நம்முடைய மகத்தான சிருஷ்டிகரோடு மேய்த்தல்
“கர்த்தர் [யெகோவா, NW] என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.”—சங்கீதம் 23:1, 3.
1. என்ன அன்பான புத்துணர்ச்சியை யெகோவா அருளிச்செய்கிறார்?
“தாவீதின் சங்கீத”மாகிய 23-ம் சங்கீதம் சோர்ந்துபோன அநேக ஆத்துமாக்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொண்டு வந்திருக்கிறது. வசனம் 6-ல் வெளிப்படுத்தப்பட்டுள்ள நம்பிக்கையைக் கொண்டிருக்க அது அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது: “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” இப்பொழுது பூமியிலுள்ள எல்லா தேசங்களிலுமிருந்து கூட்டிச்சேர்க்கப்பட்டு வரும் அவருடைய மக்களோடு ஐக்கியப்பட்டவர்களாய் யெகோவாவின் வணக்கத்துக்குரிய வீட்டில் எல்லா காலத்துக்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே உங்கள் ஆசையாக இருக்கிறதா? “உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும் கண்காணியுமான,” நம்முடைய மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் அந்த இலக்கை அடைய உங்களுக்கு உதவிசெய்வார்.—1 பேதுரு 2:25.
2, 3. (எ) யெகோவா எவ்விதமாக தம்முடைய மக்களை அன்பாக மேய்க்கிறார்? (பி) யெகோவாவின் “மந்தை” எவ்விதமாக குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்திருக்கிறது?
2 ‘புதிய வானங்கள் மற்றும் புதிய பூமி’யின் சிருஷ்டிகர், “தேவனுடைய வீடா”கிய கிறிஸ்தவ சபையின் அமைப்பாளராகவும் உன்னத கண்காணியாகவும்கூட இருக்கிறார். (2 பேதுரு 3:13; 1 தீமோத்தேயு 3:15) ஏசாயா 40:10, 11 தெளிவாக குறிப்பிடும் விதமாகவே தம்முடைய மக்களை மேய்ப்பதில் அவர் ஆழ்ந்த அக்கறையுள்ளவராக இருக்கிறார்: “இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது. மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”
3 விரிவுபடுத்தப்பட்ட ஒரு கருத்தில் இந்த “மந்தை”யில் கிறிஸ்தவ சத்தியத்தில் நீண்ட காலமாக நடந்து வந்திருப்பவர்களும், ஆப்பிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முழுக்காட்டுதல் பெற்றுவருகிறவர்களைப் போன்ற மிக சமீப காலங்களில் கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கும் “ஆட்டுக்குட்டி”களும் அடங்குவர். யெகோவாவின் பலத்த, பாதுகாப்பான புயம் அவர்களை அவருடைய மடியிலே கூட்டிச்சேர்க்கிறது. அவர்கள் வழிதவறிப்போன ஆடுகளைப் போல இருந்தபோதிலும், இப்பொழுது அவர்கள் தங்களுடைய மிகவும் பிரியத்துக்குரிய தேவனும் மேய்ப்பருமானவரோடு நெருக்கமான ஓர் உறவுக்குள் வந்திருக்கிறார்கள்.
யெகோவாவின் இணை மேய்ப்பர்
4, 5. (எ) “நல்ல மேய்ப்பன்” யார், தீர்க்கதரிசனம் எவ்விதமாக அவரைச் சுட்டிக்காட்டியது? (பி) என்ன பிரிக்கும் வேலையை இயேசு கண்காணித்து வருகிறார், என்ன குறிப்பிடத்தக்க விளைவோடு?
4 பரலோகத்தில் தம்முடைய தகப்பனின் வலதுபாரிசத்தில் சேவிக்கிறவராய், “நல்ல மேய்ப்பன்,” இயேசு கிறிஸ்துவும்கூட ஆடுகளுக்கு இரக்கமுள்ள கவனத்தைக் கொடுக்கிறார். அவர் முதலாவதாக அபிஷேகம்பண்ணப்பட்ட “சிறு மந்தை” நன்மையடையும்படியும், பின்னர், இன்று, “வேறே ஆடு”களின் திரள் கூட்டத்தாருக்காகவும் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார். (லூக்கா 12:32; யோவான் 10:14, 16) பெரிய மேய்ப்பராகிய யெகோவா தேவன் இந்த எல்லா ஆடுகளிடமும் பின்வருமாறு சொல்கிறார்: “இதோ, நான், நானே . . . ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.”—எசேக்கியேல் 34:20-24.
