ஏன் சிலர் மறுபடியும் பிறக்கின்றனர்
“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்.” (யோவான் 3:3) அவற்றை 1,900 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து சொன்னது முதற்கொண்டு, அந்த வார்த்தைகள் அநேக மக்களுக்குக் கிளர்ச்சியூட்டுவதாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருந்திருக்கின்றன.
மறுபடியும் பிறத்தலைக்குறித்த இயேசுவின் கூற்றுகளைப்பற்றிய சரியான புரிந்துகொள்ளுதலுக்கு, நாம் முதலாவதாக இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்: மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கம் என்ன? மரணத்தில் ஆத்துமாவுக்கு என்ன நேரிடுகிறது? கடவுளுடைய ராஜ்யம் எதை செய்யவேண்டியதுள்ளது?
மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கம்
முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளுடைய பரிபூரண மகனாக சிருஷ்டிக்கப்பட்டான். (லூக்கா 3:38) ஆதாம் சாகவேண்டும் என்ற நோக்கத்தை யெகோவா தேவன் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. என்றென்றும் வாழ்ந்து ஒரு பரதீஸான பூமியை நிரப்பும் ஒரு பாவமற்ற மனித குடும்பத்தை உருவாக்கும் எதிர்நோக்கை ஆதாமும் அவன் மனைவியாகிய ஏவாளும் கொண்டிருந்தனர். (ஆதியாகமம் 1:28) மரணம், ஆணுக்கும் பெண்ணுக்குமான கடவுளுடைய ஆதி நோக்கத்தின் பாகமாக இருக்கவில்லை. தெய்வீக சட்டத்திற்கு விரோதமாக கலகஞ்செய்ததன் விளைவாகவே அது மனித காட்சியில் நுழைந்தது.—ஆதியாகமம் 2:15-17; 3:17-19.
இந்தக் கலகம், கடவுளின் அரசுரிமை மற்றும் அவருடைய சட்டங்களுக்கு உண்மைத்தவறாமல் நிலைக்கும் மனிதருடைய திறமை போன்ற ஒழுக்கநெறிசார்ந்த பெரிய விவாதங்களை எழுப்பிற்று. இந்த விவாதங்களைத் தீர்ப்பதற்கு காலம் தேவைப்படும். ஆனால் மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் நோக்கம் மாறவில்லை, மேலும் அவர் செய்யத் தீர்மானித்திருக்கும் காரியத்தில் அவர் தவற முடியாது. பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் ஒரு பரிபூரண மனித குடும்பத்தால் பூமியை நிரப்பவேண்டும் என்று அவர் முழுமையாக நோக்கம் கொண்டிருக்கிறார். (சங்கீதம் 37:29; 104:5; ஏசாயா 45:18; லூக்கா 23:43) மறுபடியும் பிறத்தலைப்பற்றிய இயேசுவின் வார்த்தைகளைக் கவனிக்கும்போது, இந்த அடிப்படை சத்தியத்தை நாம் மனதில் கொண்டிருக்கவேண்டும்.
மரணத்தில் ஆத்துமாவுக்கு என்ன நேரிடுகிறது?
கடவுளுடைய பரிசுத்த ஆவி பைபிள் எழுத்தாளர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பவற்றை அறியாதவர்களாய், கிரேக்க தத்துவ அறிஞர்கள் வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க போராடினர். பெரும்பாலும் துயரமான நிலைமைகளில், ஒரு சில வருடங்களே வாழ்வதற்கும், அதற்குப்பின் இல்லாமற்போகவுமே மனிதன் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. இதில் அவர்கள் சரியாகவே சொன்னார்கள். ஆனால், மரணத்திற்குப்பின் மனிதனுடைய எதிர்பார்ப்புகளைப்பற்றிய அவர்களுடைய முடிவுகளில் அவர்கள் தவறாக இருந்தனர். மரணத்திற்குப் பின்னும் மனிதன் வேறு ஏதோ உருவில் தொடர்ந்து வாழ்கிறான், ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் அழியாத ஆத்துமா உள்ளது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
யூதர்களும் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டினவர்களும் அத்தகைய கருத்துகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டனர். பரலோகம்—ஒரு வரலாறு [Heaven—A History] என்ற புத்தகம் கூறுகிறது: “சிதறிப்போன யூதர்களும் கிரேக்க அறிஞர்களும் எங்கெல்லாம் சந்தித்தார்களோ, அழியாத ஆத்துமாவைப்பற்றிய கருத்து மேலெழும்பியது.” அந்தப் புத்தகம் மேலுமாகக் கூறுகிறது: “ஆத்துமாவைப்பற்றிய கிரேக்க தத்துவங்கள், யூத மற்றும் காலப்போக்கில் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒரு நிரந்தரமான பதிவை உண்டுபண்ணியது. . . . பிளேட்டோனிய தத்துவத்திற்கும் பைபிள்பூர்வ பாரம்பரியத்திற்கும் ஒரு தனித்தன்மைவாய்ந்த கூட்டிணைப்பை உருவாக்குவதன் மூலம், ஃபீலோ [அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த ஒரு முதல் நூற்றாண்டு யூத தத்துவ அறிஞர்] பிற்கால கிறிஸ்தவ சிந்தனையாளர்களுக்கு வழிவகுத்தார்.”
