மேசியா—ஒரு மெய்யான நம்பிக்கையா?
அவர் தன்னை மோசஸ் என்றழைத்துக்கொண்டார். ஆனால் அவருடைய உண்மையான பெயர் சரித்திரத்தில் மறக்கப்பட்டு போனது. பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டில் அவர் கிரேத்தா தீவு முழுவதுமாக பிரயாணம் செய்து, யூதர்களிடம் தானே அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த மேசியா என்பதாக அவர்களை நம்ப வைத்துவந்தார். அவர்கள் ஒடுக்கப்படுவதும் அவர்கள் நாடு கடத்தப்படுவதும் அவர்களுடைய சிறைப்பட்ட நிலையும் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும் என்பதாக அவர் அவர்களிடம் சொன்னார். அவர்கள் நம்பினார்கள். அவர்களுடைய விடுதலை நாள் வந்தபோது, யூதர்கள் மத்தியதரைக் கடலைப் பார்த்த வண்ணமிருந்த நிலக்கூம்புக்கு “மோசஸ்”-ன் பின்னால் சென்றார்கள். அவர்கள் கடலுக்குள் விழுந்துவிட வேண்டும், அது அவர்களுக்கு முன்னால் பிரிந்து போகும் என்பதாக அவர் அவர்களுக்குச் சொன்னார். அநேகர் அவ்வாறே செய்து, பிரிந்து போக மனமில்லாத கடலுக்குள் குதித்தனர். மிகப் பலர் மூழ்கிப் போனார்கள்; ஒரு சிலர் படகோட்டிகளாலும் மீனவர்களாலும் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் மோசஸ் எங்குமே காணப்படவில்லை. அந்த மேசியா மறைந்துபோனார்.
மேசியா என்பது என்ன? “இரட்சகர்,” “மீட்பர்,” மற்றும் “தலைவர்,” என்ற வார்த்தைகள் உங்கள் மனதுக்கு வரக்கூடும். தன்னைப் பின்பற்றுகிறவர்களில் நம்பிக்கையையும் பக்தியையும் புகட்டி அவர்களை ஒடுக்குதலிலிருந்து விடுதலைக்கு வழிநடத்திச் செல்வதாக வாக்களிக்கும் ஒரு நபரே மேசியா என்பதாக அநேக ஆட்கள் நினைக்கின்றனர். மனித சரித்திரம் பெரும்பாலும் ஒடுக்குதலின் சரித்திரமாக இருக்கும் காரணத்தால், நூற்றாண்டுகளினூடாக அநேக மேசியாக்கள் தோன்றியிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. (பிரசங்கி 8:9 ஒப்பிடவும்.) ஆனால் போலியாகத் தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்டுவிட்ட கிரேத்தாவின் மோசஸ் போல, இந்த மேசியாக்கள் அநேகமாக தங்களைப் பின்பற்றுகிறவர்களை விடுதலைக்குப் பதிலாக ஏமாற்றத்துக்கும் அழிவுக்குமே வழிநடத்தியிருக்கிறார்கள்.
“இவரே மேசியா அரசர்!” இவ்விதமாகத்தான் மதிப்புக்குரிய ரபியான அக்கிபா பென் ஜோசப், பொ.ச. 132-ம் வருடம் சைமன் பார் கோக்பாவை வரவேற்றார். பார் கோக்பா வலிமையான ஒரு படையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பலம்பொருந்திய மனிதனாக இருந்தார். இங்கே கடைசியாக ரோம உலக வல்லரசின் கைகளில் தாங்கள் நெடுநாளாய் அனுபவித்து வந்த ஒடுக்குதலை முடிவுக்குக் கொண்டு வரயிருக்கும் ஒரு மனிதன் என்பதாக அநேக யூதர்கள் நினைத்தனர். பார் கோக்பா தோல்வியடைந்தார்; லட்சக்கணக்கான அவருடைய தேசத்தார் அந்தத் தோல்வியின் காரணமாக மடிந்துபோயினர்.