5 “என் தாசனாகிய தாவீது,” என்ற பதவிப்பெயர் தாவீதின் சிங்காசனத்தை சுதந்தரித்துக்கொள்ளும் ‘வித்தாகிய’ கிறிஸ்து இயேசுவை தீர்க்கதரிசனமாக சுட்டிக்காட்டுகிறது. (சங்கீதம் 89:35, 36) தேசங்களை நியாயந்தீர்க்கும் இந்த நாளில், யெகோவாவின் இணை மேய்ப்பரும் ராஜாவுமாகிய தாவீதின் குமாரனாகிய கிறிஸ்து இயேசு உண்மையில் “வெள்ளாடு”களாக இருந்துகொண்டு ஆனால் “செம்மறியாடு”களாக இருப்பதாக உரிமைப்பாராட்டிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து மனிதவர்க்கத்தின் “ஆடுகளை” தொடர்ந்து பிரித்துக்கொண்டு வருகிறார். (மத்தேயு 25:31-33) இந்த “ஒரே மேய்ப்பன்,” ஆடுகளை விசாரிக்கவும்கூட, [போஷிக்கவும்கூட, NW] எழுப்பப்படுகிறார். இந்தத் தீர்க்கதரிசனத்தின் என்னே ஒரு மகத்தான நிறைவேற்றத்தை நாம் இன்று பார்க்கிறோம்! புதிய உலக ஒழுங்கு மூலமாக மனிதவர்க்கத்தை ஐக்கியப்படுத்துவது குறித்து அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரே மேய்ப்பன், எல்லா தேசங்களிலும் ஆடுகளை உண்மையிலேயே ஐக்கியப்படுத்தி வருகிறார். இதை பூமியில் கடவுளுடைய அமைப்பு மாத்திரமே இதுவரை மேற்கொண்டு செய்யக்கூடிய, பலமொழிகளில் சாட்சி கொடுக்கும் திட்டத்தின் மூலமாக செய்துவருகிறார்.
6, 7. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஆடுகளுக்கு “ஏற்ற வேளையிலே போஜனம்” கிடைக்கும்படிச் செய்வதில் எவ்வாறு கவனமாயிருந்திருக்கிறது?
6 ராஜ்ய செய்தி தொடர்ந்து புதிய பிராந்தியங்களுக்குள் பரவிவருகையில், ஒரே மேய்ப்பனால் பொறுப்பளிக்கப்பட்டிருக்கும் அபிஷேகம்பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” “ஏற்றவேளையிலே போஜனத்தை” அனுப்புவதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டுவருவதைக் குறித்து கவனமாயிருக்கிறது. (மத்தேயு 24:45) உலகம் முழுவதிலுமுள்ள காவற்கோபுர சங்கத்தின் அச்சுசெய்யும் 33 கிளைகள், அதிகமான மற்றும் மேம்பட்ட பைபிள் பாட புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வேகமாக அதிகரித்துவரும் தேவையை நிறைவுசெய்வதற்காக உற்பத்தி செய்ய முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
7 யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, சுமார் 200 மொழிகளில் மொழிபெயர்ப்பின் தரத்தை முன்னேற்றுவிக்கவும், முழு உலக பிராந்தியத்துக்கும் விரிவுபடுத்த தேவைப்படும் கூடுதலான மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கவும் சாத்தியமான அனைத்தையும் செய்துவருகிறது. இது அப்போஸ்தலர் 1:8-ல் இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்த வேலையை ஆதரிப்பதாக இருக்கிறது: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, . . . பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” மேலுமாக ஏற்கெனவே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 14 மொழிகளில் அச்சுசெய்யப்பட்டுள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு இப்பொழுது இன்னும் 16 ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் கிழக்கத்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது.
“தேவசமாதான”த்தை அனுபவித்தல்
8. யெகோவா அவர்களோடு செய்திருக்கும் சமாதான உடன்படிக்கையினால் ஆடுகள் எவ்விதமாக அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றன?
