தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் ஏன் மற்றும் யாரால்?
“கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23.
1. சுதந்திரத்தின் என்னென்ன வகைகள் பரவலாக மதிக்கப்பட்டிருக்கிறது?
மனித ஆவணங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது எதுவென்றால், 18-ம் நூற்றாண்டில், வட அமெரிக்காவிலுள்ள 13 பிரிட்டனின் குடியேற்ற நாடுகள் தங்கள் தாய் நாட்டிலிருந்து சுதந்திரத்தை அறிவித்த சுதந்திர அறிவிப்பாகும். அவர்களுக்குத் தேவை விடுதலை. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து சுதந்திரமும் விடுதலையும் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் மிகவும் நன்மை பயப்பதாய் இருக்கலாம். சமீப காலங்களில், சில கிழக்கு ஐரோப்பிய தேசங்கள் அரசியல் சுதந்திரத்திடமாகச் சென்றிருக்கின்றனர். இருந்தாலும், அந்தத் தேசங்களில், அத்தகைய சுதந்திரம் அதோடுகூட பல கடுமையான பிரச்னைகளைக் கொண்டுவந்திருக்கிறது என்பது ஒத்துக்கொள்ளப்படவேண்டும்.
2, 3. (எ) என்ன வகையான சுதந்திரம் விரும்பத்தக்கதல்ல? (பி) ஆரம்பத்தில் இந்த உண்மை எப்படி அறிவுறுத்தப்பட்டது?
2 விரும்பத்தக்க பல வகைகளான சுதந்திரம் இருந்தாலும், விரும்பத்தகாத ஒரு வகையான சுதந்திரம் இருக்கிறது. அது என்ன? மனிதனை உண்டாக்கினவராகிய யெகோவா தேவனிடமிருந்து சுதந்திரம். அது ஓர் ஆசீர்வாதம் அல்ல, ஆனால் ஒரு சாபமே. ஏன்? ஏனென்றால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் வார்த்தைகள் மிகவும் சரியாகவே காண்பிக்கிறபடி, தன்னை உண்டாக்கினவரைவிட்டுச் சுதந்திரமாகச் செயல்படுவதற்காக மனிதன் ஒருபோதும் உண்டாக்கப்படவில்லை. அதாவது, மனிதன் தன்னை உண்டாக்கினவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் விதத்திலேயே உண்டாக்கப்பட்டான். நம்முடைய சிருஷ்டிகருக்குக் கீழ்ப்பட்டிருப்பது அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பதை அர்த்தப்படுத்தும்.
3 அந்த உண்மை, ஆதியாகமம் 2:16, 17-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள, முதல் மானிட ஜோடியிடம் யெகோவாவால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” தன்னை உண்டாக்கினவருக்குக் கீழ்ப்பட்டிருக்க மறுத்தது, ஆதாமுக்கும் அவனுடைய எல்லா சந்ததிக்கும் பாவம், துன்பம் மற்றும் மரணத்தைக் கொண்டுவந்தது.—ஆதியாகமம் 3:19; ரோமர் 5:12.
4, 5. (எ) மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்க மறுத்ததால் என்ன விளைவடைந்திருக்கிறது? (பி) எந்த ஒழுக்கச் சட்டம் தப்பிக்க முடியாததாக இருக்கிறது?
4 மனிதர் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்க மறுப்பது ஞானமற்றதும் ஒழுக்கரீதியில் தவறானதுமாய் இருக்கிறது. அது உலகத்தில் பரவலான அக்கிரமம், குற்றச்செயல், வன்முறை, பாலுறவு மூலமாக கடத்தப்படும் நோய்களை அதன் கனிகளாக உடைய பாலின ஒழுக்கயீனம் ஆகியவற்றில் விளைவடைந்திருக்கிறது. மேலும், இன்றைய இளவயதினர் குற்றச்செயல்களின் தொந்தரவு, பெரும்பாலும் இளைஞர் யெகோவாவுக்கும், தங்கள் பெற்றோருக்கும், தேசத்தின் சட்டங்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கத் தவறுவதன் காரணமாக உண்டாக்கப்படுகிறதல்லவா? அநேக மக்கள் வழக்கத்துக்கு மாறான, ஒழுங்கற்ற விதத்தில் உடுத்துவது மற்றும் அவர்கள் பேச பயன்படுத்தும் தூய்மையற்ற மொழி ஆகியவற்றிலிருந்து இந்தச் சுதந்திரத்தின் ஆவி காணப்படுகிறது.