மற்றொரு யூத மேசியா 12-ம் நூற்றாண்டில் தோன்றினார், இந்தச் சமயம் ஈமனில். இஸ்லாமிய சமயத்துறை அதிகாரி, அல்லது ஆட்சியாளர், அவருடைய மேசியானிய அந்தஸ்துக்கு ஓர் அடையாளத்தை அவரிடம் கேட்டபோது, இந்த மேசியா தம்முடைய தலை வெட்டப்படும்படி செய்யவும், தாமதமில்லாமல் ஏற்படும் அவருடைய உயிர்த்தெழுதல் ஓர் அடையாளமாக சேவிக்கட்டும் என்றும் யோசனை தெரிவித்தார். இஸ்லாமிய சமயத் துறை அதிகாரி இத்திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார்—அதுவே ஈமன் மேசியாவின் முடிவாக இருந்தது. அதே நூற்றாண்டில், டேவிட் அல்ராய் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் தன் பின்னால் வந்து தேவதூதர்களின் செட்டைகளின் மேல் பரிசுத்த தேசத்துக்குத் திரும்பக் கொண்டுச்செல்லப்பட ஆயத்தமாகும்படி மத்திய கிழக்கிலிருந்த யூதர்களிடம் சொன்னார். அநேகர் அவர் மேசியா என்பதாக நம்பினார்கள். பாக்தாத்திலுள்ள யூதர்கள் பொறுமையாக தங்கள் மேல் மாடியில் காத்துக்கொண்டு தங்கள் உடைமைகளை திருடர்கள் கொள்ளையடிப்பதைக் குறித்து கவலையற்றவர்களாகவும் உணராதவர்களாகவும் இருந்தார்கள்.
சப்பட்டி ஸெவி 17-ம் நூற்றாண்டில் சிமிர்னாவிலிருந்து தோன்றி வெளிப்பட்டார். அவர் ஐரோப்பா முழுவதிலுமாக யூதர்களிடம் தம்முடைய மேசியானிய அந்தஸ்தை அறிவித்து வந்தார். கிறிஸ்தவர்களும்கூட அவருக்குச் செவிசாய்த்தார்கள். ஸெவி தம்மைப் பின்பற்றுகிறவர்கள் கட்டுப்பாடின்றி பாவத்தை நடப்பிக்க அனுமதிப்பதன் மூலம் விடுதலையை அவர்களுக்கு அளித்தார். அவரை நெருக்கமாக பின்பற்றியவர்கள் சிற்றின்பக் கேளிக்கை களியாட்டம், ஆடையில்லாதிருப்பது, வேசித்தனம் மற்றும் முறைதகாப்புணர்ச்சி செய்து பின்னர் தங்களை அடித்துக்கொள்வது, பனியில் ஆடையில்லாமல் உருளுவது குளிர்ச்சியான மண்ணில் கழுத்துவரை தங்களை புதைத்துக்கொள்வது போன்றவற்றால் தங்களைத் தண்டித்துக்கொண்டனர். அவர் துருக்கிக்குப் பயணம் செய்தபோது ஸெவி பிடிக்கப்பட்டு அவர் முகமதியராக மாறவேண்டும் அல்லது மரிக்க வேண்டும் என்பதாக சொல்லப்பட்டார். அவர் மதம் மாறினார். அவருடைய பக்தர்களில் பலர் சிதறடிக்கப்பட்டனர். இருப்பினும், அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு ஸெவி இன்னும் சில ஆட்களால் மேசியா என்றே அழைக்கப்பட்டார்.