8 யெகோவா தம்முடைய ஒரே மேய்ப்பனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக, தம்முடைய கொழுத்த ஆடுகளோடே ஒரு “சமாதானத்தின் உடன்படிக்கை”யைச் செய்கிறார். (ஏசாயா 54:10) இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசத்தை அப்பியாசிக்கிறவர்களாக, ஆடுகளால் வெளிச்சத்திலே நடக்கமுடிகிறது. (1 யோவான் 1:7) அவர்கள் ‘தங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை’ அனுபவித்து மகிழுகிறார்கள். (பிலிப்பியர் 4:7) எசேக்கியேல் 34:25-28 தொடர்ந்து விவரிக்கிறபடியே, யெகோவா தம்முடைய ஆடுகளை ஓர் ஆவிக்குரிய பரதீஸிற்குள், பாதுகாப்பான மகிழ்ச்சிதரும் நிலைமை, புத்துயிரளிக்கும் வளமை மற்றும் செழிப்புக்குள் மேய்த்துச் செல்கிறார். அன்புள்ள இந்த மேய்ப்பர் தம்முடைய ஆடுகளைக் குறித்து சொல்வதாவது: “நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும் போது, நான் கர்த்தர் [யெகோவா, NW] என்று அறிந்துகொள்வார்கள். இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, . . . தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.”
9. ‘நுகத்தின் கயிறுகளை அறுப்பதன்’ மூலம் கடவுளுடைய மக்களுக்கு என்ன வாய்ப்புகள் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன?
9 ஏற்கெனவே, சமீப ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் அநேக தேசங்களில், “நுகத்தின் கயிறுகள் அறுக்கப்”படுதலை அனுபவித்திருக்கிறார்கள். முன்னொருபோதுமிராத வகையில் அவர்கள் பிரசங்கிக்க சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். எல்லா தேசத்திலுமுள்ள நாம் அனைவருமே, வேலை செய்து முடிக்கப்படுவதற்காக முன்னேறிச்செல்கையில் யெகோவா அருளிச்செய்யும் பாதுகாப்பை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்வோமாக. மனிதவர்க்கம் முன்னொருபோதும் பார்த்திராத மிகப்பெரிய உபத்திரவத்தின் காலத்தை நாம் நெருங்குகையில், நமக்கு என்னே உறுதியை யெகோவா கொடுக்கிறார்!—தானியேல் 12:1; மத்தேயு 24:21, 22.
10. நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு உதவிசெய்ய யெகோவா யாரைக் கொடுத்திருக்கிறார், அப்போஸ்தலனாகிய பவுல் இவர்களில் சிலரிடம் எவ்விதமாக பேசினார்?
10 பொல்லாதவர்களுக்கு எதிரான தன் பழிவாங்கும் நாளுக்கு தயார் செய்யும் வகையில், யெகோவா மந்தையை கவனித்துக்கொள்ள நல்ல மேய்ப்பனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு உதவிசெய்ய உதவி மேய்ப்பர்களை கொடுத்திருக்கிறார். இவர்கள் வெளிப்படுத்துதல் 1:16-ல் இயேசுவின் வலது கரத்திலுள்ள முழுமையான எண்ணிக்கையான “ஏழு நட்சத்திரங்களாக” விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உதவி மேய்ப்பர்களின் பிரதிநிதி தொகுதியிடம் இவ்வாறு சொன்னார்: “உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய (சொந்த குமாரனின் இ, NW) ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) இன்று, உலகம் முழுவதிலும் 69,558 சபைகளில் பத்தாயிரக்கணக்கான உதவி மேய்ப்பர்கள் சேவை செய்துவருகிறார்கள்.
உதவி மேய்ப்பர்கள் முன்னிலைக்கு!
11. அடிக்கடி வேலைசெய்யப்படும் பிராந்தியங்களில் சில மூப்பர்கள் எவ்விதமாக வெற்றிகரமாக முன்சென்று வழிநடத்தி வந்திருக்கிறார்கள்?
