இந்தப் போஜனம் உங்களுக்கு அர்த்தமுடையதாக இருக்கக்கூடுமா?
ஒரு முழுநிலவு மென்மையான வெளிச்சத்தால் அவ்விடத்தை நிரப்பியது. பழங்கால எருசலேமில், ஒரு வீட்டின் மேலறையில், ஒரு மேசையைச் சுற்றி 12 ஆண்கள் கூடியிருந்தனர். அவர்களுடைய போதகர் மிகவும் முக்கியமான ஓர் ஆசரிப்பை அறிமுகம் செய்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகளைப் பேசுகையில் பதினொரு பேர் கூர்ந்த கவனம் செலுத்துகின்றனர். ஒரு பதிவு சொல்லுகிறது:
“இயேசு [கிறிஸ்து] அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.”—மத்தேயு 26:26-30.
இது நம்முடைய பொது சகாப்தம் 33-ம் வருடம், யூத மாதமாகிய நிசான் 14-ம் நாள் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் சம்பவித்தது. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் சற்றுமுன்னரே, பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பஸ்காவைக் கொண்டாடினார்கள். தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாக இருந்த யூதாஸ் காரியோத்தை, அப்போதுதான் கிறிஸ்து வெளியே அனுப்பி இருந்தார். ஆகவே, இயேசுவும் அவருடைய 11 உண்மைத்தவறாத அப்போஸ்தலர்களும் மட்டுமே அங்கு இருந்தனர்.
இந்த இரவு உணவு, யூத பஸ்காவின் ஒரு தொடர்ச்சி அல்ல. இது புதிதான ஒன்று; அது கர்த்தருடைய இராப்போஜனம் என்பதாக அழைக்கப்பட்டது. இந்த ஆசரிப்பைக்குறித்து, அவரைப் பின்பற்றுபவர்களுக்கு இயேசு கட்டளையிட்டார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (லூக்கா 22:19, 20; 1 கொரிந்தியர் 11:24-26) அவர் ஏன் இதைச் சொன்னார்? மேலும் இந்த நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான இந்த நிகழ்ச்சி உங்களுக்கு எப்படி அர்த்தமுடையதாக இருக்கக்கூடும்?