கிறிஸ்தவமண்டலமும்கூட தன் பங்கிற்கு மேசியாக்களை பிறப்பித்திருக்கிறது. டான்கெம் என்ற பெயர்கொண்ட ஒரு மனிதன் 12-ம் நூற்றாண்டில் ஆதரவாளர்களின் ஒரு படையையே உருவாக்கி அன்ட்வெர்ப் பட்டணத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்த மேசியா தன்னை ஒரு கடவுள் என்றழைத்துக்கொண்டார்; ஒரு புனித சடங்காக தன்னைப் பின்பற்றுகிறவர்கள் குடிப்பதற்கு அவருடைய சொந்த குளியல் நீரை விற்கவும் செய்தார்! மற்றொரு “கிறிஸ்தவ” மேசியா 16-வது நூற்றாண்டு ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் முன்சர் என்பவர். அவர் உள்ளூர் குடிமுறை அதிகாரிகளுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழிநடத்தி தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் இது அர்மகெதோன் யுத்தம் என்று கூறினார். விரோதியின் பீரங்கிகுண்டுகளை தன் சட்டைக் கையில் பிடித்துவிடுவதாக வாக்களித்தார். மாறாக அவருடைய ஜனங்கள் படுகொலை செய்யப்பட்டனர். முன்சரின் தலை வெட்டப்பட்டது. நூற்றாண்டுகளினூடே இப்படிப்பட்ட மற்ற அநேக மேசியாக்கள் கிறிஸ்தவமண்டலத்தில் தோன்றியிருக்கிறார்கள்.
மற்ற மதங்களும்கூட தங்கள் மேசியானிய நபர்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மதம் நீதியுள்ள ஒரு சகாப்தத்தைக் கொண்டுவரும் மேத்யி (Mahdi) அல்லது சரியாக வழிநடத்தப்பட்டவரைக் சுட்டிக்காட்டுகிறது. இந்து மதத்தில், சிலர் பல்வேறு கடவுட்களின் அவதாரங்களாக அல்லது பிறவிகளாக இருப்பதாக உரிமைப் பாராட்டியிருக்கின்றனர். மேலும் தி நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, “புத்த மதம் போன்ற மேசியானிய நம்பிக்கையில்லாத ஒரு மதத்திலும்கூட, மஹாயான தொகுதியினர் மத்தியில், எதிர்காலத்தில் புத்தா மைத்ரேயா தன் பரலோக இருப்பிடத்திலிருந்து இறங்கிவந்து உண்மையுள்ளோரை பரதீஸுக்கு கொண்டுபோவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
20-ம் நூற்றாண்டு மேசியாக்கள்
நம்முடைய சொந்த நூற்றாண்டில், மெய்யான மேசியாவுக்கான தேவை எக்காலத்திலுமிருந்ததைவிட அதிக அவசரமானதாக ஆகியிருக்கிறது; அப்படியென்றால் அநேகர் இச்சிறப்பு பட்டப்பெயருக்கு உரிமை பாராட்டுவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆப்பிரிக்க காங்கோவில் சைமன் கிம்பாங்குவும் அவருடைய வாரிசான ஆண்டிரி “ஜீஸஸ்” மாட்ஸ்வாவும் 1920-கள், 30-கள் மற்றும் 40-களில் மேசியாக்களாக வாழ்த்தி வரவேற்கப்பட்டனர். அவர்கள் மரித்துவிட்டார்கள், ஆனால் அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் அவர்கள் திரும்பி வந்து ஓர் ஆப்பிரிக்க ஆயிர வருட ஆட்சியைக் கொண்டுவர இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நூற்றாண்டும்கூட நியு கின்னியிலும் மெல்லனீசியாவிலும் “கார்கோ கருத்துவேறுபாட்டுக் குழு”க்களின் எழுச்சியைப் பார்த்திருக்கிறது. மேசியாவைப் போன்ற ஒரு வெள்ளையரால் அமைத்துக்கொடுக்கப்படும் ஒரு கப்பல் அல்லது விமானத்தில் வந்து அவர் தங்களைச் செல்வந்தராக்கி மரித்தோரும் எழுந்துவரும் ஒரு மகிழ்ச்சியான சகாப்தத்தை கொண்டுவருவார் என்பதாக உறுப்பினர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
தொழில்துறையில் வளர்ந்த நாடுகளும்கூட தங்கள் மேசியாக்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு சிலர் சன் மயூங் மூன் போன்ற இயேசு கிறிஸ்துவுக்குத் தன்னை வாரிசென தானே அறிவித்துக்கொள்ளும் மதத் தலைவர்களாக இருக்கின்றனர். இவர் தம்முடைய பக்தர்களின் ஐக்கியப்பட்ட ஒரு குடும்பத்தின் மூலமாக உலகை தூய்மைப்படுத்த முயற்சிசெய்கிறார். அரசியல் தலைவர்களும்கூட மேசியானிய அந்தஸ்தை வலிந்துபற்றிக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கு, ஆயிரம் வருட ஆட்சிப்பற்றி ஆரவாரமாக பேசிய அடால்ப் ஹிட்லர் இந்த நூற்றாண்டின் அதிபயங்கரமான உதாரணமாகும்.