11 அநேக இடங்களில் இந்தக் கடைசிநாட்களில் திரும்பத் திரும்பச் செய்யப்படும் பிராந்தியங்களில் இந்த மூப்பர்கள் முன்சென்று வழிநடத்த வேண்டியிருக்கிறது. மந்தையின் உற்சாகத்தை அவர்கள் எவ்விதமாக உயர்மட்டத்தில் வைக்கலாம்? மிகவும் பாராட்டத்தக்க விதத்தில் மேய்ப்பர்கள் செய்துவந்திருக்கிறார்கள். துணை மற்றும் ஒழுங்கான பயனியர் வேலையை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். அநேக மேய்ப்பர்கள்தானே இந்தச் சேவையில் பங்குபெற்றிருக்கிறார்கள். அவ்விதமாகச் செய்ய இயலாத பிரஸ்தாபிகளும்கூட பயனியர் ஆவியை வெளிப்படுத்தி பிராந்தியத்தில் அக்கறையின்மையை மேற்கொள்ள உதவுகின்ற சந்தோஷத்தோடே சேவிக்கிறார்கள். (சங்கீதம் 100:2; 104:33, 34; பிலிப்பியர் 4:4, 5) இவ்விதமாக அக்கிரமமும் கிட்டத்தட்ட அராஜகமும் உலகைச் சூழ்ந்து வளைத்துக்கொள்ளும்போது, அநேக செம்மறியாடுகளைப் போன்ற ஆட்கள் ராஜ்ய நம்பிக்கைக்கு விழிப்பூட்டப்பட்டு வருகிறார்கள்.—மத்தேயு 12:18, 21; ரோமர் 15:12.
12. வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியங்களில் என்ன முக்கியமான பிரச்னை இருக்கிறது, இது சில சமயங்களில் எவ்வாறு கையாளப்படுகிறது?
12 மந்தையைக் கவனித்துக்கொள்ள போதுமான தகுதிபெற்ற மேய்ப்பர்கள் அநேகமாக இல்லாதிருப்பது மற்றொரு பிரச்னையாகும். கிழக்கு ஐரோப்பாவிலிருப்பது போல வேகமான வளர்ச்சி இருக்கும் இடங்களில், நியமிக்கப்பட்ட மூப்பர்கள் எவருமே இல்லாத அநேக சபைகள் இருக்கின்றன. விருப்பார்வமுள்ள ஆடுகள் பாரத்தைச் சுமக்கிறார்கள், ஆனால் அவர்கள் மிகவும் அனுபவமில்லாதவர்களாக இருக்கிறார்கள், சபைக்குள் திரளாக வந்துகொண்டிருக்கும் ஆடுகளைப் பயிற்றுவிக்க உதவி தேவையாக இருக்கிறது. வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் பிரேஸில், மெக்ஸிகோ மற்றும் சேய்ர் போன்ற தேசங்களில் ஊழியத்தை ஒழுங்கமைக்கவும் புதியவர்களைப் பயிற்றுவிக்கவும் ஒப்பிடுகையில் இளம் சாட்சிகளையே பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது. பயனியர்கள் மிகச் சிறந்த உதவியை அளித்துவருகிறார்கள். இங்கே சகோதரிகள் புதிய சகோதரிகளைப் பயிற்றுவிக்க முடிகிறது. யெகோவா தம்முடைய ஆவியின் மூலமாக பலன்களை ஆசீர்வதிக்கிறார். அதிகரிப்பு வந்துகொண்டே இருக்கிறது.—ஏசாயா 54:2, 3.
13. (எ) அறுவடை மிகுதியாக இருப்பதன் காரணமாக, எல்லா சாட்சிகளும் எதற்காக ஜெபிக்கவேண்டும்? (பி) இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், போரின் போதும் கடவுளுடைய மக்களின் ஜெபங்கள் எவ்வாறு பதிலளிக்கப்பட்டன?
