முதிர்வயதினரைக் கவனித்தல் சவால்களும் பலன்களும்
சினிட்சு, ஒரு கிறிஸ்தவ ஊழியர், அவருடைய நியமிக்கப்பட்ட வேலையை வெகுவாக அனுபவித்துவந்தார். அவருடைய மனைவியின் அம்மாவையும் சேர்த்து, அவருடைய குடும்பம், மூன்றுபேருடையது. ஒரு நாள், அவருடைய மனைவியோடுசேர்ந்து பிரயாணம்செய்து மற்ற சபைகளைச் சந்திப்பதைப்பற்றிச் சிந்தித்துப்பார்க்கும்படி அவர் கேட்டுக்கொள்ளப்படும்வரை, அவர்கள் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு சிறிய சபையோடு சந்தோஷமாக ஊழியம்செய்துகொண்டு, பைபிளை மக்களுக்குப் போதித்துக்கொண்டு வந்தனர். ஒவ்வொரு வாரமும் இடமாறுவதை இது தேவைப்படுத்தும். அவருக்கு இந்த எதிர்ப்பார்ப்பைக் குறித்து அதிக சந்தோஷம், ஆனால் அவருடைய மனைவியின் அம்மாவைப் பார்த்துக்கொள்வது யார்?
பல குடும்பங்கள்—வயதாகிவரும் பெற்றோர்களை எவ்வாறு சிறந்தமுறையில் கவனிப்பது—போன்ற இதே சவால்களை இறுதியில் எதிர்ப்படுகின்றனர். பெற்றோர்கள் இன்னும் நல்ல உடல்நலத்தோடு, வேலைசெய்யும் நிலையில் இருக்கும்போது இந்த விஷயம் அதிகமாகச் சிந்திக்கப்படுவதில்லை. ஆனாலும், ஓர் ஊசியில் நூலைக் கோர்க்க முயற்சிக்கும்போது, கை நடுங்குவது அல்லது காணாமல்போன பொருளைக் கடைசியாக எந்த இடத்தில் கண்டனர் என்பதை ஞாபகப்படுத்தப் போராடுவது போன்ற செயல்கள், அவர்கள் முதிர்வயதை அடைகின்றனர் என்பதை வெளிப்படுத்தும். இருந்தாலும், பெரும்பாலும் திடீர் விபத்தோ, நோய்வாய்ப்படுவதோ அவர்களுடைய தேவைகளை ஒருவர் அறியும்படிச் செய்யும். ஏதாவது செய்யப்படவேண்டும்.
சில நாடுகளில், ஓரளவு நல்ல உடல்நலத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளோடு வாழ்வதற்குப் பதிலாக, அவர்களுடைய பொன்னானக் காலங்களைத் தனியே தங்கள் வாழ்க்கைத்துணைகளோடே செலவிட விரும்புகின்றனர். மற்ற நாடுகளில், அநேகக் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதுபோல, முதியவர்கள் தங்களுடைய பிள்ளைகளோடு, விசேஷமாக மூத்த மகனுடைய வீட்டில் வாழ்வது, வழக்கமாயிருக்கிறது. பெற்றோரில் ஒருவர் படுத்தப்படுக்கையாக இருந்தால், இது அதிக உண்மையாயிருக்கிறது. உதாரணமாக, ஜப்பானில், ஓரளவிற்கு படுத்தப்படுக்கையாக இருக்கிறவர்களில் ஏறக்குறைய 2,40,000 பேர், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், அவர்களுடைய குடும்பத்தினால் வீட்டில் கவனிப்படுகிறார்கள்.
ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய கடமைகள்
‘சுபாவ அன்பு’ குறைபடுகிறவர்களாயும், “சுகப்போகப்பிரியராயும்” அநேகர் மாறியிருக்கும் சந்ததியில் நாம் வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், முதியவர்களைக் குறித்து தெளிவாகவே, ஒழுக்க மற்றும் வேதப்பூர்வமான கடமைகளை நாம் உடையவர்களாக இருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1-5) டோமிக்கோ என்பவள், நடுக்கவாத (பார்க்கென்சன்) நோயால் பாதிக்கப்பட்ட அவளுடைய முதிர்வயதானத் தாயைக் கவனித்துவருகிறாள், இவளுடைய தாயைப்பற்றி இவள் சொன்னபோது, இவள் உணர்ந்த தார்மீக கடமையை வெளிப்படுத்தியிருக்கிறாள்: “அவள் என்னை 20 வருடங்களாக பேணிக்காத்துவந்தாள். இப்போது அதையே அவளுக்குச் செய்ய நான் விரும்புகிறேன்.” ஞானியான சாலொமோன் ராஜா எச்சரித்தார்: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைப்பண்ணாதே.”—நீதிமொழிகள் 23:22.
