கடவுளின் வார்த்தையை விலைகூறித் திரிபவர்களாக இல்லாமல்
“நாங்கள் எங்கள் ஊழியத்தைப் பணத்திற்காக விற்றுக்கொண்டிருந்தோம்.” இந்த வார்த்தைகளையே ஒரு முன்னாள் “தொலைபேசி ஜெப ஊழியக்காரர்,” 1991-ல் நடந்த அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரசங்கிகளின் ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில் பேட்டிக்காணப்பட்டபோது சொன்னார்.
இந்த நிகழ்ச்சி, ஐக்கிய மாகாணங்களில் தொலைக்காட்சி பிரசங்கவேலையில் ஈடுபட்டுள்ள மூன்று சமயக்குருமார் தொகுதிகளின் மேல் கவனத்தைச் செலுத்தியது. இந்த மூன்று தொகுதிகள் மட்டும், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான டாலர்களை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது, என்று இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. ஓர் “ஊழியம்,” “நன்கொடைகளைக் குவித்திருக்கும் களஞ்சியம்,” என அழைக்கப்பட்டது. எண்ணிலடங்காத கள்ளத்தனங்களில் இவை ஈடுபட்டிருக்கின்றன. இது உங்களை அதிர்ச்சியடையச் செய்கிறதா?
மதம் சோதிக்கப்படுகிறது
தொலைக்காட்சி பிரசங்கிப்பு மட்டுமல்ல, ஆர்த்தடெக்ஸ் மதங்களும், இரண்டுங்கெட்டான் மதங்களும்கூட, அரசாங்கங்களாலும், தனியார் துப்பறியும் நிறுவனங்களாலும் பொதுவாக மக்களாலும் ஒரு தீவிரமான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சில நிலைமைகளில், சர்ச்சுகள் பங்குமுதல் சான்றிதழ் உரிமைகளிலும் மதம் மூலமாக பணஉதவிசெய்யப்படும் அரசியல் அக்கறைகளிலும் ஈடுபடுகின்றன. பெரிய ஊதியம்பெறும் மதகுருக்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும், நேர்மைத்தன்மையைப் பற்றிய கேள்விக்குறிகளை எழுப்பியிருக்கின்றன.
ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றிய மிகச்சிறந்த சொல்விளக்கத்தின்படி, சில மதத்தலைவர்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறார்கள்? அவர் எழுதினார்: “கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.” (2 கொரிந்தியர் 2:17, கத். பை.) இந்த சொல்விளக்கம் யாருக்குச் சரியாக பொருந்துகிறது?
இந்த விஷயங்களை மதிப்பிடுவதற்கு, பவுலின் மற்றும் அவருடைய சகாக்களின் கிறிஸ்தவ ஊழியத்திற்கு எவ்வாறு பணஉதவியளிக்கப்பட்டது என்பதைப் பற்றி சற்று அதிக ஆழமாக நாம் ஆராய்ந்துபார்க்கலாம். இது அவருடைய நாளில் இருந்த மற்றவர்களுடையதிலிருந்து என்ன வழியில் வித்தியாசமாக இருந்தது?
முதல் நூற்றாண்டின் பயணப் பிரசங்கிகள்
ஊர்-விட்டு-ஊர் போகும் ஒரு பிரசங்கியாக இருப்பதில் பவுல் ஒரு தனிப்பட்டவராக இல்லை. அந்த நாளில், மதம், தத்துவம் சார்ந்த தங்களுடைய கருத்துக்களைப் பரப்புவதற்குப் பலர் இடம் விட்டு இடம் சென்றனர். பைபிள் எழுத்தாளராகிய லூக்கா, “ஊர்களில் திரிந்து பேயோட்டும் யூதர் சில”ரைப்பற்றி பேசுகிறார். (அப்போஸ்தலர் 19:13, கத். பை.) பரிசேயர்களைக் கண்டனம்செய்தபோது இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்.” (மத்தேயு 23:15) இயேசுவும்கூட பயணம் செய்து பிரசங்கிப்பவராக இருந்தார். யூதேயாவிலும் சமாரியாவிலும் மட்டும் அல்ல, “பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிப்பதில் அவரைப் பின்பற்றும்படி அவர் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் சீஷர்களுக்கும், பயிற்சி கொடுத்தார்.—அப்போஸ்தலர் 1:8.