ஃபீலோ எதை நம்பினார்? அதே புத்தகம் தொடர்கிறது: “அவரைப் பொருத்தவரையில், மரணம் ஆத்துமாவை அதனுடைய பிறப்புக்குமுன்னிருந்த ஆதிநிலைக்குத் திரும்பக் கொண்டுவருகிறது. ஆத்துமா ஆவிக்குரிய உலகைச் சார்ந்ததாய் இருப்பதன் காரணமாக, உடலிலுள்ள உயிர் ஒரு குறுகிய கால, பெரும்பாலும் பரிதாபகரமான சம்பவமாகவே ஆகிவிடுகிறது.” ஆயினும், ஆதாமின் “பிறப்புக்கு முன்னான நிலை” இல்லாமையாக இருந்தது. பைபிள் பதிவின்படி, ஓர் உயர்ந்த அல்லது ஒரு தாழ்ந்த வாழ்வுநிலைக்குக் கொண்டுசெல்லும், வெறும் ஒரு தயாரிப்பு இடமாக பூமி இருப்பதைப்போன்றும், மரணத்தின்போது வேறொரு பகுதிக்கு தானாக ஒரு மாற்றம் ஏற்படும் என்பதாகவும் கடவுள் ஒருபோதும் நோக்கம் கொண்டிருக்கவில்லை.
கடவுளின் ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளில், மனித ஆத்துமா அழியாதது என்ற நம்பிக்கை கற்பிக்கப்படவில்லை. ஒருமுறைகூட “அழியாத ஆத்துமா” என்ற பதத்தை அது பயன்படுத்துவதில்லை. ஆதாம் ஓர் ஆத்துமாவாக சிருஷ்டிக்கப்பட்டான், ஓர் ஆத்துமாவுடன் அல்ல என்பதாக அது குறிப்பிடுகிறது. ஆதியாகமம் 2:7 கூறுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.” பரலோகத்தில் நித்திய வாழ்க்கை அல்லது எரிநரகத்தில் நித்திய வாதனை என்ற எதிர்நோக்கை மனிதவர்க்கம் ஒருபோதும் எதிர்ப்படவில்லை. மரிக்கும் ஆத்துமா அல்லது ஆள் உணர்வுள்ள வாழ்வைக் கொண்டிருப்பதில்லை என்பதாக பைபிள் காட்டுகிறது. (சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) ஆகவே, தத்துவ அறிஞர்கள் ஆத்துமாவைப்பற்றி வேதப்பூர்வமற்ற நோக்குநிலைகளைக் கொண்டிருக்கின்றனர். மறுபடியும் பிறத்தலைக்குறித்து இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வதை மறைக்கும், தவறாக வழிநடத்தும் எண்ணங்களுக்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது.
ராஜாக்களாக ஆளும்படி மறுபடியும் பிறத்தல்
இயேசு நிக்கொதேமுவிடம் ‘மறுபடியும் பிறப்பவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்,’ என்று கூறினார். (யோவான் 3:3-5) அந்த ராஜ்யம் என்பது என்ன? பிசாசாகிய சாத்தானாகிய பழைய பாம்பின் தலையை நசுக்குவதற்கு ஒரு விசேஷித்த “வித்து”—வரும் அரசர் ஒருவர்—பயன்படுத்தப்படப்போகும் அவருடைய நோக்கத்தைக்குறித்து மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில், அடையாள வார்த்தைகளில் யெகோவா தேவன் எச்சரிப்புக் கொடுத்தார். (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:9) வேதவார்த்தைகளில் படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டபடி, இந்த “வித்து” இயேசு கிறிஸ்துவாக அடையாளங்காட்டப்படுகிறார்; கடவுளுடைய அரசுரிமையின் ஈடிணையற்ற வெளிக்காட்டாகிய மேசியானிய ராஜ்யத்தில் உடன்அரசர்களுடன் அவர் ஆட்சி செய்கிறார். (சங்கீதம் 2:8, 9; ஏசாயா 9:6, 7; தானியேல் 2:44; 7:13, 14) இதுதான் யெகோவாவின் அரசுரிமையை நியாயநிரூபணம் செய்து மனிதவர்க்கத்தைப் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் பரலோகத்திலுள்ள அரசாங்கமாக, பரலோக ராஜ்யமாக இருக்கிறது.—மத்தேயு 6:9, 10.