விசுவாசமற்ற பெற்றோரின் பாகத்திலுள்ள மத தப்பெண்ணமானாலும் பகைமையானாலும் அந்த வேதப்பூர்வமான கட்டளையைத் தள்ளுபடிசெய்வதில்லை. கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்: “ஒருவன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.” (1 தீமோத்தேயு 5:8) இயேசு, மரிப்பதற்கு முன்பாக இறுதிக்கட்டத்தின் ஒரு செயலாகத் தம்முடைய தாய் கவனிக்கப்படுவதற்கு ஏற்பாடுசெய்வதன்மூலம் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார்.—யோவான் 19:26, 27.
எதிர்ப்படும் கஷ்டங்களைக் கையாளுதல்
பல ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்தப்பிறகு, குடும்பங்கள் மறுபடியும் ஒன்றுசேரும்போது நாமனைவருமே பல மாற்றங்கள் செய்யவேண்டியதிருக்கிறது. இந்த மாற்றங்கள், பேரளவில் அன்பையும், பொறுமையையும், பரஸ்பரப் புரிந்துகொள்ளும் தன்மையையும் தேவைப்படுத்துகின்றன. மூத்த மகனோ, அல்லது மற்றொரு மகனோ மகளோ, தன்னுடைய குடும்பத்தைப் பெற்றோரின் வீட்டிற்கு மாற்றும்போது, முழுவதுமாக ஒரு புதிய சூழ்நிலை உருவாகிறது. ஒருவேளை ஒரு புதிய வேலை, பிள்ளைகளுக்குப் புதிய பள்ளிக்கூடங்கள், மேலும் ஒரு புதிய அக்கம்பக்கம் போன்றவற்றிற்கு பழக்கப்படவேண்டியதிருக்கும். இது பெரும்பாலும் மனைவிக்கு அதிகரிக்கப்பட்ட வேலைகளைக் குறிக்கும்.
அதைப்போலவே, பெற்றோருக்கும் அனுசரித்துப்போவது கடினமாக இருக்கும். அவர்கள் ஓரளவிற்கு தனிமை, அமைதி, சுதந்திரம் ஆகியவற்றிற்குப் பழகிப்போயிருக்கலாம்; இப்பொழுதோ, ஆற்றல்மிக்க பேரக்குழந்தைகளின் மற்றும் அவர்களுடைய நண்பர்களின் ஆட்டவோட்டங்கள் அவர்களுக்குத் தென்படும். அவர்கள் தங்களுக்குரிய சொந்த தீர்மானங்களைச் செய்யும் பழக்கமுடையவர்களாக இருக்கலாம், அவர்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் எந்த முயற்சியும் கோபப்படுத்தும். அநேக பெற்றோர்கள், தங்களுடைய மகன்களின் குடும்பங்கள் அவர்களோடு வந்துவாழும் சமயத்தை மனதில் கொண்டவர்களாக, தங்களுடைய வீட்டிற்கு அருகில் இணைக்கும் நடைபாதையுடைய தனிப்பட்ட வீடுகளை அல்லது கூடுதலானப் பகுதிகளைக் கட்டியிருக்கின்றனர், இது எல்லாருக்கும் ஓரளவு சுதந்திரத்தைக் கொடுப்பதாக இருக்கும்.