13 பிரசங்க வேலை நன்றாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசங்களில், அண்மையில் தடைகள் நீக்கப்பட்டுள்ள தேசங்களில், புதிதாக திறக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில், மத்தேயு 9:37, 38-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் இன்னும் பொருத்தமாகவே இருக்கின்றன: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.” யெகோவா இன்னும் அதிகமான மேய்ப்பர்களை எழுப்பும் பொருட்டு நாம் ஜெபிப்பதும்கூட அவசியமாகும். இதை தம்மால் செய்யமுடியும் என்பதை அவர் காண்பித்திருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், போரின் போதும் கொடூரமான அசீரியர் போன்ற சர்வாதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை நிர்மூலமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் யெகோவா அவர்களுடைய அமைப்பைத் தூய்மைப்படுத்தி அதை உண்மையிலேயே தேவாட்சிக்குட்பட்டதாக ஆக்கி தேவையான “மேய்ப்பர்களை” அளித்தார்.a இது பின்வரும் தீர்க்கதரிசனத்தோடு இணக்கமாயிருந்தது: “அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன்”—முன்சென்று நடத்துவதற்கு தேவைக்கும் மேற்பட்ட ஒப்புக்கொடுக்கப்பட்ட மூப்பர்கள்.—மீகா 5:5.
14. அமைப்பில் என்ன குறிப்பிடத்தக்க தேவை இருந்துவருகிறது, சகோதரர்களுக்கு என்ன ஊக்குவிப்பு கொடுக்கப்படுகிறது?
14 முழுக்காட்டப்பட்ட எல்லா ஆண் சாட்சிகளும் கூடுதலான சிலாக்கியங்களை நாடுவதற்கான குறிப்பிடத்தக்க தேவை இருந்துவருகிறது. (1 தீமோத்தேயு 3:1) நிலைமை அவசரமானதாய் இருக்கிறது. இந்த ஒழுங்கு முறையின் முடிவு வேகமாக வந்துகொண்டிருக்கிறது. ஆபகூக் 2:3 சொல்கிறது: “குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; . . . அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” சகோதரர்களே, முடிவு வருவதற்கு முன்பாக இந்த மேய்க்கும் வேலையில் கூடுதலான சிலாக்கியங்களுக்குத் தகுதிப்பெறும் பொருட்டு நீங்கள் தகுதிப்பெற நாடமுடியுமா?—தீத்து 1:6-9.
தேவாட்சிக்குட்பட்ட மேய்த்தல்
15. யெகோவாவின் ஜனங்கள் எவ்விதமாக தேவாட்சியாக இருக்கிறார்கள்?
15 யெகோவாவின் அமைப்பின் விஸ்தரிப்பில் முழுமையாக பங்குகொள்ளும் பொருட்டு, அவருடைய மக்கள் தேவாட்சிக்குட்பட்ட நோக்குநிலையுடையவர்களாய் இருப்பது அவசியமாகும். இதை அவர்கள் எப்படி நிறைவேற்றலாம்? சரி, “தேவாட்சி” என்ற பதத்தின் பொருள் என்ன? வெப்ஸ்டரின் புதிய இருபதாம் நூற்றாண்டு அகராதி “தேவாட்சி”க்கு ‘ஒரு தேசத்தின் மீது கடவுளின் ஆட்சி’ என்பதாக விளக்கமளிக்கிறது. இந்தக் கருத்தில்தானே யெகோவாவின் மக்களுடைய “பரிசுத்த ஜாதி” தேவாட்சியாக இருக்கிறது. (1 பேதுரு 2:9; ஏசாயா 33:22) அந்தத் தேவாட்சிக்குட்பட்ட தேசத்தின் உறுப்பினர்களாக அல்லது கூட்டாளிகளாக, மெய்க்கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தை மற்றும் அதன் நியமங்களுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக வாழ்வதும் சேவிப்பதும் அவசியமாகும்.
16. அடிப்படையில் எவ்விதமாக நாம் நம்மை தேவாட்சிக்குட்பட்டவர்களாக காண்பிக்கலாம்?
16 கிறிஸ்தவர்கள் எவ்விதமாக தேவாட்சிக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாக விளக்குகிறார். முதலாவது அவர்கள் “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள” வேண்டும் என்று அவர் சொல்கிறார். கிறிஸ்தவனின் ஆளுமையானது கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவருடைய நீதியுள்ள நியமங்களுக்கிசைவாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் யெகோவாவுக்கும் அவருடைய சட்டங்களுக்கும் உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். இது எவ்விதமாக செய்யப்படலாம் என்பதை விளக்கிய பின்பு, பவுல் இவ்வாறு துரிதப்படுத்துகிறார்: “பிரியமான பிள்ளைகளைப் போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.” (எபேசியர் 4:24–5:1) கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளைப் போல, நாம் தேவனைப் பின்பற்ற வேண்டும். அதுவே செயலில் மெய்யான தேவாட்சியாக, நாம் உண்மையில் கடவுளால் ஆளப்படுகிறோம் என்பதைக் காண்பிப்பதாக இருக்கிறது!—கொலோசெயர் 3:10, 12-14-ஐயும் பார்க்கவும்.