மனிதவர்க்கத்திலிருந்து மீட்கப்பட்ட 1,44,000 பேரும் உடன்அரசர்களாக இயேசுவுடன் தொடர்புடையவர்களாவர். (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4) கிறிஸ்துவுடன் மேசியானிய ராஜ்யத்தில் “உன்னதமானவருடைய பரிசுத்தவான்களா”க ஆட்சி செய்யும்படி ஆதாமின் அபூரண மனித குடும்பத்திலிருந்து சிலரைக் கடவுள் தெரிந்துகொண்டிருக்கிறார். (தானியேல் 7:27; 1 கொரிந்தியர் 6:2; வெளிப்படுத்துதல் 3:21; 20:6) இந்த ஆண்களும் பெண்களும், அவர்கள் ‘மறுபடியும் பிறப்பார்கள்’ என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைக்கிறார்கள். (யோவான் 3:5-7) எப்படி மற்றும் ஏன் இந்தப் பிறப்பு சம்பவிக்கிறது?
இந்தத் தனிநபர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவோராக தண்ணீரால் முழுக்காட்டப்பட்டவர்கள். இயேசுவின் மீட்பின் கிரயபலியின் அடிப்படையில், கடவுள் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களை நீதிமான்களென அறிவித்து, ஆவிக்குரிய குமாரர்களாக அவர்களை சுவிகாரம் செய்துள்ளார். (ரோமர் 3:23-26; 5:12-21; கொலோசெயர் 1:13, 14) அப்படிப்பட்டவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார்: “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே [ஆவிதானே, NW] நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார் [கொடுக்கிறது, NW]. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.”—ரோமர் 8:15-17.
கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக, இவர்கள் ஒரு புதிய பிறப்பை அல்லது வாழ்க்கையில் ஒரு புதிய ஆரம்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் இயேசுவோடு பரலோக சுதந்தரிப்பைப் பகிர்ந்துகொள்வார்கள் என்ற ஒரு திடநம்பிக்கையில் பலனடைந்திருக்கிறது. (லூக்கா 12:32; 22:28-30; 1 பேதுரு 1:23) அப்போஸ்தலன் பேதுரு மறுபிறப்பை இவ்வாறு விளக்கினார்: “அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது [கடவுளின்] மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் . . . அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” (1 பேதுரு 1:4, 5) இயேசுவை உயிர்த்தெழுப்பியதைப்போலவே அவர்களையும் உயிர்த்தெழுப்புவதன் காரணமாக, அத்தகைய நபர்கள் பரலோகத்தில் புதிய வாழ்க்கைக்குச் செல்வது சாத்தியமாகிறது.—1 கொரிந்தியர் 15:42-49.
பூமியைக்குறித்து என்ன?
முடிவில் கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதவர்க்கமுமே பூமியிலிருந்து பரலோகத்திற்குச் செல்லும்படியாக மறுபடியும் பிறப்பார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அவ்விதமான தப்பெண்ணம், “உடலிலுள்ள உயிர் ஒரு குறுகிய கால, பெரும்பாலும் பரிதாபகரமான சம்பவமாகவே [இருக்கிறது]” என்று கருதிய ஃபீலோ போன்ற தத்துவ அறிஞர்கள் கொண்டிருந்தவற்றிற்கு ஒத்ததாயிருந்தது. ஆனால் யெகோவா தேவனின் ஆதி பூமிக்குரிய சிருஷ்டிப்பில் எவ்வித தவறுமிருக்கவில்லை.—ஆதியாகமம் 1:31; உபாகமம் 32:4.