வீடு சிறியதாக இருந்தால், புதிதாக வருபவர்களுக்கு இடவசதியளிப்பதற்காக அதிகளவில் மாற்றங்கள் செய்யவேண்டியதிருக்கலாம். ஒரு தாயின் நான்கு குமாரத்திகள், தங்களுடைய 80 வயது பாட்டிக்கு இடவசதிசெய்வதற்கு கூடுதலான தட்டுமுட்டுச் சாமான்களும் (ஃபர்னிச்சர்ஸ்) இதரப் பொருள்களும் அவர்களுடைய படுக்கையறைக்குள் தொடர்ந்து வைக்கப்பட்டபோது, எவ்வளவு நிலைகுலைந்து போனார்கள் என்பதை அந்தத் தாய் நினைத்தபோது அவளுக்குச் சிரிப்புவந்துவிட்டது. எனினும், மாற்றங்கள் தேவை என்பதை அனைவரும் உணர்ந்து, அன்பு “தன்னலத்தைத் தேடாது” என்ற பைபிளின் அறிவுரையை நினைவில் கொள்ளும்போது இப்படிப்பட்ட பிரச்னைகளெல்லாம் பெரும்பாலும் தீர்க்கப்படும்.—1 கொரிந்தியர் 13:5, கத்.பை.
சுதந்திரத்தின் இழப்பு
ஒரு கிறிஸ்தவப் பெண்ணிற்கு, அவளுடைய கணவர் அவளுடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளாதவராக இருந்து அதேசமயத்தில், அவருடைய பெற்றோரோடு குடும்பத்தைக் கொண்டுபோகத் தீர்மானிக்கும்போது, ஒரு வினைமையான பிரச்னை வரலாம். அவளுடைய மற்ற வேலைகளோடு, கிறிஸ்தவக் கடமைகளைச் சமநிலைப்படுத்துவதை குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்புகள், ஏறக்குறைய முடியாத காரியமாக்கிவிடுமென உணரவைக்கலாம். செட்சுக்கோ சொன்னாள்: “மூப்படைந்த தன் தாயை வீட்டில் தனியே விட்டுவருவது மிகவும் ஆபத்தானது என்று என் கணவர் சொன்னார், எனவே நான் எப்போதும் வீட்டில் இருக்கும்படி அவர் விரும்பினார். நான் கூட்டத்திற்குப் போக முயற்சிசெய்தால், அவர் விசனப்பட்டுக் குற்றம்சாட்டுவார். முதலில் என்னுடைய ஜப்பானிய பழக்கத்தினால், நானும் அவளைத் தனியே விடுவது தவறென நினைத்தேன். ஆனால், காலப்போக்கில், பிரச்னைகள் தீர்க்கப்படலாமென உணர்ந்தேன்.”
ஹிசக்கோ-வுக்கு இதேபோல் பிரச்னை இருந்தது. “நாங்கள் என்னுடைய கணவரின் குடும்பத்தோடு சேர்ந்துவாழப் போனபோது,” அவள் சொல்கிறாள், “அவர், சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில், நான் என் மதத்தை மாற்றவேண்டும், என் மத நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமென்று விரும்பினார். பிரச்னைகளைக் கூட்டும்வண்ணமாக, அருகில் வாழும் உறவினர்கள், கூட்டங்களுக்குப் போவதை எனக்கு அதிகக் கஷ்டப்படுத்தும்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயம்செய்வார்கள். இதற்கும்மேலாக, குழந்தைகள் கூட்டங்களுக்குப் போவதற்குப் பதிலாக, பெற்றோரின் உடன்பிறந்தவர்களுடைய குழந்தைகளோடு (கஸின்களோடு) விளையாட விரும்புவார்கள். எங்களுடைய ஆவிக்குரிய தன்மை பாதிக்கப்பட்டிருப்பதை நான் உணரமுடிகிறது. நான் மிகவும் உறுதியான நிலைநிற்கை எடுத்து, என் கணவரிடம், என் மதம் ஓர் ஆடையைப்போன்றதல்ல, எனக்கு அதிமுக்கியமானது என்று விளக்கவேண்டியதிருந்தது. காலப்போக்கில், குடும்பம் அனுசரித்துக்கொண்டது.”