17, 18. (எ) கடவுளின் என்ன குறிப்பிடத்தக்க தன்மையை தேவாட்சிக்குட்பட்ட கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள்? (பி) மோசேயிடம் சொன்ன வார்த்தைகளில், யெகோவா எவ்விதமாக தம்முடைய பிரதான பண்பை வலியுறுத்தினார், ஆனால் என்ன எச்சரிப்பை அவர் கூட்டினார்?
17 நாம் பின்பற்றவேண்டிய கடவுளுடைய முக்கியமான அந்தப் பண்பு என்ன? அப்போஸ்தலனாகிய பவுல் 1 யோவான் 4:8-ல் பின்வருமாறு சொல்லும்போது பதிலளிக்கிறார்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” எட்டு வசனங்களுக்குப் பிறகு வசனம் 16-ல் அவர் இந்த இன்றியமையாத நியமத்தைத் திரும்பச் சொல்கிறார்: “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.” பெரிய மேய்ப்பராகிய யெகோவா அன்பின் உருவாகவே இருக்கிறார். தேவாட்சிக்குட்பட்ட மேய்ப்பர்கள், யெகோவாவின் ஆடுகளுக்கு ஆழ்ந்த அன்பைக் காண்பிப்பதன் மூலம் அவரை பின்பற்றுகிறார்கள்.—1 யோவான் 3:16, 18; 4:7-11 ஒப்பிடவும்.
18 பெரிய தேவாட்சியாளர், மோசேயிடம் தம்மை “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்,” என்பதாக வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 34:6, 7) யெகோவா இவ்விதமாக தம்முடைய குறிப்பிடத்தக்க தேவாட்சிக்குட்பட்ட தன்மையான அன்பின் பல்வேறு அம்சங்களை வலியுறுத்திக்கூறும் அதே சமயத்தில், அவசியம் இருக்கையில், அவர் குற்றத்துக்காக தண்டிப்பார் என்பதை உறுதியாக எச்சரிக்கிறார்.
19 அமைப்பில் பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருப்பவர்களுக்கு, தேவாட்சிக்குட்பட்டவராக இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? இயேசு தம்முடைய நாளிலிருந்த வேதபாரகரையும் பரிசேயரையும் பற்றி இவ்வாறு சொன்னார்: “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.” (மத்தேயு 23:4) இது எத்தனை கொடுமையும் அன்பற்றதாகவும் இருக்கும்! மெய்யான தேவாட்சி அல்லது கடவுள்-ஆட்சி, ஆடுகளின் மீது முடிவில்லாத மனிதன்-உண்டுபண்ணும் சட்டங்களைச் சுமத்துவதன் மூலம் அல்ல, ஆனால் பைபிளின் அன்பான நியமங்களைப் பொருத்துவதன் மூலம் மந்தையை மேய்ப்பதைத் தேவைப்படுத்துகிறது. (மத்தேயு 15:1-9 ஒப்பிடவும்.) அதே சமயத்தில், தேவாட்சிக்குட்பட்ட மேய்ப்பர்கள் அன்போடுகூட சபையின் தூய்மையைக் காத்துக்கொள்வதற்கான உறுதியை கூட்டுவதன் மூலம் தேவனைப் பின்பற்ற வேண்டும்.—ரோமர் 2:11; 1 பேதுரு 1:17 ஒப்பிடவும்.
20. அமைப்பு சம்பந்தப்பட்ட என்ன ஏற்பாடுகளை தேவாட்சிக்குட்பட்ட மேய்ப்பர்கள் அங்கீகரிக்கிறார்கள்?