அவர்களுடைய பயணங்களில், இயேசுவைப் பின்பற்றினவர்கள் யூதரல்லாத பிரசங்கிகளையும் சந்தித்தனர். அத்தேனே பட்டணத்தில், பவுல் எப்பிக்கூரரோடும் ஸ்தோயிக்கரோடும் வாதாடினார். (அப்போஸ்தலர் 17:18) ரோமப்பேரரசு முழுவதும் சைனிக்ஸ் பிரிவினர், பொதுச் சொற்பொழிவுகளை நடத்தி மக்களை வசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுதந்திர மனிதனுக்கு இருக்கும் மத மற்றும் சமுதாய சம உரிமையை, பெண்களுக்கும் அடிமைகளுக்கும் தரும் வாக்குறுதிகளோடு, ஐசஸ், செராப்பஸ் போன்றவற்றின் பக்தர்கள் தங்களுடைய செல்வாக்கை விஸ்தரித்திருக்கிறார்கள். பண்டைய கிரீஸ்-ரோம் நாடுகளின் அநேக விநோதமான மதங்களுக்கு ஓர் ஆரம்பத்தை, கீழ்த்திசை நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க வழிபாட்டுமுறைகள் கொடுத்தன. பாவத்திலிருந்து விடுதலையும், தெய்வீக இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையும், இவர்களை, டிமீட்டர், டையனிசஸ், சிபலி போன்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றுவதற்குக் கவர்ந்து இழுத்தது.
செலவுகள் எவ்வாறு கையாளப்பட்டன?
ஆனாலும், பயணம் செய்வது அதிக செலவை உட்படுத்தியது. சரக்குக் கூலி, சுங்க வரி, கப்பல் பயணக் கட்டணம் ஆகியவற்றோடு, பயணப் பிரசங்கிகளுக்கு, உணவு, தங்கும் இடம், எரிபொருள், துணிமணிகள், உடல்நல பராமரிப்பு ஆகியவையும் தேவை. பிரசங்கிகள், போதகர்கள், தத்துவ ஞானிகள், இறை உணர்வாளர்கள் ஆகியோர் தங்களுடைய தேவைகளை ஐந்து முக்கியமான வழிகளில் பூர்த்திசெய்து கொண்டார்கள். அவர்கள், (1) கூலிக்குப் போதித்தார்கள்; (2) சாதாரண வேலைகளையும் தொழில்களையும் செய்தார்கள்; (3) உபசரிப்புகளையும், மனதார தரப்பட்ட நன்கொடைகளையும் ஏற்றுக்கொண்டார்கள்; (4) ஆசிரியர்கள் போன்ற பணக்கார ஆதரவாளர்களோடு கூட்டுறவுக்கொண்டார்கள்; (5) பிச்சையெடுத்தார்கள். மறுப்புகளுக்கு தன்னைப் பழக்குவிப்பதற்காக, சைனிக் ஆதரவாளரான மிகப்பிரபலமான பிச்சைக்காரன், டையாயீன்ஸ் என்பவர் உயிரில்லாத சிலைகளுக்கு முன்பாகவும்கூட பிச்சை கேட்டார்.
கிறிஸ்தவ ஊழியர்கள் என உரிமைபாராட்டிக்கொண்டும், அதே சமயத்தில் சில கிரேக்க தத்துவ ஞானிகள் போல, பணக்காரர்களிடம் சகவாசம் வைத்துக்கொண்டு ஏழைகளைச் சுரண்டிக் கொண்டும் இருந்த சில பிரசங்கிகளைப் பவுல் அறிந்திருந்தார். அவர் கொரிந்து சபையைப் பின்வருமாறு சொல்லி கடிந்துகொண்டார்: “உங்களை யாராவது . . . சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால் . . . நீங்கள் பொறுத்துக்கொள்கிறீர்கள்.” (2 கொரிந்தியர் 11:20, கத். பை.) இயேசு கிறிஸ்து ஒருபோதும் எதையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை, பவுலும் அவருடைய உடன் வேலையாட்களும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், கொரிந்துவின் பேராசையுள்ள பிரசங்கிகளோ “போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள்,” சாத்தானின் ஊழியக்காரராயிருந்தனர்.—2 கொரிந்தியர் 11:13-15, கத். பை.
தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கொடுத்தக் கட்டளைகள், கூலிக்குப் போதிப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்,” என்று அவர் புத்திமதி சொன்னார். (மத்தேயு 10:8) பிச்சையெடுப்பது பொதுவாக அங்கு செய்யப்பட்டு வந்தாலும், அந்த நாட்களில் அது கீழ்த்தரமாக கருதப்பட்டது. இயேசு, தன்னுடைய உவமைகளில் ஒன்றில், ஒரு கண்காணிப்பாளன் “பிச்சையெடுக்கவோ [எனக்கு] வெட்கமாய் இருக்கிறது,” என்று சொல்வதாக வர்ணிக்கிறார். (லூக்காஸ் 16:3, கத். பை.) எனவே தான், பைபிளில் எந்த இடத்திலும், இயேசுவை விசுவாசத்தோடு பின்பற்றினவர்கள் பணத்தையோ அல்லது பொருட்களையோ கெஞ்சிப் பெற்றுக்கொண்டதாக பதிவு இல்லை. அவர்கள் பின்வரும் இந்த நியமத்தைப் பின்பற்றினார்கள்: “ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடா[து].”—2 தெசலோனிக்கேயர் 3:10.
தேவைகளை அவர்கள் இரண்டு விதங்களில் சமாளிக்கும்படி, தம்முடைய சீஷர்களை இயேசு உற்சாகப்படுத்தினார். முதலாவது, பவுல் சொல்கிறப் பிரகாரம், “நற்செய்தியாலேயே பிழைப்பு.” எப்படி? விருப்பத்தோடு கொடுக்கப்படுகிற உபசரிப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம். (1 கொரிந்தியர் 9:14, கத். பை.; லூக்கா 10:7) இரண்டாவது, தங்களுக்குத் தாங்களே பொருளுதவி செய்வதன்மூலம்.—லூக்கா 22:36.
பவுல் பின்பற்றின நியமங்கள்
முன்கூறப்பட்ட நியமங்களைப் பவுல் எப்படிப் பின்பற்றினார்? சரியாகவே, இந்த அப்போஸ்தலரின் இரண்டாவது மிஷனரி பயணத்தைப் பற்றி, லூக்கா எழுதினார்: “துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம்.” பயணம், உணவு, தங்கும் வசதி அனைத்தும் அவர்களுடைய சொந்தச் செலவாக இருந்தது.—அப்போஸ்தலர் 16:11, 12.
இதன் பயனாக, லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ “பவுல் சொல்லியவைகளை” ஒத்துக்கொண்டாள். “அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” (அப்போஸ்தலர் 16:13-15) பிலிப்புவில் உள்ள உடன் விசுவாசிகளுக்கு பவுல் பின்வருமாறு எழுதுவதற்கு, ஒருவேளை மிகச்சிறிய அளவாவது லீதியாவின் உபசரிப்பு காரணமாக இருக்கவேண்டும்: “சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, . . . நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.”—பிலிப்பியர் 1:3-5.