அரசியல் தத்துவங்களும் அமைப்புகளும் அதேவிதமாகவே மேசியானிய அந்தஸ்தை முயன்று பெற்றிருக்கின்றன. உதாரணமாக, தி என்ஸைக்ளோபீடியா அமெரிக்கானா, மார்க்ஸ்-லெனின் அரசியல் கோட்பாட்டில் மேசியானிய கருத்துக்கள் இருப்பதாக குறிப்பிடுகிறது. மேலும் உலக சமாதானத்துக்கு ஒரே நம்பிக்கை என பரவலாக வரவேற்கப்படும் ஐக்கிய நாடுகள் சபை அநேகருடைய மனங்களில் ஒரு வகையான மாற்றீடுசெய்யப்பட்ட மேசியாவாக இருப்பதாகத் தோன்றுகிறது.
மெய்யான நம்பிக்கையா?
இந்தச் சுருக்கமான பொதுவான சுற்றாய்வு மேசியானிய இயக்கங்களின் சரித்திரம் பெரும்பாலும் ஏமாற்றம், நொறுங்கிவிட்ட நம்பிக்கைகள் மற்றும் தவறான கற்பனைகளின் ஒரு சரித்திரமே என்பதை மிகத் தெளிவாக்கிவிடுகிறது. அப்படியென்றால் அநேகர் மேசியாவுக்கான நம்பிக்கை குறித்து வெறுப்படைந்துவிட்டிருப்பது குறித்து சிறிதளவும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் ஒரேயடியாக மேசியானிய நம்பிக்கையை மனதிலிருந்து அகற்றிவிடுவதற்கு முன்பாக அது எங்கிருந்து வருகிறது என்பதை நாம் முதலாவதாக கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில், “மேசியா” என்ற வார்த்தை ஒரு பைபிள் வார்த்தையாகும். எபிரெய வார்த்தை மேசியாக் (ma·shiʹach) அல்லது “அபிஷேகம்பண்ணப்பட்டவராகும்.” பைபிள் காலங்களில் ராஜாக்களும் ஆசாரியர்களும் சில சமயங்களில் அபிஷேக வைபவத்தினால் அவர்களுடைய பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டார்கள். அந்தச் சமயத்தில் நறுமணத் தைலம் தலையின் மேல் ஊற்றப்பட்டது. ஆகவே மேசியாக் என்ற வார்த்தை சரியாகவே அவர்களுக்குப் பொருத்தப்பட்டது. அபிஷேக வைபவம் ஏதுமின்றி விசேஷித்த ஒரு ஸ்தானத்துக்கு அபிஷேகம்பண்ணப்பட்ட அல்லது நியமனம் செய்யப்பட்ட ஆண்களும்கூட இருந்தார்கள். எபிரெயர் 11:24-26-ல் மோசே “கிறிஸ்து” அல்லது “அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்பதாக அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் கடவுளுடைய தீர்க்கதரிசியாகவும் பிரதிநிதியாகவும் தெரிந்துகொள்ளப்பட்டார்.
“அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்ற மேசியாவுக்கான இந்தச் சொற்பொருள் விளக்கம், பைபிள் பூர்வமான மேசியாக்களை, நாம் விமர்சித்திருக்கும் பொய் மேசியாக்களிலிருந்து நன்றாகவே தனியே பிரித்து வைக்கிறது. பைபிள் மேசியாக்கள் தாங்களாகவே தங்களை நியமித்துக்கொண்டவர்களாக இல்லை; அவர்கள் அவரை வழிபடும் ஆதரவாளர்களின் ஒரு கூட்டத்தினாலும் தெரிந்துகொள்ளப்படவில்லை. இல்லை, அவர்களுடைய நியமனம் பரத்திலிருந்து, யெகோவா தேவனிடமிருந்தே வந்தது.
பைபிள் அநேக மேசியாக்களைப் பற்றி பேசினாலும், அது ஒருவரை மற்ற எல்லாரைக் காட்டிலும் மேலாக உயர்த்துகிறது. (சங்கீதம் 45:7) இந்த மேசியாவே பைபிள் தீர்க்கதரிசனத்தில் மைய நபராக, பைபிளின் அதிக ஊக்கமளிக்கும் வாக்குறுதிகளின் நிறைவேற்றத்துக்கு உயிர்நிலையாகவும் இருக்கிறார். இந்த மேசியா உண்மையில் நாம் இன்று எதிர்ப்படும் பிரச்னைகளை சமாளித்து வெற்றிபெறுகிறார்.
மனிதவர்க்கத்தின் இரட்சகர்
பைபிள் மேசியா மனிதவர்க்கத்தின் பிரச்னைகளை அவற்றின் அடிப்படைக் காரணத்துக்கே சென்று அதை கையாளுகிறார். கலகத்தனமான ஆவி சிருஷ்டியாகிய சாத்தானின் தூண்டுதலினால் நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிகருக்கு எதிராக கலகஞ்செய்த போது, அவர்கள் உண்மையில் இறுதியான அரசாங்க உரிமையை அவர்கள் தங்களுக்கே எடுத்துக்கொண்டார்கள். எது சரி, எது தவறு என்பதை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இவ்விதமாக அவர்கள் யெகோவாவின் அன்புள்ள பாதுகாப்பான அரசாங்கத்தின் கீழிருந்து வெளியேறி, மனிதகுடும்பத்தை சுய ஆட்சியின் பெருங்குழப்பம் மற்றும் துயரத்துக்குள்ளும், அபூரணத்திற்குள்ளும் மரணத்துக்குள்ளும் தள்ளிவிட்டார்கள்.—ரோமர் 5:12.
மனித சரித்திரத்தின் அந்த இருண்டுபோன கணத்தில் எல்லா மனிதவர்க்கத்துக்கும் ஒரு நம்பிக்கையின் சிற்றொளியை அளிக்க யெகோவா தேவன் தெரிந்துகொண்டது எத்தனை அன்புள்ளதாக இருக்கிறது. கலகஞ்செய்த மனிதர்களுக்குத் தீர்ப்பளிக்கையில் அவர்களுடைய பிள்ளைகள் ஒரு மீட்பரைக் கொண்டிருப்பார்கள் என்பதாக கடவுள் முன்னுரைத்தார். “வித்து” என்று குறிப்பிடப்படும் இந்த இரட்சகர் ஏதேனில் சாத்தான் செய்திருந்த பயங்கரமான கிரியைகளை அழிப்பதற்கு வருவார்; வித்து “சர்ப்பத்தின்” தலையை நசுக்கி, அவனை இல்லாமற்போகும்படி செய்வார்.—ஆதியாகமம் 3:14, 15.