5 ஆனால் சிருஷ்டிகரின் மாற்றியமைக்கப்பட முடியாத ஒழுக்கச் சட்டத்திலிருந்து விடுபடுவதற்கு எந்த வழியுமில்லை: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.”—கலாத்தியர் 6:7, 8.
6, 7. கீழ்ப்பட்டிருக்க மறுப்பதற்கான மூலக் காரணம் என்ன, என்ன உதாரணங்களில் காண்கிறபடி?
6 இந்தக் கீழ்ப்பட்டிருக்க மறுத்தலுக்கெல்லாம் மூலக் காரணம் என்ன? சுருங்கச்சொன்னால், அது தன்னலமும் பெருமையுமே. அதனால்தான், முதல் மனுஷியாகிய ஏவாள், சர்ப்பத்தால் தான் வஞ்சிக்கப்படுவதற்கு இடமளித்து, விலக்கப்பட்ட கனியைப் புசித்தாள். அவள் அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்திருந்தால், கடவுளைப்போல் இருக்க வேண்டும் என்ற சோதனை—தானாகவே நன்மை தீமையைத் தீர்மானிப்பது—அவளுக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருந்திருக்காது. மேலும் அவள் தன்னலமற்றவளாக இருந்திருந்தால், தன்னை உண்டாக்கினவராகிய யெகோவா தேவனால் வெளிப்படையாக விலக்கப்பட்டிருந்த ஒன்றை தான் அடைய வேண்டும் என்று விரும்பியிருக்கமாட்டாள்.—ஆதியாகமம் 2:16, 17.
7 ஆதாம் ஏவாளின் வீழ்ச்சிக்குச் சில காலத்திற்குப்பின், பெருமை மற்றும் தன்னலம் காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொல்லச் செய்தன. தன்னலம் ஒருசில தூதர்களையும் தன்னிச்சையாகச் செயல்பட வைத்து, தங்களுடைய ஆதிநிலையை விட்டுவிட்டு, சிற்றின்ப உணர்ச்சிகளை அனுபவிப்பதற்காக மானிட ரூபமெடுக்கும்படி செய்தது. பெருமையும் தன்னலமும் நிம்ரோதை உந்துவித்தது; அவனுடைய காலத்திலிருந்து அநேக உலக ஆட்சியாளர்களில் இந்தப் பண்புகளே காணப்பட்டிருக்கின்றன.—ஆதியாகமம் 3:6, 7; 4:6-8; 1 யோவான் 3:12; யூதா 6.
நாம் ஏன் யெகோவா தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க கடன்பட்டிருக்கிறோம்
8-11. நாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை அப்பியாசிப்பதற்கு என்ன நான்கு பலமான காரணங்கள் இருக்கின்றன?
8 நம்மை உண்டாக்கினவராகிய யெகோவா தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க நாம் ஏன் கடன்பட்டிருக்கிறோம்? முதலாவதாக அவர் சர்வலோக பேரரசராக இருப்பதன் காரணமாக. எல்லா அதிகாரமும் சரியாகவே அவரிடத்தில் இருக்கிறது. அவர் நம்முடைய நியாயாதிபதி, நியாயப்பிரமாணிகர், ராஜா. (ஏசாயா 33:22) அவரைப்பற்றி நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது: “சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.”—எபிரெயர் 4:13.
9 மேலுமாக, நம்மை உண்டாக்கினவர் சர்வவல்லமையுள்ளவராய் இருப்பதால், ஒருவரும் அவரை வெற்றிகரமாய் எதிர்க்க முடியாது; அவருக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற கடமையை ஒருவரும் புறக்கணித்துவிட முடியாது. கட்டாயமாக ஏதாவது ஒரு சமயத்தில், பண்டைய பார்வோனைப்போலவும், கடவுளுடைய குறித்த நேரத்தில் பிசாசாகிய சாத்தானுக்கு நேரிடப்போவதுபோலவும், கீழ்ப்பட்டிருக்க மறுப்பவர்களுக்கு அழிவு வரும்.—சங்கீதம் 136:1, 11-15; வெளிப்படுத்துதல் 11:17; 20:10, 14.