லூக்கா, இந்தப் பயணம் செய்யும் கிறிஸ்தவ ஊழியர்களுக்கு, பலர் கொடுக்கும் வரவேற்புகளைப் பற்றி பல இடங்களில் எடுத்துரைக்கிறார். (அப்போஸ்தலர் 16:33, 34; 17:7; 21:7, 8, 16; 28:2, 7, 10, 14) ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட தன்னுடைய கடிதங்களில் பவுல், உபசரிப்பையும் அன்பளிப்பையும் ஏற்றுக்கொண்டு, அதற்கு நன்றிகளைத் தருகிறார். (ரோமர் 16:23; 2 கொரிந்தியர் 11:9; கலாத்தியர் 4:13, 14; பிலிப்பியர் 4:15-18) எனினும் அவரோ, அவருடைய கூட்டாளிகளோ, யாராவது அவர்களுக்கு அன்பளிப்பு அல்லது பண உதவி தர வேண்டும் என்று மறைமுகமாகவும்கூட அவர்கள் குறிப்பிடவில்லை. தங்கள் மத்தியில் உள்ள பிரயாணக் கண்காணிகளின் மத்தியில் இன்னும் இதே சிறந்த மனநிலையே இருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் சொல்ல முடியும்.
உபசரிப்பைச் சார்ந்திராதவராக
உபசரிப்பைச் சார்ந்தவராக பவுல் இல்லை. கடினமான வேலையையும் அதிக மணிநேரங்களையும் உட்படுத்தி, அதே சமயத்தில் மிகக்குறைவான கூலியையே தரும் ஒரு தொழிலை அவர் கற்றிருந்தார். கொரிந்துவிற்கு இந்த அப்போஸ்தலர் ஒரு மிஷனரியாக வந்தபோது, “ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான்.”—அப்போஸ்தலர் 18:1-3.
பின்பு, எபேசுவிலும், பவுல் மிகக் கடினமான வேலைபார்ப்பவராக இருந்தார். (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 20:34; 1 கொரிந்தியர் 4:11, 12.) கீலிக்கியம், இது அவருடைய சொந்த நகரப்பகுதியிலிருந்து வந்த கடினமான ஓர் ஆட்டுக்கடா ரோமம், இதைப் பயன்படுத்துவதில் அவர் மிகச்சிறந்த திறமைசாலியாக இருந்திருக்கலாம். ஒரு முக்காலியில் அவர் உட்கார்ந்துகொண்டு, வேலைசெய்யும் மேசையின்மீது குனிந்தபடியாக நடுஇரவு வரை வெட்டிக்கொண்டும் தைத்துக்கொண்டும் இருப்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். பட்டறையின் சத்தம் ஓரளவிற்குக் குறைவாக இருந்ததால், கடுமையான வேலையின் மத்தியிலும் பேசுவதற்கு அவ்வளவு கடினமாக இருக்காது. பட்டறையின் முதலாளி, அவருடைய வேலையாட்கள், அடிமைகள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பைப் பவுல் பெற்றிருந்திருப்பார்.—1 தெசலோனிக்கேயர் 2:9 ஒப்பிட்டுப் பாருங்கள்.
கடவுளுடைய வார்த்தையை எந்த வகையிலாவது பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துவதாக கருதப்படவோ அல்லது தன்னுடைய ஊழியம் தொழிலாக மாற்றப்படும்படியோ அவர் அனுமதிக்கவில்லை. அவர் தெசலோனிக்கேயர்களிடம், “இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.”—2 தெசலோனிக்கேயர் 3:7-9.
இருபதாம் நூற்றாண்டில் பின்பற்றுபவர்கள்
இந்த நாள்வரையாக யெகோவாவின் சாட்சிகள் பவுலின் நல்ல மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். தங்களுடைய ஊழியத்திற்காக மூப்பர்களும், உதவிஊழியர்களும் சபைகளிடமிருந்து சம்பளமோ அல்லது உதவி ஊதியமோகூட வாங்குவதில்லை. இதற்குப் பதிலாக இவர்கள் மற்றவர்களைப் போலவே வேலைக்குப் போவதன் மூலம் தங்கள்தங்கள் குடும்பங்களைக் கவனித்துக்கொள்கிறார்கள். முழுநேர பயனியர் ஊழியர்களும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிறார்கள், பலர் வெறுமனே அடிப்படைத் தேவைகளை மட்டும் சமாளிப்பதற்காக வேலைசெய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் சில சாட்சிகள், நற்செய்தி இதுவரை எப்போதாவது பிரசங்கிக்கப்பட்ட அதிதூர இடங்களுக்குச் சென்று பிரசங்கம் செய்ய தங்களுடைய சொந்தச் செலவிலேயே பயணம்செய்கிறார்கள். அங்குள்ள உள்ளூர் குடும்பங்கள் இவர்களை, சாப்பிடவோ அல்லது உடன்தங்குவதற்கோ வரவேற்கும்போது, அதை இவர்கள் போற்றுகிறார்கள், ஆனால் இப்படிப்பட்ட உபசரிப்பைத் துர்ப்பிரயோகம் செய்வதில்லை.
யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்படும் பிரசங்கித்தலும் கற்பித்தலும் மனமுவந்து இலவசமாக செய்யப்படுகிறது, தங்களுடைய ஊழியத்திற்காக ஒருபோதும் அவர்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. எனினும், அவர்களுடைய உலகளாவிய பிரசங்க வேலைக்காக, அளவான நன்கொடைகளை ஏற்றுக்கொண்டு, அதை உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அதே நோக்கத்திற்காக அனுப்பிவைக்கிறார்கள். (மத்தேயு 24:14) சாட்சிகளின் ஊழியம் எவ்விதத்திலும் வியாபாரநோக்கம் இல்லாததாக இருக்கிறது. பவுல் சொன்னதுபோல, இவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு உண்மையாகவே சொல்ல முடியும்: “கடவுளின் நற்செய்தியை இலவசமாய் உங்களுக்கு நான் சந்தோஷத்தோடே பிரசங்கித்தேன்.” (2 கொரிந்தியர் 11:7, NW) யெகோவாவின் சாட்சிகள், ‘கடவுளின் வார்த்தையை விலைகூறித் திரிபவர்க’ளல்லவே.
[பக்கம் 27-ன் பெட்டி]
சிலர் எப்படி ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு நன்கொடை கொடுக்கிறார்கள்
◻ உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்: அநேகர் “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14,” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுவதற்கு ஒரு தொகையை ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள் அல்லது அதை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கிவைத்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகைகளை அருகாமையிலுள்ள உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கின்றன.
◻ வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் நேரடியாக உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டி ஆப் இண்டியா, H-58, ஓல்டு கண்டாலா ரோடு, லோனாவாலா 410 401, மகாராஷ்டிரா (Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah.) அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு அனுப்பலாம். நகை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக கொடுக்கப்படலாம். இவை எவ்வித நிபந்தனையும் இல்லாத ஒரு நன்கொடை என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான ஒரு கடிதம் இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.
◻ நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பொறுப்பாண்மையில் வைத்துக்கொள்ளும்படியாகப் பணம் கொடுக்கப்படலாம். இந்தப் பணம் சொந்தத் தேவை ஏற்பட்டால் நன்கொடையாளருக்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இது கொடுக்கப்படலாம்.
◻ காப்புறுதி (இன்சூரன்ஸ்): ஓர் ஆயுள்–காப்புறுதி திட்டத்தின் அல்லது ஓய்வு/ஊதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸையிட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் யாவற்றையும் குறித்துச் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
◻ வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத் தொகை சான்றிதழ்கள், அல்லது தனிநபரின் ஓய்வு ஊதிய கணக்குகள், உள்ளூர் வங்கி தேவைகளுக்கேற்ப சங்கத்தின் பொறுப்பாண்மையில் வைக்கப்படலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சங்கம் இதைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்யப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் குறித்துச் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
◻ பங்குகளும் கடன் பத்திரங்களும்: பங்குகளும் கடன் பத்திரங்களும் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாகவோ அல்லது வருமானம் தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும் என்ற ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம்.
