வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
சீலோவிற்குச் செல்லுதல்—நல்ல மற்றும் கெட்ட பிள்ளைகள்
வாக்குப்பண்ணப்பட்ட தேசங்களின் நகரங்கள், பட்டணங்கள் அல்லது பகுதிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, குறிப்பிடத்தக்க சில ஆண்களும் பெண்களும் உங்கள் மனதுக்கு வருகின்றனரா? ஒருவேளை அப்படித்தான், ஏனென்றால் அநேக பைபிள் பதிவுகள் வயதுவந்தவர்களை உட்படுத்துகின்றன. ஆனால் அப்போதிருந்த பிள்ளைகளைப் பற்றி என்ன? நீங்கள் காட்சிகளில் அவர்களைக் கற்பனை செய்துபார்க்கிறீர்களா?
மேலேயுள்ள காட்சி, கிறிஸ்தவர்களுக்குச் சிறந்த முன்மாதிரிகளாய் இருக்கக்கூடிய, மற்றும் எச்சரிக்கைக்கு முன்மாதிரிகளாக இருக்கக்கூடிய இளைஞரை உட்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒருமுகப்பட்டு சிந்திக்க உதவக்கூடும். நடுவிலிருக்கும் வட்டமானக் குன்று சீலோவாக இருக்கவேண்டும்.a
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்தபோது, முதலில் கடவுளுடைய வாசஸ்தலத்தை எரிகோவிற்கு அருகிலுள்ள கில்காலில் அமைத்தனர் என்பதை நீங்கள் ஒருவேளை நினைவுகூரக்கூடும். (யோசுவா 4:19) ஆனால், தேசம் பிரிக்கப்பட்டபோது, இந்தப் பரிசுத்த கூடாரம்—இஸ்ரவேலருடைய வணக்கத்தின் மையம்—இங்கே சீலோவிற்கு மாற்றப்பட்டது. (யோசுவா 18:1) இது எப்பிராயீமின் மலைப்பாங்கான பகுதியில், எருசலேமிற்கு வடக்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இஸ்ரவேலின் எல்லாப் பகுதியிலிருந்தும், ஆண்களும், பெண்களும் சீலோவிற்கு பிரயாணம் செய்து வந்தனர்; வாசஸ்தலம் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய இடத்துக்கு தெற்கேயுள்ள பள்ளத்தாக்கில் பெரிய கூட்டம் குழுமியிருக்கக்கூடும். (யோசுவா 22:12) பிள்ளைகள் இங்கு வருவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
சிலர் வந்தார்கள். இளம் சாமுவேலே நாம் அறிந்திருக்கவேண்டிய மிகக் குறிப்பிடத்தக்க முன்மாதிரியாகும். அவனுடைய பெற்றோர் எல்க்கானாவும் அன்னாளும், மேற்கே குன்றுகளிலுள்ள ஒரு நகரத்தில் வாழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் அவர்கள் இங்கு பிரயாணம்பண்ணி வந்தனர், ஒருவேளை எல்க்கானாவின் மற்ற மனைவியின் மூலமாகப் பிறந்த பிள்ளைகளை அழைத்து வந்திருக்கலாம். கடைசியில் யெகோவா அன்னாளுக்கு ஒரு மகனைக் கொடுத்து ஆசீர்வதித்தார், அவன் சாமுவேல் என்று பெயரிடப்பட்டான். காலம் வந்தபோது, பிரதான ஆசாரியனாகிய ஏலியுடன் அவன் வாசஸ்தலத்தில் சேவைசெய்யும்படியாக, சீலோவில் வாழ்வதற்காக அவனுடைய பெற்றோர் அழைத்துவந்தனர்.—1 சாமுவேல் 1:1–2:11.
கடவுளுடைய வீட்டில், அந்தப் பிள்ளை செய்ய வேலைகள் இருந்தன, அருகிலிருந்த மலைகளில் ஏறிப்பார்க்க அவனுக்கு அநேக வாய்ப்புகள் இருந்திருக்கும். (1 சாமுவேல் 3:1, 15) அவற்றில் சில படிப்படியாக அமைக்கப்பட்டு, பக்கம் 9-ல் காணப்படும் படத்திலிருப்பதைப் போன்று ஒலிவமரங்கள் நிறைந்து இருந்தன. அந்தச் சிறிய கல் காவற்கோபுரத்தைக் கவனியுங்கள். அத்தகைய காவற்கோபுரத்திலிருந்து தனித்திருக்கும் விவசாயிகள் அல்லது மேய்ப்பர்கள் காவல் காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் சுற்றிலும் பார்வையிட இளம் சாமுவேல் அதன்மேல் ஏறுவதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கக்கூடும். (2 நாளாகமம் 20:24-ஐ ஒப்பிடவும்.) இங்கிருந்துகொண்டு வனவிலங்குகளைக் கவனிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பான இடமாக இருக்கும்.