10 கீழ்ப்பட்டிருத்தல், எல்லா புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகளின் கடமையாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் தங்களை உண்டாக்கினவரைச் சேவிக்கும் நோக்கத்திற்காகவே இருக்கின்றனர். வெளிப்படுத்துதல் 4:11 அறிவிக்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” அவரே பெரிய குயவனாக இருக்கிறார்; அவர் மனித பாத்திரங்களைத் தன்னுடைய நோக்கத்தைச் சேவிப்பதற்காக உண்டாக்குகிறார்.—ஏசாயா 29:16; 64:8.
11 நம்மை உண்டாக்கினவர் எல்லா ஞானத்தையும் உடையவராய் இருப்பதால், நமக்கு மிகச் சிறந்தது எது என்பதை அறிந்திருக்கிறார் என்ற உண்மையை நாம் புறக்கணித்துவிடக்கூடாது. (ரோமர் 11:33) அவருடைய சட்டங்கள் ‘நம்முடைய நன்மைக்கானவை.’ (உபாகமம் 10:12, 13) எல்லாவற்றிற்கும் மேலாக, “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” ஆகவே அவர் நமக்கு மிகச் சிறந்தவற்றை மட்டுமே விரும்புகிறார். நம்மை உண்டாக்கினவராகிய யெகோவா தேவனுக்குக் கீழ்ப்பட்டிருப்பதற்கு எத்தனை வற்புறுத்தும் காரணங்களை நாம் கொண்டிருக்கிறோம்!—1 யோவான் 4:8.
இயேசு கிறிஸ்து, தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலின் ஒரு பரிபூரண உதாரணம்
12, 13. (எ) இயேசு கிறிஸ்து எவ்வாறு தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டினார்? (பி) இயேசுவின் எந்த வார்த்தைகள் அவருடைய கீழ்ப்பட்டிருக்கும் மனநிலையைக் காண்பித்தது?
12 எவ்வித சந்தேகமுமின்றி, யெகோவாவின் ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு நமக்குப் பரிபூரண உதாரணமாக இருக்கிறார். பிலிப்பியர் 2:6-8-ல் அப்போஸ்தலன் பவுல் இதைக் குறிப்பிடுகிறார்: “அவர் [இயேசு] தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் [சமமாயிருக்கவேண்டும் என்பதை, NW] கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே [மேலும்] தாழ்த்தினார்.” பூமியில் இருந்தபோது, இயேசு தான் சுயமாக எதையும் செய்யவில்லை என்பதைத் திரும்பவும் திரும்பவும் வலியுறுத்தினார்; அவர் தன்னிச்சையாக செயல்படவில்லை, ஆனால் எப்போதும் தன்னுடைய பரலோக தகப்பனுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்.
13 யோவான் 5:19, 30-ல் நாம் வாசிக்கிறோம்: “அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” இதேவிதமாக, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்றிரவு அவர் திரும்பவும் திரும்பவுமாக, “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று ஜெபம்பண்ணினார்.—மத்தேயு 26:39, 42, 44; யோவான் 7:28; 8:28, 42-ஐயும் பாருங்கள்.
தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்குப் பண்டைய உதாரணங்கள்
14. நோவா என்ன வழிகளில் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தார்?
14 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலின் ஆரம்பகால மனித உதாரணங்களில் ஒருவர் நோவா. அவர் தன்னுடைய கீழ்ப்பட்டிருத்தலை மூன்று வழிகளில் காண்பித்தார். முதலாவதாக, ஒரு நீதிமானாக, தன் காலத்தில் வாழ்ந்த மற்றவர்கள் மத்தியில் குற்றமற்றவராக, உண்மையான கடவுளுடன் நடந்துசெல்பவராக இருப்பதன்மூலம். (ஆதியாகமம் 6:9) இரண்டாவதாக, அந்தப் பேழையைக் கட்டுவதன்மூலம். அவன் “அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:22) மூன்றாவதாக, “நீதியைப் பிரசங்கித்தவனா”க வரப்போகும் ஜலப்பிரளயத்தைப்பற்றி எச்சரிக்கை விடுப்பதன் மூலம் காண்பித்தார்.—2 பேதுரு 2:5.