பூர்வ காலங்கள் முதற்கொண்டு யூதர்கள் இந்தத் தீர்க்கதரிசனத்தை மேசியாவோடு சம்பந்தப்பட்டதாகவே கருதிவந்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் பொதுவாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு பழைய ஏற்பாட்டின் அரமேயிக் பொழிப்புரைகளும் பரிசுத்த வேதாகமத்தின் யூத பொழிப்புரைகளும் இந்தத் தீர்க்கதரிசனம் “மேசியா அரசரின் நாளில்” நிறைவேறும் என்பதாக விளக்கியிருக்கிறார்கள்.
அப்படியென்றால் ஆரம்பத்திலிருந்தே விசுவாசமுள்ள மனிதர்கள் வரப்போகும் வித்து அல்லது இரட்சகரின் வாக்குறுதியில் கிளர்ச்சியடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. யெகோவா தேவன் ஆபிரகாமிடம் வித்து அவருடைய வம்சாவழியில்தானே வரவிருந்தது என்றும்—வெறுமனே அவருடைய சந்ததியார் மாத்திரமல்ல—“பூமியிலுள்ள சகல ஜாதிகளும்” அந்த வித்தின் மூலமாக “ஆசீர்வதிக்கப்படும்” என்றும் சொன்னபோது ஆபிரகாமுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளைக் கற்பனை செய்துபாருங்கள்.—ஆதியாகமம் 22:17, 18.
மேசியாவும் அரசாங்கமும்
பிற்கால தீர்க்கதரிசனங்கள் இந்த நம்பிக்கையை நல்ல அரசாங்கத்தின் எதிர்பார்ப்போடு தொடர்புபடுத்தின. ஆதியாகமம் 49:10-ல் ஆபிரகாமின் கொள்ளுப் பேரனாகிய யூதா இவ்வாறு சொல்லப்பட்டான்: “சமாதான கர்த்தர் [ஷைலோ, NW] வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.” தெளிவாகவே இந்த “ஷைலோ” ஆளுகைச் செய்யவிருந்தார்—அவர் யூதர்களை மட்டுமல்ல ஆனால் “ஜனங்களை” ஆளுகைச் செய்வார். (தானியேல் 7:13, 14 ஒப்பிடவும்.) ஷைலோவும் மேசியாவும் ஒருவரே என பூர்வ யூதர்கள் கருதினர்; உண்மையில் யூத பொழிப்புரைகள் சிலவற்றில், “ஷைலோ”வுக்குப் பதில் “மேசியா” அல்லது “மேசியா அரசர்” என்ற வார்த்தை வெறுமனே மாற்றீடு செய்யப்பட்டது.
ஏவப்பட்ட தீர்க்கதரிசனத்தின் வெளிச்சம் தொடர்ந்து பிரகாசிக்கையில், இந்த மேசியாவின் ஆட்சி பற்றி அதிகம் வெளிப்படுத்தப்பட்டது. (நீதிமொழிகள் 4:18) இரண்டு சாமுவேல் 7:12-16-ல் யூதாவின் வழியில் வந்த தாவீது ராஜா, அவருடைய வம்சத்தில் வித்து வரும் என்பதாகச் சொல்லப்பட்டார். மேலுமாக, இந்த வித்து அசாதாரணமான ஒரு ராஜாவாக இருப்பார். அவருடைய சிங்காசனம் அல்லது ஆளுகை என்றென்றுமாக நிலைத்திருக்கும்! ஏசாயா 9:6, 7 இந்தக் குறிப்பை ஆதரிக்கிறது: “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் [“அரசாங்கம்,” கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு] அவர் தோளின்மேலிருக்கும்; . . . தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இது முதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.”
இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சமாதானத்தை ஸ்தாபித்து என்றென்றுமாக ஆட்சிசெய்யும் நியாயமும் நீதியுமுள்ள ஓர் அரசர். சரித்திரத்தின் பொய் மேசியாக்களின் பரிதாபமான அணியிலிருந்து எத்தனை வித்தியாசமாக இருக்கிறார்! ஏமாற்றுகிற, தாமாக தம்மை நியமித்துக்கொண்ட ஒரு தலைவராக இருப்பதற்குப் பதிலாக பைபிள் மேசியா உலகத்தின் நிலைமைகளை மாற்றுவதற்கு தேவையான எல்லா வல்லமையும் அதிகாரமும் கொண்ட ஓர் உலக அரசராக இருக்கிறார்.