அப்போது, இப்போதிருப்பதைவிட இங்கு அதிக மரங்கள், வனவிலங்குகள் அலையும் காடுகள் கூட இருந்தன. (யோசுவா 17:15, 18) எலிசா கடவுளுடைய முக்கிய தீர்க்கதரிசியாக ஆனபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்திலிருந்து நாம் இதை தெரிந்துகொள்கிறோம். எலிசா, மேலே எரிகோவிலிருந்து, பெத்தேலை நோக்கிப் பிரயாணம்பண்ணிக்கொண்டிருந்தார். எனவே அவர் இந்தப் பிராந்தியத்தில், சீலோவிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தெற்கே இருந்தார். பொன் கன்றுக்குட்டி வணக்கத்தின் மையாக ஆகிவிட்டிருந்த பெத்தேலின் ஜனங்களிடமிருந்து என்னவிதமான வரவேற்பை அவர் பெறுவார்? (1 இராஜாக்கள் 12:27-33; 2 இராஜாக்கள் 10:29) வெளிப்படையாகவே, வயதுவந்தவர்கள் யெகோவாவின் தீர்க்கதரிசியைப் பகைத்தனர், அவர்களின் மனநிலை அவர்களுடைய பிள்ளைகளிடமும் தொற்றிக்கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது.
இரண்டு இராஜாக்கள் 2:23, 24, ஒரு பிள்ளைகளின் குழு கடவுளுடைய தீர்க்கதரிசியைக் கேலிசெய்தார்கள் என்று நமக்குச் சொல்கிறது: “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத் தலையா ஏறிப்போ.” பதிலுக்கு எலிசா, “கர்த்தரின் [யெகோவாவின், NW] நாமத்திலே அவர்களை சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.” இத்தகைய பழுப்புநிற சீரிய தேசக் கரடிகள் எதிர்பாராத அதிர்ச்சியாலோ அல்லது தங்கள் குட்டிகள் பயமுறுத்தப்படுவதாகத் தோன்றும்போதோ கொடூரமாக இருக்கக்கூடும். (2 சாமுவேல் 17:8; நீதிமொழிகள் 17:12; 28:15) அவருடைய பிரதிநிதியை முழுமையாக வெறுப்பதன் மூலம், யெகோவாவைத் தானே வெறுத்தவர்கள் மீது தெய்வீக நீதியை நிறைவேற்ற கடவுள் அவற்றை உபயோகித்தார்.
ஒரு பிள்ளை, சீலோவைச் சுற்றியுள்ள குன்றுகளில் இத்தகைய வனவிலங்குகளைச் சந்திக்கக்கூடும் என்பது, வாசஸ்தலத்தில் சேவை செய்ய அவனைக் கொண்டுவந்த சாமுவேலுடைய பெற்றோரின் விசுவாசத்தை மேலும் போற்றுவதற்கு நமக்கு உதவவேண்டும்.
மற்றொரு உண்மை வணக்கத்தார், இதற்கு முன்பு இதேபோன்ற விசுவாசத்தையும் பக்தியையும் காட்டியிருக்கிறார்—நியாயாதிபதி யெப்தா. யோர்தானின் கிழக்குப் பகுதியிலிருந்த மலைநாடான கிலேயாத்தில் அவர் வாழ்ந்துவந்தார். எதிரிகளான அம்மோனியர்களுக்கு எதிராக, யெகோவாவிற்கான வைராக்கியத்தினால், தன்னுடைய வீட்டிலிருந்து தன்னைச் சந்திக்க வெளிவரும் முதல் நபர் யெகோவாவிற்காக கொடுக்கப்படவேண்டும் என்று யெப்தா ஆணையிட்டார். கன்னியாக இருந்த அவருடைய மகளே வருபவளாக இருந்தாள். எனவே அவர் தன்னுடைய ஒரே பிள்ளையை, சீலோவிலே கடவுளின் பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டுவந்தார், அங்கே அவள் வாழ்ந்து அநேக வருடங்கள் உண்மையாகச் சேவித்தாள்.—நியாயாதிபதிகள் 11:30-40.
சீலோவின் பகுதியில் சாமுவேலும், யெப்தாவின் மகளும் காட்டிய உண்மையுள்ள பக்தியானது, அதே பகுதியில் யெகோவாவின் தீர்க்கதரிசியை கேலிசெய்த 42 குற்றவாளிகளின் எதிர்மாறான முன்மாதிரிக்கு நிச்சயமாகவே ஒரு நல்ல முரண்பாடாக அமைந்துள்ளது.—1 கொரிந்தியர் 10:6, 11 ஒப்பிடவும்.
[அடிக்குறிப்புகள்]
a பெரிய படத்துக்கு, 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டி-யைப் பார்க்கவும்.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Safari Zoo, Ramat-Gan, Tel Aviv