15, 16. (எ) ஆபிரகாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு என்ன நல்ல உதாரணத்தை வகித்தார்? (பி) சாராள் எவ்வாறு கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தாள்?
15 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு ஆபிரகாம் மற்றொரு சிறந்த உதாரணமாக இருந்தார். அவர் “நீ உன் தேசத்தை . . . விட்டுப் புறப்பட்டுப் . . . போ,” என்ற கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதன்மூலம் கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டினார். (ஆதியாகமம் 12:1) ஊர் என்ற இடத்தில் இருந்த வசதியான சூழலை (தொல்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின்படி, இது ஒரு சிறப்பற்ற நகரமாக இல்லை) விட்டுவிட்டு, நூறு வருடங்களுக்கு ஓர் அந்நிய தேசத்தில் பரதேசியாக அலைந்து திரிவதை அது அர்த்தப்படுத்தியது. குறிப்பாக, தன்னுடைய மகனாகிய ஈசாக்கைப் பலிசெலுத்த மனமுள்ளவனாயிருந்த அந்தப் பெரிய சோதனையை எதிர்ப்பட்டதில் ஆபிரகாம் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தார்.—ஆதியாகமம் 22:1-12.
16 ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு மற்றொரு நல்ல உதாரணத்தை அளிக்கிறாள். சந்தேகமின்றி, ஒரு பழக்கமற்ற தேசத்தில் அலைவது பல அசெளகரியங்களைக் கொண்டுவந்திருக்கும், ஆனால் அவள் குறைகூறியதாக நாம் எங்கும் வாசிப்பதில்லை. புறமத ஆட்சியாளர்களின்முன் தன்னுடைய சகோதரியாக ஆபிரகாம் அவளை அறிமுகப்படுத்திய இரண்டு சம்பவங்களில், தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு அவள் ஒரு நல்ல மாதிரியை வகித்தாள். அதன் விளைவாக அவள் கிட்டத்தட்ட அவர்களது அந்தப்புரத்தில் ஓர் அங்கத்தினள் ஆக நேரிட்டபோதும்கூட அவள் இருமுறையும் ஒத்துழைத்தாள். தன்னுடைய கணவனைக் குறிப்பிடும்போது “என் ஆண்டவன்,” என்று தனக்குள்ளே அவள் சொல்வது, அவளுடைய தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்குச் சான்றளித்து, அது அவளுடைய உண்மையான இருதய நிலை என்பதைக் காண்பிக்கிறது.—ஆதியாகமம் 12:11-20; 18:12; 20:2-18; 1 பேதுரு 3:6.
17. ஈசாக்கு தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்ததாக ஏன் சொல்லப்படலாம்?
17 ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கால் காண்பிக்கப்பட்ட தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலையும் நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. யெகோவா அவனைப் பலிசெலுத்தும்படியாக அவனுடைய தகப்பனிடம் கட்டளையிட்டபோது, ஈசாக்கு சுமார் 25 வயதுள்ளவராய் இருந்தார் என்பதாக யூத மரபு குறிப்பிடுகிறது. ஈசாக்கு விரும்பி இருந்தால், அவனைவிட நூறு வயது பெரியவராக இருந்த தன் தகப்பனை எளிதில் தடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பலியிடுவதற்குத் தேவையான ஒரு மிருகம் இல்லை என்பதைக்குறித்து ஈசாக்கு ஆச்சரியப்பட்டபோதிலும், வெட்டுவதற்கான கத்தி பயன்படுத்தப்பட்டிருந்தால் தானாக ஏற்படும் எந்தப் பிரதிபலிப்புகளையும் தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு அவருடைய தகப்பன் அவரைப் பலிபீடத்தின்மேல் வைத்து, கையையும் காலையும் கட்டுவதற்குப் பணிவாகத் தன்னைக் கீழ்ப்படுத்தினார்.—ஆதியாகமம் 22:7-9.