மனித வாழ்க்கை குறுகினதாயும் வருத்தம் தருவதாயும் இருக்கும்படியாக ஒருபோதும் திட்டமிடப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும் அவரோடு பரலோகத்தில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவை செய்வதற்காக மறுபடியும் பிறந்திருப்போரும் சாத்தானுடைய கலகத்தின் எல்லா தீய விளைவுகளையும் நீக்கிவிடுவர். (எபேசியர் 1:8-10) வாக்குப்பண்ணப்பட்ட ‘ஆபிரகாமின் வித்தாகிய,’ அவர்கள் மூலமாக “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (கலாத்தியர் 3:29; ஆதியாகமம் 22:18) இது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு பரதீஸிய பூமியில் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும்; இன்று நிலவும் குறுகிய, வருத்தம்நிறைந்த வாழ்க்கையைவிட அது அதிக வித்தியாசப்பட்டதாக இருக்கும்.—சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 21:1-4.
யார் பயனடைவார்கள்?
இயேசுவின் மீட்பின் கிரயபலியில் விசுவாசம் வைக்கும் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்டவர்களும் மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான கடவுளுடைய ஏற்பாட்டில் பயனடைபவர்களில் உட்படுவர். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) அதில் பெரும்பான்மையானோர் கடவுளையும் கிறிஸ்துவையும்பற்றி ஒருபோதும் கற்றிராதவர்களாதலால் இயேசுவில் விசுவாசம் காட்ட முடியாதவர்களாய் இருந்திருக்கின்றனர். இயேசுவின் மரணம் பரலோக வாழ்க்கைக்கு வழியைத் திறந்து வைப்பதற்கு முன்னர் மரித்த முழுக்காட்டுபவனாகிய யோவானைப் போன்ற விசுவாசமுள்ளவர்களும்கூட உயிர்த்தெழுப்பப்படுபவர்களில் அடங்குவர். (மத்தேயு 11:11) இவர்களைத்தவிர, ‘சகல ஜாதிகளிலுமிருந்து தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய [இயேசு கிறிஸ்து] இரத்தத்தில் தோய்த்து வெளுத்த திரள்கூட்டத்தாரும்,’ உள்ளனர். இயேசுவின் மறுபடியும் பிறந்த “சகோதரர்கள்” இப்போது முன்னின்று செய்யும் ராஜ்ய பிரசங்க வேலைக்கு அவர்கள் சாதகமாக பிரதிபலித்து, ஒரு சுத்திகரிக்கப்பட்ட பூமியில் வாழ்வதற்காக கடவுளுடைய யுத்தமாகிய அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பார்கள். (வெளிப்படுத்துதல் 7:9-14; 16:14-16; மத்தேயு 24:14; 25:31-46) ஆகவே, கடவுளுடைய ஏற்பாட்டில், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் அரசாளுவதற்காக மறுபடியும் பிறக்காவிட்டாலும்கூட, லட்சக்கணக்கானோர் பாதுகாக்கப்படுவார்கள்.—1 யோவான் 2:1, 2.
ஒரு பரதீஸிய பூமியில் ஜீவனைச் சுதந்தரிப்பவர்களில் நீங்களும் ஒருவராய் இருப்பீர்களா? நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பலியின்மேல் விசுவாசம் வைத்து உண்மையான கிறிஸ்தவ சபையோடு சுறுசுறுப்பாக கூட்டுறவு கொண்டீர்களானால் இருக்கலாம். அது தத்துவங்களால் கறைப்படுத்தப்படவில்லை, ஆனால், “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாய்” இருந்திருக்கிறது. (1 தீமோத்தேயு 3:15; ஒத்துப்பார்க்கவும் யோவான் 4:24; 8:31, 32.) அப்போது, பரலோகத்தில் கடவுளுடைய மறுபடியும் பிறந்த குமாரர் ஆட்சிசெய்யும்போது, கடவுளுடைய எல்லா பூமிக்குரிய பிள்ளைகளும் ஓர் அதிசயிக்கத்தக்க பரதீஸிய பூமியில் பரிபூரணத்திற்குத் திரும்ப கொண்டுவரப்படும் மகத்தான எதிர்காலத்தை நீங்கள் எதிர்நோக்கி இருக்கலாம். எனவே, நித்திய ஆசீர்வாதங்களாலான அந்தப் புதிய உலகில் வாழ்வதற்கான வாய்ப்பைப் பற்றிக்கொள்ளுங்கள்.—ரோமர் 8:19-21; 2 பேதுரு 3:13.
[பக்கம் 6-ன் படம்]
பரலோகத்தில் வாழ்க்கை அல்லது எரிநரகத்தில் நித்திய வாதனை என்ற தெரிவு ஆதாமுக்கு ஒருபோதும் கொடுக்கப்படவில்லை