சிலர், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் வந்து உதவிசெய்யும், ஒரு பகுதி-நேர வீட்டுவேலைக்காரியை வைத்திருப்பதன்மூலம், அதிகத் தனிப்பட்ட நேரத்தைப்பெறும் பிரச்னையைத் தீர்த்திருக்கின்றனர். மற்றவர்கள் தங்களுடைய குழந்தைகளின், அருகிலுள்ள சொந்தக்காரர்களின், ஏன் சபையிலுள்ள நண்பர்களின் உதவியையும் நாடுவதன்மூலம், சொந்த எடுபிடி வேலைகளுக்கும், கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கும், ஓரளவிற்கு நேரத்தைக் கண்டிருக்கின்றனர். கணவர்களும் அவர்கள் வீட்டிலிருக்கும் இரவுநேரங்களிலும் வார இறுதிகளிலும் உதவிசெய்ய முன்வர முடிந்திருக்கிறது.—பிரசங்கி 4:9.
அவர்களைச் சுறுசுறுப்பாக இருக்கச்செய்தல்
முதிர்வயதினரைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது, எதிர்ப்படவேண்டிய மற்றொரு சவாலாகும். சில முதிர்வயதினர்கள், சமையல்செய்வது, மற்ற வீட்டுவேலைகளைச் செய்வது போன்றவற்றில் பங்குகொள்வதில் சந்தோஷப்படுகின்றனர். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லப்படும்போது அவர்கள் பிரயோஜனமாக இருப்பதுபோல் உணர்கிறார்கள், மேலும் ஒரு சிறிய காய்கறித் தோட்டத்தைப் பராமரிப்பது, பூக்களை வளர்ப்பது, அல்லது ஒருசில பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவற்றில் திருப்தியை உணர்கின்றனர்.
எனினும், மற்றவர்களோ, நாளின் பெரும்பாலான நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்க விரும்புகிறார்கள், கவனிக்கப்பட விரும்புகிறார்கள். அவர்களை முடிந்தவரை சுறுசுறுப்பாக வைத்திருப்பது அவர்களுடைய நன்மைக்கும், நீடித்த வாழ்நாட்களுக்கும், மனத்தெளிவிற்கும் முக்கியமானதாக இருக்கிறது. ஹீடேக்கோ, அவளுடைய தாய் ஒரு சக்கர நாற்காலியில் இருந்தாலும், அவளைக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டுச் செல்வது, அவளுடைய தாய்க்குப் போதுமானளவுத் தேவையான உற்சாகத்தைத் தருகிறது என்று கண்டுணர்ந்தாள். அவள் எல்லாராலும் சந்தோஷமாக வரவேற்கப்பட்டு, உரையாடலில் பங்குகொள்ளும்படிச் செய்யப்பட்டாள். கொடுக்கப்பட்ட இந்த அக்கறையானது, இறுதியில், ஒரு வயதான பெண்மணியோடுச் சேர்ந்து பைபிள் படிக்க அவளை ஒப்புக்கொள்ளச் செய்தது. ஒரு திருமணமான தம்பதி, அல்ஸ்ஹைமர்ஸ் நோயினால் அவதிப்படும் ஒரு பெற்றோரை, அவர்களுடைய கிறிஸ்தவக் கூட்டங்களுக்குக் கூட்டிச்செல்கின்றனர். “அவள் பொதுவாக எதையும் செய்ய விரும்புவதில்லை, ஆனால் அவள் கூட்டங்களில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். அவள் அன்போடு வரவேற்கப்படுகிறாள், எனவே அவள் விருப்பத்தோடு வருகிறாள். இது அவளுக்கு அதிக பலனுள்ளதாக இருப்பதாக நாங்கள் உணர்கிறோம்,” என்பதாக அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சினிட்சு, கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர், அவர் பிரயாண ஊழியராக சேவைசெய்த பிராந்தியத்தின் மையப்பகுதியில், தன்னுடைய மனைவியின் அம்மாவிற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்ததன்மூலம் அவருடைய பிரச்னையைத் தீர்த்துக்கொண்டார். எனவே, ஒவ்வொரு வாரத்திலும் வேறுபட்ட சபைகளுக்கு விஜயங்களைச் செய்வதற்கிடையில், அவளோடே தங்கியிருக்க முடிந்தது. அவருடைய மனைவி, கியோக்கோ, சொன்னார்: “எங்கள் வேலையின் முக்கிய பாகமாக என் அம்மா இருப்பதுபோலும், பிரயோஜனமாக இருப்பதுபோலும் உணர்கிறார்கள். விசேஷித்த உணவைத் தயாரிக்கும்படி, என் கணவர் அவளைக் கேட்டுக்கொள்ளும்போது, அவள் மனமகிழ்ந்துவிடுகிறாள்.”