◻ நிலம், கட்டிட மனைகள்: விற்கப்படக்கூடிய நிலம், கட்டிட மனைகள் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, அவனுடைய அல்லது அவளுடைய வாழ்நாளின் போது தொடர்ந்து அவ்விடத்தை வைத்துக்கொண்டிருக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலம், கட்டிட மனைகளையும் சங்கத்துக்கு மாற்றுவதற்கு முன்பாக ஒருவர் சங்கத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
◻ உயில்களும் நம்பிக்கை பொறுப்புறுதிகளும்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு ஒப்படைக்கப்படலாம் அல்லது ஒரு பொறுப்பாண்மை ஏற்பாட்டில் அனுபவ பாத்தியத்தை உடையதாக பெயரிடப்படலாம். மத அமைப்புக்கு நன்மை தரும் ஒரு பொறுப்பாண்மை ஒருசில வரி சலுகைகளைத் தரலாம். உயில் அல்லது பொறுப்பாண்மை ஒப்பந்தத்தின் நகல் ஒன்று சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதன் பேரில் கூடுதலான தகவல்களுக்கு உவாட்ச் டவர் பைபிள் சொஸையிட்டிக்கு (Watch Tower Bible and Tract Society of India, H–58 Old Khandala Road. Lonavla 410 401, Mah.) அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்போருக்கு எழுதிக்கேட்கவும்.
[பக்கம் 29-ன் பெட்டி]
அவள் உதவிசெய்ய விரும்பினாள்
தினொரு வயது டிஃபினீ, அ.ஐ.மா., லூசியானா, பாடன் ரோஜ்-ல் உள்ள ஒரு பள்ளி மாணவி. யெகோவாவின் இந்த இளம் சாட்சி, “அமெரிக்காவில் படிப்பு” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையைச் சமீபத்தில் தயாரித்திருந்தாள். இதன்விளைவாக, சாட்சிகளாக இருக்கும் இவளுடைய பெற்றோர்கள், அந்தப் பள்ளி முதல்வரிடமிருந்து இந்தக் கடிதத்தைப் பெற்றனர்:
“அமெரிக்காவின் கல்வி வாரத்தில், ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு மிகச்சிறந்த கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, அது உள்தொலைபேசியில் வாசிக்கப்படுகிறது. இன்று காலை இந்த டிஃபினீயின் கட்டுரையை வாசிக்கும் மகிழ்ச்சியை நான் பெற்றிருந்தேன். அவள் உண்மையிலேயே மிகசிறந்த ஓர் இளம் பெண்ணாக இருக்கிறாள். அவள், சமநிலை, தன்னம்பிக்கை, திறமை, தாராள மனம் ஆகிய குணங்களை உடையவள். இப்படிப்பட்ட குணங்களை உடைய ஆறாம் வகுப்பு மாணவியை நான் கண்டதேயில்லை. எங்கள் பள்ளிக்கு ஒரு சொத்தாக டிஃபினீ இருக்கிறாள்.”
கட்டுரைப் போட்டியில் டிஃபினீ முதல் பரிசைப் பெற்றாள். இதற்குப் பின்பாக, உவாட்ச் டவர் சொஸையிட்டிக்கு எழுதி, இவ்வாறு தெரியப்படுத்தினாள்: “நான் கட்டுரை போட்டியில் வெற்றியடையவதற்குக் காரணம் பெரும்பாலும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற பிரசுரமாகத் தான் இருக்கவேண்டும். . . . படிப்பு சம்பந்தமான அதிகாரங்களை நான் உபயோகித்தேன். . . . இந்தப் பயனுள்ள, ஆர்வத்தைத் தூண்டும் புத்தகத்தைப் பிரசுரித்ததற்காக மிக மிக நன்றி. வெற்றிதந்த கட்டுரைக்காக, நான் ஏழு டாலரைப் பெற்றேன். இந்த 7 டாலருடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக 13-ஐச் சேர்த்து மொத்தமாக 20 டாலர்களை உலகளாவிய பிரசங்கவேலைக்காக நன்கொடையாக கொடுக்கிறேன். . . . நான் பெரியவளாகும்போது, பெத்தேல் சேவைக்கு என்னை அர்ப்பணிக்கும் நம்பிக்கையோடும் இருக்கிறேன்.”
[பக்கம் 26-ன் படம்]
சில சமயங்களில், பவுல் கூடாரத் தொழில் செய்வதன்மூலம் தன் வாழ்க்கைத்தேவைகளைக் கவனித்துக்கொண்டார்