இந்த எதிர்பார்ப்பு தொந்தரவான நம்முடைய காலங்களில் ஆழ்ந்த கருத்துள்ளதாக இருக்கிறது. மனிதவர்க்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கைக்கான அதிக அவசரமான தேவை ஒருபோதும் இருந்தது கிடையாது. ஆனால் ஒருவர் வெகு எளிதில் பொய் நம்பிக்கைகளைப் பெற்றுக்கொண்டுவிடக் கூடுமாதலால், நாம் ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியைக் குறித்து கவனமாக ஆராய்வது அத்தியாவசியமாகும்: நாசரேத்தின் இயேசு அநேகர் நம்புவது போல முன்னறிவிக்கப்பட்ட மேசியாவா? பின்வரும் கட்டுரை இந்த விஷயத்தை சிந்திக்கும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
புரூக்லினில் ஒரு மேசியா?
இஸ்ரேலில் விளம்பரத்தட்டிகளும், அறிவிப்புப் பட்டிகைகளும், செவ்வொளி விளக்குகளும் “மேசியாவின் வருகைக்காக ஆயத்தஞ்செய்யுங்கள்,” என்பதாக அண்மையில் அறிவிப்பு செய்திருக்கின்றன. இந்த $4,00,000 விளம்பர ஏற்பாடு லூபவிச்சர் என்ற பக்தியுள்ள யூதர்களின் தீவிர ஆர்த்தடாக்ஸ் மதஉட்பிரிவை சேர்ந்தவர்களால் செய்யப்பட்டிருந்தது. நியூ யார்க், புரூக்லினிலுள்ள மெனாக்கம் மென்டல் ஸ்கீனர்சன் என்ற அவர்களுடைய மாட்சிமை பொருந்திய ரபியே மேசியா என்ற பரவலான கருத்து 2,50,000 உறுப்பினர் அடங்கிய தொகுதியினரின் மத்தியில் இருந்துவருகிறது. ஏன்? மேசியா இந்தச் சந்ததியில் வருவார் என்பதாக ஸ்கீனர்சன் கற்பிப்பது உண்மைதான். நியூஸ்வீக் பத்திரிகையின் பிரகாரம், லூபவிச்சர் அதிகாரிகள் 90 வயதான ரபி, மேசியா வருவதற்கு முன்பு மரிக்கமாட்டார் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றனர். ஒவ்வொரு தலைமுறையும் மேசியாவாக இருக்கத் தகுதிபெறும் ஒரு மனிதனையாவது பிறப்பிக்கிறது என்பதாக பல நூற்றாண்டுகளாக இந்த மதஉட்பிரிவு கற்பித்துவந்திருக்கிறது. ஸ்கீனர்சன் அவருடைய ஆதரவாளர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு மனிதனாகத்தான் தோன்றுகிறார், அவர் எந்த ஒரு வாரிசையும் நியமிக்கவில்லை. இருந்தபோதிலும், பெரும்பாலான யூதர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்வதில்லை என்பதாக நியூஸ்வீக் சொல்கிறது. நியூஸ்டே என்ற செய்தித்தாளின்படி, 96 வயது நிரம்பிய போட்டியாளர் ரபி எலிசர் ஷாக் அவரை “பொய் மேசியா” என்றழைத்திருக்கிறார்.
[பக்கம் 7-ன் படம்]
கிரேத்தாவின் மோசஸ் மேசியாவாக இருந்தார் என்ற நம்பிக்கை அநேக ஆட்களை அவர்களுடைய உயிரை இழக்கும்படி செய்தது