18. முன்மாதிரியான தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை மோசே எவ்வாறு காண்பித்தார்?
18 பல வருடங்களுக்குப் பின், தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு மோசே நமக்கு நல்ல மாதிரி வகித்தார். அவரைப்பற்றி “பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்,” என்று விவரிக்கப்படுவதன்மூலம் அது நிச்சயமாகக் குறிப்பிடப்படுகிறது. (எண்ணாகமம் 12:3) இருபது அல்லது முப்பது லட்சம் எதிர்த்தெழும் மக்களைக் கண்காணிக்கவேண்டியதாய் இருந்தபோதிலும், அவர் வனாந்தரத்தில் 40 வருடங்கள் யெகோவாவின் கட்டளைகளைக் கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றிக்கொண்டிருந்தது, அவருடைய தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு மேலுமாக அத்தாட்சி அளிக்கிறது. ஆக, “கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்,” என்பதாகப் பதிவு சொல்கிறது.—யாத்திராகமம் 40:16.
19. யோபு என்ன கூற்றுகளின்மூலம் யெகோவாவுக்கு தன்னுடைய கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தார்?
19 தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு மற்றொரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு யோபு ஆவார். யோபின் எல்லா உடைமைகளையும் எடுத்துப்போடவும், அவருடைய பிள்ளைகளைக் கொல்லவும், பின்பு அவருடைய “உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால்” தாக்கப்படவும் யெகோவா சாத்தானை அனுமதித்தப்பின், யோபின் மனைவி அவரிடம்: “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்றாள். இருந்தபோதிலும், “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ,” என்று அவளிடம் சொல்வதன்மூலம் தன்னுடைய தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை யோபு காண்பித்தார். (யோபு 2:7-10) யோபு 13:15-ல் பதிவு செய்யப்பட்ட அவருடைய வார்த்தைகளும் அதே மனநிலையைக் காண்பிக்கின்றன: “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்.” உண்மையில், யோபு தன்னை நியாயப்படுத்துவதில் பெரிதும் அக்கறை உடையவராய் இருந்தபோதிலும், முடிவில் “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை,” என்பதாக அவருக்கு ஆறுதலளிப்பவர்களாய்க் காட்டிக்கொண்டவர்களில் ஒருவனிடம் யெகோவா சொன்னதை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது. சந்தேகத்திற்கிடமின்றி, யோபு தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு ஒரு நல்ல உதாரணத்தை அளிக்கிறார்.—யோபு 42:7.
20. தாவீது என்ன வழிகளில் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைச் செயலில் காண்பித்தார்?
20 எபிரெய வேத எழுத்துக்களிலிருந்து இன்னொரு உதாரணத்தைக் குறிப்பிடவேண்டுமானால், தாவீது இருக்கிறார். சவுல் ராஜா தாவீதை ஒரு மிருகத்தைப்போல வேட்டையாடியபோது, சவுலைக் கொன்றுபோட்டு தன்னுடைய கஷ்டங்களுக்கு முடிவுகட்ட இருமுறை தாவீதுக்கு வாய்ப்புகள் இருந்தன. இருந்தாலும், தாவீதின் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தல் அவ்வாறு செய்வதிலிருந்து அவரைத் தடுத்தது. அவருடைய வார்த்தைகள் 1 சாமுவேல் 24:6-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன: “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர்.” (1 சாமுவேல் 26:9-11-ஐயும் பாருங்கள்.) அதேவிதமாகவே, அவர் தவறுகள் அல்லது பாவம் செய்தபோதும் சிட்சையை ஏற்றுக்கொள்வதன்மூலம் தன்னுடைய தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தார்.—2 சாமுவேல் 12:13; 24:17; 1 நாளாகமம் 15:13.
கீழ்ப்பட்டிருப்பதில் பவுலின் உதாரணம்
21-23. என்ன வெவ்வேறு சமயங்களில் அப்போஸ்தலன் பவுல் தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலைக் காண்பித்தார்?