மூப்பைக் கையாளுதல்
பெற்றோர்கள் வயதாகும்போது, மூப்பின் வேறுபட்ட அம்சங்கள் தோன்றுகின்றன, எனவே அவர்களுக்கு அதிமதிகமான கவனிப்புத் தேவையாயிருக்கிறது. அவர்கள், நாட்களை, நேரங்களை, காலங்களை, வாக்குறுதிகளை மறக்கின்றனர். அவர்கள் அவர்களுடைய முடிகளை வெட்டுவதற்கும் அவர்களுடைய துணிகளைத் துவைப்பதற்கும் தவறிவிடுகின்றனர். அவர்கள் எப்படிக் குளிப்பது, உடை உடுப்பது என்பதையும்கூட மறக்கலாம். பலர் திசைகுழம்பிப் போய்விடுகின்றனர், மற்றவர்களோ, இரவில் தூங்கமுடியாமல் தவிக்கின்றனர். சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லும் மனச்சாய்வு அவர்களுக்கு இருக்கிறது, இது அவர்களுடைய கவனத்துக்குக் கொண்டுவரப்படும்போது, அவர்கள் எரிச்சலடைகிறார்கள். மனது அவர்களை வஞ்சித்து, குழப்புகிறது. ஏதோவொன்று காணாமல் போய்விட்டதாக, அல்லது திருடர்கள் வீட்டை உடைக்க முயற்சிசெய்வதாக ஆணித்தரமாகச் சொல்லக்கூடும். நான்கு குமாரத்திகளையுடைய ஒரு குடும்பம், இன சம்பந்தமான தவறு செய்ததாக சான்றில்லாது சொல்லும் ஓயாத குற்றச்சாட்டுகளைச் சகிக்கவேண்டியதிருந்தது. அவர்கள் சொல்கிறார்கள், “அதை ஏற்கவே முடியாது, ஆனால் குற்றச்சாட்டுகளை வெறுமனே சகித்திருப்பதற்கும், பேச்சுப்பொருளை மாற்ற முயற்சிசெய்யவும் கற்றுக்கொண்டோம். பாட்டியோடு முரண்படுவது வீணானது.”—நீதிமொழிகள் 17:27.
உணர்ச்சிப்பூர்வமான தேவைகள் பூர்த்திசெய்யப்படுதல்
வயது, முதியவர்களுக்கு சோதனைகளைக் கொண்டுவருகிறது. துக்கம்தரும் சுகவீனங்கள், நடமாட முடியாமை, மனதின் கடுந்துயரம் ஆகியவை சகித்துக்கொள்ளப்படவேண்டும். அநேகர் அவர்களுடைய வாழ்க்கைக்கு இலக்கில்லை அல்லது குறிக்கோளில்லை என உணர்கின்றனர். அவர்கள் பாரமாக இருப்பதாகவும், சாக விரும்புவதாகவும் கூறலாம். அன்பு செலுத்தப்படவும், மரியாதை காட்டப்படவும், உட்படுத்தப்படவும் வேண்டிய தேவை அவர்களுக்கிருக்கிறது. (லேவியராகமம் 19:32) ஹிசக்கோ சொன்னாள்: “அம்மா இருக்கும்போதெல்லாம் அவளை உரையாடலில் உட்படுத்தவும், நாங்கள் பேசும் பேச்சும், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவளைப்பற்றி இருக்கவும் செய்ய முயற்சிசெய்வோம்.” மற்றொரு குடும்பம், தங்களுடைய தாத்தாவின் சுயமரியாதையை ஊக்குவிப்பதற்காக அவரைத் தினந்தோறும் ஒரு பைபிள் வசன கலந்தாலோசிப்பை நடத்தும்படிக் கேட்டுக்கொண்டது.
