ஜியர்ஸுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பேராயராக ஆப்பிரிக்காவுக்கு வந்தார். “அல்ஜீரியாவை மிகப் பெரிய மற்றும் ஒரு கிறிஸ்தவ தேசத்தின் பிறப்பிடமாக ஆக்குவதற்கு கடவுள் பிரான்சை தெரிந்துகொண்டிருக்கிறார்,” என்பதாக அவர் சொன்னார்.
லாவீஷ்ரீயின் கனவு அல்ஜீரியாவுக்கும் அப்பால் சென்றது. உண்மையில், அவர் “கிறிஸ்தவமண்டலத்தின் பொது வாழ்க்கைக்கு மத்திய மற்றும் வட ஆப்பிரிக்காவை ஐக்கியப்படுத்தும்” நோக்கத்தோடு மிஷனரிகளை பாலைவனத்துக்கு அடுத்தப் பக்கத்துக்கு அனுப்பிவைத்தார்.
இதற்கிடையில், கண்டத்தின் மேற்கு, தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் ஏற்கெனவே வேலை செய்துகொண்டிருந்தனர். நடுக்கம், வியர்வை மற்றும் ஜன்னி ஆகிய நோய்க்குறிகளோடு திரும்பத் திரும்பத் தாக்கிய மலேரியா போன்ற இன்னல்களை அவர்கள் எதிர்த்துப் போராடினர். வெப்பமண்டல நோயினால் பலவீனமடைந்த அநேகர், வந்து சேர்ந்தவுடன் விரைவில் மரித்துப் போனார்கள். ஆனால் மற்றவர்கள் வந்துகொண்டே இருந்தனர். “ஆப்பிரிக்காவில் பிரயாணம் செய்யும் எவரும் மிஷனரிகளின் வீரச் செயல்களைக் குறித்து இடைவிடாது நினைப்பூட்டப்படுகிறார். . . . அவர்கள் மஞ்சள் காய்ச்சல் நோய், சீதபேதி, ஒட்டுயிர்களின் தாக்குதலை எதிர்த்துப் போராடினர். மேலும் . . . நான் . . . ஆப்பிரிக்கா முழுவதிலும் அவர்களுடைய கல்லறைகளைப் பார்த்தேன்,” என்பதாக அட்லே ஸ்டீவன்சன் குறிப்பிட்டார்.
மிஷனரி கனிகள்
மிஷனரிகள் ஆப்பிரிக்காவினுள் நுழைந்தபோது பெரும்பாலான பழங்குடிகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதை அவர்கள் கண்டார்கள். “ஏறக்குறைய எண்ணூறு [ஆப்பிரிக்க] மொழிகளில், மிஷனரிமாரின் வருகைக்குமுன் நான்கு மாத்திரமே எழுத்துருவில் இருந்தது,” என்பதாக ஆப்பிரிக்கர்களின் கண்ணோட்டத்தில் ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவம் (Christianity in Africa as Seen by Africans) என்ற புத்தகத்தில் ராம் தேசாய் விளக்குகிறார். ஆக, எழுதப்படாத இந்த மொழிகளை எழுதுவதற்குரிய முறையை மிஷனரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் பாட புத்தகங்களை வெளியிட்டு எவ்விதமாக வாசிப்பது என்பதை மக்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தனர். அந்த நோக்கத்துக்காக அவர்கள் ஆப்பிரிக்கா முழுவதிலும் பள்ளிக்கூடங்களைக் கட்டினார்கள்.
மிஷனரிகள் மருத்துவமனைகளையும்கூட கட்டினர். “அவர்களுடைய மனித நல பணியின் பதிவுக்கு நிகராக வேறு எந்த ஏஜென்சியும் செய்தது கிடையாது,” என்பதாக ராம் தேசாய் ஒப்புக்கொள்கிறார். மருத்துவ கவனிப்பைத் தவிர, ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவின் பண்டங்களை நாடினர். சில மிஷனரிமார்கள் மதம் மாறுபவர்களை இது கவர்ந்திழுக்கும் என்பதாக அவர்கள் நம்பியதன் காரணமாக வியாபார களங்களை ஏற்படுத்தினர். உதாரணமாக, ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்த பேஸல் சமயப் பரப்புக் குழு கானாவில் வியாபார கம்பெனி ஒன்றை நிறுவியது. அங்கே கொக்கோ மரங்கள் நன்றாக வளருவதை அவர்கள் கண்டுபிடித்தனர், இன்று கானா கொக்கோ உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
கிறிஸ்தவமண்டல மிஷனரிகளின் குறிப்பிடத்தக்க சாதனை அவர்கள் பைபிளை மொழிபெயர்த்ததாகும். என்றபோதிலும் பைபிளின் செய்தியைப் பரப்புவது கூடுதலாக முக்கியமான உத்தரவாதத்தோடு சேர்ந்தே வருகிறது. பின்வருமாறு கேட்பதன் மூலம் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் காண்பித்தார்: “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா?” கிறிஸ்தவத்தைப் போதிக்கிறவர்கள்தாமே, கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேர்த்தியான நியமங்களின்படி வாழ்கிறவர்களாக இருக்கவேண்டும் என்று பைபிள் எச்சரிக்கிறது.—ரோமர் 2:21, 24.
ஆப்பிரிக்காவுக்குச் சென்ற கிறிஸ்தவமண்டலத்தின் சமயப் பரப்புக் குழுவைப் பற்றி என்ன? அது பைபிளின் கடவுளைக் கனப்படுத்தியிருக்கிறதா அல்லது கிறிஸ்தவ போதனைகளைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்திருக்கிறதா?