“வணக்கம்! உங்களுக்குக் கடவுளின் பெயர் என்னவென்று தெரியுமா?”
பிரேஸிலிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்திற்கு, ஃபோர்டலெஸா மாநகரத்திலிருந்த 12-வயதான இரட்டை சகோதரிகளிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது:
“நாங்கள் ஐந்தாம் வகுப்பில் இருந்தபோது, 1990-ல், எங்கள் பள்ளி ஓர் அறிவியல், கலை மற்றும் பண்பாட்டுக் கண்காட்சியை ஏற்பாடு செய்தது. மற்ற மாணவர்கள் தயாரிப்பதற்காக திட்டமிட்டுக் கொண்டிருப்பதைவிட எங்களுடைய அளிப்பு வித்தியாசப்பட்டதாக இருக்க விரும்புகிறோம் என்பதை எங்கள் ஆசிரியையிடம் தெரிவித்தோம். முன்பு அவர் நாங்கள் யெகோவாவைப்பற்றியும் பைபிளைப்பற்றியும் பேசுவதைக் கேட்டிருந்ததால், அவர் ஆலோசனை கூறினார்: ‘அப்படியானால் நீங்கள் உங்கள் கடவுளைப்பற்றி எழுதலாம்!’
“நாங்கள் இதைச் சாட்சிகொடுப்பதற்கு ஒரு வாய்ப்பாகக் கண்டு, யெகோவாவின் நாமத்தில் கவனத்தைச் செலுத்தும்படியாக பைபிள் பிரசுரங்களையெல்லாம் சேர்த்து ஒரு காட்சிபொருளை வைக்க தீர்மானித்தோம். சங்கீதம் 83:17-ன் வார்த்தைகளின் ஒரு பெரிதாக்கப்பட்ட நகலை தயாரித்து, ஒரு திறந்த பைபிளின் படத்தில் ஒட்டி வைத்தோம். மேலுமாக, ஒரு மேசையில், யெகோவாவின் பெயரை உடைய வெவ்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளை வைத்தோம். அதே மேசையில், பல விதமான பைபிள் பிரசுரங்களையும் காட்சிக்கு வைத்தோம். யெகோவாவின் பெயர் ஒரு மிகப் பிரபலமான திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஓர் உதாரணத்தைப் பார்வையாளர்களுக்குக் காண்பிப்பதற்காக, அந்த மேசையின் கடைசியில், ஒரு விசிஆர் மற்றும் டிவியை வைத்தோம்.
“அந்தக் கண்காட்சியின்போது, ஒருவர் எங்கள் மேசைக்கு வந்ததும், நாங்கள் சொல்வோம்: ‘வணக்கம்! உங்களுக்குக் கடவுளின் பெயர் என்னவென்று தெரியுமா?’ அந்தப் பார்வையாளர் பதிலளிப்பதற்கு வாய்ப்பைக் கொடுத்தப்பின், நாங்கள் தொடர்ந்தோம்: ‘இங்கே பாருங்கள்! பல பைபிள் மொழிபெயர்ப்புகள் அவருடைய பெயர் யெகோவா என்று காண்பிக்கின்றன,’ என்று Joao Ferreira de Almeida, தி ஜெருசலேம் பைபிள் மற்றும் நியூ உவோர்ல்ட் டிரான்ஸ்லேஷன் போன்ற வெவ்வேறு பைபிள்களில் அந்தப் பெயரைச் சுட்டிக்காண்பித்தோம். பின்னர் அந்தத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்பதாகச் சிறப்பித்துக் காண்பிக்கும் காட்சியை ஓட்டிக் காண்பித்தோம். மக்கள் அக்கறை காண்பிக்கும்போது, நாங்கள் அதிக தகவலைக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை அல்லது ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தோம்.
“எங்கள் மேசைக்கு வந்த வாலிபரில் ஒருவன், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைக் கேட்டான். எங்கள் ஆசிரியை உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தைக் கூர்ந்துபார்த்துவிட்டு, வியந்து கூறினார்: ‘என்னே ஓர் அக்கறையூட்டும் புத்தகம்!’ அந்தக் கண்காட்சியின் முடிவில் நாங்கள் 7 புத்தகங்களையும், 18 துண்டுப்பிரதிகளையும், 67 பத்திரிகைகளையும் அளித்திருந்தோம். அந்தக் கண்காட்சியில் எங்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தெய்வீக நாமமாகிய யெகோவாவைப் பிறர்அறியச் செய்யும் சிலாக்கியம் கிடைத்ததற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.”