முதிர்வயதினரைப் பற்றிய சரியான நோக்குநிலையைக் காத்துக்கொள்ள ஒருவர் தொடர்ந்து முயற்சிசெய்யவேண்டும். படுத்தப்படுக்கையாக இருக்கும் நோயாளிகள், அவர்கள் புண்படத்தக்கதாகப் பேசப்படும்போது அல்லது அவமரியாதையாக நடத்தப்படும்போது, மனம்வருந்துகிறார்கள். கீமீக்கோ, தன்னுடைய ஊனமுற்ற மாமியாரோடு வாழ்ந்தவள், விளக்கினாள், “அம்மா விழிப்பானவள், அவளைக் கவனிப்பதில் என் இருதயப்பூர்வத்தன்மை இல்லாதபோது, அவள் அதை அறிந்துவிடுகிறாள், அல்லது புண்படுத்தப்பட்டதாக உணர்கிறாள்.” ஹீடேக்கோவும் தன்னுடைய எண்ணத்தை மாற்றவேண்டியவளாக இருந்தாள். “என் மாமியாரைக் கவனிக்கவேண்டியதிருந்தபோது, முதலில் நான் மலைத்துப்போனேன். நான் பயனியராக இருந்தேன் [யெகோவாவின் சாட்சிகளின் ஒரு முழுநேர ஊழியர்], நான் ஊழியத்தை இழப்பது குறித்து வருந்தினேன். பின்பு, என் எண்ணத்தை நான் மாற்றவேண்டும் என்பதை உணர்ந்தேன். வீட்டுக்கு வீடு ஊழியம் முக்கியமானதாக இருந்தாலும், இதுவும் கடவுளுடைய கட்டளைகளுக்குச் செவிசாய்ப்பதன் முக்கியமானப் பாகமாக இருந்தது. (1 தீமோத்தேயு 5:8) நான் சந்தோஷத்தைக் காணவேண்டுமென்றால், நான் இன்னுமதிகமான அன்பையும் ஒற்றுணர்வையும் வளர்க்கவேண்டுமென உணர்ந்தேன். நான் வெறுமனே கடமைக்காகச் செய்வதுபோல், உணர்ச்சியற்றவிதத்தில் காரியங்களைச் செய்யும்போது மனசாட்சி என்னைத் தொந்தரவு செய்யும். எனக்கு ஒரு விபத்து நேர்ந்தபோது, வலியில் இருந்தேன், அப்போது என் மாமியார் எவ்வளவு வலியோடு இருந்திருப்பாளென அவளை நினைத்துக்கொண்டேன். அதற்குப்பின்பு, அன்பையும் ஒற்றுணர்வையும் காண்பிப்பது எனக்கு எளிதாயிருந்தது.”
கவனிப்போர்களுக்கும் கவனிப்புத் தேவை
முதிர்வயதினரைக் கவனித்துக்கொள்ளும் முக்கியமான பொறுப்பு இருக்கும் ஒருவருக்குப் போற்றுதலைத் தெரிவிக்கும் தேவையை மறந்துவிடாதிருப்பது நல்லது. (நீதிமொழிகள் 31:28, 29-ஐ ஒப்பிடுங்கள்.) பல பெண்கள், போற்றுதல் வார்த்தைகளைக் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, தங்களுடையக் கடமைகளைத் தொடர்ந்து செய்கின்றனர். என்றபோதிலும், அவர்களுடைய வேலை எதையெல்லாம் உட்படுத்துகிறதென்பதை நினைத்துப்பார்த்தால், ஒருவேளை, இப்படிப்பட்ட போற்றுதல் வார்த்தைகள் நிச்சயமாகவே பொருத்தமாகத் தோன்றும். அவர்களுக்குக் கூடுதலாகச் செய்யவேண்டிய சுத்தம்செய்தல், துவைத்தல், சமையல் வேலைகள் ஒருவேளை இருக்கும். மருத்துவமனைக்கு அல்லது மருத்துவரிடம் பல தடவைகள் செல்வதோடு, முதிர்வயதான நோயாளிக்கு உணவுகொடுத்தல் அல்லது சுத்தம்செய்தல் போன்றவற்றையும் நினைத்துப்பாருங்கள். தன்னுடைய மாமியாரை நீண்ட காலமாக கவனித்துவந்த ஒரு பெண் கூறுகிறாள்: “போற்றுதலை வார்த்தையில் சொல்வது என் கணவருக்குக் கடினம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனாலும் அவர் நான் செய்யும் செயலைப் பாராட்டுகிறார் என்பதை மற்ற வழிகளில் அவர் எனக்கு நிச்சயமாகவே காண்பிக்கிறார்.” எல்லாம் மதிக்கப்படுகிறது என்கிற உணர்வை, சாதாரண நன்றியுள்ள வார்த்தைகள் உருவாக்கும்.—நீதிமொழிகள் 25:11.