20 இந்தக் கடைசிநாட்களில் இயேசு தம்முடைய எல்லா உடைமைகள் மீது தம்முடைய உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை நியமித்திருக்கிறார் என்பதையும், ஆடுகளை மேய்ப்பதற்கு மூப்பர்களை நியமிப்பதில் இந்த அடிமையை பரிசுத்த ஆவி வழிநடத்துகிறது என்பதையும் உண்மையான மூப்பர்கள் அங்கீகரிக்கிறார்கள். (மத்தேயு 24:3, 47; அப்போஸ்தலர் 20:28) ஆகவே தேவாட்சிக்குட்பட்டவர்களாய் இருப்பது, இந்த அடிமைக்கும், அடிமை ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு சம்பந்தப்பட்ட ஏற்பாடுகளுக்கும், சபையிலுள்ள மூப்பர் ஏற்பாட்டுக்கும், ஆழ்ந்த மரியாதை கொண்டிருப்பதை உட்படுத்துகிறது.—எபிரெயர் 13:7, 17.
21. உதவிமேய்ப்பர்களுக்கு இயேசு என்ன நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார்?
21 இயேசுதாமேயும் வழிநடத்துதலுக்காக எப்போதும் யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் நோக்கியிருந்து, நேர்த்தியான ஒரு முன்மாதிரியை வைத்தார். அவர் சொன்னார்: “நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” (யோவான் 5:30) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உதவி மேய்ப்பர்கள், அதேப் போன்ற மனத்தாழ்மையான ஒரு மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இயேசு செய்தது போலவே ஒரு மூப்பர் எப்போதுமே வழிநடத்துதலுக்காக கடவுளுடைய வார்த்தையின் உதவியை நாடுவாரேயானால் அப்போது அவர் உண்மையில் தேவாட்சிக்குட்பட்டவராக இருக்கிறார்.—மத்தேயு 4:1-11; யோவான் 6:38.
22. (எ) என்ன விதத்தில் அனைவருமே தேவாட்சிக்குட்பட்டவர்களாக இருக்க முயற்சிசெய்ய வேண்டும்? (பி) இயேசு என்ன தயவான அழைப்பை ஆடுகளுக்குக் கொடுக்கிறார்?
22 முழுக்காட்டப்பட்ட ஆண்களே, சபையில் சிலாக்கியங்களுக்குத் தகுதிபெற நாடுங்கள்! அருமையான ஆடுகளே, நீங்கள் அன்பு காண்பிப்பதில் கடவுளையும் கிறிஸ்துவையும் பின்பற்றி தேவாட்சிக்குட்பட்டவராக இருப்பதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்! மேய்ப்பர்களும் மந்தையும் ஒன்றுபோல இயேசுவின் இந்த அழைப்பிற்குப் பதிலளித்ததினால் சந்தோஷமாயிருப்பார்களாக: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30. (w93 1/1)
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் ஆங்கில பத்திரிகையில் 1938 ஜூன் 1 மற்றும் 15 இதழ்களில் “அமைப்பு” என்ற தலைப்பின் கீழ் உள்ள கட்டுரைகளைப் பார்க்கவும்.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ யெகோவாவின் “மந்தை” என்பது என்ன, அது யாரை உட்படுத்துகிறது?
◻ முதல் நூற்றாண்டில் இயேசு எவ்விதமாக “நல்ல மேய்ப்பனாக” செயல்பட்டார், மேலும் இன்று?
◻ மந்தையை கவனித்துக்கொள்வதில் என்ன முக்கியப் பங்கை உதவிமேய்ப்பர்கள் வகிக்கிறார்கள்?
◻ “தேவாட்சி” என்ற வார்த்தையின் அடிப்படைப் பொருள் என்ன?
◻ எவ்விதமாக கிறிஸ்தவர்கள்—குறிப்பாக ஓர் உதவிமேய்ப்பர்—தேவாட்சிக்குட்பட்டவராக இருக்கும்பொருட்டு நடந்துகொள்ள வேண்டும்?
19. பரிசேயர்களுக்கு எதிர்மாறாக, கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்விதமாக தேவாட்சிக்குட்பட்ட முறையில் நடந்துகொள்ள வேண்டும்?
[பக்கம் 20-ன் படம்]
ஒருமுகப் பற்றுக்கொண்ட ஒரு மேய்ப்பனைப் போல யெகோவா தம்முடைய மந்தையை கவனித்துக்கொள்கிறார்
[பக்கம் 23-ன் படம்]
யெகோவா தேவனின் அன்பின் தன்மையைப் பின்பற்றுவது செயலில் தேவாட்சியாகும்