21 கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில், தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கான ஒரு சிறந்த உதாரணத்தை நாம் அப்போஸ்தலன் பவுலில் காண்கிறோம். தன்னுடைய அப்போஸ்தல ஊழியத்தின் எல்லா அம்சங்களிலும் செய்ததைப்போலவே, இதிலும் அவர் தன்னுடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினார். (1 கொரிந்தியர் 11:1) மற்ற எந்த அப்போஸ்தலரைக்காட்டிலும் யெகோவா தேவன் அவரை அதிக வல்லமையான முறையில் பயன்படுத்திய போதிலும், பவுல் ஒருபோதும் தன்னிச்சையாகச் செயல்படவில்லை. புறஜாதியாரிலிருந்து மதம் மாறியவர்கள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமா என்ற கேள்வி எழும்பியபோது, “அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று [அந்தியோகியாவிலுள்ள சகோதரர்கள்] தீர்மானித்தார்கள்,” என்பதாக லூக்கா நமக்குச் சொல்லுகிறார்.—அப்போஸ்தலர் 15:2.
22 பவுலின் மிஷனரி ஊழியத்தைக் குறித்து, கலாத்தியர் 2:9-ல், “எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,” என்பதாக நமக்குச் சொல்லப்படுகிறது. தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு மாறாக, பவுல் வழிநடத்துதலை நாடினார்.
23 அதேபோல், கடைசிதடவையாக பவுல் எருசலேமில் இருந்தபோது, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பொருத்தவரையில் தான் ஒரு விசுவாச துரோகியாக இல்லை என்று எல்லாரும் காணும்படியாக, ஆலயத்திற்குச் செல்வதுபற்றியும் நியாயப்பிரமாணத்தின் முறைமையைப் பின்பற்றுவதைப்பற்றியும் மூப்பர்கள் கொடுத்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் அவ்வாறு செய்தது, அவருக்கு எதிராக ஒரு கும்பல் திரட்டப்பட்டு விபரீதமாக முடிவடைந்ததால், அவர் அந்த மூப்பர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தது தவறானதாக இருந்ததா? எவ்விதத்திலும் இல்லை; அப்போஸ்தலர் 23:11-ல் நாம் பின்வருமாறு வாசிப்பதிலிருந்து இது தெளிவாக இருக்கிறது: “அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.”
24. கீழ்ப்பட்டிருத்தலின் என்ன அம்சங்கள் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்?
24 உண்மையாகவே, நாம் கீழ்ப்பட்டிருப்பதற்கு பலத்த காரணங்களையும் அத்தகைய கீழ்ப்பட்டிருத்தலை வெளிக்காட்டியவர்களின் பதியவைக்கும் உதாரணங்களையும் நமக்கு வேதவார்த்தைகள் கொடுக்கின்றன. பின்வரும் கட்டுரையில், நாம் எந்தெந்த அம்சங்களில் யெகோவா தேவனுக்கு கீழ்ப்பட்டிருக்கலாம், வெவ்வேறு அம்சங்கள், அவ்வாறு இருப்பதற்கான உதவிகள், அதனால் விளையும் பயன்கள் ஆகியவற்றைச் சிந்திப்போம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ என்ன வகையான சுதந்திரம் விரும்பத்தக்கதல்ல?
◻ கீழ்ப்பட்டிருக்க மறுப்பதற்கு மூலக் காரணம் என்ன?
◻ என்ன காரணங்களுக்காக நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டிருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்?
◻ தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு என்ன நல்ல உதாரணங்களை வேதவார்த்தைகள் தருகின்றன?
[பக்கம் 10-ன் படம்]
நிம்ரோத், தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலை எதிர்த்த ஜலப்பிரளயத்திற்குப் பின்னான முதல் ஆட்சியாளன்
[பக்கம் 13-ன் படம்]
நோவா, தேவபக்தியுள்ள கீழ்ப்பட்டிருத்தலுக்கு ஒரு குறையற்ற முன்மாதிரி. —ஆதியாகமம் 6:14, 22