பலன்களும் உண்டு
வருஷக்கணக்காக முதியவர்களைக் கவனிக்கும் பல குடும்பங்கள், இது முக்கியமான கிறிஸ்தவக் குணங்களை வளர்ப்பதற்கு உதவிசெய்வதாகச் சொல்கிறார்கள்: சகிப்புத்தன்மை, சுயதியாகம், தன்னலமற்ற அன்பு, விடாமுயற்சி, மனத்தாழ்மை, மற்றும் இரக்கம். பல குடும்பங்கள் உணர்ச்சிரீதியில் நெருங்கிவந்திருக்கின்றனர். கூடுதல் போனஸானது, பெற்றோர்களோடு அதிகமாகப் பேசி, அவர்களை நன்றாக புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பாகும். ஹிசக்கோ, தன்னுடைய மாமியாரைப்பற்றி இவ்வாறு சொன்னாள்: “அவள் சுவாரஸ்யமான வாழ்க்கையைக் கொண்டிருந்தாள். அவள் பல கஷ்டங்களை அனுபவித்தாள். அவளை நான் கூடுதலாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன், மேலும் அவளிடத்தில் இருந்ததாக நான் முன்பு நினைத்திராத குணங்களைப் போற்றுவதற்கு இப்போது நான் கற்றுக்கொண்டேன்.”
“பைபிளைப் படிப்பதற்கு முன்பு, சில சமயங்களில், ஒரு விவாகரத்தைப் பெற்றுக்கொண்டு, இந்தச் சூழ்நிலையைவிட்டு ஓட நினைத்தேன்,” என்பதாகத் தன்னுடைய கணவனின் பெற்றோரையும் அவருடைய படுத்தப்படுக்கையிலுள்ள பாட்டியையும் கவனித்த கீமீக்கோ விளக்கினாள். “பின்பு, நான் ‘விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே . . . விசாரிக்கவேண்டும்’ என்பதை வாசித்தேன். (யாக்கோபு 1:27) நான் என்னால் முயன்றதைச் செய்தேன், என் நம்பிக்கைகளைக் குறித்துக் குடும்பத்தில் யாரும் இப்போது சரியாகக் குறைசொல்லமுடியாததைப்பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். என் மனசாட்சி சுத்தமாக இருக்கிறது.” மற்றொருவர் சொன்னார்: “என் சொந்தக் கண்களால், ஆதாமினுடைய பாவத்தின் பயங்கரமான பாதிப்புகளை நான் பார்க்க முடிந்தது, இப்போது கிரயபலியின் தேவையை இன்னுமதிகமாகப் போற்றுகிறேன்.”
நீங்கள் சீக்கிரத்தில் உங்கள் குடும்பத்திற்குள் மற்றொரு அங்கத்தினரை வரவேற்கப் போகிறீர்களா? அல்லது ஒருவேளை நீங்கள் உங்களுடைய முதிர்வயதான பெற்றோரோடு சேர்ந்து வாழப்போகிறீர்களா? மனக்குழப்பமடைகிறீர்களா? அது புரிந்துகொள்ளத்தக்கதே. சில மாற்றங்கள் செய்யவேண்டியதிருக்கும். ஆனால் சவாலை வெற்றிகரமாக சமாளிப்பதில், நீங்கள் உங்களையே பேரளவில் பலனடைந்தவர்களாகக் காண்பீர்கள்.
[பக்கம் 24-ன் படம்]
முதிர்வயதினர் அன்பும் மரியாதையும் செலுத்தப்படுவதாக உணர விரும்புகின்றனர்